முற்காலத்தில் பேய் பிடித்தவர்களை பாபாவிடம் கொண்டு வருவார்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான அணுகுமுறையில் பாபா அதை சரி செய்திருக்கிறார், அப்படி ஒரு திகில் சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...
விபரீத மரணம் கண்ட ஆன்மா ஆவியாக அலைகிறது! ஆசைகள் அடங்காமல் உடல் தேடும் உடலற்ற ஆன்மாக்கள் மன வலிமையற்ற உடலில் புகுந்து விடுகிறது என்ற ஒரு பரவலான எண்ணம் இருக்கிறது! அச்செயல் அமானுஷ்யமானவை! அதன் பூர்வ கர்ம காரணங்கள் என்ன? ஏது? என்பதெல்லாம் பேரிறைவன் பாபாவுக்கே வெளிச்சம்!
இப்படி இருக்கையில் ஒருகாலத்தில் பேய் பிடித்த நிறைய பேர்கள் பாபாவிடம் கொண்டு வரப்படுகிறார்கள்! நிறைய பேர்களை - பேய்களை பாபா குணப்படுத்தியும் இருக்கிறார்! அப்படி ஒரு சுவாரஸ்ய சம்பவத்தில்..
இது கட்டாக் பகுதியில் நிகழ்கிறது!
அவர் ஒரு முதியவர்! கட்டாக் பகுதியில் பாபா சமிதியில் ஒரு முக்கிய பங்கும் வகிப்பவராகத் திகழ்கிறார்!
அவர் தனது 12'டே வயதான பேத்தியின் விநோத நிலை கண்டு துடித்துப் போகிறார்! அவளுக்கோ பேய் பிடித்து ஆட்டுகிறது.. அந்த பேய்'த்தியை (பேத்தியை) சிரமப்பட்டு அழைத்துக் கொண்டு புட்டபர்த்தி வருகிறார்! அது செய்த ஆட்டத்திற்கு அளவே இல்லை!
இறந்த உடலில் பிரிந்த ஆவி திருடனாக இருந்திருக்குமோ என்னவோ?! , பிரசாந்தி நிலைய ஆசிரமங்களின் பணப் பை எல்லாம் அந்தச் சிறுமியின் மடியில் தஞ்சம் அடைகின்றன!
இப்படி இருக்கிற போதும், பாபா கோபமே அடையவில்லை! தினசரி அந்தப் பேய் பிடித்த சிறுமியோ , பக்தி பிடித்த பக்தர்களோடு தரிசன வரிசையில் பெருங்கருணை பிடித்த , பல தெய்வங்களுக்கே பிடித்த பாபாவின் தரிசனத்திற்காக அமர வைக்கப்படுகிறாள்!
பாபாவும் தினசரி அந்தச் சிறுமியை நோக்கி வரும் போதெல்லாம் "இது பாசாங்கு!" (Pretention) என்றே சொல்லிக் கொண்டே செல்கிறார்!
பேய் அதன் பயமுறுத்தலை நோக்கி பாபா சொன்ன வீரிய வாக்கு அது!
அந்த சிறுமியின் பேய்ப் பிடித்தலை நீக்கும் நாளும் பாபாவால் குறிக்கப் படுகிறது! அந்த நாளில் வழக்கம் போல் பஜனை அரங்கேறிக் கொண்டிருக்கிறது! தாளமும் எழுகிறது! அந்தச் சிறுமியின் பேயாட்டமும் எழுகிறது! ஆட்டம் அதிகரிக்கிறது! அருகில் இருப்போர் மனம் ஆட்டம் காண்கிறது! அடுத்த நொடி என்ன நடக்குமோ? ஏது நடக்குமோ? ஒரே திகில்! பயம்!
திடும் என ஒரு சம்பவம், பார்ப்பவர் நெஞ்சை உறையச் செய்கிறது!
வீல் என்று அந்தச் சிறுமி கத்திக் கொண்டே மண்ணில் சாய்கிறாள்! ஓர் நொடி நிசப்தம்! பாபா தன் நாற்காலியை விட்டு எழவே இல்லை! அந்த பேய்ப் பிடித்தச் சிறுமியின் நெற்றிப் பொட்டைக் கூட தொடவில்லை!
அந்தச் சிறுமி உயிரோடு இருக்கிறாளா? இல்லையா?
என்ன நேர்ந்தது? , ஒரு புதிர்ப் பதட்டம் அனைவர் நெஞ்சிலும்!
சற்று நேரம் கடந்து அந்தச் சிறுமி எழுந்த பிறகு, பாபா பயங்கரமான ரௌத்திர ரூபத்தில் இருந்ததாகவும் , அவரது கையில் ஒரு சூலாயுதம் வைத்திருந்ததாகவும், அதை வைத்து அந்த ஆன்மாவை விரட்டி விட்டார் எனவும் அந்தப் சிறுமி பரவசமோடு பேசுகிறாள்! பேய் விட்டு விலகியது என்று அந்தச் சிறுமியின் பாட்டனாருக்கு மிகவும் மகிழ்ச்சி! பாபாவின் தெய்வீகத் திருச்செயல் நினைந்து, அவரது இரு விழிகளும் உருகின ஆனந்தக் கண்ணீரில் நனைந்து...!
(ஆதாரம் : அற்புதம் அறுபது | பக்கம் : 21,22 | ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)
பேய் பிடிப்பது பொய் என்பர் பலர், உண்மையாக இருக்கலாம் என்பர் சிலர்! யாருக்கு தெரியும்? என்பர் ஓரிருவர்! பேயாவது பிசாசாவது என்பர் தனக்கு அனைத்தும் தெரியும் என்பது போல் பாசாங்கு செய்பவர்! மனிதர்கள் ஒன்றை புரிந்து கொள்ள மறந்துவிடுகின்றனர்.. பேய்களோ பிசாசுகளோ அல்ல ஆபத்து, அதை விட பேராபத்து என்பது நம்மைப் பிடித்தாட்டும் பணப் பேய் - புகழ்ப் பேய் - பதவிப் பேய் - பாசப் பேய் - பயப் பேய் - ஆசைப் பேய் - ஆணவப் பேய் போன்றவையே! சாதாரண பேய்களை மட்டுமல்ல இந்த பேய்களையும் பாபாவால் மட்டுமே குணப்படுத்த இயலும்! இந்தப் பேய்கள் தான் மிக முக்கியமாக ஓட்டப்பட வேண்டிய பேய்கள்! பேர்களை விரட்ட அல்ல பேய்களை விரட்டவே பாபா பூமியில் அவதரித்திருக்கிறார்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக