பேராசிரியர் அனில் குமார் காமராஜு, பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் சொற்பொழிவுகளின் போது ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர் என்பதாக பெரும்பாலோரால் அறியப்படுபவர்.ஒயிட்ஃபீல்டில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின் (பிருந்தாவன் வளாகத்தின்) முதல்வராக இருந்தவர். பிரசாந்தி நிலைய வளாகத்தில்... உயிரி வேதியியல் துறையில், 2012ம் ஆண்டு வரை பேராசிரியராகப் பணியாற்றியவர். பொதுவாக வெளியுலகிற்குத் தெரிந்ததெல்லாம் இவ்விதமான அறிமுகமே! இவற்றைக் கடந்து... அவர், சுவாமியின் மகாசேவகர்களில், அத்யந்த பக்தர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர். சுவாமிக்கும் அவருக்கும் இருந்த அனுபந்தம், அதன் ஆரம்பகால சிக்கல்கள், பிற்கால முதிர்ச்சி மற்றும் இறுதி ஐக்கியம் பற்றி புண்ணியாத்மாக்கள் வரிசையில் காண்போம்.
திரு.அனில்குமார் காமராஜு அவர்கள் பிறந்த குடும்பம் உருவ வழிபாட்டையோ, பூஜை புனஸ்காரங்களையோ அங்கீகரிக்காத "ப்ரம்ம சமாஜம்" இயக்கத்தைச் சார்ந்தவர்கள். மேற்குவங்கத்தில் தொடங்கிய ‘ப்ரம்ம சமாஜம்’ எனப்படும் மாபெரும் இயக்கம் ராஜாராம் மோகன் ராய், ரபீந்திரநாத் தாகூர், தேவேந்திரநாத் தாகூர், சரோஜினி நாயுடு போன்ற பெரியவர்களால் பெருமளவில் பிரசித்திபெற்ற இயக்கம். அனில்குமார் அவர்களின் தந்தைவழி பாட்டனார் திரு.காமராஜு அனுமந்தராவ் அவர்களும், தாய்வழி பாட்டனார் பாலபர்த்தி நரசிம்மம் அவர்களும் தங்கள் மூன்றாம் வகுப்பிலிருந்து பள்ளித் தோழர்கள். அவர்கள் இருவருமே சிறுவயதில் இருந்து "ப்ரம்ம சமாஜம்" இயக்கத்தைக் கடைபிடித்தவர்கள் மட்டுமல்ல... அந்த இயக்கத்தை ஆந்திரப் பிரதேசத்தில் பெருமளவில் பரப்பியவர்கள். இருவருமே தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் பெங்காலி மொழிகளில் மஹாபண்டிதர்கள். அவர்களின் இல்லங்களில் ‘ராமர், கிருஷ்ணர்’ படங்களோ, பூஜை வழிபாடுகளோ எதுவும் கிடையாது. ஆனால் நாள் தவறாமால் ஒவ்வொரு மாலையிலும் ஏழுமணி அளவில் குடும்பம் மொத்தமும் கூடி அமர்ந்து பிரார்த்தனை நிகழ்த்துவதும், அதுசமயம் உபநிஷதங்களின் சாரத்தைக் குறித்து கலந்துரையாடுவதும் நிகழும். வெறுமனே இறைவனின் அவதார உருவங்களைப் பிடித்துக்கொண்டு பிதற்றுவதே மனிதர்கள் ஆன்ம சாதனையில் அடுத்த நிலைக்கு உயராமல் இருப்பதற்குக் காரணம் என்ற தீவிரமான உண்மையை உணர்ந்த குடும்பம் அது. குண்டூர் உயர்நிலைப் பள்ளியில் மாணவனாக இருந்த காலந்தொட்டே தெலுங்கு மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டிகளில் எப்போதும் பரிசு வெல்பவர் திரு.அனில்குமார். குண்டூரில் உள்ள ஆந்திர கிருஸ்துவ கல்லூரியில் படித்தார். பின்பு அங்கேயே 26 வருடங்கள் பேராசிரியராகப் பணி புரிந்தார். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக பேச்சுப் போட்டிகள் தாண்டி சமுதாயத்திலும் பெரிய பேச்சாளராகத் திகழ்ந்தார். லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் என்று எல்லா இடங்களிலும் பிரபலமான பேச்சாளராகி ஒருசமயத்தில் "மைக்" அனில்குமார் என்றேகூட குறிப்பிடப் பட்டார்.
இந்நிலையில், 1970களில் ஒருசமயம் குண்டூர் மருத்துவக் கல்லூரியில் ஒரு மாநாடு நிகழ்ந்தது. நீதியரசர் வல்லூறு பார்த்தசாரதி மற்றும் டாக்டர் சூரி பகவந்தம் போன்றவர்கள் அங்கே பேச்சாளர்களாக வந்தனர். அனில்குமார் அவர்களின் தந்தை திரு. காமராஜு பாப்பையா அவர்கள், டாக்டர் பகவந்தத்தின் மாணவர் என்பதால் மரியாதை நிமித்தமாக சந்திக்கவே அங்கே சென்றனர். மற்றபடி சத்யசாயி பாபாவைக் குறித்து அங்கே பேசப்படுவதால்... அவர்களின் உரையைக் கேட்பதற்கான ஆர்வத்தினால் இல்லை. தந்தையுடன் சென்ற திரு.அனில்குமார் அவர்களுக்கு, சத்யசாயி பாபா குறித்தான டாக்டர் பகவந்தத்தின் தெள்ளத் தெளிவான பேச்சும்... விஞ்ஞானப் பூர்வ விளக்கங்களும் மிகப்பெரும் ஆச்சர்யத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தின. அதுவரை தனது நண்பர்களிடம் சுற்றத்தாரிடம் சத்யசாயிபாபா குறித்து சந்தேக தொனியில் பேசிக்கொண்டிருந்தவர்... அதன் பின்னர் சற்றே தயங்கத் தொடங்கினார். மேலும் 1972ம் ஆண்டு அனில்குமார் அவர்களின் மனைவிக்கு தீராத வயிற்றுப் பிரச்சினை வந்ததில் தொடங்கி, சுவாமியால் தீர்க்கப்பட்டு பின்னர் சுவாமியின் சத்தியத்தால் ஈர்க்கப்பட்டு அவருடைய கல்லூரியிலேயே முதல்வராகப் பணியாற்றி, இறுதியில்... ஈடுஇணை கூறமுடியாத பக்தராக மாறியவர் பேராசிரியர் அனில்குமார் அவர்கள். சுவாமியின் கல்லூரியில் பணிக்கு வந்த முதலாமாண்டு ஒருமுறை அனைவர் முன்னிலையில் பேராசிரியர் அனில்குமாரைக் குறிப்பிட்டு சுவாமி, "ஓய் 'ப்ரம்மசமாஜம்!' சமாஜத்திலிருந்து... ப்ரம்மத்திடமே வந்துவிட்டாய் போலிருக்கிறதே!" என்றார்.
பொதுவாக, ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் ஏற்படும் சந்தோஷமும் துக்கமும் அவரவரின் பூர்வஜென்ம கர்மாக்களின் அடிப்படையிலேயே நிகழ்கிறது. இறைத்தன்மை குறித்த தேடல் உள்ள மனிதர்களுக்கு, அவர்களின் துக்கத்தையோ அல்லது மகிழ்ச்சியையோ ஒரு காரணமாகக் கொண்டு அவர்களைத் தன்னை நோக்கி ஈர்ப்பது இறைவனின் கருணையினால் விளைவது. இதுவே காலம் காலமாக யுகயுகமாக நிகழ்ந்துவரும் இறைவனின் லீலையும், படைப்பின் இலக்கணமும் ஆகும். அதேவிதமாக பேராசிரியர் அனில்குமார் அவர்களின் மனைவிக்கு ஏற்பட்ட வயிற்றுக் கோளாறு... ஆபரேஷன் செய்தும், பல சர்வதேச பிரசத்தி பெற்ற மருத்துவ வல்லுனர்களிடம் ஆலோசனை பெற்றும்கூட தீராமல் தொடர்ந்தது. அந்த சமயத்தில் தனது முன்னாள் மாணவர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவிடம் தீர்வு கிடைக்கலாம் என்று நம்பி முதன்முறையாக புட்டபர்த்திக்கு வந்தார் பேராசிரியர் அனில்குமார்.
R.K.கராஞ்சியா போன்றோர்களின் வார்த்தைகளைப் பற்றிவந்தவர், சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சாயிபாபா குறித்து தனது சந்தேகத்தையும், கேலியையும் வெளிப்படுத்தி வந்தவர். மேலும் தனது குடும்பத்தின் "ப்ரம்ம சமாஜ" பாரம்பரியத்தினால், கடவுள் எனப்படுவது "நிலை" என்பதாக எதிர்பார்த்தவர். அவதாரங்கள், கடவுளின் "நிழல்" அல்லது "பிம்பங்கள்" என்ற உண்மையை உணராமல் இருந்தவர். ஆனாலும் அவருடைய அறிவை, ஞானத்தை, அனுபவ முதிர்ச்சியை.... கர்மா சவால் விட்டுப் பதம் பார்த்தது. அரிதாக, ஒரு சில உயர்ந்த ஆன்மாக்களுக்கு.. கெட்ட கர்மாவினால் அல்லாமல் சுவாமியின் சோதிப்பினால் கூட இத்தகைய சூழ்நிலை ஏற்படலாம். எப்படியோ... அப்படி ஒரு சூழ்நிலைக்கு திரு.அனில்குமார் வந்திருந்தார். புட்டபர்த்தியில், சுவாமியை தூரத்தில் கண்டு... 'நீயே உண்மையில் கடவுளாக இருந்தால்.. எனது மனைவியை குணமாக்கு! என்னிடம் நம்பிக்கையும் இல்லை!... அவநம்பிக்கையும் இல்லை! திறந்தமனத்தோடு உன்னிடம் கேட்கிறேன் சுவாமி' என்று இதயத்தின் ஆழத்திலிருந்து குரலெழுப்பினார்.
ஊருக்குத் திரும்பிய திரு.அனில்குமார் அவர்கள், எல்லோரும் எளிமையாக பாடக்கூடிய... அதே சமயத்தில் உயர்தரமான சங்கீதமாக உள்ளதே! என்று சாயி பஜனைகளைக் கண்டு வியந்து... பஜனை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார். சுவாமியை மறுபடியும் தரிசனம் செய்யவேண்டுமென்ற ஆவல் அடிக்கடி தனக்குள் பிறப்பதை உணர்ந்தார். மேலும் சுவாமி இலக்கியங்களை ஆழ்ந்து வாசிக்கத் தொடங்கியிருந்ததால்... சுவாமியின் செய்திகளை அழகாக எடுத்துரைக்கும் திறனும் சந்தர்ப்பங்களும் அதிகரித்தவண்ணம் இருந்தது. பாபாவைக் குறித்து பேசிய இந்த வாயால் இனி வேறெதைக் குறித்தும் பேசப்போவதில்லை என்று தனக்குள் சபதம் ஏற்றுக்கொண்டார்.
பஜனைகளில், சேவை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, சுவாமியின் இலக்கியங்களைத் தவறாமல் படிப்பது, பின்னர் மேடைக்கு மேடை அவ்விஷஷயங்களை விவரித்து மக்களுக்குத் தெளிவுபடுத்துவது என்று அவரது வாழ்க்கையின் பவித்ரத் தன்மை பலமடங்கு கூடிற்று! ஆனாலும் ஒவ்வொரு முறை புட்டபர்த்திக்குச் செல்லும்போதும், சுவாமி அவரைக் கண்டுகொண்டது இல்லை! ஒரு மாதம் ஒரு வருடம் அல்ல... ஏழு முழு வருடங்களில்... ஒருமுறை கூட சுவாமி அவரிடம் பேசியதோ, பேட்டியளித்ததோ கிடையாது! ஆனாலும்... அதனால் துளியும் அவரது சேவைகள் குறையவில்லை! ஒருசமயம் அவருக்கு இதைக்குறித்த தெய்வீக விளக்கமும் கிடைத்தது.. அதாவது, "சுவாமி ஒருவரிடம் பேசுவது, பிரசாதம் அளிப்பது என்பது அவரின் தகுதியின் அடிப்படையில் என்று நினைத்து... அப்படி நிகழாத யாருமே தங்களைத் தாழ்த்திக்கொள்ளத் தேவை இல்லை! ஸ்தூலமாக அவர் நெருங்கி நடத்தும் லீலைகள், அந்த பக்தரின் தேவையைக் குறித்து நிகழ்த்தப் படுவது!"
ஹிண்டுபூரில் ஒருமுறை சுவாமியைக் குறித்து வழக்கம்போல ஒரு சொற்பொழிவை நிகழ்த்தி முடித்துவிட்டு... சுவாமியின் தரிசனத்திற்கு வந்த பேராசிரியர் அனில்குமார் அனந்தபூரில் சுவாமியை சந்திக்க நேர்ந்தது. ஏழு வருடங்கள் ஸ்தூலமாக எந்தவொரு நெருங்கின சந்திப்பையும், நேரடி பேச்சையும், ஸ்பரிசனத்தையும் தந்திராத பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா அன்று நெருங்கி வந்து பேசினார். ஹிண்டுபூரில் நீ செய்த உபன்யாசம் நன்றாக இருந்தது என்றும் குறிப்பிட்டார்! அந்த சம்பவத்திற்குப் பிறகு... பூர்ணச்சந்திரா அரங்கத்தில், சுவாமி வீற்றிருக்கும் இன்னபிற மேடைகளிலும், பேராசிரியர் அனில்குமார் அவர்களுக்கு தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் உபன்யாசம் செய்யும் வாய்ப்பு அடிக்கடி வாய்த்தது. பின்னர் பிரஷாந்தி நிலைய வராந்தாவில் முன்வரிசையில் அமர்வதற்கு சுவாமியால் அனுமதிக்கப் பட்டார். இதைக் குறித்து திரு.அனில்குமார் அவர்கள் நினைவுகூறுகையில், 'அதுவரை யமதூதர்களைப் போல நடந்துகொண்ட சேவாதளர்கள் விஷ்ணுதூதர்களைப் போல என்னை சீராட்டினர்' என்கிறார்.
பின்னொருமுறை நவராத்திரி சமயத்தில், சுவாமி முன்னிலையில்... உபன்யாசம் செய்ய பேராசிரியருக்கு வாய்ப்பளித்தார். வழக்கம்போல் பேராசிரியர் அனைவரின் உள்ளத்திலும் நிற்கும்படியான முறையில் அற்புதமான உரைநிகழ்த்தினார். சுவாமியும் நேரடியாகவே தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். பின்னர் ஓர்நாள் தனது அறைக்கு வரும்படி அழைத்த சுவாமி, தாம்பூலம், பழம் பட்டுவேஷ்டி, சால்வை, சபாரி சூட் தைப்பதற்குத் துணி அடங்கிய தட்டை அவருக்கு வழங்கினார். அதன் பின்னர் வரமருளும் தனது இரண்டு கைகளையும் பேராசிரியரின் சிரசின் மீது வைத்து... "தீர்காயுசுடன்... ஆரோக்கியத்துடன்... ஆந்திர தேசம் முழுக்க சாயி தத்துவ பிரச்சாரம் செய் பங்காரு!" என்று தேவரும் மூவரும் ஏங்கித்தவிக்கும் ஒரு மாபெரும் வரத்தை திரு.அனில்குமார் காமராஜு அவர்களுக்கு வழங்கினார் சுவாமி. அன்றைய தினத்தில் இருந்து... தனது இறுதி மூச்சிருக்கும்வரை... பேராசிரியர் அனில்குமார் அவர்கள் , ஞாயிற்றுக் கிழமைகளை... விடுமுறை தினங்களை... தனக்கென்று செலவிடவில்லை! முழுக்கமுழுக்க சுவாமியின் தத்துவ பிரச்சாரத்திற்கே உபயோகம் செய்தார்!
ஸ்ரீராமருக்கு ஆஞ்சநேயர் போல சாயிராமருக்கு திரு.அனில்குமார் என்பதாக பல சாயி பக்தர்களும் அன்போடு புகழ்மாலை சூட்டுகின்ற திரு. அனில்குமார் அவர்களின் அனுபவங்களை எழுத முயல்வது, இமய மலையை பாஸ்போர்ட்-அளவில் படம் பிடிப்பது போல! …இருப்பினும் ஒரு சில சுவாரஸ்யமான சம்பவங்களை, படிப்பினைகளை பகுதி-2ல் காணலாம்.
அவதாரங்கள் அனைவரும் இறைவனே! யோகியாரும் ஞானியரும் இறைவனின் அங்கங்களே! என்கின்ற உண்மையெல்லாம் சிறுவர்களுக்கே கூட தெரியும். ஆனாலும் "அவதாரம்" என்ற பெயரில்/உருவில் இறைவன் புவிக்கு இரங்கி வரும்போது.... தான் வகுத்த நியதிகளை தான் மீறுவதில்லை. அந்தந்த அவதாரத்தின் தத்துவத்திற்க்கேற்ப தனது அமைகை-தகைமையை இறைவனும் கூட தீவிரமாகவே பேணுகிறார். தனது அவதாரத்தின் நோக்கத்திற்குத் தகுந்தாற்போல் தனது பரிவாரங்களையும் சேவார்த்திகளையும் அமைத்துக் கொள்கிறார். அந்தவகையில், இறைவனின் "சத்யசாயி" அவதாரம், கலியுகத்தின் இயல்பான சம்ஹாரத்திற்கான கருவிகளைக் கையிலெடுக்காமல் ... அன்பையே அமிர்தத்துவம் அளிக்கும் ஆயுதமாக கையிலெடுத்தார். மனிதர்களுக்குள் இறைத்தன்மையை மேம்படுத்த திருவுளம் கொண்டு... சேவையையும், கல்வியையும் மேம்படுத்தத் சங்கல்பித்து.... பக்தியின், சேவையின் சிறப்பு குறித்த ஞான விவரிப்புகளே தனது பிரதானமான அவதார காரியமாய் எடுத்துக்கொண்டார் சுவாமி. எல்லாவற்றிற்கும் மேலாக தனது சொற்களின்படி முன்னுதாரணமாக தாமே நடந்துகாட்டினார். தனது நிறுவனத் தலைவர்களும்... அன்பை, சத்தியத்தை, ஞானத்தை, சேவையின் மகத்துவத்தை எடுத்துரைத்தும் நடந்துகாட்டியும் மக்களை உயர்த்தவேண்டும் என்று சுவாமி திருவுளம் கொண்டார்.
அதற்கேற்ப, வெகுஜனங்களின் இதயங்களைத் தொடும்வகையிலும், எல்லோருக்கும் புரியும் வகையிலும் சுவாமியின் தத்துவங்களைக் கொண்டு சேர்க்க உண்மை விளம்பிகள் சுவாமியிடம் வந்துசேர்ந்தனர். அப்படி, சுவாமியிடம் வந்துசேர்ந்த (அல்லது) சுவாமியால் தருவிக்கப்பட்ட முக்கியமான, பிரபலமான புண்ணியாத்மா பேராசிரியர் திரு. அனில்குமார் காமராஜு அவர்கள். வெறுமனே வார்த்தை அலங்காரத் தோரணம் காட்டும் பேச்சாளர் அல்ல அவர். ஆந்திராவின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணித்து ஊர்ஊராக கிராமம் கிராமமாக சேவை செய்தவர்! சத்யசாயி நிறுவனங்களின் ஆந்திரப் பிரதேசத் துணைத்தலைவராக சுவாமியால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் ஆறே மாதங்களில் தலைவராக பதவி உயர்த்தப்பட்டார். ஒரு ஊரளவில் ஏற்பட்ட பதவிக்கே, ஒருவரைத் தேர்தெடுக்கும்போது... அவருக்கு சமூக அந்தஸ்து உள்ளதா? போதுமான பணவசதி உள்ளதா? இந்தப் பதவிக்குண்டான கடமைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான கால அவகாசம் அவருக்கு உள்ளதா? என ஆயிரம் கேள்விகள் எழுப்பப்படும். ஒரு கிருஸ்துவக் கல்லூரியில் பேராசிரராக பணிபுரிந்து கொண்டு, டியூசன், டுடோரியல் வகுப்புகள் மூலமாக வருமானத்தை மேம்படுத்தும் ஒரு மத்தியதர வர்கத்தைச் சேர்ந்தவர் ஒரு மாநிலத்திற்க்கே தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது என்றால், அது சுவாமியின் சங்கல்ப சக்தியின்றி வேறேது? அவருடைய சங்கல்பத்தின் விளைவாக அவரிடம் வந்து சேர்ந்த… அவருடைய முக்கியமான பரிவாரங்களில் ஒருவர் பேராசிரியர் அனில்குமார் என்பதில் சந்தேகமில்லை!
🌷பேச்சாளரிலிருந்து பெரிய பதவிகளுக்கு!
ஒருமுறை மதராஸின் சுந்தரத்தில் பகவானை தரிசிக்க வந்த பேராசிரியர் அனில்குமாரிடம் சுவாமி, என்னுடைய பிருந்தாவன் கல்லூரிக்கு நீ முதல்வராக வரமுடியுமா? என்று கேள்வி எழுப்பினார். துளியும் தயக்கம் இன்றி "சரி சுவாமி, வருகிறேன்!" என்றார். இதை வாசிக்கும் சில சாயி பக்தர்கள்... இதென்ன பிரமாதம்? சரி என்று சொல்வதற்க்கு யாருக்குத் தான் வலிக்கப்போகிறது என்று எண்ணலாம். அனால், உண்மை என்னவென்றால்... அந்த சமயத்தில், அவருக்கு நான்கு பிள்ளைகள்! ஒரு மகள் மருத்துவருக்குப் படித்துக் கொண்டிருக்கிறார், இன்னொரு மகள் இன்டெர்மீடியட் கடைசி ஆண்டு, மற்றொரு பெண் M.A இறுதியாண்டு, மகனோ இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கிறார். அதுபோக.. அத்தை மாமாவும் அவர்களுடன் வசித்த கூட்டுக்குடும்ப வாழ்க்கை. கிறிஸ்தவ கல்லூரி சம்பளம்.... டியூஷன் எடுப்பது, மருத்துவக் கல்லூரி எண்ட்ரன்ஸ் பரீட்சைகளுக்கு கோச்சிங் கொடுப்பது, பீரியடுக்கு நூறு ரூபாய் வீதமாக ஒருநாளைக்கு 10 பீரியடுகள் வகுப்புகள் எடுத்து சிறுகச் சிறுக பொருள் சேர்த்து குடும்பத்தை நடத்திய நடுத்தர வர்க்க குடும்பத்தலைவர் அவர். சுவாமியின் நிறுவனங்களில், இன்றைய தனியார் கல்லூரிகள் போன்று பணத்தை சூரையடிப்பது கிடையாது! நியாயமான சரியான பொருளீட்டுதலே அங்கு சாத்தியம்!
அதுமட்டுமல்லால்... அனில்குமார் அவர்களுக்கே கூட உள்ளுக்குள் சிறிதான பயமும் இருந்தது. ஏனெனில் அவரின் சொந்தத்திலேயே மூவர் அங்கு ஏற்கனவே பணிபுரிந்து, பொறுப்புகளை சுமக்க முடியாமல் ராஜினாமா செய்திருந்தனர். சுவாமிக்கு சரி சொன்ன விஷயத்தை தனது குடும்பத்தாரிடம் பகிர்ந்தபோது... அவரின் சகோதரி "அவர்களைப் போலவே நீயும் திரும்பிவர வேண்டியிருக்கும்" என்று எச்சரித்தார் . அவரின் மாமாவோ, "சாயிபாபா கடவுளென்றால் (உன் நிலைமை அறிந்தும்) உன்னைக் கூப்பிட்டிருக்கக் கூடாது!" என்றார். அதற்கு அனில்குமார் அவர்களோ..."நான் மனிதனென்றால் அவருக்கு மறுப்பு சொல்லக் கூடாது!" என்றார். பேராசிரியர் அனில்குமார் அந்தப் பொறுப்புக்கு சம்மதம் தெரிவித்தபின்னர்... சுவாமி ராமபிரம்மத்தை அழைத்து... "ராமபிராம்மம்! நான் நமது பெங்களூரு கல்லூரிக்கு முதல்வராக அனில்குமாரை வரமுடியுமா? எனக் கேட்டேன்! அங்கிருந்து இங்கே எகிறிக்குதித்து… சரி சுவாமி என்றான் தெரியுமா?" என்று பெருமையும் மகிழ்ச்சியும் பொங்க சுவாமி சொன்னதை பேராசிரியர் அனில்குமார் அவர்கள், தனது ஆன்மாவிற்குள் வைத்து ஆனந்தப்பட்டார்.
ஸ்ரீ கே.ராமபிரம்மம் அவர்கள் ஏறத்தாழ 30 வருடங்கள், சுவாமியின் பெங்களூரு பிருந்தாவன் ஆசிரம வளாகத்தின் பராமரிப்பாளராக இருந்தவர். பிருந்தாவனத்தில் சுவாமியை அதிகாலையில் முதலில் சந்திப்பதும், இரவில் நித்திரைக்கு முன் சுவாமிக்கு பாதசேவை செய்து இறுதியாக விடைபெறுபவரும் அவரே. அதோடு மட்டுமல்லாமல் சுவாமியுடன் சேர்ந்து உணவருந்தும் பெரும்பாக்கியமும் பெற்றிருந்தவர். பெங்களூரு கல்லூரிக்கு பேராசிரியர் அனில்குமார் அவர்கள் முதல்வராக பணியேற்று, வளாகத்திலேயே குடியமர்த்தப்பட்ட பின்னர் ஒருநாள், திரு. ராம்பிரம்மம் இவருக்கு சில அறிவுரைகள் வழங்கினார். அவற்றை தனது வாழ்க்கையில் என்றைக்குமே மறக்கமுடியாத, மறக்கக் கூடாத கட்டளைகளாக பேராசிரியர் அனில்குமார் கருதினார். அந்த கட்டளைகள் பின்வருமாறு:
1. சமயத்தில் சுவாமி உன்னைத் திட்டுவார், உடனே கிளம்பி விடாதே! ஏனென்றால் பல ஜென்மங்கள் எடுத்தாலும் கூட இத்தகைய இறை-சேவை சந்தர்ப்பம் மறுபடி கிடைக்காது! 2. சுவாமி உன்னை இங்கிருந்து வெளியேற்ற வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால், நான் உன் ஆதரவுக்கு வரமாட்டேன். 3. உன் முன்னர் வேறு யாரையாவது சுவாமி கண்டித்தால்... நீ கண்டுகொள்ளாதே! ஏனென்றால் நாளை உனக்கும் கூட அது நேரலாம்! 4. சுவாமி யாரையாவது திட்டிவிட்டார் எனக்கருதி அவரை வெறுக்காதே! ஏனென்றால்.. அதன் பின்னர் அவர்கள் இருவருக்கும் இடையே என்ன நிகழும் என்பதை நீ அறியமாட்டாய்! 5. (சுவாமி அன்பு பொங்க பழகுவதை எண்ணி) சுவாமியை ஒருபோதும் சாமான்யமாக எண்ணிவிடாதே... அவரிடம் சொல்லாமல் எதையும் செய்யாதே!
இந்தக் கட்டைளைகளோடு சுவாமியைக் கையாளும் ஒரு யுக்தியையும் சொல்லித் தந்தார் திரு ராமம்பிரம்மம். ஒவ்வொரு முறை சுவாமியைச் சந்திக்கும்போதும்... அங்கி அணிந்த 5 அடி 3 அங்குல உருவமாக சுவாமியைக் காணாமல்... சடைமுடி தரித்து திருநீறணிந்த முக்கண் சிவனாக மனதுள் உருவகம் செய்துகொள்வாராம் ராமபிராம்மம். ஏனென்றால்... சுவாமியின் அன்பும் கருணையும், சில நேரங்களில் அவருடைய உண்மையான பிரம்மாண்டத்தை நமது புத்தியிலிருந்து மறைத்துவிடுமாம். அதைத் தவிர்க்கவே இந்த யுக்தி! என்று விளக்கினார். திரு ராமபிரம்மம் கொடுத்த கட்டளைகளும் யுக்திகளும் முழுமையாக அனில்குமார் அவர்களால் கடைபிடிக்கப் பட்டது என்பதற்கு அவரது பூரணானந்த வாழ்வே சாட்சி !
அனில்குமார் அவர்களை, சுவாமி பெங்களூரில் இருந்து புட்டபர்த்தி கல்லூரிக்கு வருமாறு அழைத்தார். பெங்களூரில் முதல்வராக இருந்தவர், புட்டபர்த்தி கல்லூரியில் பணிபுரிவதானால்... வெறும் பேராசிரியராக பதவி இறக்கம் செய்யப்பட வேண்டியிருக்கும். பெங்களூருக்கு முதல்வராக வருவதற்கு முன்பே 25 ஆண்டு காலம் பேராசிரியராக இருந்தவர். உண்மையை சொல்லப்போனால், இது எவரையும் கலங்கச் செய்யும் ஒரு நிஜமான சோதனையே! வெளிமனிதர்கள் பார்வையில் எனது பதவி தாழ்த்தப்பட்டதாகவே இருக்கும்! என்ற எண்ணமும் அவருக்கு ஏற்பட்டது! தனது மனத்தில் சில கவலைகளும், குழப்பங்களும் ஏற்பட்டபோதும் கூட தன்னைத் தானே சுமந்து கொண்டு வந்து புட்டபர்த்தியில் சுவாமியின் பாதத்தில் கிடத்தினார் அனில்குமார். பிரஷாந்தி வளாகத்தில் A13 வீட்டை வழங்கி வரவேற்றார் சுவாமி. வருடத்தில் சிலமுறை என்பதாக, மொழிபெயர்ப்பு செய்வதும்... உபன்யாசங்கள் வழங்குவதுமாக இருந்தவரை தனது பிரதான "மொழிபெயர்ப்பாளராக" சுவாமி ஏற்படுத்திய அற்புதமான நிகழ்வு அது என்பது பின்னரே அவருக்கு விளங்கிற்று!
சுவாமி செல்லுமிடமெல்லாம் உடன்செல்லும் பாக்கியம்... சுவாமியின் ஒலிபெருக்கியாக உத்தமக் கருவியாக விளங்கும் அற்புதம் அமையப்பெற்று ஆனந்த வாழ்வை வாழ்ந்தார். அமெரிக்கா, அர்ஜென்டினா, மெக்ஸிகோ,ஹாங்காங், பிரேசில், ஜப்பான், தாய்லாந்து, ஈகுவேடார், எல் சாவடோர், கௌதமாலா, வெனிசுவேலா, கொலம்பியா, பெரூ, மலேஷியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் என ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்றுவந்தாலும் சுவாமியின் கொடைக்கானல் பயணங்களின் போது தாம் உடன்சென்றமை, அந்த சமயங்களில் சுவாமியிடம் கிடைக்கப்பெற்ற ப்ரேமானுபவங்களையே பொக்கிஷமாக நினைவில் வைத்திருந்தார். பேராசிரியர் அனில்குமார் என்றாலே அனைவர் மனதிலும் ஒரு குளுமையும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது என்றால் எத்தகைய ஆனந்தமூர்த்தியாக அவர் வாழ்ந்திருக்க வேண்டும்? அப்படி அவர் வாழ... பகவானிடம் அவர் எத்தகைய அனுக்கிரகத்தைப் பெற்றிருக்க வேண்டும்? அவரது குடும்பப் பொறுப்புகள் ஒன்றுவிடாமல் அனைத்தையும் சுவாமியே சீரும்சிறப்புமாக நடத்தி வைத்தார், இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை சொல்லவும் வேண்டுமா? பேராசிரியர் அனில்குமார் ஆங்கிலத்தில் 29 புத்தகங்களையும், தெலுங்கில் 7 புத்தகங்களையும் எழுதியுள்ளார். புட்டபர்த்தியில் வாரந்தோறும் தவறாமல் சொற்பொழிவாற்றுவார்.
ஒவ்வொருவரின் பூர்வஜென்ம புண்ணியத்திற்கேற்ப அவதாரங்களின் அருகாமையோ அல்லது ஒரு சத்குருவின் அருகாமையோ கிடைக்கப்பெறுகிறது. அந்த அருகாமையை பயன்படுத்திக் கொண்டு ஒருவர் ஆன்ம முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே இறைசங்கல்பம். மாறாக, அவதாரத்திற்கே உதவி செய்கிறேன் பார்! என்ற அறியாமையில் மூழ்குபவர் அகங்காரத்தினால் அழிந்து போகின்றனர். மாபெரும் குருக்கள் மற்றும் அவதாரங்களின் அருகாமையில் இருந்தும் கூட, பல வருடங்கள் நெருங்கி நின்று சேவைகள் செய்தும்கூட மிகச்சிறிய அளவிலேயே ஆத்மஞானம் உயரப்பெற்ற துரதிஷ்டசாலிகளும் யுகயுகமாக இருக்கவே செய்கிறார்கள். இதற்குக் காரணம், தங்கள் ஸ்தூல நெருக்கத்தையும் தொண்டையும், ஆன்ம முன்னேற்றமாகக் கருதி... உயர்ந்துவிட்டதாகக் கற்பனை செய்வதுதான்! பேராசிரியர் அனில்குமார் காமராஜு அவர்கள் தனது வாழ்நாளின் இறுதிவரை, பகவானிடம் தாம் அடைந்த மேன்மைகளை.... பகவானின் கருணையாகவே பிரகடனம் செய்தார். சூரியஒளி நம்மேல் படுவது சூரியனின் கருணை என்பார்! கடந்து வந்த பாதையை ஒருபோதும் மறக்காத தன்மையால்... அவரின் சமநிலை என்றுமே தவறாமல் இருந்தது!
மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக