தலைப்பு

திங்கள், 4 ஜனவரி, 2021

பிஞ்சு குழந்தையின் தலையைத் தடவியபடியே தலையின் வீக்கத்தை போக்கிய பாபா!

சுவாமியின் கைகால் விரல் மட்டுமல்ல.. கண் பார்வை அசைவு மட்டுமல்ல... அங்கியின் ஸ்பரிசம் மட்டுமல்ல.. அவரின் சுவாசக் காற்று கூட வைத்திய காற்றாய் வெளியேறி பக்தர்க்கு சிகிச்சை அளிக்கும் வல்லமை பெற்றது என்பதன் சத்தியத்தை உணர்த்தும் இருவகைப் பதிவு இதோ...


பாலபட்டாபி என்பவர் கரூரை சேர்ந்த சுவாமியின் ஆதிகாலத்து பக்தர். ஆதிகாலத்து பக்தர் அனைவரும் ஆத்மார்த்த பக்தர்கள். சத்ய சாயி இறைவனை கண்ணுக்குக் கண்.. இதயத்தோடு இதயம்.. நேருக்கு நேராக பல விசித்திர அனுபவங்கள் அடைந்த ஆதிகாலத்து பக்தர்கள் நாம் எவ்வாறு சுவாமியிடம் பக்தி செலுத்த வேண்டும் என்பதை உணர்த்தும் வழிகாட்டிகள்.  அத்தகைய பால பட்டாபியின் மூத்த சகோதரி அலமேலு அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து மிகவும் நோயுற்று இருந்தது. அதன் தலை நாளுக்கு நாள் பெருத்தும், கை கால்கள் மெலிந்தும் போய்க் கொண்டிருந்தன! 

எப்படி இருக்கும் பெற்றவளுக்கு..??

குழந்தைக்கு உண்டாகும் தீங்கால் அந்த குழந்தை பெறும் வலியை விட.. அதைப் பெற்றெடுத்தவளே இதயத்தில் அதிக வலியை அனுபவிக்கிறாள்.

இறைவனை தவிர வேறு கதி மனிதர்க்கு எங்கேயும் இல்லை. அது எப்போதும் இல்லை. எனவே இறைவனை நோக்கி தவித்தபடியே துடித்த இதயம் விரைந்தது...


பெற்றோர் குழந்தையை பர்த்திக்கு சுவாமியிடம் அழைத்து வந்தனர். சில நாட்கள் கழித்து பட்டாபி தம்பதிகளும் வந்து சேர்ந்தனர். பாபா தினமும் அந்த குழந்தையின் தலையை தனது கைகளால் கவனமாக அழுத்திவிட்டார்.

அவரின் தெய்வீக ஸ்பரிசம் பெற அந்த குழந்தை எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்!! , இறைவனின் ஸ்பரிசம் பெறவே மனித உடல் பிறக்கிறது.. இறைவனின் ஸ்பரிசம் பெற்ற பின்னர் மனித உடலோ உயிர்க்கிறது.

ஆழமாக உற்று நோக்கினால்.. வியாதிகளுக்கும்/ தீங்குகளுக்கும் / கஷ்டங்களுக்கும்/ இழப்பிற்கும் மனிதன் உண்மையில் நன்றிக்கடன் பட்டிருக்கிறான். காரணம் - அதுவே மனிதனை இறைவனை நோக்கி அழைத்து வருகிறது.

இப்படி ஸ்பரிச வரம் பெற்றது குழந்தை.

இறைவன் சத்யசாயி 15 நாட்களில் அந்த குழந்தையை குணப்படுத்தி விடுகிறார்!

ஒரு விநாடியிலேயே இறைவனால் குணப்படுத்தி விட முடியும். நாட்கணக்கு என்பது அவரவர் கர்ம கணக்கே தவிர வேறொன்றுமில்லை.. இறைவன் சத்ய சாயி கர்ம கணக்கை அனுசரித்தே ஒவ்வொருக்கும் ஒவ்வொரு வகையில் அருள் பாலிப்பதை அவரவர் உணர்ந்து கொள்கின்றனர். பிறகு நன்றி பெருக்கோடு விடை பெற்றுச் சென்றனர் அலமேலு தம்பதியினர்!


சில நாட்களில் அலமேலுவின் கணவருக்கு இதயத்தில் நோய் ஏற்பட்டு அதிகமாகிவிட்டது. பட்டாபியின் அறிவுரைப்படி, சென்னையில் மருத்துவர்களை சந்திக்கும் முன்பாக, புட்டபர்த்தி சென்று பாபாவை சந்திக்க புறப்பட்டனர். அலமேலுவின் தந்தையோ பிடிவாதமாக அப்படி ஒன்றும் தேவை இல்லை என்று கூறி கோபப்படுகிறார்.

இப்படியே மனித அறியாமை எப்போதும் நன்றி இல்லாதது.. ஆழ்ந்து உணர இயலாதது.. இறைவன் தனக்கு செய்த மாபெரும் நன்மையையும் மறந்து விடும் தற்குறித்தனமானது. சுரணை இல்லாதது. அகந்தை எனும் முட்டாள்தனம் மிகுந்தது. இறைவனை மறுப்பதும்..இழிவாய் நினைப்பதும் தன் மேல் தானே காரி உமிழ்வதைப் போன்றது.

ஆனாலும் தங்களுக்கு நம்பிக்கை இருப்பதால் தாங்கள் புறப்படுவோம் எனக் கூறிவிட்டு கிளம்பி விட்டனர். அலமேலுவின் தந்தை ஒன்றும் பேச முடியவில்லை!

பாபா, அலமேலுவையும் அவரது கணவரையும் கூப்பிட்டு, விபூதி வரவழைத்து கொடுத்து ஆசிர்வதிக்கிறார்.

அவர் வரமறுத்ததை குறித்து இறைவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அது தான் சுவாமி. மகா கருணையான சுவாமி.

கருணைக்கே ஏதேனும் கருணை தேவைப்பட்டால் அது சத்யசாயியிடமே அடைக்கலம் தேடும். காரணம் அவர் ஒருவரே பரிபூரணப் பரம்பொருள். அன்றிரவு நன்கு உறங்கிய தம்பதியர், மறுநாள் நல்ல மாற்றத்தை உணர்ந்தனர். பல நாட்களுக்குப் பிறகு, திட உணவு சாப்பிட ஆரம்பித்தார். 4 நாட்களில் சித்ரவதி நதி சென்ற குளிக்கும் அளவிற்கு ஆரோக்கியம் பெற்றுவிட்டார் அலமேலுவின் கணவர். பிறகு சுவாமி இருவரையும், "உடுமலைப்பேட்டை சென்றுவிடுங்கள், அறுவைச் சிகிச்சை தேவையில்லை!" என்றார்!

அறுவை சிகிச்சை இன்றி எத்தனையோ லட்சம் பேர்களுக்கு மேல் சுவாமி காப்பாற்றி உயிர் தந்திருக்கிறார். மனிதகுல சமுதாயமே சுவாமிக்கு ஒவ்வொரு நொடியும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்பதற்கு இந்த இரண்டு அனுபவங்களும் சான்று!!!

ஆதாரம்: R. Bala Pattabi - Nectraine Leelas of Bhagawan Sri Sathya Sai Baba - P. 56


🌻 சத்தியமான இறைவன் சத்திய சாயி.. அவரே பிரேமமான இறைவனும்.. இதை உலகமே அணு அணுவாய் அனுபவிக்கும்... அந்த பிரேமமே உலகை ஞான வெளிச்சத்தில் நடை போடவைக்கும்.. அது புற ரோகம் மட்டுமல்லாது அக ரோகத்தையும் போக்கும்.. ஆன்மா பற்றியே அறியாத மருத்துவ விஞ்ஞானம் அதை மேம்படுத்தும் வகையில் இறைவன் செயல்பட ஆன்ம சக்தியே நோய் எதிர்ப்பு சக்தி என்பது புரிய வரும்... குறுகிய இதயமே நோய். பரஸ்பர அன்பே பக்குவமான மருந்து.. ஞானத் தடுப்பூசியை பிரேம மயமான சாயி ஒவ்வொரு ஆன்மாவின் உள்ளும் பாய்ச்சுவார்!!!!!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக