தலைப்பு

வெள்ளி, 3 மே, 2024

இறந்து போனவர்களை உயிரோடு காட்டிய இரு இணையில்லா அவதாரங்கள்!


இறந்து போனவர்களை மீண்டும் பூமிக்குக் கொண்டு வந்து காட்ட இயலுமா? வியப்பின் உச்சத்திற்கே நம் இதயத்தை செலுத்தக் கூடிய இரு அவதாரங்களின் அற்புத மகிமைகள் சுவாரஸ்யமாக இதோ...!

அது துவாபர யுகம்! தேவகி மாதா தனது தெய்வ மகன் ஸ்ரீ கிருஷ்ணரையும் அவரோடு வளரும் பலராமரின் புகழையும் சேர்ந்தே செவி மடுத்துப் பூரிப்பாகிறார்! "எந்நோற்றான் கொல் எனும் சொல்!" தந்தைக்கு அல்ல தாய்க்கே முதலில் சென்று சேர்கிறது.. அப்படி சேர்கிறது தேவகிக்கு... தேவ'கீ' எனும் அந்தக் "கீ" வைத்தே பிரபஞ்ச சக்தியாகிய ஸ்ரீ கிருஷ்ணர் பூமிக்குள் இறங்குகிறார்!
அதுவும் அவள் கேள்விப்பட்ட சம்பவம் மிகவும் உன்னதமானது!

தனது குருகுல குருவான மகரிஷி சாந்தீபனியின் மகனை தன் மகனே உயிரோடு மீட்டுக் கொண்டு வந்த திருச்செய்தி அது! குரு காணிக்கையாக ஸ்ரீ கிருஷ்ணர் கொடுத்த , வெறும் கொடுத்த அல்ல.. மீட்டுக் கொடுத்த வாழ்நாள் பரிசு அது! வரம் கொடுக்கும் குருவுக்கே ஸ்ரீ கிருஷ்ணர் வரம் கொடுத்த அபூர்வ நிகழ்வு அது!
குரு எதைக் கேட்டாலும் தரும் சீடராய் விளங்கிய ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமை அது! அதைக் கேள்விப்பட்டதும் தேவகிக்கு கண்ணீர் பெருகுகிறது! சிறைச்சாலையில் தனது மகனை பார்த்ததோடு சரி... சிறையிலிருந்து ஸ்ரீ கிருஷ்ணரை வசுதேவர் எடுத்துச் சென்ற போது உண்மையில் ஸ்ரீ கிருஷ்ணர் மீண்டும் சிறைக்கே செல்கிறார்! எந்தச் சிறை? தேவகியின் இதயச் சிறை! எப்பேர்ப்பட்ட தியாகத் தாய்மை அவள்!


குரு சாந்தீபனியை போல் அவளுக்கும் ஒரு ஆசை! நியாயமான ஆசை! ஆனாலும் ஸ்ரீ கிருஷ்ணரை தவிர யாராலும் நடத்த இயலாத ஆசை அது! அப்படி என்ன ஆசை?
    எப்படி இறந்த மகனை மீட்டெடுத்துக் கொடுத்தாரோ அதே போல் இறந்த தனது 6 குழந்தைகளை காண வேண்டும் என்று ஆவல் கொள்கிறாள் தேவகி!
அவர்களோடு வாழ வேண்டும் என்பதல்ல ஆசை.. அவர்களை காண வேண்டும் என்பதே அவளது ஆசை! 6 பச்சைக் குழந்தைகள்! ஈவு இரக்கமற்ற தாய்மாமனே கொன்ற கொடூரம் அது! அந்தக் கண்மணிகளை காண வேண்டுமாம் தேவகிக்கு...! 
ஸ்ரீ கிருஷ்ணரிடமே அவள் கேட்கிறாள்!
தனது தாய்க்குத் தான் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு தெரியாதா?!
அவருக்கு பாசப் பற்று இல்லை! ஆனாலும் பற்றற்ற  கடமை இருந்தது! 
அதுவும் தாயின் ஆசையை நிறைவேற்றுவது என்பது புண்ணிய தவம்!

ஆகையால் உடனே அந்த 6 குழந்தைகளுக்காக பாதாள உலகம் செல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்! தாய்க்காக பாதாள உலகம் மட்டுமில்லை பாதாளத்தின் பாதாளத்திற்கும் ஸ்ரீ கிருஷ்ணர் செல்லக் கூடியவர்! அப்படியே தான் அவரது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திலும்..
அது பாதாள உலகம்! அங்கே பலிச் சக்கரவர்த்தி  ஆட்சி புரிகிறார்!
அவர் அங்கே இருப்பதும் ஸ்ரீ கிருஷ்ணராலே தான்!
தனது வாமன அவதாரத்தில் மகாபலிக்கு இருந்த அகந்தையை ஒரே மிதி...அவர் மிதித்த மிதியில் பலி பலியாகவில்லை.. பாதாள உலகத்தின் பதி ஆகிறார்!
அதற்குப் பிறகு அவரை இப்போது தான் பார்க்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்!
ஸ்ரீ கிருஷ்ணரை தரிசித்த மகாபலி பரவசமுடன் வரவேற்று பாத சேவை புரிகிறார்! 
தேவகியின் கோரிக்கையை அவர் சொன்ன உடனே... பலி தடையேதும் சொல்லவில்லை!
எப்படிச் சொல்வார்?! அவரின் அகந்தையை அப்போதே சுக்கல் நூறாகி உடைபட்டு விட்டதே! 
ஆசை அடிபடும்! அகந்தையோ மிதிபடும் என்பது ஸ்ரீ கிருஷ்ணர் காட்டிய சம்பவ கீதை! சம்பவ கீதை பகவத் கீதையை விட சிரேஷ்டமானது! (சிறப்பானது)
உடனே 6 குழந்தைகளை எடுத்துக் கொண்டு தேவகியிடம் ஸ்ரீ கிருஷ்ணர் செல்ல... தேவகியோ பரவசத்தோடு அந்தக் குழந்தைகளை ஆரத் தழுவி முத்தமிட.. அவளது இதயம் சிறகடித்துப் பறக்கிறது.. கண்ணீரோ கதகதப்பாகத் தெறிக்கிறது! 


ஸ்ரீ கிருஷ்ணர் மீண்டும் அந்த 6 குழந்தைகளைத் தொட அவர்கள் சாபம் நீங்கி தங்களது சுயரூபம் பெற்று வானுலகத்திற்கு தேவகியின் கண்முன்னரே செல்கிறார்கள்! தேவகியின் கோரிக்கை தீர்ந்ததில் அவளுக்கு ஒரு ஆத்ம திருப்தி! அதே சமயம் பிறவியின் இலக்கு நேர்ந்ததை எண்ணி அந்த அறுவருக்கும் பரம நிறைவு!
இருவரையும் பார்த்து தனது அக்மார்க் மர்மப் புன்னகையைச் சிந்திக் கொண்டே விடை பெறுகிறார் ஸ்ரீ கிருஷ்ணர்!

(ஆதாரம் : ஸ்ரீமத் பாகவதம் - 10.2.1063)

இதே போல ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திலும் இதே விதமான அபூர்வ சம்பவங்கள் நெஞ்சம் நிறைய புரிந்திருக்கிறார்! எல்லா உலகமும் அவரின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதால் நூல்கள் நிறைந்திருக்கும் அலமாரித் தட்டுக்கள் போல் தான் அவருக்கு வெவ்வேறு உலகங்கள்! எந்தத் தட்டில் எந்த புத்தகம் இருப்பது என்பது புத்தக உரிமையாளருக்கு தெரியும்! அதே போல் எந்த உலகத்தில் எந்த ஆன்மா இருக்கிறது என்பதும் பாபா அறிவார்...! காரணம் அண்ட சராசரமும் பாபாவின் கட்டுப்பாட்டிலேயே அடங்கி ஒடுங்கி இருக்கிறது!


ஒருமுறை ஸ்ரீ சத்ய சாயியின் யசோதையான கர்ணம் சுப்பம்மாவுக்கு ஒரே சோகம்! இறைத் தாய் ஈஸ்வராம்பாவின் தாய்ப் பாசத்திற்கு இம்மி அளவிற்கும் குறைவோ குறையோ இல்லாதது சுப்பம்மா அவர்களின் தாய்ப்பாசம்! அந்த சுப்பம்மாவின் கணவர் இறந்து போகிறார்! அதனால் அந்த ஒரே சோகம்! புல்லானாலும் புருஷன் என்பது சுப்பம்மாவுக்கும் அது தெரிந்திருந்ததால் வருத்தமாக இருக்கிறார்! முகமோ புட்டபர்த்தி வெய்யிலில் அலைந்து திரிந்து வாடிய சருகு போல் இருக்கிறது! அப்படியே வருடங்கள் கடக்கிறது... வருடத்தை கடந்த சுப்பம்மாவால் வருத்தத்தைக் கடக்க இயலவில்லை! 
எல்லாம் அறிந்த பாபா ஒரு நாள் 
"என்ன சுப்பம்மா ? உன் கணவனை நீ காண வேண்டுமா?" என்று புன்னகைத்துக் கேட்கிறார்! 
பாபா ஏதோ வேடிக்கை புரிகிறார் என்று மௌனம் சாதிக்கிறாள் சுப்பம்மா!
பாபாவின் வாயிலிருந்து எந்தச் சொல் வந்தாலும் அது வேடிக்கையானது அல்ல என்பதற்கு இணங்க...
"என்னை நம்பு! நீ உன் வீட்டு கொல்லையில் சென்று பார்! உன் கணவர் இருக்கிறார்!" என்கிறார் பாபா!
உடனே சுப்பம்மா வேகமாக ஓடினாள்... ஓடினாள் ஓடினாள் வீட்டின் ஓரத்திற்கே ஓடினாள்! அங்கே மரத்தடியில் சிகரெட் பிடித்தபடி ஒரு உருவம் நின்று கொண்டிருக்கிறது! யார் அது என்று உற்றுப் பார்க்க அவளது அதே புருஷன்.. புருஷன் வாயில் வழக்கமாக அவர் பிடிக்கும் அதே சிகரெட்!
தூக்கி வாறிப் போடுகிறது அவளுக்கு.. கணவர் இறந்து ஒரு நாள் இரு நாள் அல்ல ஆண்டுகள் பலவாகிவிட்டன.. ஆகவே அவளுக்கு அமானுஷ்ய பயம் பீடிக்கிறது! திக் திக் என்றபடி நொடியோ நீடிக்கிறது! 
பாசத்தில் நெருங்காமல் பயத்தில் பதறி பின் வாங்குகிறாள் சுப்பம்மா! அதைப் பார்த்த பாபாவோ சிரித்தபடி...
"அம்மா! என்ன ஆச்சர்யம்!! நான் உன் கணவனை காட்டியும்... நீ அவனை நெருங்காமல் விலகி ஓடுகிறாய்! எப்போது மனதிலிருந்து பந்தம் அறுந்து போகிறதோ அப்போது இப்படித்தான் நேர்கிறது!" என்ற ஞானத்தை உபதேசிக்கிறார்! 
ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் ஸ்ரீ கிருஷ்ணரோ தனது தாய்க்கே கீதை உபதேசித்தார் தான்!


அது போல் இன்னொரு முறை சாயி சேவகர் ராம பிரம்மத்தின் மகன் இறந்து போய்விடுகிறான்! பரபரப்பாக சேவை செய்திடும் ராம பிரம்மத்தை சோகம் அப்பிக் கொள்கிறது! சோகத்திலும் பெரிய சோகம் புத்திர சோகம்! சுயநலமில்லா சேவகர் அவர்.. ஆயினும் அவரின் மகன் பாசம் அவரின் மனதோடு மல்லு கட்டுகிறது! எல்லாம் அறிந்த பாபா ஒரு நாள் சோகமாக இருந்த ராம பிரம்மத்திடம் நெருங்குகிறார்‌... பக்தர் ராம பிரம்மம் துயராக இருந்தால் சாயி பரப்பிரம்மத்தால் தாங்க முடியுமா?
"பங்காரு! உன் மகன் என்னிடம் தான் இருக்கிறான்!" என்கிறார்! அந்த சத்திய வார்த்தையைக் கேட்டும் சோகம் கரையவில்லை அவருக்கு...!
உடனே "வா பங்காரு! என்னோடு நேர்காணல் அறைக்கு!" என்று அழைத்துப் போகிறார் பாபா! 
அங்கே சென்று பார்த்தால்... ராம் பிரம்மத்தின் இறந்து போன மகன்... ஒரு நிமிடம் அதிர்ச்சியாகிறார் அவர்.. சில நாள் முன்பு இறந்த மகன் இங்கேயா? அவரால் அதை நம்பவே முடியவில்லை.. பிறகு தன்னையே அவர் ஆசுவாசப் படுத்திக் கொண்டு.. மகனோடு பேசுகிறார்... தந்தையும் மகனும் பேசப் பேச தந்தையின் கனத்த மனம் அப்படியே பஞ்சாகப் பறக்கிறது! பிறகு நேர்காணல் அறை விட்டு வெளியே வருகிறார்! மனம் லேசாக இருப்பதை உணர்கிறார்! அதற்குப் பிறகு அவர் மகன் சோகத்தில் வீழவே இல்லை! இந்த அனுபவத்தை பிரசாந்தி நிலைய இ.எச்.வி கட்டிடத்தில் சாயி சேவகர் அனில்குமார் அனைவரோடு பகிர்ந்து கொள்கிறார்! பாபா அதே தனது ஸ்ரீ கிருஷ்ண மர்மப் புன்னகையை உதிர்க்கிறார்!

(Source : Sri Krishna Sri Sathya Sai | Page : 169 - 170 | Author : Dr J. Suman Babu ) 

உடலே இறக்கிறது! ஒரே சட்டையை எத்தனை நாள் ஆன்மாவால் அணிந்து கொண்டிருக்க முடியும்? நைந்த உடையாகிவிட்டால் ஆன்மா புதிய உடையை அணிந்து கொள்கிறது என்பதை பாபா தனது பகவத் கீதையில்‌ நமக்கு முன்பே தெளிவுபடுத்தி இருக்கிறார்... இந்த சாவுக்கு போய் எல்லாமா பாபா மேல் இருந்த பக்தியை நாம் விட வேண்டும்? எவ்வளவு நகைப்புக்கு உரிய பரிதாபம் அது! சிலர் அப்படியும் பாபாவை விட்டு  அகன்றிருக்கிறார்கள்! எல்லாமே பாபா சங்கல்பம் என உணர்ந்து கொண்டபின் ஏன் ஒருவர் அதிக ஆயுள் வாழ ஆசைப்பட வேண்டும்? ஏன் தனது குடும்பமோ உறவினரோ இறந்தால் பாபாவின் மேல் கோபம் வர வேண்டும்?
ஆறிலும் சாவு! நூறிலும் சாவு!* என்பது கௌரவர் - பாண்டவரின் எண்ணிக்கையை வைத்து மட்டும் சொல்லப்பட்டதல்ல வயதை வைத்துப் பார்த்தாலும் அது தான் உண்மை! உலகில் சௌக்கியமாக வாழும் ஒரே ஒரு வஸ்து சாவு மட்டுமே!
ஆகவே தந்தைக்கு முன்பே மகனும் இறக்கலாம்! பாட்டனுக்கு முன்பே பேரனும் இறக்கலாம்! இறப்பு என்பது ஒவ்வொரு ஆன்மாவின் தனித்தனி கர்மாவை சார்ந்தது! பாபாவின் பாதம் சேர்வதே விடுதலை! அதுவரை மரணம் என்பதும் ஜனமம் என்பதும் வேலூர் சிறையிலிருந்து பாளையங்கோட்டைச் சிறைக்கு நாம் மாறுவதைப் போலவே... எந்த வித்தியாசமும் இல்லை! அதே சமயம் பக்குவப்பட்ட ஆன்மாக்கள் மட்டுமே பாபாவின் பாதங்களை அடைய முடிகிறது!

  பக்தியுடன் 
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக