தலைப்பு

ஞாயிறு, 27 செப்டம்பர், 2026

அதே பாபா தான் இவர்! ~ ஸ்ரீ சாயி லீலா.

பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா, தனது முந்தைய அவதாரமான ஷீரடி சாயியாக இருந்தபோது என்ன லீலைகள் செய்தார்? இந்த அவதாரத்தில் அதே மாதிரியான லீலைகளை எப்படி நடத்தினார் என்பதை பார்க்கலாம். 

 பஞ்ச பூதங்களின் மேல் பாபாவின் கட்டுப்பாட்டை இரண்டு அவதாரங்களிலும் வெளிப்படுத்தியுள்ளார். அதைக்குறித்து இதோ…!


பாகம்-1 

ஷிரடி சாயி பாபா 

ஒரு நாள் மாலை நேரத்தில்  புயல் காற்றுடன் கூடிய மின்னலுடன் மழை வெள்ளமாக பொழிந்தது. அவ்விடம் எல்லாம் வெள்ளக்காடாக மாறியது, அனைவரும் மசூதியில் பாபாவை தஞ்சம் அடைந்தனர். பாபாவிடம் புயலையும் மழையையும் தணிக்க வேண்டினர். அவர்களுடைய பக்தியில் உருகிய பாபா வெளியே வந்து உரத்த குரலில் 'நிறுத்து உன் சீற்றத்தை -  சீற்றத்தை நிறுத்தி அடங்கியிரு எனக் கூறினார். சில நிமிடங்களில் மழை குறைந்து. காற்று வீசுவது நின்று, புயலும் அடங்கியது. பின்னர் வானத்தில் சந்திரன் உதயமாகி மக்கள் நன்றாக மகிழ்வெய்தி வீட்டுக்கு சென்றனர். 

அடுத்ததாக நெருப்பை எப்படி தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார் என்பதைப் பார்க்கலாம். 

மசூதியில் உள்ள 'துனி'யில் நெருப்பு மிகப் பிரகாசமாக   மசூதி விட்டத்தை தொடும் அளவு எரிந்தது. மக்கள் பீதி அடைந்து பாபாவை வேண்டினர். பாபாவும் உடனே தனது சட்கா (குச்சி) யை எடுத்து முன்னுள்ள ஒரு தூணின் மீது ஓங்கியடித்து "கீழிறங்கு, அமைதியாய் இரு " என்றார். ஒவ்வொரு தடியின் அடிக்கும் ஜ்வாலை கீழிறங்கத்தொடங்கி சில நமிடங்களில் கறைந்து அமைதியாகவம் சாதாரணமாகவும் ஆகியது!

 (சத்சரிதம் அத்தியாயம் 11) இவ்வாறாக நெருப்பை கட்டுப்படுத்தினார். 


சத்யசாயி பாபா

இந்த அவதாரத்தில் நம் சுவாமி எப்படி கட்டுப்படுத்தினார் என்பதை பார்ப்போம! பழைய மந்திர் (தற்போது கல்யாண மண்டபம்) கால கட்டத்தில் ஒருநாள் மழை பெரிதாக வந்து வெள்ளக் காடாகியது. மந்திர்க்குள் தண்ணீர் வந்து பக்தர்கள் செய்வதறியாது தவித்தனர். பகவானை வேண்டினார்கள். என் தகப்பனார் பால பட்டாபி  அந்த சமயம் அங்கிருந்து பார்த்து நடந்ததை  என்னிடம் கூறினார்.

பகவான் அவர்கள் அர்ச்சனை செய்த குங்குமம் அதை தெளித்துக் கொண்டே நீரில் செல்ல அவருக்குப் பின்னே ஆண்கள் 4 பேரை மட்டும் பகவான் வரச் சொல்ல தண்ணீர் பாபாவுக்கு வழி விட்டு தணிந்து சமமானது. பகவானின் நாமங்கள் சேர்ந்த குங்குமத்தை பகவான் உபயோகித்தார்.  அவரின் கரத்திலிருந்த குங்குமே சேதுபாலம் கட்டியது போன்ற நிகழ்வினை ஞாபகப்படுத்துகிறது.

மேலும் நெருப்பை எப்படி அடக்கினார் என்பதைப் பார்க்கலாம். 

ஒருமுறை என் தாயார் விளக்கு ஏற்றும் போது சேலையில் தீ பற்றி எரிந்தது. அதை சிறிது நேரம் கழித்து பார்த்த அம்மா, சாய்ராம் என கத்தினார்கள். உடனே புடவை கசக்கப்பட்டு தீ அணைந்து விட்டது. என்ன ஆயிற்று என அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

பகவானின் அருள் இருந்தால் நாம் எந்த துன்பத்தையும் கடக்கலாம். எதையும் சாதிக்கலாம். பகவானின் நாமத்தைச் சொல்வோம். அவரது அருளைப் பெறுவோம்.

ஜெய சாய்ராம்.


பாகம்-2 

ஷிரடி சாயி பாபா 

ஸ்ரீ சாயி சத்சரிதத்தில் 26-ம் அத்யாயத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு பக்தரின் கதையைப் பார்க்கலாம். 

புனேவைச் சேர்ந்த கோபால் நாராயண் ஆம்ப்டேகர் என்பவர் பாபாவின் பக்தர். அவர் பத்து ஆண்டுகளுக்கு தானே ஜில்லாவில் எக்ஸைஸ் டிபார்ட்மெண்டில் பணியாற்றி பிறகு ஓய்வு பெற்றார். வேறு வேலை பெறுவதற்கு அவர் முயற்சித்தும் அவரால் பெற முடியவில்லை. மேலும் பல கஷ்டங்களால் அவர் தாக்கப்பட்டு அவரது நிலைமை நாளுக்கு நாள் மிக மோசமடைந்து கொண்டே வந்தது. வருடா வருடம் சீரடி சென்று தனது கவலைகளை பாபாவின் முன் சமர்ப்பித்து வந்தார்.

இதே போல் ஏழு ஆண்டுகளைக் கழித்தார். மேலும் அவரது நிலைமை மோசமாகி இம்முறை சீரடி சென்று அங்கேயே தான் தற்கொலை செய்து கொள்வது எனத் தீர்மானித்தார். தன் மனைவியுடன் சீரடி வந்து இரண்டு மாதங்கள் தங்கி இருந்தார். ஒரு நாள்  வாதாவில் ஒரு மாட்டு வண்டியில் அமர்ந்து பாபாவைப் பிரார்த்தித்து அருகிலுள்ள கிணற்றில் குதித்து தன் வாழ்க்கையை முடிக்கத் தீர்மானித்தார்.

இவர் இவ்வாறாக எண்ணியபோது பாபா அவரை வேறு விதமாகக் காப்பாற்றினார். சில அடி தூரத்தில் இருந்த ஒரு ஹோட்டல் முதலாளி, பாபாவின் பக்தர், இவரிடம் வந்து அக்கல் கோட் மகாராஜின் புத்தகத்தை இவரிடம் கொடுத்து நீங்கள் இதைப் படித்ததுண்டா எனக் கேட்டார். அவரிடமிருந்து அந்த புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தொடங்கினார்.

எதேச்சையாக இவர் படித்த பகுதி ஒரு பக்தன் தாங்க முடியாத, தீர்க்க முடியாத வியாதியால் பீடிக்கப்பட்டு அந்த வேதனை தாங்காமல் கிணற்றில் குதிக்க, அந்த அக்கல் கோட் சுவாமி அவர் கரங்களால் அவனை மேலே எடுத்து காப்பாற்றி, கர்மத்தை நல்லதோ கெட்டதோ அதைத் தாங்கி அனுபவிக்க வேண்டும் என்று அறிவுரை கூறிய நிகழ்ச்சியாக இருந்தது.

சரியான சமயத்தில் இது நடந்திருக்காவிட்டால் அவர் உயிரை இழந்திருப்பார். பாபாவின் சங்கல்பம் அவரைக் காத்து சர்வ வியாபியாய் இருப்பதை உணர்ந்து மேலும் உறுதியான பக்தராகி பிற்காலத்தில் ஜோதிடம் படித்து நல்ல நிலைக்கு வந்து வாழலானார்.


சத்யசாயி பாபா

இதேபோல் என் தந்தையான பாலபட்டாபியை எப்படி காப்பாற்றினார் என்பதை பார்க்கலாம். பகவான் பழைய மந்திரில் இருந்த சமயம் என் தகப்பனாருக்கு நடந்த ஒரு சம்பவம்! 

மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்த அவருக்கு ஏழாவது வயதில் தந்தையை இழக்க நேரிட்டது. சொத்துக்களைப் பாதுகாக்க வழிகாட்ட யாரும் இல்லாததால் பல சொத்துக்களை இழந்தார். பதினான்கு வயதிலேயே திருமணம் நடந்திருந்தாலும் குழந்தை இல்லை. பகவானை தரிசித்த பிறகும் பல வியாபாரங்களில் நஷ்டம் அடைந்து, பணமின்றி உலகில் மதிப்பை இழந்தார்.

நான் வாழ்ந்து பயனில்லை என்ற எண்ணத்தில் புட்டபர்த்தி வந்து பகவானை வணங்கினார். தற்கொலை செய்யும் எண்ணத்துடன் கிணற்றில் குதித்து, தன் உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணி, குதித்தும் விட்டார். 

ஆனால் என்ன ஆச்சரியம் இடுப்பளவே தண்ணீரில் நனைந்த இவர், பகவானின் அறையில் பகவானின் கட்டிலுக்குக் கீழ் படுத்திருந்ததை உணர்ந்தார். உடனே எழுந்து என்னை ஏன் காப்பாற்றினீர்கள் எனப் புலம்பியுள்ளார்.

அதற்கு பகவான், தெலுங்கில் ஒரு பாட்டுப் பாடி, இவரிடம் இனிமேல் இது போன்ற பைத்தியக்கார வேலை செய்ய மாட்டேன் என சத்தியம் வாங்கியுள்ளார். 

அந்தப் பாட்டின் அர்த்தத்தை மட்டும் எழுதுகிறேன். 

"எவரிகதி எடுலனுண்டுனு ஶ்ரீ சாயி கெருக"

மேலும், ஒவ்வொருவரின் துன்பத்தையும் நான் அறிவேன். ஶ்ரீமன் நாராயணர், அரிச்சந்திரன், தர்மராஜன் மற்றும் பாண்டவர்கள் அனுபவித்த கஷ்டங்களை விட உனக்கு கஷ்டம் அதிகமாக விட்டதா! நான் காப்பாற்ற மாட்டேனா என்கிற பொருள் வரும்.

பிறகு பிற்கால வாழ்வில் அவருக்கு தேவையான  அனைத்தும் கிடைத்தன. 

இறுதி வரை சுவாமி பாதுகாவலராக இருந்து காப்பாற்றி அவருடைய 100-வது வயதில் தன் பாதங்களில் சேர்த்துக் கொண்டார்.

ஜெய் சாய்ராம்.


வழங்குபவர்: ஸ்ரீ சாயி லீலா (பழம்பெரும் பக்தர் 'உடுமலை பாலபட்டாபி' அவர்களின் தவப்புதல்வி)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக