சுவாமி எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறார் என்பது மிகவும் சத்தியம். சுவாமி ஒருவரே சுறுக்கமாகவும் .. விரிவாகவும் இருக்கிறார். ஆம்!!
அணுவாகவும் .. அண்டமாகவும் இருப்பது இறைவன் சத்யசாயியே..
வழிபாடு செய்வது அவருக்காக அல்ல.. நமக்காக .. நம் ஆன்மீக முன்னேற்றத்துக்காக என்பதை மறந்துவிட வேண்டாம்.
ஒரு சில வீட்டில் சுவாமி படத்தை மலர்களால் அலங்கரித்து வைத்திருப்பர் .. தனியாக ஒரு நாற்காலியையும் அவருக்காக பிரத்யேகமாக வைத்திருப்பர்.. சில சந்தர்ப்ப சூழ்நிலையில் அந்த வீட்டு குழந்தை அங்கே வந்து அந்த அலங்காரத்தை கலைத்தோ.. நாற்காலியில் அமர்ந்தோ விடுமானால் உடனே அந்தக் குழந்தையிடம் அந்த வீட்டினர் கோபம் கொண்டால் எதற்காக அந்த வழிபாடு செய்யப்படுகிறதோ .. அந்த நோக்கமே கலைந்துவிடுகிறது.
சிலர் பஜனையோ.. வழிபாடோ செய்து கொண்டிருக்கையில் வாசலில் யாசிப்பவர் வந்து உணவோ / காசோ கேட்டால் கண்டு கொள்ளாத வகையில் தனது வழிபாட்டை தொடர்வதும் வழிபாடே அல்ல.
நாம் சடங்குகளில் சிக்கிக் கொள்கிறோமே தவிர அதன் சாராம்சத்தை உணர்வதில்லை.
வழிபாடு என்பதால் உள்ளம் கனிய வேண்டும்.. பக்குவம் பெருக வேண்டும். தயை திறள வேண்டும். ஏக்கம் விலகி ஆனந்தம் உணரப்பட வேண்டும்.
குணங்கள் மணங்களாகப் பரவாமல் விழிப்புணர்வில்லாமல் வழிபாடு செய்வதால் எந்தப் பயனும் இல்லை.
நாம் சுவாமியை வழிபடுகிறோம் என்பதற்கும்.. நாம் சுவாமி பக்தர் என்பதையும் ... நம் கனிந்த குணமே காட்டிக் கொடுத்து விடுகிறது.
குண மாற்றத்திற்கு வழிபாடு அவசியமே.
பக்தி மேலும் ஆழப்பட வழிபாடு அவசியமே.
பசுவின் உடம்பெல்லாம் பால் நிறைந்திருந்தாலும்.. காம்பில் கறந்தால் தான் பால் சுரக்கிறது. கொம்பில் அல்ல... அது போலவே சுவாமி எங்கும் நிறைந்திருந்தாலும்.. நாம் புலன்களின் எல்லைக்கு உட்பட்டு வாழும் வரை.. சுவாமியையும் படம் என்ற எல்லைக்குள் உட்பட்டு வழிபட்டு வருகிறோம்..
தியானத்தில் எல்லைகள் கடந்து போக சுவாமியை ஆன்மீக ஆகாயத்திலும் உணரலாம்.. தரிசிக்கலாம்.
இறைவனை சத்யம் என்றும் பிரம்மம் (பிரம்மா அல்ல) என்றும் கூறுகிறோம். சத்யம் அகண்டமாக... பார்வையை கடந்து உள்ளது.. இந்த சத்யத்தை "பூர்ணம் அத" என்றும் உபநிஷத் கூறுகிற ரகசியம் என்கிறார் சந்தேக நிவாரணியில் சுவாமி (பக்கம் - 38)
ஆகவே தான் சத்திய சாயியாக பூமியில் சுவாமி அவதரித்திருக்கிறார்.
ஆகவே தான் சுவாமியின் எங்கும் நிறை பூரணத்தை உணரும் விதமாக.. அதற்கான ஒரு கருவியாக சுவாமிக்கு நாற்காலி இட்டு பஜனை செய்கிறோம்.
வழிபாடு என்பது எட்டுவித மலர்களால் ஆனது என்கிறார் சுவாமி.
1. அகிம்சை
2. புலனடக்கம்
3. கருணை
4. சகிப்புத்தன்மை
5. அமைதி
6. நோன்பு
7. தியானம்
8. சத்தியம்
இந்த எட்டு வித மலர்கள் நம்முள் மலர்கிற போதே நாம் வழிபாடு செய்வதாக / வழிபாடு ஆவதாக சுவாமி வலியுறுத்துகிறார்.
(ஆதாரம் :Sathyasai speaks- Volume -15.. chapter -9.. )
மனதில் எதையோ நினைத்து மலர்களை சுவாமியின் பாதத்தில் அர்ச்சனை செய்வதல்ல வழிபாடு..
இந்த எட்டு மலர்கள் இதயத்தில் மலராத வரை நாம் செய்கிற வழிபாடு விழலுக்கு இறைத்த நீர்.. அதாவது ஓட்டை வாளியில் இறைக்கும் கிணற்று நீராய்ப் பயனற்றுப் போகிறது.
நாம் துளை கொண்ட வாளியாய் இருக்காமல் துளை கொண்ட புல்லாங்குழலாய் மாறுவோம். அப்போதே பிரபஞ்சப் பரிபூரண இறைவன் சத்யசாயி கிருஷ்ணர் நம்மை கையில் ஏந்தி ஆன்மீகம் வாசிப்பார்.
பக்தியுடன்
வைரபாரதி
மனைவி இறந்த சோகத்தில் நான் என் மகன்கள் பரிதவித்து போய் உள்ளோம். எங்களுக்கு ஆறுதல் சொல்ல சாய் ராம் தவிர வேறு ஒருவரும் இல்லை. குற்ற உணர்ச்சி வேறு கால காலத்தில் கவனிக்க வில்லயே என்பது வேறு.
பதிலளிநீக்குமனைவி இறந்த சோகத்தில் நான் என் மகன்கள் பரிதவித்து போய் உள்ளோம். எங்களுக்கு ஆறுதல் சொல்ல சாய் ராம் தவிர வேறு ஒருவரும் இல்லை. குற்ற உணர்ச்சி வேறு கால காலத்தில் கவனிக்க வில்லயே என்பது வேறு.
பதிலளிநீக்கு