தலைப்பு

சனி, 16 நவம்பர், 2024

"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை!" -- சத்தியம் பகிரும் இரு அவதாரங்கள்!

எவ்வாறு இரு அவதாரங்களுமே நிரந்தரமானவர்கள் என்பதன் சத்திய வாக்கை எந்தெந்த சந்தர்ப்பங்களில் ஒரே விதமாக மொழிந்திருக்கிறார்கள்? அந்த விளக்க சுவாரஸ்யம்  ஆதாரப்பூர்வமாக இதோ...


ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டா²ஹமம்ருதஸ்யாவ்யயஸ்ய ச|

ஸா²ஸ்வதஸ்ய ச தர்மஸ்ய ஸுகஸ்யைகாந்திகஸ்ய ச || 14- 27||


அதாவது, "யாரெல்லாம் என்னை உறுதியான பக்தியோடு வழிபடுகிறார்களோ அவர்கள் எல்லாம் பரப்பிரம்மம் என்கிற உயரிய நிலையை அனுபவிப்பார்கள்! மற்றவர்கள் பழையபடியான பிறப்பு இறப்பு எனும் சுழற்சியை தருகிற சம்சார சக்கரத்தில் சிக்கிக் கொண்டு துயர் அடைகிறார்கள்!

நானே நிரந்தரமானவன்! அழிவற்றவன்! சர்வ வியாபி(எங்கும் நிறைந்தவர்), முடிவற்றவன்! தடையற்ற பேரானந்தத்தின் வடிவமே நான்! நானே பிரப்பிரம்மம்!"

என்கிறார் ஸ்ரீமத் பகவத் கீதையில் பேரிறைவன் கிருஷ்ணர்! 


(ஆதாரம் : ஸ்ரீமத் பகவத் கீதை 14: 27)


இதே போல் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திலும் தான் நிரந்தரமானவர் என்பதை பல முறை வெளிப்படையாகவும், உட்பொருள் பொதிந்தும் பகிர்ந்திருக்கிறார்! 


அது ஒரு இரவு, ஆராய்ச்சி மாணவர் மயூர் மற்றும் சில பாபா மாணவர்கள் அங்கே இருக்கிறார்கள். அது வொயிட் ஃபீல்ட் பிருந்தாவனம்! மூத்த பேராசிரியர்களும் அப்போது அந்தக் கூடலில் இருக்கிறார்கள்! பாபாவோ அங்கே இல்லாமல் அவரது மாடி அறையில் இருக்கிறார்! 

பேராசிரிய விரிவுரையாளரும் மயூரும் பாபாவின் இளமைக் காலம் பற்றி இனிக்க இனிக்க பேசிக் கொண்டிருக்கிறார்கள்! அபூர்வ நிகழ்வுகளையும் எல்லாம் பரவசம் பொங்கப் பொங்க பகிர்ந்து கொள்கிறார்கள்! அப்போது அந்த உரையாடலின் ஊடே மிக எதார்த்தமாக மயூர் "சார்! யாரும் சுவாமியிடம் நிரந்தரமாக தங்கியதே இல்லை! எத்தனையோ பேர் வந்திருக்கிறார்கள், வழிபட்டிருக்கிறார்கள், சேவை செய்திருக்கிறார்கள், சென்றிருக்கிறார்கள் , ஒரு பத்து பதினைந்து வருடம் சேர்ந்தார்ப் போல் தங்கிவிட்டு சென்றிருக்கிறார்கள்! சிலர் மிகவும் நெருக்கமாக சில காலம் இருப்பர் பிறகு வேறு சிலர் நெருக்கமாக இருப்பர், இதைப் பற்றி நீங்கள் என்ன இருந்து தெரிவிக்கிறீர்கள்?" அந்த பேராசிரிய விரிவுரையாளரை கேட்கிறார்!

        அதற்கு அவரோ, "நல்லது, சுவாமி தனது பக்தர்கள் எல்லோருக்கும் வாய்ப்பு அளித்தாக வேண்டுமே! ஆகையால் அவ்வாறு தனது சங்கல்பத்தை செயல்படுத்துகிறார் என்றே எனக்கு தோன்றுகிறது!" என்று விடை அளிக்கிறார்! 


அடுத்த நாள் காலை சில இறுதி ஆண்டு மாணவர்களோடு பாபா கூட்டுப் புகைப்படமும் பிறகு தனித்தனியாகவும் எடுத்துக் கொள்கிறார்! அவர்கள் அதை எடுத்துக் கொண்டு கல்லூரியை விட்டு கிளம்பியாக வேண்டும்! கல்வி நிறைவு பெறுகிறது! ஆக புகைப்பட வரிசை நிகழ்கிறது! ஒவ்வொருவராகவும் பாபாவின் அருகே புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்! காலப் பொக்கிஷம் அந்த நொடிகள்! 

இறைவனின் வரைந்த ஓவியத்தை வழிபட்டதில் ஆரம்பித்து இறைவனின் நிஜ ரூபத்தை வழிபடத் தொடங்கி , இறைவன் கூடவே படம் எடுத்துக் கொள்வது சாதாரண செய்கை அல்ல! துவாபர யுகத்தில் இது சாத்தியப்பட்டதா! இல்லை! கலியுகம் ஒரு சில விஷயத்தில் கொடுத்து வைக்காமல் இல்லை!

ஆக புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வரிசையில்... மயூரின் முறையும் வருகிறது, மயூரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு விட்டு...

"என்ன மயூர்! நீ பார்த்தாயா? பலர் வருகிறார்கள் போகிறார்கள்! வந்தபடி போய்க் கொண்டும் இருக்கிறார்கள்! ஆனால் சுவாமி மட்டுமே இதோ தங்கி இருக்கிறேன்! சுவாமி மட்டுமே என்று மாறாதவர், என்றும் நிரந்தரமானவர்!" என்று சொல்லிவிட்டு தனது ஸ்ரீ கிருஷ்ண மர்மப் புன்னகையை உதிர்க்கிறார்! மயூர் அதைக் கேட்டு முந்தைய நாள் இரவு நிகழ்ந்த உரையாடலுக்கு பாபா பதில் அளித்துவிட்டதில் பரம ஆச்சர்யமும் , தெய்வீகத் தெளிவும் அடைகிறார்! 

(Source : Sri Krishna Sri Sathya Sai | page : 200 - 201 | author : Dr. J. Suman Babu ) 


பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணரோ ஒரே ஒரு முறை  அர்ஜுனரிடம் கீதை சொல்லி அவரை தெளிவடையச் செய்கிறார்! ஆனால் கலியுகத்தில் அதே ஸ்ரீ கிருஷ்ணர் பலமுறை தெளிவுபடுத்தி இருக்கிறார்!

"பார் பங்காரு! இப்போது நீ பிரதமரில்லை... யார் உன்னை பழையபடி பார்க்க வருகிறார்கள்!? ஆனால் சுவாமி அப்படி இல்லை! எப்போதும் நான் மட்டுமே உனக்கு நிரந்தர துணை, நானே என்றும் நிரந்தரமானவன்!" என்று பாரத ரத்னா வாஜ்பாய் அவர்களிடம் பாபா தெரிவித்திருக்கிறார்! 

துவாபரத்தில் ஒருமுறை தான் கீதை! ஆனால் கலியுகத்தில் ஒவ்வொரு நாளுமே கீதையே பொழிந்தார் ழிந்தார் பாபா! 

மந்த புத்தி உள்ளவர்கள் கலியுக வாசிகள் ஆகவே மீண்டும் மீண்டும் ஒரே சத்தியத்தையே வலியுறுத்திக் கொண்டிருக்கிறார் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்! அவர் மட்டுமே நிரந்தரம்!

நாம் வெறும் பூமிக்கு வந்து போகும் சுற்றுலாப் பயணிகளே! பாபாவே என்றும் எப்போதும் நிரந்தரம்! இதனை நாம் உணர ஏற்படும் அக சுதந்திரம்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக