தலைப்பு

செவ்வாய், 5 ஜனவரி, 2021

சோமநாதரின் ஆலயத்துக்கு தெய்வீக சக்தியை அளித்த பாபா!


இறைவன் சத்யசாயி சோம்நாதருக்கு மட்டுமல்ல பனி நிரம்பி நம்மை பரவசப்படுத்தும் இமயத்திற்கே பேரானந்த அதிர்வலைகளை நித்தம் நிரப்புபவர். இமயத்து யோகியரின் தவ அதிர்வலைகளே சுவாமி.. அவர்கள் எந்த பூரணத்தை அடைகிறார்களோ அந்த பூரணத்தின் உருவே சுவாமி.. அத்தகைய இறைவன் சத்யசாயி சோம்நாதர் ஆலயத்தில் நிகழ்த்திய பேரற்புதம் இதோ...

சோமநாதபுரம் கோயில் (Somnath) இந்தியாவின் குஜராத்து மாநிலத்தின் தென்மேற்குக் கரையில், கிர்சோம்நாத் மாவட்டத்தில், பிரபாச பட்டினக் கடற்கரையில் சோமநாதபுரம் சிவன் கோயில் அமைந்துள்ளது.

இது இந்தியாவில் உள்ள 12 சோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது.
இங்கு சோதிர் லிங்கத்தின் நேர் பின்புறம் உள்ள சக்தி அம்மன், 51 சக்தி பீடங்களில் தேவியின் வயிற்றுப் பகுதி விழுந்த சக்தி பீடத்திற்குரியதாகும். இந்தியாவெங்கும் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் முதலாவதாக கட்டப்பட்டது என்ற சிறப்பை பெற்றுள்ளது இக்கோயில். இமயமலை தோன்றும் முன்பே இப்பகுதி இருந்ததாகவும், கற்கால மனிதர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.மே 17-20, 1970

1970 மே மாதம் பதினேழாம் தேதி இந்த யுகத்தின் முக்கியமான நாள். ஆம்! பாபா சோமநாதரின் ஆலயத்துக்கு தெய்வீக சக்தியை அளித்த பொன்னான நாள். மறைந்த நவநகர் அரசரின் பிரார்த்தனையை பாபா நிறைவேற்றி வைத்தார்.

காலம்சென்ற HM மகாராஜா ஜாம் ஸ்ரீ திக்விஜய்சின்ஜி

இந்தியாவில் இருந்த ஆலயங்களிலேயே சோமநாதர் ஆலயம் தான் செல்வம் மிகுந்திருந்தது. முகமதியர்கள் ஆண்டு வந்த காலத்தில் கொள்ளை அடிப்பவர்களின் கவனத்தை ஈர்த்தது இந்த ஆலயம். இடிந்து போயிருந்த அந்தக் கோவிலை புதுப்பிக்கும் புனர் உத்தாரண வேலையில் நவநகர் அரசரும் ஈடுபட்டிருந்தார். அவர் மறைந்துவிட்டாலும் அந்தக் கோவிலை திறந்து வைக்க பகவான் வரவேண்டும் என்று முயன்று ராஜமாதா அந்த முயற்சியில் வெற்றியும் கண்டிருந்தார்.

உண்மையான சோமநாதரை அன்று வெளிப்படுத்தப் போவதாக பாபா அறிவித்தார். அலங்காரப் பந்தலுக்குள் பாபா வரவேற்கப்பட்டார். கோவில் நிர்வாகிகளும் அரசாங்க அதிகாரிகளும் பெரும்பதவி வகிப்பவர்களும் கூடி பாபாவை வரவேற்றனர். கலையழகு மிகுந்த வெள்ளி பூச்சு செய்யப்பட்ட “திக் விஜய்” வாயிலை பாபா வெள்ளித் திறவுகோலால் திறந்தார்.

சத்ய சாயிநாதன் திறந்து வைத்த சோம்நாத் கோவிலின் திக்விஜய் நுழைவாயில் 

பிறகு பாபா கருவரையை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டார். உள்ளே சென்ற பின் ஒரு தட்டு கொண்டுவருமாறு பணித்தார். அந்த தட்டில் தனது விரல்களை விரித்து வைத்து உள்ளங்கையால் மூடினார்.கலகலவென்ற ஓசையோடு நூற்றி யெட்டு தங்கத்தினாலான வில்வ தளங்களும் நூற்றியெட்டு தங்கமலர்களும் விழுந்தன. அங்கிருந்த லிங்கத்தின் மேல் இந்த தளங்களையும் மலர்களையும் பொழிந்தார், மீண்டும் தனது அங்கையை அசைத்தார். கண்களை கூசவைக்கும் ஒளிக்குவியல் ஒன்று தோன்றியது! ஆம்! ஜோதிர்லிங்கத்தை தமது கையில் ஏந்தி நின்றார்! திருடப்படாமலும் புனிதம் கெடாமலும் இருப்பதற்காக பூமிக்கடியில் அழத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சோமேஸ்வரரை பாபா வெளிப்படுத்த முடிவு செய்து அதை செயல்படுத்திவிட்டார்!


இந்த செய்தியை கோவில் அர்சகர்களும் மற்றவர்களும் ஊர்ஜிதம் செய்தனர். லிங்கத்தை வைப்பதற்காக வெள்ளிக்கம்பம் ஒன்று ஸ்ருஷ்டித்து அர்ச்சகரிடம் கொடுத்து “இனிமேல் இந்த லிங்கம் இங்கேயே இருக்கட்டும் பக்தர்கள் இதனை தரிசித்து மகிழட்டும். இதனை இனியும் ஒளித்து வைக்க வேண்டிய அவசியமில்லை. இத்தகைய பயத்தை போக்கவே இந்த அவதாரம் பூவுலகுக்கு வந்திருக்கிறது” என்று கூறினார் பாபா.

 சோம்நாத் சிவலிங்கம் இன்றைய தோற்றம்🌻 பூமிக்குள் புதைந்திருந்த லிங்கத்தை மட்டுமல்ல நம் இதயத்திற்குள் புதைந்திருக்கும் ஆத்ம ஞானத்தை வெளிப்படுத்தவே இறைவன் சத்யசாயி அவதரித்திருக்கிறார்.

அப்பேர்ப்பட்ட பேரிறைவனை அர்ப்பமான உலகாயத விஷயங்களுக்காக பயன்படுத்த நினைக்காமல்... பரிபூரண இறைவுணர்வை வாழ்வில் அடைந்து உள்மலர்தலை நிகழ்த்தி பேரன்பின் வாசனையை பூமி எங்கும் பரப்ப...நம்மை ஆழமாய் ஆத்ம சாதனை புரிய வைக்கும் படி சுவாமியிடம் கரைந்துருகி வேண்டிக் கொள்ள வேண்டும்!! 🌻 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக