தலைப்பு

வியாழன், 30 மே, 2024

மகாசமாதிக்குப் பிறகும் உயிர் வாழ்கிறார் பாபா! - நேரடி அனுபவங்கள்!

பேரிறைவன் பாபா மறைந்தே போகவில்லை... தற்போதும் நம்மோடு இயங்கி வருகிறார், உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார், தன் உண்மையான பக்தர்களோடு தொடர்பில் இருக்கிறார், பல தருணங்களில் தரிசனமும் தருகிறார் எனும் மெய்சிலிர்க்கும் அனுபவம் இதோ...!


அது செப்டம்பர் 2013. பக்தர் ஹரிஹரகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி புட்டபர்த்தி செல்ல வேண்டி ரயில் நிலையத்தில் காத்திருக்கிறார்கள்! ரயில் தண்டவாளத்தில் வந்துவிட்ட போதும் அதன் கதவு திறக்கப்படவில்லை.. அது அந்திமாலை நேரம்! ஆக வெளியே அமர்ந்து நிற்கும் ரயிலையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! அது சரியாக புட்டபர்த்தியில் பஜனை ஆரம்பமாகும் நேரம்!

ஆகவே அதை குறித்து "நாம் இந்த மாலை அந்த அற்புத நிகழ்வை தவறவிடுகிறோம்.. நாளை தான் புட்டபர்த்தி செல்ல முடியும்!" என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்... அந்த சமயத்தில் எதிரே பாராத விதமாக...

எதிரே கதவு மூடப்பட்டிருக்கும் ரயிலின் ஒரு ஜன்னல் கண்ணாடியில்... புட்டபர்த்தி குல்வந்த் ஹாலில் பக்தர்கள் அமர்ந்திருக்க.. பஜனை ஒலிப்பதும் பாபா நடந்து வருவதும் கண்களில் தெரிகிறது..பஜனைப் பாடல் காதுகளில் கேட்கிறது...! யாரோ பாபாவின் தரிசன வீடியோவைத் தான்  ஒளிபரப்புகிறார்கள் அதன் பிரதிபலிப்பு தான் அந்த ரயில் கண்ணாடி ஜன்னலில் காட்சியாகிறது என்றே இருவரும் முதலில் நினைக்கிறார்கள்! எங்கே அந்த ஒளிபரப்பு நேர்கிறது என்று இருவரும் சுற்றும் முற்றும் பார்க்க... அதற்கான ஒளிபரப்பு தடயம் எங்குமே இல்லை...  அவர்களுக்கு பிரம்மாண்ட ஆச்சர்யமாக இருக்கிறது... மெய் சிலர்க்கிறார்கள்! பிறகு அந்த காட்சி அந்த ரயில் ஜன்னலில் அப்படியே மெதுமெதுவாக மறைந்து போகிறது! இருந்த இடத்திலேயே இருவருக்கும்  பாபா காட்டிய அந்த அற்புத காட்சியால் அவர்கள் மிரண்டே போகிறார்கள்! 

"நான் எப்போதும் உங்களுடன் தான் இருக்கிறேன்!" என்று பாபா முன்பே சொன்ன அந்த அற்புத சத்திய மொழியால் நிதர்சனமாக பாபாவின் பேரிருப்பை இருவரும் உணர்ந்து கொள்கிறார்கள்! 


கூடுதலாக பாபா நிகழ்த்திய மகாசமாதி எனும் லீலா நாடக ஆண்டான 2011 ஆம் ஆண்டு மட்டும் எப்போதும் நிகழாத தெய்வீக நிகழ்வு பக்தர் ஹரிக்கு நிகழ்கிறது... பாபா மூன்று முறை ஹரிக்கு பாத நமஸ்காரம் வழங்கி இருக்கிறார்‌.. உடல்நிலை சரியில்லாதது போல் நாடகம் நிகழ்த்திய பாபா அந்த ஆண்டே ஹரியின் கனவில் மூன்று முறை தோன்றி "நான் நலமாக இருக்கிறேன்! நீ கவலைப்படாதே!" என்று சொல்லி இருக்கிறார்..

இது பாபா மருத்துவமனையில் அட்மிட் ஆன அந்த லீலா நாடக நாட்கள்! பாபாவின் கோடிக்கணக்கான தெய்வீக விளையாடல்களில் அதுவும் ஒன்று என பிற்பாடு ஹரி உணர்ந்து கொள்கிறார்! 

"அனைத்திலும் தெய்வீகத்தை கண்டு உணர்வதால் மட்டுமே ஜீவாத்மாக்கள் பிறப்பு இறப்பிலிருந்து விடுபட முடியும்!" என்ற விவேக சூடாமணியின் மிக முக்கியமான செய்தியை பாபாவின் இறுதி பொது தரிசன புகைப்படம் உணர்த்தியதான அந்த மிக அரிய விஷயத்தையும் ஹரி பகிர்ந்து கொள்கிறார்! 

ஆதிசங்கரருக்கே அத்வைத ஞானம் அளித்த பரப்பிரம்ம பாபாவின் புகைப்படம் வெறும் படம் அல்ல பாடம்! என்பதை இதன் வழியே நமக்கு அவர் உணர வைக்கிறார்!


(ஆதாரம் : சாயியுடன் ஒரு பயணம் | பக்கம் : 180 - 183 | ஆசிரியர் : எஸ்.ஆர் ஹரிஹர கிருஷ்ணன்) 


இறைவன் பாபா சமாதி ஆகிவிட்டார் என்ற சொற்றொடரே மிகவும் அபத்தமானது! ஸ்ரீ ஷிர்டி பாபாவோ ஸ்ரீ சத்ய சாயி பாபாவோ சமாதி ஆகவே இல்லை! இருவரும் தனது பொது தரிசனத்தை நிறுத்திக் கொண்டார்கள்! அதுவே உண்மை! வெறும் சமாதான வார்த்தை இல்லை இது! பொது தரிசனம் நிறுத்தப்பட்டு பிரத்யேக தரிசனம், கனவு தரிசனம் , தியான தரிசனம் போன்றவை மட்டும் முன்பு பாபா புரிந்து வந்ததைப் போலவே தொடர்கிறது! பாபாவுக்கு உடல் என்பது வெறும் சட்டையே!  நாமே வெள்ளைச் சீருடை குறைந்தது 5 வைத்திருக்கிறோம்! பாபாவுக்கு உடற் சீருடைக்கா  பஞ்சம்? இதனை  விழிப்புணர்வோடு நாம் உணர வேண்டும்! 

"அவருக்கு நிகழ்ந்ததே நமக்கு ஏன் நிகழவில்லை?" என்று பிறர் மீது பொறாமையோ, அங்கலாய்ப்போ, அனுபவம் பெற்றவர் மீது தேவையற்ற  பழிச் சொல்லோ இவை எல்லாம் நாம் நீக்கி... அனுபவம் பெற்றவர்களின் தூய பக்தியை முன்னுதாரணமாகக் கொண்டு நம் இதயத்தை சுத்தமாக்கிய வண்ணம்... எதையும் எதிரே பார்க்காமல் நாம் பாபா மீது பக்தி செலுத்தினால் நம்மையே ஒருநாள் பெரும் அற்புதமாக்கிவிடுகிறார் பாபா!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக