தலைப்பு

வெள்ளி, 7 ஜூன், 2024

பூர்வ ஜென்மங்கள் பேசி காரணத்தை புரிய வைத்த இரு கடவுள் அவதாரங்கள்!

ஒரு விஷயத்தை ஏன் அவதாரங்கள் புரிகின்றன? ஏன்? ஏன்? ஏன்? எனக்கு இல்லையா? அவனுக்கா? என்ன இந்த பாரபட்சம்? போன்ற பல்வேறு விதமான நமது கேள்விகளுக்கு இரு அவதாரங்களும் உணர்த்தும் பூர்வ ஜென்ம காரணங்கள் சுவாரஸ்யமாக இதோ...!

அது துவாபர யுகம்! ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் சுதல லோகமும் கடந்து பாதாள லோகத்திற்குச் செல்கிறார்கள்! விதல, சுதல நிதல, ரசாதள மகாதள பாதாள லோகங்கள் எல்லாம் இந்தப் பிரபஞ்சத்திலேயே இருக்கின்றன... அங்கேயும் ஜீவன்கள் இருக்கின்றன... எல்லா உலகங்களுக்குமான ஒரே அதிபதி சாட்சாத் ஸ்ரீ கிருஷ்ணர் மட்டுமே! 

ஆக இருவரும் அங்கே செல்ல... பலியின் ராஜாங்கம் நடக்கும் இடம் அது! வாமனராய் ஸ்ரீ கிருஷ்ணர் பலியை மிதித்த மிதி அது பூமியை விட்டே வேற்று உலகத்திற்கு வழி காட்டி விடுகிறது! பலியை அவர் பலியிடவில்லை.. பலியின் பெயரிலேயே பலி இருக்கிறதே, பிறகு ஏன் பலி இட வேண்டும்? ஆகவே புத்தி மட்டும் புகட்டுகிறார்! 

புத்தி வருகிற போது ஏற்படுகிற வலியை விட பலி இடுகையில் ஏற்படுகிற வலி குறைவு தான்!

ஆகையால் அதில் பலியின் ஆணவமும் பலியாகிவிடுகிறது! 

இருவரையும் கண்டு ஆனந்தப்படுகிறார் பலி! ஆனந்தப்பட்டு உரிய வரவேற்பு மரியாதையை வழங்குகிறார்! பிறகு ஸ்ரீ கிருஷ்ணர் பலியிடம் ஒன்று கேட்கிறார்!


அது தாய் கேட்ட பாசக் கோரிக்கை! தாய்ப்பாசக் கோரிக்கை... ஸ்ரீ கிருஷ்ணருக்கு முன் பிறந்த ஆறு குழந்தைகளையும் மீட்டுத் தரும்படியான கோரிக்கை! அதை ஸ்ரீ கிருஷ்ணரால் அன்றி யாரால் செயல்படுத்த இயலும்?! 

ஆகவே அந்த மாற்று லோகத்தில் இருந்த ஆறு குழந்தைகளையும் பலியிடம் கேட்கிறார்! அந்தக் குழந்தைகள் அப்போது கம்சன் பலி இட்ட குழந்தைகள்! இப்போது பலியின் சாம்ராஜ்ஜியத்திற்குள் இருப்பதால் இப்போது அது பலியின் குழந்தைகள்!

            அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் அந்த ஆறு குழந்தைகளின் பூர்வ ஜென்மத்தை பலி சக்கரவர்த்தியிடம் விவரிக்கிறார்! 

சுயம்புவ மனுவின் காலத்தில் மரிஷி மகரிஷிக்கும் வர்ஷாவுக்கும் பிறந்தவர்கள் இந்த ஆறு குழந்தைகள்! 

ஸ்மரா, உத்கிதா, பரிஷ்வாங்கா, படாங்கா, ஷுத்ரபுவு மற்றும் கிரிணியே இந்த ஆறு குழந்தைகளின் பூர்வ ஜென்மப் பெயர்கள்!

ஒரு முறை இந்த ஆறு பேரும் பூர்வ ஜென்மத்தில் ஸ்ரீ பிரம்மாவை ஏளனம் செய்கின்றனர்... ஆகவே பிரம்மாவோ ஏளனம் செய்த அவர்களது தீய கர்மாவின் பலனாக அவர்களை பூதங்களாக பிறவி எடுக்கும்படி சாபம் கொடுக்கிறார்! ஆகவே அவர்கள் மீண்டும் ஹிரண்ய கசிபுவின் மகன்களாகப் பிறக்கிறார்கள்! மீண்டும் அதற்கு அடுத்தப் பிறவியில் இதோ இந்த ஆறு குழந்தைகள் , தேவகிக்கு யோக மாயாவின் சக்தியால் பிறந்தவர்கள் என அந்த ஆன்மாக்களின் ஒவ்வொரு பிறவியையும் விளக்குகிறார் ஸ்ரீ கிருஷ்ணர்! 

அவர்கள் பிறந்த உடனேயே கம்சன் அவர்களை நொடியும் தாமதிக்காமல் கொன்று விடுகிறான்! ஆகவே இப்போது அவர்களே இதோ உன்னோடு பாதாள லோகத்தில் இருக்கிறார்கள் என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்! ஆகவே நான் அவர்களை இங்கிருந்து எடுத்துச் செல்ல வந்திருக்கிறேன் என தனது விஜயத்தைப் பற்றியும், அவர்களை பாதாள உலகத்தில் இருந்து ஏன் எடுத்துச் செல்லப் போகிறார் என்ற காரணத்தையும், ஏன் அவர்கள் பாதாள லோகம் வந்தார்கள் எனும் அவர்களது பூர்வ ஜென்மத்து சூட்சுமத்தையும் ஸ்ரீ கிருஷ்ணர் பலியிடம் விளக்குகிறார்! 

(ஆதாரம் : ஸ்ரீ மத் பாகவதம் - 10:1150)


இதே போல் ஸ்ரீ கிருஷ்ணர் தான் எடுத்த கலியுக அவதாரமான ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் இந்த பூர்வ ஜென்ம சம்பவங்களை நிறையவே அவரவர்களுக்கு விவரித்து விளக்கி இருக்கிறார்! 

இதற்கோ நிறைய நிறைய உதாரணங்கள்! 

முதலில் அவர் பூர்வம் பேசியது தன்னைப் பற்றியே.. தனது பூர்வ அவதாரமான ஸ்ரீ ஷிர்டி சாயி பற்றியே... 

பிறகு யுகம் யுகமாக தொடர்ந்து பிறந்து வரும் தனது பக்தர்களிடம் பாபா அவர்களது பூர்வ ஜென்மம் விவரித்து ஆன்மீகத்தில் நல்லதொரு வழி காட்டியும் வருகிறார்! அதை இன்றளவும் பாபா தொடர்ந்து கொண்டே வருகிறார்! 


அது வொயிட் ஃபீல்ட் பிருந்தாவனம்! ஒருமுறை அதில் ஒரு மாணவன்... பொறுப்பே இல்லாதவன்... ஒரே ஐச்சாட்டியம்! தான் பிடித்த முயலுக்கு காலே இல்லை சிறகுகளே இருக்கிறது என்று அடம்பிடிக்கும் விநோத குணாதிசயம் கொண்டவன்! அவன் யார் சொல் பேச்சும் கேளாதவன்! பேராசிரியர்களுக்கும் வார்டனுக்குமே அவனால் ஒரே தலைவலி! என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைகிறார்கள்! ஒழுக்கத்திற்கே பெயர் போனது பாபாவின் கல்லூரி! இவன் அந்தப் பெயரையே கெடுத்துவிடுவானோ என்ற பதட்டம் அவர்களுக்கு! 

ஆகவே வேறு வழியின்றி அவனது விநோத குணங்கள் பற்றி பாபாவிடமே ஆசிரியர்கள் பட்டியலிட... அதை பாபா கண்டு கொள்ளவே இல்லை! அவனை வழக்கம் போல் அன்போடே நடத்திக் கொண்டு வருகிறார்! அவரது உடல் மொழியில் கூட அவன் மேல் வெறுப்பு இல்லை! 

குற்றம் கூறிய ஆசிரியர்களுக்கோ பாபா புரிவது விநோத செயலாகத் தோன்றுகிறது!

அவனைப் பற்றி எத்தனை முறை சொல்லியும் பாபா மௌனம் சாதிக்கிறார்!

இப்படிப்பட்டவனை ஏன் இறைவன் ஆதரிக்கிறார்? எனும் தீரா குழப்பம் அவர்களுக்கு...! பாபா எது செய்தாலும் அதில் ஒன்று காரணம் இருக்கும் என்பது ஓரளவுக்கு புரிந்தாலும் கூட... பாபாவின் இந்த நீள் மௌனத்தை யாராலும் எந்த லிபியிலும் மொழி பெயர்க்க முடியவில்லை! 

இப்படியே அது தொடர... மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் பாபாவே முன் வந்து அவனது பெட்டிப் படுக்கையையும் சேர்த்து ஹாஸ்டலில் இருந்து விலக்கி வைத்து விடச் சொல்கிறார்! ஆசிரியர்களுக்கோ ஒரே ஆச்சர்யம்! ஆனால் பாபாவின் தாமத நடவடிக்கைகளுக்கான காரணமோ புரியவில்லை!


பாபாவே அவர்களிடம் 

"எனது ஷிர்டி அவதாரத்தில் அவன் என்னை அவனது வீட்டில் மூன்று நாட்கள் தங்க வைத்து உணவும் அளித்திருக்கிறான்! ஆகவே தான்... அந்த மூன்று நாட்களுக்காக நான் அவனுக்கு மூன்று ஆண்டுகள் என்னோடு அவனை தங்க வைக்கும் தெய்வீக வாய்ப்பு அளித்தேன்!" என்று அவனது பூர்வ ஜென்மம் பேசுகிறார்!

அனைவரும் பேராச்சர்யப்படுகிறார்கள்! அந்த மூன்று ஆண்டுகளில் அவன் நடத்திய அட்டகாசம்... அதைப் பெரிதேபடுத்தாமல் பொறுத்துக் கொண்ட பாபாவின் அளவற்ற கருணை..‌அதை நினைத்துப் பார்த்த போது ஆசிரியர்கள் ஆச்சர்ய'ர்கள் ஆகி கண்ணீரே சிந்துகின்றனர்!


ஒரு முறை புட்டபர்த்திக்கு பாபாவை தரிசிக்க ஒரு பணக்கார தம்பதிகள் வருகிறார்கள்! பணம் இருந்ததே தவிர சந்தோஷம் இல்லை! 

ஆயிரம் வாசல் வழி அவர்களுக்கு செல்வம் கொட்டிக் கொண்டே இருந்தது.. ஆனால் ஒரே ஒரு வாசல் மட்டும் பலமாக அடைத்துவிட்டிருந்தது... அது தான் பார்வை வாசல்!

ஆம் அவர்களது இரண்டு குழந்தைகளுக்கும் கண் பார்வையே இல்லை! 

அந்த பெருஞ் செல்வ ஒளியால் அந்த இரு குழந்தைகளின் இரு பார்வைகளையும் மீட்டுத் தரவே இயலவில்லை... ஆகவே தஞ்சம் உனது காலடி என பாபாவிடம் வருகிறார்கள்! 

     அந்தத் தம்பதிகளுக்கு பாபா நேர்காணல் வழங்குகிறார்! இருவரும் தங்களது பார்வையற்ற மகன்களுக்காக பாபாவின் காலடியில் விழுந்து கதறிக் கதறி அழுகிறார்கள்! பாபாவின் அங்கியே நனைந்துவிடும் அளவிற்கு கண்ணீர் மழை! 

வேறு யார் அந்த அழுகையை பார்த்திருந்தாலும் பார்த்தவர்களும் சேர்ந்து அழுவதைப் போன்ற அழுகை அது! ஆயினும் பாபா உணர்ச்சி வசப்படவே இல்லை! 

அப்போது தான் அந்த பார்வை அற்ற இரு குழந்தைகளின் பூர்வ ஜென்மம் பேசுகிறார்!

இரு குழந்தைகளும் முன் ஜென்மத்தில் திருடர்களாக இருந்து , அப்பாவிகளிடம் இருந்து பொருள் திருடி அவர்களை குருடாக்கவும் செய்திருக்கிறார்கள் என்று தனது உள்ளங்கையை நீட்டுகிறார் பாபா!

அதில் ஒரு திரைக்காட்சி தெரிகிறது! 

இரு திருடர்களும் பொருளை களவாடி , அப்பாவிகளை சித்திரவதை செய்து , அவர்களின் கண்களை சேதப்படுத்தி, பார்வையைப் பறித்து... முன் ஜென்மத்தில் நடந்த அகோர சம்பவங்களை பாபா தனது கைகளில் காட்டுகிறார்... அதைப் பார்க்கும் பெற்றோர்களுக்கு பக் என இருக்கிறது!


"இப்போது பார்த்தீர்களே! அது உங்கள் மகன்களே! எப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறார்கள்! ஆகவே தான் அந்த தீய செயல்களுக்கான பலன்களை இப்போது இந்த ஜென்மத்தில் அனுபவிக்கிறார்கள்! அவர்கள் களவாடிய பொருட்களில் சில நல்ல காரியத்திற்கும் பயன்பட்டிருக்கிறது... ஆகவே தான் அவர்கள் வசதியான உங்கள் குடும்பத்தில் வந்து பிறந்திருக்கிறார்கள்!" என்று அவர்களுக்குத் தெளிவுப்படுத்துகிறார் பாபா!


இதே போல் வேறொரு பார்வையற்றவர் பாபாவிடம் தனக்கு கண் பார்வையை அருளும் படி கேட்க... "நீ தான் உனது முன் ஜென்மத்தில் என்னைக் குருடாக்கி விடு என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டாய்! அதைத் தான் இப்போது அனுபவிக்கிறாய்! நீ என்ன கேட்டாயோ அது தான் உன்னிடமே வந்திருக்கிறது..‌ நீ யாரிடம் அப்படி வேண்டிக் கொண்டாயோ அவரிடமே வந்து மீண்டும் மாற்றிக் கேட்டால் நான் என்ன செய்ய முடியும்? இந்த ஜென்மத்தில் இதிலிருந்து உன்னால் தப்பிக்கவே இயலாது!" என்கிறார் பாபா!


(Source : Sri Krishna Sri Sathya Sai | Page : 172 -173 | Author : Dr. J. Suman Babu ) 


இதனாலும் பாபா ஸ்ரீ கிருஷ்ணர்! இதனால் தான் பாபா இறைவன்! யார் கேட்டாலும் உடனே பாபா கொட்டிக் கொடுப்பதில்லை... சிலருக்கு கொட்டியும் கொடுக்கிறார்... பலருக்குத் தலையில் கொட்டியும் கொடுக்கிறார்! ஆகவே தான் அவர் இறைவன்! ஒரு இம்மி அளவிற்குக் கூட தர்மத்தில் இருந்து விலகாதவர் பாபா! அதனால் தான் அவர் இறைவன்! நமக்கு பிடித்திருக்கிறதோ பிடிக்கவில்லையோ, தர்மம் நமக்கு வலிக்கிறதோ இனிக்கிறதோ, பாபா தர்மப்படியே அவரவருக்கு படி அளக்கிறார்! முன் ஜென்ம கர்மாவும், இந்த ஜென்மத்தின் நல்ல குணமும் அதற்கான அளவுகோலாகிறது!

தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் கர்மா தனது வேலையைக் காட்டாமல் விடுவதே இல்லை! அது தான் கர்மாவின் தனிப்பெரும் சிறப்பு! 

கர்மா லஞ்சம் வாங்கிக் கொண்டு விடுபடுவதில்லை, ஊழல் செய்து கொண்டு மனிதரை துதிபாடுவதில்லை, அதிகாரத் தோரணை மனிதரும் கர்மாவிற்கு கால் தூசியே!

ஆம்! ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்த போது இறைவன் சக்ராயுதம் வைத்திருந்தார்... 

ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் இறைவனோ கர்மாயுதம் வைத்திருக்கிறார்!

இதயத்தில் நன்றாகப் பதித்துக் கொள்ளுங்கள்.. நாம் நமது தீய குணங்களை மாற்றிக் கொள்ளாமல் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் நம்மை ஒரு நொடியும் காப்பாற்றுவதில்லை! திருந்தாதவர்களை துவம்சம் செய்வதே கர்மாவின் வேலை! 

ஒருவருக்கு நல்லது நடக்கிறதா? நல்ல கர்மா குறைகிறது என்று அர்த்தம்! கெடுதல் நடக்கிறதா? தீய கர்மா குறைகிறது என்று அர்த்தம்! இப்போது நாம் எதைச் செய்கிறோமோ அதுவும் இதில் சேர்ந்து கொள்கிறது! 

ஆகவே தான் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் யாரையும் வதம் செய்ய வரவில்லை! அதை அவரவர்களின் கர்மாவே கவனித்துக் கொள்கிறது! 

*புத்தி உள்ளோர் பிழைத்துக் கொள்வர்! மற்றோர் பிறவி சுழற்சியில் கர்மாவின் வாஷிங் மெஷினில் அகப்படுவர்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக