தலைப்பு

சனி, 6 ஜூலை, 2024

ஸ்ரீ சத்ய சாயி அவதாரம் வழங்கிய ஸ்ரீ கிருஷ்ண தரிசனங்கள்!

பாபா ஸ்ரீ கிருஷ்ணரே என்கிற சத்தியத்திற்கு சாட்சியாக பாபாவே பல பக்தர்களுக்கு வழங்கிய ஸ்ரீ கிருஷ்ண தரிசனங்கள் மெய் சிலிர்க்கும்படியானது... அதன் ஆச்சர்ய நிகழ்வுகள் சுவாரஸ்யமாக இதோ...!


அது ஒரு முறை புட்டபர்த்தியில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி தினம்! ஸ்ரீ கிருஷ்ணரை வைத்து ஒரு ரத ஊர்வலம் பாபாவால் ஏற்பாடாகி இருந்தது! பாபாவோ அந்த ஊர்வலத்தின் ஊடே சென்று கொண்டிருக்கிறார்! 

அந்த சமயம் பாபாவின் கார் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் சேவைத் திலகம் கஸ்தூரியின் குடும்பமே பாபாவுக்காக காத்திருக்கிறது! பாபா அங்கே நெருங்குகையில் கஸ்தூரியின் தாயோ ஒரு கோப்பைப் பாலும் அதன் மேல் ஒரு கிண்ணத்தில் சிறு வெண்ணெய் உருண்டையும் பாபாவுக்காக வைத்திருக்கிறார்! பாபாவை தரிசித்த உடனேயே அதனை அருந்தத் தருகிறார்! வேண்டாம் என்று மறுக்காமல் பாபாவோ அந்தக் கோப்பையில் தனது ஒரு விரலின் நுனியை விட்டு அதில் வழிந்தோட துடித்த ஒரே ஒரு பால் துளியை தனது நாவில் விட்டுக் கொள்கிறார்! அது மழை முடிந்தும் இலை சிந்தும் துளி போல் காட்சிக்குக் கவிதையாக தோன்றுகிறது! அந்த அம்மையாரின் பால் பிரசாதத்தையும் ஏற்று, "பாட்டி! நான் கோகுலத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் போதே எவ்வளவு பாலையும் வெண்ணெயையும் அருந்த வேண்டுமோ அதற்கும் கூடுதலாக அருந்திவிட்டேன்... ஆகவே சலித்து விட்டது!" என்று புன்னகைத்து பாபா கூறியவாறே இருக்க... பாபா இருந்த இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணரையே தரிசிக்கிறார் கஸ்தூரியின் தாய்...! அப்படியே மெய் மறந்து கால சூழ்நிலையையே இழந்து பேரானந்தத்தில் லயித்துப் போகிறார் அவர்... அந்த இடத்தை விட்டு பாபா நகர்ந்தது கூட அவர்களது நினைவில் இல்லை!


அது 1966. கே. சச்சிதானந்த ராவ், அமலாபுர உயர் நிலை பள்ளியின் தலைமை அதிகாரி!  அமலாபுர கல்லூரி விரிவுரையாளர் சிஸ்டா சூரிய நாராயண மூர்த்தியோடு அவர் பாபா தரிசனத்திற்காக புட்டபர்த்தி செல்கிறார்! 

இதில் சச்சிதானந்த ராவோ தீவிர ஸ்ரீ கிருஷ்ண பக்தர்! எப்போதுமே வாசுதேவரையே தியானிப்பவர்! பாகவதமே வாசிப்பவர்! 

    ஒரு நாள் வராண்டாவில் பாபா தரிசனத்திற்காக அவர்கள் இருவரும் அமர்ந்திருக்க... அங்கு வந்த பாபா அவர்களை நேர்காணல் அறைக்கு அழைத்துச் சென்று... அங்கு அவர்கள் இருவருடனும் சமமாக தரையிலேயே அமர்ந்து ஆன்மீகம் அலசுகிறார்! சிருஷ்டி விபூதியை இருவரின் நெற்றியிலும் இட்டு விடுகிறார்... 45 நிமிடம் இருவரோடும் பேசுகிறார்! அப்போது , எமன் உடலாகவும் , சித்ரகுப்தன் சித்தமாகவும் (மனம்) , சூரியன் காலமாகவும் கருதப்படுகிறார்கள் என்று பாபா விவரித்துக் கொண்டே வருகிறார்... அப்போது திடீரென சச்சிதானந்த ராவ் உணர்ச்சி வசப்படுகிறார்... கண்களில் நீர்ப்பறவை கூடுகட்டிக் கொள்கிறது! 

"ஓ என் சுவாமி! என் தந்தையே! எனக்கு தரிசனம் தந்து விட்டீர்களா! என்னுடைய எல்லா சந்தேகங்களையும் தெளிவுபடுத்தி விட்டீர்கள்!" என்று அவர் பரவசம் பொங்கிடப் பொங்கிடப் பேசுகிறார்! உடனே பாபா மீண்டும் சிருஷ்டி விபூதியை அவருக்கு அளித்து அவரை ஆஸ்வாசப்படுத்த ... அருகே இருந்த சூரிய நாராயண மூர்த்தி என்ன ஆனது என்று அறியாமல் குழம்புகிறார்!

பிறகு இருவரும் அறைக்கு வந்த பிறகு, விசாரிக்கிற போது ... தான் அந்த நேர்காணல் அறையில் பாபாவையே பார்க்கவில்லை .. "நான் இதுகாலும் வழிபட்டு வந்த ஸ்ரீ கிருஷ்ணரையே தரிசனம் செய்தேன்!" என்று கண் கலங்கிய அந்தப் பரவசப் பொழுதுகளை சூரிய நாராயண மூர்த்தியிடம் பகிர்ந்து கொள்கிறார்!

    மேலும் ஒரு வெளிநாட்டுப் பெண்மணி ஒரு நூதன அனுபவத்தை வெளியிடுகிறார்! எப்போது அந்தப் பெண்மணி பாபா விபூதியை இரு கை நிறைய தேய்த்து உறங்கச் செல்லும் போதெல்லாம்.. கனவில் ஸ்ரீ கிருஷ்ணர் பாதங்களை அதே விபூதிக் கைகள் பிடித்திருப்பதான காட்சி கண்டு பரவசம் அடைகிறார்!


இப்படி பாபா ஒருவர் இருவருக்கல்ல பலருக்கும் தனது பூர்வ அவதாரமான ஸ்ரீ கிருஷ்ண தரிசனத்தை வழங்கி இருக்கிறார்! வழங்கியும் வருகிறார்! அதற்கொரு முடிவே இல்லை! பிரேம சுவாமி உருவத்தை சிருஷ்டி மோதிரத்தில்  முதன்முதலாக தரிசிக்கும் பாக்கியம் பெற்ற பரம சாயி பக்தர் ஹிஸ்லாப் அவர்களுக்கு காரில் அமர்ந்து கொண்டே பாபா தனது ஸ்ரீ கிருஷ்ண ரூபத்தை வெளிக்காட்ட.. வைத்த கண் வாங்காமல் ஹிஸ்லாப் தரிசித்திருக்கிறார்! பாபாவிடம் அதைக் குறித்து அவர் விசாரித்த போது "ஆம் நான் தான் சாட்சாத் ஸ்ரீ கிருஷ்ணன்!" என்று சர்வ சாதாரணமாக பாபா தெளிவுப்படுத்தி இருக்கிறார்!

     நேர்காணலின் போது ஒரு வடநாட்டு விவசாயிக்கும் இந்த தரிசனம் பாபா கொடுத்திருக்கிறார்! அவரும் தனது தீய வழிகளில் இருந்து மனம் திருந்தி தனது கிராமத்திலேயே பாபாவின் சென்டர் ஆரம்பித்து , பஜனை நிகழ்த்தி அங்குள்ள அனைவரும் ஆன்மீகமாய் திரும்ப வழிவகை செய்திருக்கிறார்!

இப்படி எத்தனை எத்தனையோ மகிமைகள், அனுபவங்கள் பாபா தனது ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் வழங்கிய துரௌபதி வஸ்திராபரணமாய் இன்றளவும் நீண்டு வளர்கிறது!

(Source : Sri Krishna Sri Sathya Sai | Page No: 176 - 178 | Author : Dr. J. Suman Babu ) 


பாபாவே ஸ்ரீ கிருஷ்ணர் எனும் அந்தப் பிரபஞ்சப் பேருண்மையை உணர்கிற போது , முதலில் இறைவன் இருக்கிறான்! என்பதை நாம் உணர்கிறோம்! இறைவனின் பேரிருப்பை உணர்ந்துவிடுவதே ஆன்மீகத்தின் முதல் படிநிலை ... பிறகு யாவும் இறைவனின் கருணையால் தானாகவே உயர ஆரம்பிக்கிறது! சரி - இறை உணர்வு ஏற்படவில்லையா? இறை நம்பிக்கையோடு நாம் இருக்க வேண்டும்! அந்த உறுதியான இறை நம்பிக்கை இறை உணர்வை விரைவில் ஏற்படுத்திவிடும்! பாபாவோடு பேரம் பேசாத பக்தியே பாபாவின் மேலான நம்பிக்கையை நிலைக்கச் செய்கிறது என்பதை நாம் உணர வேண்டும்!

கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுப்பது போல் அல்ல பக்தி! *மனு கொடுப்பதல்ல மனதையே கொடுப்பது தான் பக்தி! இப்படி வழிபடுகிறேன் அப்படி நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கும் பக்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! 

பக்தி தன்னுடைய எல்லாவற்றையும் இழக்கவே தயாராக இருக்கிறது! பாபாவின் மேல் நமக்கு இருப்பது பக்தியா? அல்லது ஆசை அந்த பக்தி முகமூடியை அணிந்து நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறதா? என்பதை நாம் நமக்குள்ளேயே முதலில் சீர் தூக்கிப் பார்க்க ஆரம்பிக்க வேண்டும்! 


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக