ஆழ்ந்த அமைதியில் தான் ஆண்டவனைத் தரிசிக்க முடியும் என்கிறார் பாபா. இயலவில்லை என்று கூறும் நம்மை, ஈர்த்து சாயி குல்வந்த் ஹாலில் அமைதியாக அமர வைத்து, தரிசனம் தரும் அவரது பாங்கு , அவரது உபதேசத்தின் நேரடி விளக்கம்...
🌹மௌனம் என்பது ஞானியர் பேச்சு:
அது மா தவர் மூச்சு. சொற்கள் விளக்காத விளக்கங்களையும், கற்றும் தெளியா சந்தேகங்களையும் முற்றும் நீக்கி தெளிவிப்பது மௌனமே. "சும்மா இரு என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே என அருணகிரியார, "சும்மா இருப்பதே சுகம்" என்று தாயுமானவரும் மௌனத்தின் சிறப்பை இயம்பினர். குரு உபதேசிக்க சீடர்கள் கேட்கும் வழக்கத்தை மாற்றி, கல் ஆல மரத்தின் கீழ் அமர்ந்து மௌனமாக தட்சிணாமூர்த்தி உபதேசிக்க, சீடர்கள் நால்வரும் அருகமர்ந்து தெளிவு பெற்றனர் அன்றோ.
🌹மௌனத்தின் சிறப்பு பற்றி பகவான் பாபா தமது அருளுறையில் கூறியது என்ன என்பதை இனி காண்போம்:
மௌனத்தின் ஆழத்தில்தான் ஆண்டவனின் குரலைக் கேட்க முடியும். மெல்லிய தொனியில், குறைவாகவும் இனிமையாகவும் பேசிப் பழகு. நேர்மையான வாழ்விற்கு அடிப்படை மௌனத்தை கடைபிடிப்பது தான். உன் இதயத்தில் கடவுளின் குரலைக் கேட்க வேண்டுமானால், நாவடக்கம் தேவை. புயல் போன்ற பேச்சு அடங்கினால் மனஅலைகளின் ஆட்டம் அடங்கும். நீ மெல்லிய குரலில் பேசும் போது, அடுத்தவர் கூச்சலிட்டு பேசமாட்டார். ஆகவே உன் குரலின் தொனியை நீயே வரையறை செய்து கொள். அமைதியை உற்றுக் கவனி, ஆண்டவனின் குரல் துல்லியமாகக் கேட்கும். ஆரவார மிக்க சந்தையில் அவனது காலடி ஓசையைக் கேட்க இயலாது.
உனது இருப்பிடத்தையே மௌனத்தின் மாளிகையாக்கு. புலன்களை விஷய சுகங்களில் அலைய விடாமல் நிலை நிறுத்து. அப்போது உன் இருப்பிடமே தவச் சாலையாக மாறும். உன் ஆன்மீக சாதனைகள் அப்போது தடையின்றி முன்னேறும்.
🌹மௌனியிடம் ஒருவரும்... பகைமை பாராட்டமாட்டார்கள்:
உடல் நலம் பேண வேண்டுமா? பேச்சின் தன்மையை செம்மைப் படுத்தவேண்டும். இலக்கில்லாத வளவளப் பேச்சு,கோபத்துடன் கூடிய கத்தல் பேச்சு இவைகள் கூடாது. அவை குரோதத்தை வளர்த்து, மனதை காயப்படுத்தும்.ஆத்திரத்தைத் தூண்டி பிரிவை உண்டாக்கும்.
மௌனம் தங்கத்திற்கு நிகரானது. மௌனிக்கு நண்பர்கள் இல்லாமல் போகலாம் ஆனால் பகைவர் கிடையாது. மௌனமாக இருப்பவன் சுய பரிசோதனை செய்ய வாய்ப்புப் பெற்றவன். அவன்தன் குற்றம் குறைகளை ஆய்ந்து, கூர்ந்து பரிசோதிப்பதால் , பிறரிடம் அதைக்காண விழைய மாட்டான்.
கால் தவறினால், முறிவு ஏற்படும். நா தவறினால் மற்றவர்களின் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் முறிந்துவிடும்.அந்த முறிவை எப்போதும் சரி செய்ய இயலாது, அது சதா வலித்துக் கொண்டே இருக்கும். ஆகவே உன் பேச்சை கவனமாக கையாளு.பேச்சைக் குறை. அதில் இனிமையைக் கூட்டு.இதுவே உனக்கும் , நீ வாழும் உலகிற்கும் நீ புரியும் தொண்டு.
ஆதாரம்: Sri Sathya Sai Speaks, Volume I,
Chapter 10: Viveka and Vairagya & Sri Sathya Sai Speaks, Volume III,
Chapter 38: Project Site, Puja Site
🌻 சாய்ராம். பகவான் மௌனத்தின் சிறப்புகளை கூறுவதுடன், அதை தமது செயலாக்கத்தில் நிதர்சனமாக செய்து காட்டி நம்மை வழி நடத்துகிறார். இறுதியாக பகவான் தமது தரிசன பாக்யம் பெற்றவர்களுக்கு, மௌனம் பற்றி கூறுகிறார். "எனது தரிசனம் முடிந்ததும், ஒரு ஒதுக்குப் புறமான இடத்தில் அமைதிமாக அமர்ந்து தியானியுங்கள் அப்படியின்றி, பிரரிடம் நீங்கள் பேச முற்பட்டால் , எனது தரிசனத்தால் உங்களுக்கு கிடைத்த சக்தி , உங்களிடமிருந்து எனக்கே திரும்பி வந்துவிடும்." ஆகவே மௌனம் பழகுவோம். மஹாசக்தி அடைவோம். 🌻
தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக