தலைப்பு

சனி, 25 மே, 2024

"என்னை உங்களால் புரிந்து கொள்ளவே முடியாது!" -- இரு அவதாரங்களின் பளீர் விளக்கம்!

எவ்வாறு இரு அவதாரங்களும் மண்ணுலகில் மக்களிடையே திகழ்கின்றனர்? ஏன் அவர்களை சரிவர சராசரி மனிதர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை...? அதற்கு இரு அவதாரங்களும் தெளிவுபடுத்தும் தன்னிலை விளக்கம் என்ன? சுவாரஸ்யமாக இதோ...!


வேதா 3 ஹம் ஸமதீ 1 தா 1 னி வர்த 1 மானானி சா 1 ர்ஜுன |

ப 4 விஷ்யாணி ச 1 பூ 4 தானி மாம் து 1 வேத 3 ந க 1 தூண்ட்ச 1 ன ||

26 ||

அவஜானன்தி1 மாம் மூடா4 மானுஷீம் த1னுமாஶ்ரித1ம் |

1ரம் பா4வமஜானன்தோ1 மம பூ41மஹேஶ்வரம் ||11|| 


அதாவது,

அர்ஜுனா ! நான் கடந்த காலம் , நடக்கும் காலம், எதிர் காலம் யாவற்றையும் அறிந்திருப்பவன்! அது உனக்கு மட்டுமல்ல.. சகல ஜீவராசிகளுக்கு நடந்த- நடக்கும் - நடக்க இருக்கும் தொடர் நிகழ்வுகளையும் நானே அறிந்து வைத்திருப்பவன்! சகலமும் அறிந்த என்னை ஒருவராலும் அறிந்து கொள்ள முடியவில்லை! அறியவும் முடியாது! நானே எந்த அணுக்களின் உள்ளும் நிறைந்திருக்கும் பூரண இறைவன்! அப்படி நான் பூமியில் இறங்கி வருகிற போது முட்டாள்களும் ஓரளவுக்கேனும் என்னை புரிந்து கொள்ள முற்படுகின்றனர்... என்னுடைய இறை இயல்போ நிலையானது, அழிவற்றது! முட்டாள்களுக்கு எது உண்மை ? எது பொய்? என்ற பேதம் தெரிந்திருப்பதில்லை, ஆகவே என் பேருண்மையை உணராமல் என்னையும் அவர்களைப் போலவே நினைத்துக் கொள்கிறார்கள்! அது அவர்கள் எனது உடலோடு கூடிய வெளிப் பார்வையை மட்டுமே பிரதிபலிக்கிறது! என்னுடைய உண்மையான வடிவத்தை அவர்களால் இன்னமும் தரிசிக்க முடியாமல் இருக்கிறது... அதுவும் என்னுடைய இறை சங்கல்பமே! முட்டாள்களால் நான் பிறப்பு இறப்பு அற்றவன் என்பதையோ நானே ஆன்மீக பெருஞ்சக்தி என்பதையோ புரிந்து கொள்ள இயலவில்லை!" 

(ஆதாரம் : ஸ்ரீ மத் பகவத் கீதை - 7.26 , 9.11)


அதே போல் ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திலும் ஸ்ரீ கிருஷ்ணர் அதையே மீண்டும் கூறி நமது அறியாமை மனத்திற்கு மேலும் ஞானத்தைப் பாய்ச்சுகிறார்! தனது தெய்வீகத்தை மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நினைவுப்படுத்துகிறார்!

"நான் உங்களது மூன்று காலங்களையும் அறிவேன்! உங்களின் இறந்த காலம் , நிகழ் காலம் , எதிர் காலம் - இந்த மூன்று காலங்களுமே என்னால் தெளிவாக அறியப்படுகிறது! ஆகவே தான் ஏன் நீங்கள் வருத்தப்படுகிறீர்கள், கஷ்டங்களை அனுபவிக்கிறீர்கள் என்பதை என்னால் தெள்ளத் தெளிவாக உணர முடிகிறது! ஆகையால் நீங்கள் அதனை எவ்வாறு கடந்து போக வேண்டும் என்பதையும், உங்கள் முக்திக்கான வழி என்பதையும் நானே நன்றாகவே அறிகிறேன்! *ஒவ்வொரு தனி நபரின் வாழ்க்கையிலும் என்னென்ன நடந்தது- நடந்து கொண்டிருக்கிறது - நடக்கவும் போகிறது என்பதும் எனக்கு தெரியும்! ஏன் ஒவ்வொரு நபரும் தங்களது பிறவியில் கஷ்டப்படுகிறார்கள், அப்படி கஷ்டப்படும் அவர்களது அடுத்த பிறவியில் என்னென்ன நேரும் என்பதும் எனக்கு நன்கு தெரியும்!


என்னுடைய தெய்வீக சக்தி அளவிட முடியாதது! அந்த எல்லாவிதமான தெய்வீக சக்தியும் எனது கைகளுக்குள்ளேயே அடங்கி இருக்கிறது! எனது தெய்வீக சக்திக்கு ஒரு வரையறையே கிடையாது! எல்லையற்ற பேராற்றலும் , மரணமில்லா காலமும், முடிவற்ற பன்முகத்தன்மையும் என்னுடைய இதே கைகளில் (பாபா தனது கைகளைக் காட்டியபடி) இருக்கின்றன... ஏதோ நான் சாதாரணமாக சராசரி மனிதனைப் போல் மண்ணில் உலவி வந்த வண்ணம் உங்களிடம் பழகிக் கொண்டு வந்தாலும் , அறிவில் சிறந்த மேதைகள் கூட என்னுடைய இறை பெருஞ்சக்தியையும் , என்னுடைய தெய்வீக இயல்பையும் புரிந்து கொள்ளவே முடியாது! குறுகிய மனதால் எனது இறை சக்தியின் ஒரு துளியைக் கூட உணர முடியாது! அது மனிதனுக்கும் அப்பாற்பட்டது! எவ்வித திசைகளுக்குள்ளும் அதனை அடக்கிவிட முடியாது! எனது இந்த இறை பெருஞ்சக்தியே மற்ற இதர சக்திகளுக்கெல்லாம் ஆதாரமும்...! அடிப்படையும்...!

என்கிறார் பாபா!

(Source : Sri Krishna Sri Sathya Sai | Page : 170 - 171 | Author : Dr. J. Suman Babu )


இரு அவதாரங்கள் சொல்வதும் ஒன்றே! ஒரே சாராம்சம் மட்டுமல்ல ஒரே வார்த்தையே! இந்த இரு அவதாரங்களையும் மகான்களாலேயே புரிந்து கொள்ள முடியாத போது மனிதர்களால் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்!

தனது ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் கீதை மொழிகளால் பாபா சொன்னதை விட இன்னமும் அதனை விரிவாகவே கலி யுகத்தில் மேலும் சொல்லி இருப்பதை நம்மால் உணர முடிகிறது! 

ஏன் பாபாவை பாபாவாகவே வழிபட்டால் போதாதா? ஏன் ஸ்ரீ கிருஷ்ணரோடு பொருத்திப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றலாம்!

நாம் பொருத்திப் பார்ப்பதற்காக விவரிக்கவில்லை! 

"சம்பவாமி யுகே யுகே!" என்பது வெறும் அந்த நேரத்து ஆறுதல் அல்ல அது முழுக்க முழுக்க சத்தியம் என்பதை உணர்த்துவதும்...

பாபா ஒரு மகான் அல்ல அவர் மகான்களையே உருவாக்குபவர் என்பதை ஆன்மா வரை பதிவு செய்வதும்...

பாபாவே ஸ்ரீ கிருஷ்ணர் எனும் பேருண்மையை உணரத் தொடங்கிவிட்டால் அலைபாய்ந்த அர்ஜுனர் மனம் அடங்கியது போல் நமது மனமும் அடங்கிவிடும் என்பதற்காகவும்...

ஸ்ரீ கிருஷ்ணர் என்றாலே ஆனந்த அவதாரம்...

அதே ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமான பாபாவின் பக்தர்களும் அதே போல் ஆனந்தமாக விளக்குவதற்கான வாசலை திறந்து விடுவதற்காகவும் இந்த "ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி" எனும் பிரம்மாண்ட இதிகாசத் தொடர்!


பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக