தலைப்பு

புதன், 27 நவம்பர், 2024

ஏன் சமீப காலத்தில் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா பல விமர்சனங்களுக்கு உள்ளாகிறார்?

ஆம்! ஷிர்டி ஸ்ரீ சாயிபாபா பற்றி வாட்ஸ் அப்'பில் பல தவறான செய்தி பரப்பப்படுகிறது! அதை யாரும் நம்ப வேண்டாம்! 

அவர் ஒரு சாதாரண ஞானி தான் என்றும், ஆகவே அவரை இறை உருவங்களோடு (சிவன் - விஷ்ணு) இணைத்து வைக்கக் கூடாது என்றும் ஒரு சில செய்திகள்! பாபா ஒரு இஸ்லாமியர் ஆகவே தமிழ் குருமார்களுக்கு (வள்ளலார் , அகத்தியர்) எதிராக எழுப்பப்படுவதே சாயி வழிபாடு என்றும் ஒரு சில செய்திகள்! ஷிர்டி கோவில் இஸ்லாமிய நிர்வாகத்திற்கு கோடி கோடியாய் கொட்டிக் கொடுப்பதாகவும் இப்படி நிறைய வன்மம் கொப்பளிக்கப்படுகிறது! 


இந்த செய்திகளை எல்லாம் தங்களின் வாட்ஸ் அப்'பில் வாசிக்க நேரும் சாயி பக்தர்கள் யாரும் தடுமாற வேண்டாம்! அவை யாவும் உண்மை இல்லை!


உங்களில் சிலர் ஷிர்டி ஸ்ரீ சாயிபாபாவை வெறும் ஞானி தான் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம்! அது அவரவர் புரிதலின் மேல் புறப்பட்டு வரும் பக்குவமின்மையே தவிர ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா சாட்சாத் இறைவன்! கல்கி அவதாரம் சாயி அவதாரமாக மூன்றாக பிரிந்திருக்கிறது! 

கலியுகம் ஒரு மந்த யுகம் - இங்கே ஆன்ம முன்னேற்றம் கூட தாமதமாகவே நிகழும்! எந்த நற்செயலும் விதைத்த உடன் கலியுகத்தில் முளைத்து பெரிய மரமாகிவிடுவதில்லை! இங்கே ராவணனும் கம்சனும் சிசுபாலனும் வெளியே இல்லை! மனதின் உள்ளேயே உயிரோடு இருக்கிற காரணத்தினால் அவர்களை அழிப்பது வெறும் புற அழிப்பில் அன்றி அக அழிப்பால் , ஆம் அதன் பெயர் தான் அக மாற்றம்! அதைத் தான் பாபா தன்னுடைய அடுத்த அடுத்த அவதாரங்களின் வழியாக தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்! ஆகவே தான் இறைவன் தனது கல்கி அவதாரத்தை ஷிர்டி ஸ்ரீ சாயிபாபா - புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாயிபாபா - குண பர்த்தி ஸ்ரீ பிரேம சாயிபாபாவாக நிகழ்த்தி இருக்கிறார்!  


ஷிர்டி ஸ்ரீ சாயிபாபா தன்னை இறைவன் என்று ஒரு சில பேர்களுக்கு உரைத்திருக்கிறார், அதில் ஒரு சில பேர்களுக்கு உணர்த்தி இருக்கிறார்! (உதாரணம் : சுத்தானந்த பாரதி - திலகர்)

குருவை இறைவனாக கொண்டாடுவதும் பாரத மரபு தான்! ஆகவே சத்குருவாகவும் திகழும் பேரிறைவன் ஷிர்டி ஸ்ரீ சாயிபாபாவை அனைத்து இறை வடிவமாகக் கொண்டாடுவது ஆன்மீக எதார்த்தமே! 

பாபாவுக்கு கூட்டம் குவிவதால் ஏற்படும் காழ்ப்புணர்ச்சியே புற்றீசலாய்ப் புறப்பட்டு வரும் அத்தனை அபத்தச் செய்திகளும்! 

பாபாவை தரிசனம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள் பொதுமக்கள்! வேண்டுதல் அனைத்தும் நிறைவேறுகிறது என்பதால் மீண்டும் மீண்டும் பாபாவை தேடி வருகிறார்கள்! ஆகவே கூட்டம் குவிகிறது! 

லௌகீகப் பொறாமையை விட ஆன்மீகப் பொறாமை மிகவும் ஆபத்தானது! 

அவற்றில் இருந்து நமது சாயி பக்தி எனும் சஞ்சீவிக் கவசம் நம்மைப் பாதுகாக்கும்! 


விமர்சனங்கள் எழாத அவதாரங்களே இல்லை! மனிதனோடு இறைவன் நடமாடுகையில் மனிதனின் அறியாமைத் தூசி இறைவன் மேல் விழவே செய்கிறது! இறைவன் நெருப்பு என்பதால் அந்தத் தூசியும் நெருப்பாகிவிடுகிறது! ஷிர்டி ஸ்ரீ சாயி பாபாவை இறைவன் என நாம் உணர ஆரம்பிக்கும் நொடி தான்.. இறைவன் முடிவதில்லை - தொடர் அவதாரங்கள் நிகழ்த்துகிறார் எனும் சத்தியமும் சேர்ந்தே விளங்குகிறது! 

பலர் ஷிர்டி பாபா அவதாரமான ஸ்ரீ சத்ய சாயிபாபாவை சந்தேகப்பட்டப் பிறகு தான் சரணாகதியே அடைந்தனர்! எள்ளல் மொழி பேசியே பிறகு ஆனந்தக் கண்ணீர் மொழி பேசினர்! அலட்சியப்படுத்திய பிறகே லட்சியப்படுத்தினர்! கர்ம வலையில் சிக்கிக் கொண்டிருக்கும் மனித மனம் படுத்தும் பாடே இவை அனைத்தும்!

தெளிந்த நீரில் தான் நம் முகமே பிரதிபலிக்கும்! அது போல் தெளிந்த மனதில் தான் தெய்வீகம் காட்சி அருளும்! 


பார்வைக்கு ஸ்ரீ ஷிர்டி பாபா இஸ்லாமியர் - கருணையில் ஏசுநாதர் போல் யூதர் - மன்னிப்பதில் கிறிஸ்துவர் - தீபமேற்றி அக வெளிச்சம் தருவதில் அவர் சனாதனி, நீள் மௌனத்தில் அவர் ஒரு புத்தர் , எதார்த்த ஆன்மீகத்தில் அவர் ஒரு ஜென் துறவி, அல்லா மாலிக் என்கிற போது அவர் ஒரு சூஃபி ஞானி, தீராத அன்பில் அவர் மதம் கடந்தவர்! 

ஆக மதம் மீதான தீவிர பற்று ஆன்மீகத்தை நோக்கி ஒருவரையும் இட்டுச் செல்லப் போவதில்லை!

மதம் ஒரு வாழைப்பழத் தோல் மட்டுமே! ஆன்மீகம் என்பதே பழம்! தோலில் எந்த ருசியும் இல்லை!

உண்மையான மத உணர்வாளர்கள் எந்த மதத்தையோ / யார் மனதையோ புண்படுத்துவதில்லை! 

அவரவர் பிறந்த மதத்தில் பொதிந்திருக்கும் ஆன்மீக ருசியை அறிய முற்படும் போது- எல்லா மத நோக்கமும் ஒன்று தான் எனும் உள்நோக்கம் வெளி நோக்கமாக விளங்கிவிடுகிறது!


எப்படி இரண்டு உலக யுத்தங்களுக்கும் இறைவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையோ அது போல் சில ஆன்மீக நிர்வாகம் செய்யும் தவறுகளுக்கும் பாபாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை! மனிதன் செய்யும் தவறுகளுக்கு மனிதனே பொறுப்பு! எப்போது மனிதன் தன் தவறுகளை திருத்த முயற்சிக்கிறானோ அப்போது இறைவனே இரங்கி வந்து அவனுக்கு உதவுகிறார்!

தீராத மன்னிப்பை திகட்டாமல் வழங்குவதே சாயி அவதாரங்கள்!

அந்த ஆன்ம மன்னிப்பு மனிதனை திருத்துவதாக அமையட்டும்!! 

இது தான் சரியான தருணம்! இப்போது திருந்தவில்லை எனில் எப்போதும் இல்லை!


   பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக