ஸ்ரீ கிருஷ்ணரும் ராம தரிசனம் வழங்கி இருக்கிறாரா? பாபாவும் அவ்வாறு புரிந்திருக்கிறாரா? எனும் ஆச்சர்யப்படுபவர்களின் இதயங்களில் அமுத மழையே வரிவடிவமாகப் பொழியப் போகிறது சுவாரஸ்யமாக இதோ...!
அது துவாபர யுகம்! சத்ரஜித் என்கிற அரசன் வாழ்ந்து வருகிறார்! அவர் சூரிய வழிபாடு செய்பவர்! அப்படி சுடச் சுட சூரிய வழிபாடு செய்து சூரிய தேவனுக்கே நண்பராகிறார்! சூரிய தேவன் அவரது தர்ம வழியைக் கண்டு மெச்சி ஒரு பரிசு தருகிறார்! அது அரிய பரிசு! மினுமினுக்கும் பரிசு! சாதாரண மினுமினுப்பல்ல... தன்னை ஒரு பாதி அந்த சூரியனையே அதில் ஊற்றி வைத்தது போல் ஜொலி ஜொலிக்கும் பரிசு! அதன் பெயர் சியாமந்தகா! அது ஒரே சூரிய மந்திர சக்தியால் சுடச் சுட சுடர்விடும் மணி!
அதை சூரிய தேவனே அந்த அரசனின் கையில் வழங்குகிறான்! அதை அணிந்து நடந்து வந்தாலே எட்டு அடிக்கு சூரியனே நடந்து வருவது போல் கண் கூச வைக்கும்! அந்த மகிமை மணியை பெருமையோடு அணிந்து கொள்கிறான் அரசன் சத்ரஜித்! அந்த மகத்துவ மணியை வழிபட்டால் அரசர்களுக்கு என்றும் தோல்வியே ஏற்படாது! அப்படிப்பட்ட மணியை அணிந்து கொண்டு ஒருமுறை துவாரகைக்கு வருகிறான் அரசன்! ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் பெறவே அரசனின் அந்த விஜயம்! அவன் ஸ்ரீ கிருஷ்ணரை சந்திக்கிற போது அந்த மணியை அவர் கேட்கிறார்! ஆனால் அவனோ அதன் மேல் உள்ள பற்றால் அதை தர சம்மதிக்கவில்லை... அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு மர்மப் புன்னகை புரிகிறார்!
ஒரு நாள் அந்த மணியை கழுத்தில் அணிந்து கொண்டே அரசனின் சகோதரன் பிரசேனா வனத்திற்கு வேட்டையாடச் செல்கிறான்! ஸ்ரீ கிருஷ்ணர் கேட்ட போது கழட்டி கொடுக்காத சத்ரஜித் தனது சகோதரன் கேட்ட போது சகோதரப் பற்றால் உடனே கொடுத்து விடுகிறான்!
அதை அணிந்தது தான் அவனுக்கு தீராத வினையாக வனத்தில் காத்திருக்கிறது!
அவன் "அந்த பிரகாச மணியோடு வனத்தில் நுழைய.. அந்தப் பிரகாசத்தை கண்டு அது தனக்கேற்ற இரை தான் என்று ஒரு சிங்கம் அவன் மேல் பாய்கிறது... சம்பவ இடத்திலேயே அவன் உயிர் போகிறது!
கடைசியில் அந்தச் சிங்கம் அந்த மணியோடு அந்த இடம் விட்டு விலகிப் போக எத்தனிக்கிற போது... இதனை வேடிக்கைப் பார்த்த புராணத்து பெருங்கரடி ஜாம்பவான் அந்த மணியின் பிரகாசத்தால் ஈர்க்கப்பட்டு தனது மகளுக்காக அதை கவர்ந்து கொள்வதற்காக வேண்டி அந்த சிங்கத்தைக் கொல்கிறது! அந்த மணியையும் வெல்கிறது!
பல நேரமாகியும் சகோதரனையும் காணவில்லை... அந்த மகத்துவ மணியையும் காணவில்லை என்பதால் வாடிப் போகிறான் அரசன்! தம்பிப் பற்று, மணிப் பற்று ஆகவே இரட்டிப்பு வாட்டம்! அந்தப் பற்றே வாட்டமாக உருமாற... வேண்டாத எண்ணங்களை அவனது மனமே தாம்பூலம் வைத்து வரவேற்கிறது!
தன்னிடம் கேட்ட அந்த கிருஷ்ணர் தான் அந்த மணியையும் சேர்த்து கவர்ந்திருக்க வேண்டும் என்ற ஒரு தீய யோசனைக்கு வருகிறான் அரசன்!
இதனால் தனக்கு நேர்ந்த பழிச் சொல்லை விலக்க ஸ்ரீ கிருஷ்ணர் அவன் புகுந்த அதே வனத்திற்குள் நுழைகிறார்! அங்கே பிரசேனாவின் சடலத்தையும் சிங்கத்தின் சடலத்தையும் கண்டு , ஒரு கரடியின் காலடித் தடத்தையும் காண்கிறார்... பிறகு அந்த கரடியின் காலடி தடத்தை வைத்தே அதன் குகையை கண்டுபிடிக்கிறார்.. குகைக்கு உள்ளிருந்து ஒரே பிரகாசம்! புரிந்துவிட்டது பரந்தாமனுக்கு...
உடனே மணி மீட்புக்காக ஸ்ரீ கிருஷ்ணர் ஜாம்பவானோடு கடும் சண்டை இடுகிறார்... ஒரு நாள் இரு நாள் அல்ல 28 நாட்கள் சண்டை நடக்கின்றன...
ஜாம்பவானின் தொன்மையான உடலோ பெரும் காயத்திற்கும் சோர்வுக்கும் உள்ளாகிறது!
அதே ஜாம்பவான் தான்! திரேதா யுகத்தில் ஸ்ரீ ராமர் அணியில் இருந்த அதே ஜாம்பவான்!
ஜாம்பவானை ஸ்ரீ ராமரை தவிர யாராலும் வீழ்த்துவது கடினம்!
மண்ணில் சாய்ந்திருந்த ஜாம்பவான் தன்னை வீழ்த்தியது யார் என்று உணர்ந்து கொள்கிறது! சாதாரண மானுடன் அல்ல சாட்சாத் ஸ்ரீ ராமரே தன்னோடு சண்டை இட்டது என்று அவரை தரிசித்து உணர்ந்த நொடி ...
"ஓ என் தந்தையே! நீங்களே புராண புருஷர்! நீங்களே பிரபஞ்ச இறைவன்! நீங்கள் ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் உயிர் அளிப்பவர்! நீங்களே கடலில் பாலம் இட்டவர்! ஈஸ்வரனுக்கு எல்லாம் ஈஸ்வரன் நீங்கள்! அசுரர்களையும் அவர்களது தீமைகளை அழிப்பவர் நீங்கள்! ஓ ஸ்ரீ ராமா! நான் அறியாமல் செய்த இந்த பாவத்தை மன்னித்து அருள் புரியுங்கள்!" என்று ஜாம்பவான் கெஞ்சுகிறது!
பயப்படாதே தைரியமாக இரு என்று விளங்கும்படியாக பேசும் தனது கை விரல் ஸ்பரிசத்தால் ஜாம்பவானின் உடலை தடவிக் கொடுக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணராய் அவதரித்த அதே ஸ்ரீ ராமர்!
பெரும் மகிழ்வோடு காயமும் ரணமும் நீங்கியவாறு ஸ்ரீ கிருஷ்ணருக்கு அந்த மணியையும் , தனது மகளையும் பரிசாக அளிக்கிறது தனது ரோமத்தையும் கூட ஸ்ரீ ராம பக்தியால் நிரப்பிய ஜாம்பவான்!
(ஆதாரம் : ஸ்ரீ மத் பாகவதம் - 10.2.71)
இதே போல் ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் நிறைய பக்தர்களுக்கு, ஜாம்பவானுக்கு அருளிய ஸ்ரீராம தரிசனம் போல அருளியிருக்கிறார்! ஸ்ரீ ராமர் வேறல்ல ஸ்ரீ கிருஷ்ணர் வேறல்ல என ஸ்ரீ கிருஷ்ணரே துவாபர யுகத்தில் மட்டுமில்லை கலியுகத்திலும் மகிமைச் சம்பவங்கள் பல நிகழ்த்தி இருக்கிறார்!
ஒருமுறை பெங்களூர் நாகரத்தினம் அம்மையாருக்கு இந்த அபூர்வ அனுபவம் ஏற்பட்டுகிறது! அவர் சிறந்த ராம பக்தை, ஸ்ரீ தியாகராஜர் சமாதியை தன் கைச் செலவில் புனருத்தாரணம் (புத்துயிர்) செய்தவர்! தியாகராஜ சுவாமிகள் அவருக்கு மானசீக குரு! ஆகையால் ஒருமுறை ஒரு அற்புதக் கனவு அம்மையாருக்கு தோன்ற... "ஸ்ரீ ராமச்சந்திரர் இப்போது கலியுகத்தில் அவதாரம் செய்திருக்கிறார்! அவர் உனக்கு வேங்கடகிரி எஸ்டேட்டில் தரிசனம் தருவார்!" என்று சொல்லிவிட்டு மறைந்து போகிறார் தியாக பிரம்மம் (சங்கீத பிரம்மா தியாகராஜ சுவாமிகள்)அந்தப் பரவச கனவுக்குப் பிறகு வேங்கடகிரி மகாராஜாவுக்கு ஸ்ரீ ராமர் பற்றி விசாரித்து ஒரு கடிதம் எழுதுகிறார் அம்மையார்!
"ஆம் ஸ்ரீ ராமர் ஸ்ரீ சத்ய சாயியாக அவதரித்திருக்கிறார், விரைவில் இவ்விடம் வரப்போகிறார்" எனும் பதில் கடிதம் மகாராஜாவிடமிருந்து வருகிறது! ஆகையால் அவர் சாயி ராம வரவுக்காக காத்திருக்கிறார் சங்கீத சபரியாய்!
பாபா வருகை புரிகிறார்! அது 1951. அது வேங்கட கிரி மகாராஜா அரண்மனை... அம்மையாரும் பாபாவை தரிசிக்கிறார்... 2 மணிநேரம் அம்மையார் தியாகராஜ கீர்த்தனைகள் பாடுகிறார்! பாபாவும் தியாகராஜ கீர்த்தனைகள் பாடிய பிறகு அம்மையாருக்கு ஸ்ரீராம விக்ரஹமும் ஸ்ரீ ராம தரிசனமும் பாபா தர... அதில் 24 மணிநேரம் தியானத்திலேயே மூழ்கிவிடுகிறார்! பிறகு பாபாவிடம் இரண்டு வரம் கேட்கிறார்...
1. நிம்மதியான மரணம்
2. மரண நொடியிலும் ஸ்ரீ ராம நினைவு!
பாபாவும் சரி என ஆசீர்வதிக்க... பாபாவை தரிசித்த அதே வருடமே பாபாவின் பாதகதி அடைகிறார் அம்மையார்!
அந்த நாகரத்தினம் ராம ரத்தினமாக பிரகாசித்து சாயியின் மகிமை கிரீடத்தில் ஒளிர்கிறது!
பாபாவே பாடுபவர் மட்டுமல்லர் பல கீர்த்தனைகளுக்கு மெட்டே அமைத்திருக்கிறார்... இவை எல்லாம் எப்படி சாத்தியம் என்று ஒரு பக்தர் பாபாவிடம் கேட்க... "தியாகராஜருக்கு இதை எல்லாம் யார் கற்றுக் கொடுத்தார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?" என்று பாபா பதில் சொல்ல... பாபாவே ஸ்ரீ ராமர்! என்பதையும் அந்த பக்தர் உணர்ந்து கொள்கிறார்!
ஒருமுறை குண்டூர்ட்டி நரசய்யா எனும் ராமசரண் புட்டபர்த்திக்கு வருகிறார்! அது பூர்ண சந்திர அரங்கம்! கோடி கோடி முறை ராம ஜபம் செய்த மகானுபாவர் அவர் ! பாபா அவர் அருகே வருகிற போது பாபா அவருக்கு மட்டும் ஸ்ரீராமராய் காட்சி அளிக்க ஆனந்தத்தில் ராமசரண் அப்படியே சாயி ராமசரணாகிறார்!
(Source : Sri Krishna Sri Sathya Sai | Page : 173 - 176 | Author : Dr. J. Suman Babu )
அவதாரங்களுக்குள் பேதமே இல்லை! அவர்கள் தங்களை உடலோடு அடையாளப்படுத்திக் கொண்டதே இல்லை! அவதாரங்களை வழிபடும் மகான்களும் அந்தப் பேருணர்வையே பெற்றிருக்கிறார்கள்! ஆனால் பக்தர்கள் எனும் போர்வையில் இருக்கும் மனிதர்கள்?
ஸ்ரீ ராமரே ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி..அதற்கான வாழ்வாதார சான்றுகள் அநேகம்! இந்தப் பேருண்மையை நாம் நம்ப மறுத்தால் அவதாரங்களுக்கு எந்தவிதமான நஷ்டமுமே இல்லை! வெள்ளத்தில் மிதக்கிற படகுக்கு என்ன நஷ்டம்? படகில் ஏறவில்லை என்றால் தத்தளித்துக் கொண்டிருக்கிற நபர்களுக்கே நஷ்டம்! அவதாரங்களோ கப்பலைப் போன்றவர்கள்! ஆக...! தஞ்சம் அடைந்தவர்களுக்கே தனது நெஞ்சம் திறக்கிறார் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக