நான் ஒரு ஆன்மீக குடும்பத்தில் பிறந்தது எனக்குக் கிடைத்த ஒரு வரமாக நான் நினைக்கிறேன். எனது தாயார் ஸ்ரீ ஷிரடி சாயிபாபாவின் தீவிர பக்தர். எனது மூத்த சகோதரருக்கும் எனக்கும் அவரது மகிமைகளைப் பாட கற்றுக் கொடுத்து தினசரி காலை மற்றும் மாலை பிரார்த்தனைகளில் பாட வைத்து பக்தி மார்க்கத்திற்கு அடித்தளம் அமைத்தார். என் தந்தை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் இருந்து உத்வேகத்தைப் பெற்று, ஆன்மீக பயிற்சியின் அத்வைத அம்சங்களில் அதிக கவனம் செலுத்தி ஆன்மீகத் தேடுலில் ஈடுபட்டிருந்தவர். எங்கள் தந்தை எங்களுக்கு ஞான மார்க்கம் பற்றிய புரிதலை வளர்ப்பதற்கு அடித்தளம் அமைத்தவர். எனது சிறுவயதில் இருந்தே எனக்கு வழிகாட்டியாகவும் ஆதரவாகவும் ஆன்மீக வளர்ச்சியில் எனது நாயகனாகவும் வழிகாட்டியாகவும் தொடர்ந்து இருந்த வந்த என் மூத்த சகோதரர் எனக்குக் கிடைத்த மற்றொரு வரம்.
எங்கள் அன்பிற்குரிய சுவாமியின் தாமரை பாதங்களுக்கு என்னை அழைத்துச் சென்ற பெருமை எனது பெற்றோரையே சேரும். கடவுள் பூமியில் நடமாடுகிறார் என்று என் பெற்றோர் உறுதியாக நம்பினர், அமெரிக்காவில் சிறிது காலம் தங்கிய பிறகு பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் அருகில் இருக்க இந்தியா திரும்ப முடிவு செய்தனர். அவர்கள் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக பிரசாந்தி நிலையத்தில் தங்கியிருந்தார்கள். அவர்களை சந்தித்து எங்கள் அன்பையும் மரியாதையையும் பகிர்ந்து கொள்ளும் சமயத்திலெல்லாம் எங்கள் தெய்வீக தாய் தந்தையை தரிசிக்க எனக்கும், என் மனைவிக்கும், இரண்டு மகன்களுக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பிரசாந்தி நிலையத்திற்குச் சென்று சுவாமியை தரிசிப்பதற்கு முன்னரே அவரின் அற்புதத்தை உணரும் முதல் அனுபவம் நிகழ்ந்தது. எனது பெற்றோர் ஆசிரமத்திற்கு வசிக்கச் சென்ற ஒரு வருடத்திற்குப் பிறகு 1983 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இது நிகழ்ந்தது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக, நான் என் கல்லீரல் பகுதியில் அசௌகரியத்தை அனுபவித்து வந்தேன். ஒரு வகையான நெரிசலான உணர்வு, லேசான மூச்சுத் திணறல், குறிப்பாக நான் படிக்கட்டுகளில் ஏறும் போது இருந்தது. ஆனால் ஒரு மருத்துவரை ஆலோசிக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை. இந்த மூன்று ஆண்டுகளில், எனது பணியிடத்தில் செய்து வந்த வருடாந்திர மருத்துவ பரிசோதனைகள் என் கல்லீரல் செயல்பாடு இயல்பாக இல்லை என்பதைக் காட்டியது. மருத்துவரான எனது மூத்த சகோதரரின் ஆலோசனையை நாடினேன். அவர் அடிப்படைக் காரணத்தைக் கண்டறிய கல்லீரல் பயாப்ஸி செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார். என் கல்லீரலில் ஊசி குத்தப்படும் என்று பயந்ததால் நான் இதை விரும்பவில்லை. பின்னர் தெய்வீக அனுகிரகம் கிடைத்தது.
தெய்வீக சிகிச்சை:
ஒரு நாள் அதிகாலையில், நான் ஒரு தெளிவான கனவு கண்டேன், அது ஒரு நிகழ்வு போல, நான் விழித்தவுடன் விவரங்களை முழுமையாக நினைவுபடுத்த முடிந்தது. கனவில், நான் கைகளை உயர்த்தி, மந்திர் வராந்தாவில் சுவாமி அமர்ந்திருக்கும் அறையின் முதல் கதவை நோக்கி ஓடுவதையும், பஜனைகள் நடந்து கொண்டிருப்பதையும் கண்டேன். நான் சத்தமாக, "பாபா, சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்!” என்று கூறிக்கொண்டிருந்தேன். உடனே, கல்லீரல் பகுதியில் மின்சாரம் பாய்ந்ததை போன்று உணர்ந்தேன், வியர்த்து எழுந்தேன். ஏதோ ஒரு விஷயம் நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்.
அடுத்த நாள், எனக்கு கல்லீரல் பகுதியில் அசௌகரியம் எதுவும் இல்லை என்பதை கவனித்தேன். ஏதாவது அதிசயிக்கத்தக்கவாறு நடந்திருக்கிறதா என்பதை அறிய ஆவலாக இருந்தேன். அறிந்துக் கொள்வதற்கான விரைவான வழி, எனது கல்லீரல் செயல்பாடு இயல்பாகிவிட்டதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். பரிசோதனை மையத்தில் நான் அவற்றைப் பரிசோதிக்க முடியும் என்றாலும், சுவாமியின் கருணையில் எனக்கு வலுவான நம்பிக்கை இருந்தது. எனது பணியிடத்தில் வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்கு இரண்டு வாரங்களே இருந்ததால், நான் காத்திருக்க முடிவு செய்தேன். என்ன ஒரு இனிமையான ஆச்சரியம்! எனது கல்லீரல் செயல்பாடு சோதனைகள் அனைத்தும் சாதாரண வரம்புகளுக்குள் இருந்தன, அன்றிலிருந்து இன்றுவரை.
கேட்காமலே கிடைத்த ஆசீர்வாதம்:
கடவுள் மருத்துவர் (வைத்யோ நாராயணோ ஹரிஹி) என்று வேதங்கள் கூறுகின்றன. பாபா, பெரிய அறுவை சிகிச்சை நிபுணர், உண்மையில்! மருத்துவக் கருவிகள் இல்லாமல் அறுவை சிகிச்சை! எனது உடல்நிலையை சரி செய்யுமாறு நான் எந்த நேரத்திலும் சுவாமியையோ அல்லது வேறு எந்த கடவுளிடமோ பிரார்த்தனை செய்யவில்லை. ஆனால், கேட்காமலேயே, தன் குழந்தைகளை எப்படி, எப்போது பாதுகாத்து குணப்படுத்துவது என்பது நமது சாயி பரமபிதாவுக்குத் தெரியும்.
இரண்டாவது அதிசயம் என்னவென்றால், எனக்கு இந்த கனவு வருவதற்கு முன்னர் பிரசாந்தி நிலையத்திற்கு சென்றதில்லை. ஒரு வருடம் கழித்து, ஆசிரமத்திற்கு முதன் முதலில் சென்ற போது, என் கனவில் தோன்றிய வராண்டாவையும் மந்திரையும் பார்த்தேன். ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து, ஸ்வாமியின் நேர்காணலுக்கு நாங்கள் அழைக்கப்பட்டபோது, எனது கல்லீரல் பிரச்சனையை குணப்படுத்தியதற்காக சுவாமிக்கு எனது நன்றியைத் தெரிவித்தேன். சுவாமி ஒரு கருணைப் பார்வை பார்த்து என்னை ஆசீர்வதித்தார்.
✍️ டாக்டர் ஏ. கிருஷ்ணமோகன் ரெட்டி, USA
எழுத்தாளர் பற்றி:
டாக்டர் ஏ. கிருஷ்ணமோகன் ரெட்டி அமெரிக்காவின் டேவிஸ், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் அமெரிக்க நச்சுயியல் வாரியத்தால் நச்சுயியல் சான்றிதழைப் பெற்றவர். மனித உடல்நலம் மற்றும் பாதுகாப்புத் துறையில் பணியாற்றியுள்ளார் மற்றும் பன்னாட்டு தயாரிப்பு நிறுவனத்தில் நிர்வாக பதவிகளை வகித்துள்ளார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அவர் SSSIO இல் பணியாற்றி வருகிறார். வடக்கு கலிபோர்னியாவின் பிராந்திய தலைவர், தேசிய சேவை ஒருங்கிணைப்பாளர் மற்றும் SSSIO, USA இன் துணைத் தலைவர் உட்பட பல தலைமை பதவிகளை வகித்துள்ளார். அவரும் அவரது குடும்பத்தினரும் சுவாமியின் தனிப்பட்ட வழிகாட்டுதலையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுள்ளனர்.
ஆதாரம் : Eternal Companion Vol. 1, Iss. 7
தமிழில் தொகுத்தளித்தவர்: திருமதி சிந்துஜா, நெமிலிச்சேரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக