தலைப்பு

வியாழன், 6 ஜூன், 2024

இறைத்தாய் ஈஸ்வரம்மா பாபாவின் கைக்குட்டையால் இதயத்தில் எழுதிய பாசக் கடிதம்

பாபாவின் தாய் ஒரு தெய்வீகத் தனிப்பிறவி... அந்த ஸ்படிக வயிற்றில் நீல ஒளியாய் நுழைந்த சூரியன் பாபா... அவரே ஈஸ்வர அன்னையின் இயல்பை விளக்குகிறார் இதோ...

ஈடில்லா ஈஸ்வர அன்னை பாபா மேல் தனி அக்கறையே கொண்டவர்... பாபாவை பரிபூரண அவதாரம் என சிறுகச் சிறுக அன்றாடம் அனுபவித்து உணர்ந்து கொண்டவர்! அவதார ஜெயந்தி வைபவத்தில் அண்ட சராசர பேரிறைவனை தன் கர்ப்பத்தில் சுமந்த அன்னையே பாபாவின் சிரசு தொட்டு முதன்முதலாக எண்ணெய் வைப்பவர்... அது இமயமலை முகட்டை சூழும் கார்மேகத்தின் இடுக்கில் பனி உருகுவது போல் தரிசிப்பதற்கே ஆனந்தமாக இருக்கும்! 

ஒரு முறை பிருந்தாவனத்தில் பாபா தனது மாணவர்களிடையே 17/3/1998 அன்று அரிய விஷயங்களை மாணவர்களோடு பகிர்ந்து கொண்டிருக்கும் போது பிரபஞ்சத் தாயை சுமந்த பரிமளத் தாயான ஈஸ்வராம்பா பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்!

"ஒரு நாள் அதிகாலை 4 மணி இருக்கும்... சுவாமி எழுந்திருக்கும் போது... எதிரே ஒரு உருவம் நின்று கொண்டிருக்கிறது... யார் என பார்க்கிறேன்? "அட ஈஸ்வரம்பா..!" இந்த நேரத்தில் இங்கு ஏன் நிற்கிறாள் என அவளிடம் "என்ன அம்மாயி என்ன விஷயம் ? சொல்!" எனக் கேட்கிறேன்... அவளோ "சுவாமி உங்களிடம் எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது... அதை உங்களிடம் சொல்லவே நிற்கிறேன் என்கிறாள்.. "சரி சொல்!" என்கிறேன்!

"சுவாமி அது வந்து கர்ச்சீஃப் விஷயம்.. நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும்" என இழுத்தாள்... நான் விடாப்பிடியாக எதுவும் தெரியாதது போல் " என்ன கர்ச்சீஃப் விஷயம்? சொல்.. உனக்கு என் கர்ச்சீஃப் வேணுமா?" எனக் கேட்கிறேன் (சிரிப்பு).. "இல்லை சுவாமி அது இல்லை... நீங்கள் கர்ச்சீஃப் பயன்படுத்துகிறீர்கள்?" "ஆமாம்.. அதில் என்ன?" இது சுவாமி... "அதில் ஒன்றுமில்லை.. ஆனால் நீங்கள் யார் கர்ச்சீஃப் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு துடைத்துக் கொள்கிறீர்கள்... அது உங்கள் உதட்டில் படுகிறது... அது தான் எனக்கு பயமாக இருக்கிறது!... இது கருணைத் தாய் ஈஸ்வராம்பா... "அதனால் என்ன பயம் உனக்கு?" எனக் கேட்டேன்... "பயம் இருக்காதா சுவாமி...? அப்படி நீங்கள் உதடு துடைக்கையில் அதில் உடம்புக்கு ஒவ்வாத பொருள் ஏதேனும் இருந்தால் உங்களை பாதிக்காதா சுவாமி? இனிமேலாவது நம்பிக்கையானவர்களிடம் இருந்து மட்டும் கர்ச்சீஃப் வாங்குங்கள் சுவாமி!" எனக் கோரிக்கை வைத்தாள்... அதற்கு சுவாமி "சுவாமி எப்படி கர்ச்சீஃப் தருபவர்களிடம் வேண்டாம் என்று சொல்ல முடியும்?" என மீண்டும் கேட்டேன்! 


சுவாமிக்கு ஏதேனும் சிறு அலர்ஜி கூட வந்து விடக்கூடாது என்கிற ஸ்ரீஈஸ்வர அன்னையின் உன்னத கவனிப்பும், அண்டம் அடங்கா அக்கறையும் , பாற்கடல் பொங்கும் பாசமும், சுயநலமற்ற சேவை நோக்கமும் பேராச்சர்யம் தருபவை என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை!

இன்னொரு முறை அந்தக் கருணைத் தாய் பாபாவிடம் மெதுவாக வந்து "சுவாமி நீங்கள் எனக்கொரு சத்தியம் செய்து தர வேண்டும்!" எனக் கேட்கிறாள்.. "என்ன சத்தியம்?" எனக்கேட்கிறார் பாபா..

"சுவாமி நீங்கள் வேளா வேளைக்கு உணவே எடுத்துக் கொள்ளாமல் உங்கள் உடம்பு மிகவும் பலவீனமாக காட்சி அளிக்கிறது.. என்னால் அதைத் தாங்கவே முடியவில்லை... இப்படி நீங்கள் ஒரே ஒரு வேளை உணவு உண்கிறீர்களே.. இது நியாயமா...? நீங்கள் இனி மதியம் ஒரு டம்ப்ளர் மோராவது எடுத்துக் கொள்ள வேண்டும்! எடுத்துக் கொள்கிறேன்! என எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள்!" எனக் கேட்கிறாள் அந்த உன்னத ஈஸ்வர அன்னை... "மோரா ? சரி  கொண்டு வா!" என்கிறார் பாபா.. "உடனே ஒரு பெரிய டம்ப்ளரில் மோரை தன் கையாலேயே எடுத்துக் கொண்டு வந்து ஊட்டாத குறையாக பாபாவுக்கு தருகிறாள் தாய்... பாபா எதுவும் சாப்பிடுவதே இல்லை என வருந்திய தாயின் மணிவயிற்றில் பாலுக்கு பதிலாக மோரையே வார்க்கிறார் பாபா! இந்த பாசத்தை கூட நெகட்டிவ் அன்பு என்று பாபா விவரித்த போதும் அன்னையின் சேவை கோரிக்கைகளை ஒன்றுவிடாமல் நிறைவேற்றுகிறார்... ஏதோ பெயருக்கு மகனாய்..‌ மனைவிமார்களின் பக்தர்களாக இருக்கும் இந்த காலத்து மகன்கள் போல் இல்லை இறைவன் பாபா! எப்படி கௌசல்யா புத்ரனாக இருந்தாரோ.. எப்படி யசோதா புத்ரனாக வளர்ந்தாரோ... எப்படி அனுசுயா புத்ரனாக மலர்ந்தாரோ... எப்படி தேவகிரி புத்ரனாக ஒளிர்ந்தாரோ அப்படி இந்த அவதாரத்தில் ஈஸ்வரி புத்ரனாகவே பாபா திகழ்கிறார்!

(ஆதாரம் : அற்புத அவதாரம் ஸ்ரீ சத்ய சாயி பாபா / பக்கம் : 142 / ஆசிரியர்: க.நாகராஜன்)


"சுவாமி! நாங்கள் நன்றாக இருக்க வேண்டும்... எங்களுக்கு அது வேண்டும்... இது உடனே வேண்டும்! பிரார்த்தனை செய்து எத்தனை நாளாகிவிட்டது... என்ன சுவாமி இப்படி செய்கிறாய்? " என பாபாவிடம் வேண்டிக் கொள்ளும் பல கோடி பக்தர்கள் மத்தியில்... "சுவாமி நீ நன்றாக இருக்க வேண்டும்... உனக்கு இது எல்லாம் தானே தேவை.. அதை நான் செய்கிறேன்.. நீ சொல்வது போலவே நான் கேட்டு நடக்கிறேன்!" என பிரார்த்தனை செய்த ஒரே ஒருவர் இறைத் தாய் ஈஸ்வராம்பா.. அது பக்தி! அது மட்டுமே பக்தி! எதையும் எதிர்பார்க்காத அவ்வித உன்னத பக்தியையே நாம் அனைவரும் ஸ்ரீ ஈஸ்வராம்பாவிடம் "தாயே! ஈஸ்வராம்பா! உனக்கிருந்த உன்னத பக்தியை எங்களுக்கு எப்பாடுபட்டாவது கொடு!" என ஈஸ்வராம்பா தாயின் காலடியில் விழுந்து மன்றாடிக் கேட்டாவது அந்த பவித்திர குண வரத்தை நாம் பெற்றுவிட வேண்டும்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக