தலைப்பு

சனி, 9 ஜனவரி, 2021

உங்கள் பணி தொடங்கிவிட்டது... -இறைவன் ஸ்ரீ சத்யசாயியின் இனிய உத்தரவாதம்!

Message received by Charles Penn from Sri Sathya Sai Baba - 1979

இறைவன் உண்மையான இதயங்களுக்காக இதோ இதயம் திறந்து பேசுகிறார். அவரது திருச்சொல் மட்டுமே நிரந்தரமானது. அது ஒன்றே உலகில் நிகழக்கூடியது! அந்த திருச் சொற்களின் மீது திடமான நம்பிக்கையும் வைக்க வேண்டும்.. அவற்றின் மீது அசையாத உறுதியும் கொண்டிருக்க வேண்டும்.. சுவாமி வேறு அவரது சொற்கள் வேறல்ல... அவற்றை பின்பற்றுபவரே அவரின் நிஜ பக்தர்கள். அவரின் நிகழப்போகின்ற நிதர்சன உத்தரவாத உற்சவ சொற்கள் இதோ...


உங்கள் பணி தொடங்கிவிட்டது. இவை, என் பக்தர்களாகிய உங்களுக்கு நான் வழங்கும் அருள்மொழிகள். இப்பிறவியில் நீங்கள் ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய ஒரு தனித்துவமான, உன்னத பங்கு இருக்கின்றது. என்னால் அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே எனக்கு சேவை செய்ய முடியும்.

இப்போது என் பணி ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளதால், நீங்கள் ஒவ்வொருவரும் செய்வதற்கென குறிப்பிட்ட வேலைகள் உள்ளன. இப்பிரமாண்ட விண்மண்டலத்தினுள் இருக்கும் இந்த கிரகத்திற்கென்று ஒரு நோக்கம் உண்டு. அந்த நோக்கம் நம் கண் முன்னே இப்போது வெளிப்படுகின்றது. உங்களுக்குள் இருக்கும் பக்தியை வெளிப்படுத்துமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அதன் மூலம், கண்ணுக்குத் தெரியாத அதன் சக்தி, உங்கள் வட்டத்திற்குள் வரும் அனைவரையும், அரவணைத்துக் கொள்ளும்.


உங்கள் பங்கை வெற்றிகரமாகச் செய்துமுடிக்க எப்போதும் என்னை மையமாகக் கொண்டிருங்கள். உங்கள் இதயத் தூய்மையை எல்லா மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் வழங்குங்கள். உங்கள் செயலின் பலனை எதிர்பார்த்து செயலாற்றாதீர்கள்.

எனது பணியின் இந்தப் பகுதி, முற்றிலும் அமைதியான முறையில் செய்யப்படுகிறது. நீங்கள் என் கருவிகள். உங்களிடமிருந்து என் அன்பு பொங்கி வெளியெழும். அகங்காரம் உங்களிடமிருந்து வெளிப்படும் அந்தக் கண்மே, எனக்கான உங்கள் வேலை நிறுத்தப்படும். நீங்கள் உங்களின் எதிர்மறை கவனக்குறைவைக் களையும்போது, மீண்டும் என் கருவியாக இருப்பீர்கள்.


என் அன்பின் பெருக்கம் உலகம் முழுவதும் உணரப்படும். இந்தப் பணிக்காக பல பிறவிகளில் நான் உங்களைத் தயார் செய்துள்ளேன். நான் தான் உங்களை என்னிடம் ஈர்த்துக் கொண்டேன். நான் முந்தைய அவதாரங்கள் வழியாக பெரிய படிகளை எடுத்துவைத்துள்ளேன். எனது பணி தொடரும், அது போன்றே உங்கள் பணியும் முடிவில்லாத ஒன்று.

நான் அகத்திலும் புறத்திலும் இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதில் எந்த வித்தியாசமும் இல்லை. சில்லறை விஷயங்களிலிருந்து உங்களை நீங்களே விடுவித்துக் கொள்ளுங்கள். அப்போது நீயே நான், நானே நீ. அதில் எந்த வித்தியாசமும் இல்லை. என் தரிசனம் என்னிடமிருந்து உங்கள் மூலமாக வெளிப்படுத்தப்படும். இந்த இடையறாத வெளிப்பாட்டை நீங்கள் அறியாமல் இருக்கக்கூடும். இதயமும் ஆன்மாவும் எப்போதும் தூய்மையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் வாழும் காலத்தில் மனிதகுலம் உங்கள் தனித்துவமான குணங்களிலிருந்து பயனடையும்.

மற்றவர்களும், நான் அவர்களை என்னிடம் ஈர்க்கும்போது இந்தப் பணியில் என்னுடன் வந்து சேருவார்கள். எல்லா மனிதர்களும் சுமூகமாக வாழ வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த நேரம் ஒருவர் எதிர்பார்ப்பதைவிட மிக விரைவில் இங்கு வரும். அது வருவதற்கு முன், வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை ஒவ்வொரு உயிருக்கும் வெளிப்படுத்த உங்கள் சாதனையின் மூலம் தயாராகுங்கள். அந்த நிலையை உயிருடன் இருக்கும் எவராலும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.


அது ஒருவரால் எளிதில் அடையக்கூடிய ஒன்று அல்ல. இது எல்லா புரிதலுக்கும் அப்பாற்பட்டது. அதன் அழகு மிக உன்னதமானதும், எல்லா கனவுகளுக்கும் அப்பாற்பட்டது என்றும் என்னால் சொல்ல முடியும். நீங்கள் ஒவ்வொருவரும் அமைதியாக உங்கள் வேலையைச் செய்யும்போது, நான் உங்களை என் இதயத்தோடு தழுவிக்கொள்வேன். இக்கணம் தொடங்கி, உங்கள் ஆத்மநிலை உயர்த்தப்பட்டு, உங்கள் கண்கள் என் இருப்பை வெளிப்படுத்தும்.

பிரபஞ்சம் அனைத்தும் ஒன்றாகும் இறை நிலையின் மலை உச்சியில் இருந்து என் பக்தர்கள் அனைவருக்கும் இதை நான் கூறுகிறேன்.

என் அன்பான பக்தர்களே, என் பணியில் இணைந்திருங்கள். உங்கள் சுவாசம் சொர்க்கத்தில் மலரும் மலர்களின் சுகந்தத்தை ஏந்தி வரும். உங்கள் நடத்தை தேவதைகளை ஒத்து இருக்கும். உங்கள் மகிழ்ச்சி என் மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆதாரம்: From My Beloved. The Love and Teaching of Bhagavan Sri Sathya Sai Baba, Penn, C., Prasanthi Nilayam, Sri Sathya Sai Baba Books and Publications Trust, [1981], Page 96-97


🌻சுவாமியின் செவ்வாயிலிருந்து புறப்படும் சொற்கள் கோள்களை அசைக்கும்.. பூமியை மாற்றி அமைக்கும்... அவை ஒன்றே பிரபஞ்ச நிகழ்வாக நித்தியம் நிகழும்.. அவரின் மூன்றாவது அவதார வருகையும்.. திருப் புறப்பாடும் மேலே சுவாமி உணர்த்துகின்றன சத்திய சொற்கள் வழி உயிர்த்தெழுந்து உன்னதம் தரும்.. இந்த திருவாசங்களின் மீது தீராத திடமும்.. உறுதிப்பாடும் இருக்கும் பக்தர்களுக்கான சேவையும்.. அவர்களின் ஆன்ம சாதனையும் பூமிக்கே புது பூபாளம் கொண்டு வரும்.. சுவாமியின் ரூபத்தை ஆராதித்து வார்த்தையை விட்டுவிடுவதால் ஆராதனையே வீணாகிவிடுகிறது! சுவாமியின் மொழிகளுக்கான ஒளியில் பயணிப்பதே அவரின் விழிகளுக்கான ஒளியில் பயணிப்பதாகும்!! அவரின் மொழிகளே அண்டசராசர அகண்ட மேன்மைக்கான நிதர்சன வழிகள்!!! இதை உளமாற உணர்பவர்களே உன்னத பக்தர்கள்.🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக