தலைப்பு

சனி, 2 ஜனவரி, 2021

தன் உடலை கடந்து ஊடுருவி பக்தர்க்கு கருணை காட்டும் சத்யசாயி!


இறைவன் சத்யசாயியால் ஆகாதது ஏதுமில்லை. யோகியர்களுக்கு தெய்வீக ஆற்றல் தவம் செய்தபிறகே கிடைக்கிறது. ஆற்றலை அவசியமானதற்கே செலவு செய்வர். அதுவும் உலகாயத விஷயத்திற்கு அவ்வளவாக அவர்கள் அக்கறை செலுத்துவதில்லை. ஆனால் கடவுள் சத்யசாயி அந்த பேராற்றலோடே அவதரித்து.. பக்தர் அனைவருக்கும் அதை தீராது வாரி வழங்கி அவர்களை காப்பாற்றுகிறார் என்பதை உணர்த்தும் மிக உன்னத பதிவு இதோ...


ஒரு முறை பிரசாந்தி நிலையத்தில் சாயி மோகன் என்ற 30 வயது இளைஞன் ஒருவனுடன் மட்டும், அருகே சுவாமி ஒரு உயரமான இடத்திற்கு (உயரமான பாறை) அழைத்துச் சென்றார். ஒரு பெரிய பாறைக்கு சென்று இருவரும் அமர்ந்தனர். சாயி திடீரென மயங்கி விழுந்து விட்டார். சாயி மோகனுக்கு பயத்தில் வியர்த்து விட்டது. என்ன நடக்குமோ .. ஏது நடக்குமோ.. சுவாமி இறந்தே விட்டாரோ.. கொலைப் பழி நேருமோ என்றெல்லாம் தேவையில்லாத கற்பனை செய்து கவலை கொண்டார். பயம் என்பது கற்பனைத் தாயின் நோஞ்சான் குழந்தை. மனிதனால் மட்டுமே இறைவனை தனக்குள்ளேயும்.. வெளியேயும் வைத்துக் கொண்டு பயப்பட முடிகிறது.. மனிதன் மட்டுமே கைகளில் தங்கத் திருவோட்டை ஏந்தி பரிதாபகரமாய் பிச்சை எடுப்பவன். அந்த அறியாமையிலிருந்து முற்றிலுமாக அவனை விடுவிக்கவே இறைவன் கலியுகத்தில் ஷிர்டி சாயி.. சத்யசாயி.. பிரேம சாயியாக திரு அவதாரம் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. 


அப்பொழுதெல்லாம் எப்பொழுதோ சில பக்தர்கள் வருவார்கள் அவ்வளவுதான்! எனவே சாயி மோகன் 'சாய்ராம்' என உரக்கக் கூவியும் யாரும் வரவில்லை. எல்லா சம்பவ நாடகத்தையும் அரங்கேற்றும் லீலா நாடக சாயி.. இந்த இக்கட்டான சூழலையும் அரங்கேற்றி மயக்கமுற்றவாறு கவனித்துக் கொண்டிருந்தார். கிருஷ்ண லீலைகள் கலியுகத்தில் தொடர்ந்தது சத்யசாயி கிருஷ்ணரால் மட்டுமே!!

சுவாமி பாறையில் அப்படியே விட்டுச் சென்றால் அவர் விழுந்து விடக்கூடும்! மேலும் சாயியின் லீலைகளை அந்த இளைஞன் அதிகம் அனுபவித்ததும் இல்லை! தன் மடிமீது அவரைப் படுக்க வைத்துக் கொண்டு 25 நிமிடங்கள் தவித்தார் மோகன் என்ற அந்த இளைஞன். பிறகு சுவாமி அவன் மடியை விட்டு மெல்ல எழுந்தார்.


"என்ன? பயந்து விட்டாயா?" என்று அவனைப் பார்த்து கேட்டார்! "என்ன எதுவுமே நடக்காததுபோல் கேட்கிறீர்கள் சுவாமி" என பதிலுக்கு கேட்டான். புன்னகையுடன் ஸ்வாமி "நான் இருக்க பயமேன்?" என்றார். குறும்புத்தனமான புன்னகையுடன் "சுவாமி எது செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும்." என்றார்.

சுவாமி சொல்வதே உண்மை. அவரின் ஒவ்வொரு அசைவினிலும் ஒரு காரணம் இருக்கவே செய்கிறது. அதிகப்பிரசங்கி மனம் அதை தன் இஷ்டத்திற்கு அர்த்தம் கற்பிக்க முயற்சித்து தோற்று போகிறது.

நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் இறைவன் சத்யசாயியிடம்  சரணாகதி மட்டுமே. அது அவ்வளவு சுலபமில்லை எனினும் சரணாகத பக்திக்காகவாவது நாம் சுவாமியிடம் வேண்டிக் கொள்ளலாம்.

எழுந்த சுவாமி பிறகு ஒரு ஆச்சர்யகரமான செயலை மோகனிடம் பகிர்ந்து கொள்கிறார். தனது சிறந்த பக்தரும், உண்மையுடன் சேவை செய்து வரும் ஒரு 80 வயது முதியவரை, அவர் அனுமதிக்கப்பட்டிருந்த ஆஸ்பத்திரிக்கு சென்று, நர்சின் வடிவில் போய் விபூதி இட்டு காப்பாற்றி அவரது ஆயுளை 3 வருடம் நீட்டியதாக கூறினார். "6 மாதம் முன்பு ஒரு தடவை நான் இதேபோல் பிரக்ஞை இல்லாமல் 3 நாட்கள் இருந்தபோது என் சீடர்கள் என் உடலை பாதுகாத்தனர். பின் நான் திரும்ப வந்து உடலில் புகுந்தேன். இதை நீ அன்று நம்பவில்லை! ஆகவே உனக்கு புரிய வைக்கவே உன்னை தனியே அழைத்து வந்தேன்" என்றார். 

மோகன் மனமுருகி பாபாவின் பாதங்களில் விழுந்து வணங்கினார்.ஷிர்டி அவதாரத்தின் அந்த மூன்று நாட்களும் குறிப்பிடத்தக்கது... உண்மையான பக்தர்க்கு ஒரு சிறு தீங்கு என்றாலும் அதை ஓடோடி வந்து களையும் கடவுள் சத்யசாயி என்பதை இளைஞன் மோகன் உணர்ந்து கொள்கிறார்.

ஆதாரம்: Leela Mohana Sai, Chapter 13, P61 to 63


🌻 சுவாமியின் மகிமைகளை வாசிப்பது இதயத்தில் பக்தி உணர்வை அதிகரிக்கச் செய்கிறது என்பதை பக்தர்கள் அன்றாடம் அனுபவிக்கின்றனர். சுவாமியின் பேராற்றலை சிந்திப்பதும்/ பாடுவதும்/ பேசுவதும்/ வாசிப்பதும்/ எழுதுவதும் ஓர் உன்னத தவமே. அந்த செயலானது தன்னுள் உறைந்திருக்கும் இறைவன் சத்யசாயியை உணர வைப்பதற்கான தியானத்தை வலிமை பெறச் செய்கிறது!  "எழுத்தில் சுவாமியை அனுபவிக்கும் இலக்கானது இதயத்தில் சுவாமியை அனுபவிப்பதே..." விரல்கள் நிலாவை சுட்டிக்காட்டுகின்றன.. இதில் விரல்களாய் எழுத்துக்கள். அந்த பரிபூரண சத்யசாயி நிலா தன் சந்திரோதயத்தை தனது பக்தர்களின் இதயத்திலேயே அன்றாடம் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. கண் திறந்து வெளி நிலாவையும்.. கண்மூடி சாயி நிலாவையும் அதன் குளிர் அருளையும் அனுதினம் அனுபவிப்போமாக!!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக