எவ்வாறு பாபா தனது அசைவுகளில் கூட தனது முந்தைய கிருஷ்ணாவதாரத்தை பிரதிபலிக்கிறார்...? சுவாரஸ்யமாக இதோ...!
பாபா அவதரித்ததிலிருந்து இன்று வரை தனது ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தையே பிரதிபலிக்கிறார்! எப்படி?
பக்தர்கள் என்ற பெயரில் எத்தனை மனிதர்களை தன் கைப்பிடிக்குள் கட்டி மேய்த்திருக்கிறார்!! இன்றளவும் கட்டி மேய்த்துக் கொண்டு வருகிறார்!! நினைத்தாலே பிரம்மிப்பாக இருக்கும்!!
ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு வகை! ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகை கர்மா! ஆக ஒவ்வொரு மனிதரையும் பாபா ஒவ்வொரு வகையிலேயே அணுகுகிறார்! அது தான் ஸ்ரீ கிருஷ்ண பாணி! யார் யாரை எப்படி சரிகட்டி ஆன்மீகப்படுத்த வேண்டும் என்பது பாபாவுக்கே கை வந்த கலை!
எந்த நேரம் பிரியம் காட்ட வேண்டும்! எந்த நேரம் கோபம் காட்ட வேண்டும்! எந்த நேரம் விலகி ஒதுங்கி இருந்து கவனிக்க வேண்டும் என்பதை பாபா நன்கு அறிந்து வைத்திருக்கிறார்! இதுவே கிருஷ்ணத்தனம்!
தனது ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் சமாதானப் பேச்சு வார்த்தைக்குத் தூது சென்ற பாபா .. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் துரியோதனாதிகள் கேட்கவே இல்லை! ஆகையால் போர் மூழ்கிறது! அந்த நூறு கௌரவப் பிரபுக்களையும் தாங்களே வெற்றி கொள்ளப் போவதாக நம்ப வைக்கிறார்! காரணம் : ஸ்ரீ கிருஷ்ணராகிய பாபா கைகளில் ஆயுதங்களை எந்தவே இல்லை ஆகையால் அந்த பஞ்சப் பராதியான அஞ்சு பேரால் நூறு பேர்களை எப்படி வீழ்த்த முடியும் என்ற மாயக் கற்பனையில் அவர்களை மிதக்க வைக்கிறார்... மறைந்திருந்து தானே அத்தனையும் இயக்குகிறோம் என்பதை காட்டிக் கொள்ளாமலேயே ஸ்ரீ கிருஷ்ணராகிய பாபா வென்று முடிக்கிறார்! அதே சமயம் வெற்றிக் களிப்பில் கொக்கரிக்கவும் இல்லை!
இது இறை அவதாரத்தால் மட்டுமே சாத்தியம்!
பாபா தொடுவதெல்லாம் வெற்றியே! இல்லை எனில் பாம்புப் புற்றாகக் கடவது என்று காந்தாரி சபித்த துவாபர யுகத்து கோகுலம் என்ற புட்டபர்த்தி இப்போது ஆன்மீக சாம்ராஜ்ஜியமாக மலர்ந்திருக்க முடியுமா?
ஸ்ரீ கிருஷ்ணரே மீண்டும் அவதரித்தால் மட்டுமே சாப விமோச்சனமே! என்கிற அவளது வாக்கியம்... வெறும் வாக்கியமாக மட்டுமில்லை நமது கண்ணெதிரேயே வாழ்க்கையாக மாறி இருக்கிறது!
இப்படியே தான் கலியுகத்திலும் ஸ்ரீ கிருஷ்ணர் பிரசாந்தி நிலையம் கட்டுகிறார்... மருத்துவமனை, பள்ளி, கல்லூரி , பல்கலைக்கழகம் இது வரை ஒரு முதல் மந்திரியால் கூட சாத்தியப்படாத காரியம் இது! அதுவும் அத்தனையும் இலவசம்! இலவச உணவு , இலவச குடிநீர் , இலவச மருத்துவமனை , இலவச கல்வி எந்த உலகப் பிரதமராலும் இதுவரை சாத்தியப்படவில்லை!
எந்த ஆசிரமத்திலும் இது போல் நிகழவில்லை!
இது பெருமை கருதி அல்ல ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரின் மகிமை கருதியே பதிவு செய்யப்படுகிறது!
ஏன் துவாபர யுகத்தில் இந்த சேவை இல்லை?
காரணம் :- துவாபர யுகத்தில் சேவை செய்ய வேண்டிய அளவுக்கு வறுமை மண்டிக் கிடக்கவில்லை! யாரும் பட்டினியோடில்லை, புதுப் புது வியாதிகள் இல்லை!
ஆகவே தான் ஸ்ரீ கிருஷ்ணராகிய பாபா தனது பகவத் கீதையில் கூட வேறெந்த மதங்களை பற்றியும் குறிப்பிடவில்லை..காரணம் :- அப்போது இத்தனை மதங்களும் இல்லை.. ஒரே சனாதன தர்மம் மட்டுமே!
ஆனால் இப்போது அது தேவைப்படுகிறது என்பதால் மத நல்லிணக்கம் பேசுகிறார்! "முழுக்க முழுக்க நல்லிணக்க நூல்களே கீதையும், வாஹினிகளும்! இரண்டும் ஒன்றே! ஒரே ஞானமே! வார்த்தை வெளிப்பாடுகள் வெவ்வேறாக இருக்கும்! அவ்வளவே! சாராம்சமாகிய சாயி ரசம் ஒன்றே!
கையில் பத்து ரூபாய் வைத்துக் கொண்டு பாபா பிரசாந்தி நிலையம் கட்ட ஆரம்பிக்கவில்லை!
எப்படிப் போர்க்களத்தில் தனது ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் நிராயுதபாணியாக இருந்தாரோ அப்படியே தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திலும் நிராயுதபாணியாகவே இருந்தார்!
தனக்கென்று ஒரு வங்கிக் கணக்கு கூட பாபாவுக்கு இல்லை! பக்தர்களை அவர் யாரிடமும் உண்டியல் குலுக்கச் சொல்லவில்லை!
எப்படி இத்தனையும் சாத்தியப்பட்டது?
எப்படி ஐந்து பேரை வைத்து நூறு பேரை வென்றாரோ அப்படி!
அதிலும் எல்லா செல்வந்தர்களையும் கொட்டிக் கொடுக்கச் சொல்லவில்லை... இது தேவை என்று யாரிடமும் பாபா ஒரு வார்த்தை கேட்டது கூட இல்லை! பலர் முன்வந்தும் சிலரடமே சட்ட முறைப்படி வாங்கிக் கொண்டார்!
மூத்தவரே இருக்க எப்படி தர்மர் ரதத்தில் ஏறாமல் இடைப்பட்டவரான அர்ஜுனன் ரதத்தில் ஏறி அவர் சாரதியானாரோ... அப்படி!
பாபா ஆன்மாவை பார்த்தே ஒவ்வொருவரையும் பக்தராக்கிக் கொண்டார்! பூர்வ பிறவிகளில் அந்த ஆன்மா செய்த நற்செயல்களை கணக்கெடுத்தே அவர்களுக்கு சேவை வாய்ப்பு வழங்கினார்! எத்தனையோ பேர் வந்து பாபாவை பார்த்தார்கள்! ஆனால் ஒரு சிலரே தரிசித்தார்கள்! பார்வை வேறு தரிசனம் வேறு!
எத்தனையோ கோடி பேருக்கு பாபா வாழ்க்கையையே பிச்சையாக தந்திருக்கிறார்!
ஆனால் ஒரு சில பேரே பாபாவின் அந்த கருணைச் செயலுக்கு நன்றியோடிருக்கிறார்கள்!
இது கலியுகம்! பாபாவுக்குத் தெரியாதா எந்தெந்த யுகத்தில் யார் யார் எப்படி இருப்பார்கள் என்பது!
அமாவாசையில் ஆரம்பித்தால் போரில் கௌரவர்கள் ஜெயிக்கலாம் என சகாதேவனே தேதியும் நேரமும் குறித்துக் கொடுக்கிறான்! அப்படிக் கொடுத்தால் தோற்கப் போவது பஞ்ச பாண்டவர்களில் அவனும் ஒருவனே! ஆனால் அதை ஜோதிட தர்மம் என்கிறான்..ஆக தனது கிருஷ்ணாவதாரத்தில் பாபா அந்த அமாவாசை நாளையே மாற்றி அமைக்கிறார்! இப்படியே தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில்...
கொஞ்சமும் தான் விதித்த நெறியை பக்தர் சுணங்கினாலும் கூட கனவு, தியானம் போன்ற பல்வேறு ஊடகம் வழி தோன்றி அவர்களை மீண்டும் நேர் நிறுத்துகிறார்!
காலம் பாபாவை எதுவும் செய்வதில்லை!
கொஞ்சமும் தான் வகுத்த சேவை முறையாகச் செய்யப்பட வேண்டியவர்களால் முடங்குகிறதா? முட்டுக்கட்டை இடப்படுகிறதா? உடனே வேறொரு வழியை அவரே தனது சங்கல்பத்தால் எடுத்து அதனை செயல்படுத்திக் கொண்டு வருகிறார்!
இப்படிப் பல நேரடி அனுபவங்கள்!
எந்த ஒரு மனிதராலும் பாபாவின் சேவைப் பணிகளை தடுக்கவோ, தடையாக நிற்கவோ முடியவே முடியாது என்பது கண்கூடு!
உயிரையே தரும் பல பக்தர்களை ஒன்றாக இணைக்கிறார்!
எப்படி தலைமாட்டில் அமர்ந்து உன் படைகளைக் கொடு என்று வேண்டிய துரியோதனனிடம் நெருங்காமல்... காலடியில் அமர்ந்து நீ மட்டுமே போதும் கிருஷ்ணா என்று வேண்டிய அர்ஜுனன் ரதத்திலே ஏறினாரோ அப்படி!
பாபாவுக்காக உயிரையே தரும் அபிமன்யுக்களையே இந்த யுகத்திலும் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் உருவாக்கி வருகிறார்!
இப்படி தனது கிருஷ்ணாவதாரத்தை நொடிப் பொழுதும் பாபா பிரதிபலித்துக் கொண்டே வருகிறார்! ஒருமுறை புவியியலாளர் வொய்.ஜே ராவ் பாபாவை தரிசிக்க வர..
பாபா ஒரு கருப்புப் பாறையை கையில் எடுத்து.. "இதனுள்ளே என்ன இருக்கிறது?" என்று கேட்கிறார். ராவோ வழக்கம் போல் சில தாதுப் பொருட்களை பட்டியலிடுகிறார்...
"அது மட்டுமா?" என்று பாபா கேட்டபடியே தனது அமுத அதரத்தால் (உதட்டால்) ஊதுகிறார்... அது உடனே ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹமாக உருவாகிறது!
"பார்த்தாயா ராவ்! பாறைக்குள் வெறும் அணுக்கள், தாதுப் பொருட்கள் மட்டுமல்ல... தெய்வீகமே குடி கொண்டிருக்கிறது!" என்கிறார்!
தெய்வீகம் நிறைந்திருக்காத இடமே இல்லை என்பதை ராவ் உணர்ந்து கொள்கிறார்! அதற்காகவே பாபாவின் அந்த சிருஷ்டியும்!
மற்றொரு முறை ஆந்திர பிரதேச கோனா சீமா பகுதியில் ஒரு பக்தரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு கிளம்புவதற்காக பாபா எழுந்து கொள்ள... அந்த வீட்டுக் குழந்தை அப்படியே தவழ்ந்தபடியே பாபாவின் அங்கியை இறுக்கமாகப் பிடித்து "போக வேண்டாம்!" என்பது போல் அசைக்கிறது! இப்படி தான் எத்தனை லீலைகளை துவாபர யுகத்தில் நிகழ்த்தி இருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்தபடி பாபா ஒரு குறும்புச் சிரிப்பையும், மர்மப் புன்னகையையும் சிந்திக் கொண்டே மெதுவாக அந்தக் குழந்தையின் மிருதுவான கை இறுக்கத்தை விலக்கிவிட... குழந்தையின் கையில் சிருஷ்டி வெண்ணெய் தோன்றுகிறது...! பார்த்தோர் பரவசப்பட ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் அப்படியே விடை பெறுகிறார்!
அவர் விடை பெறுவது என்பது காற்று விடைபெறுவது போல்... எப்படி ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் விடை பெற்றாரோ அப்படியே ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திலும் விடை பெற்றார்!
வார்த்தைக்காக விடை பெற்றார் என்று எழுத வேண்டி இருக்கிறதே தவிர அவர் எங்கும் விடை பெறவில்லை! விடை பெற அவர் மனிதரில்லை! தனது பொது தரிசனத்தை நிறுத்திக் கொண்டார் என்பதே சத்தியமான கூற்று!
அருகே அவரது பிரியத்திற்கு உரிய அர்ஜுனன் இல்லை... யாரிடமும் தனது அவதார முடிவை அறிவிக்கவும் இல்லை! துவாபர யுகத்தில் தனியாகவே விடை பெற்றார்...
அப்படியே ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திலும் ஸ்ரீ கிருஷ்ணர் தனது அவதார நிறைவு நாளை முன்கூட்டியே யாரிடமும் அறிவிக்கவே இல்லை! துவாபர யுகத்து அதே திருச்செய்கையே! அதே பற்றின்மை! பாபா ஸ்ரீ கிருஷ்ணராக இருந்து பாண்டவர்க்காக வென்றெடுத்த ஒரு பிடி மண்ணை ஆள வேண்டும் என்று கூட பிரதிபலனுக்காக கேட்கவில்லை! அதுவே கர்ம யோகம்! பாபா கிருஷ்ணாவதாரத்தில் எதை வாழ்ந்தாரோ அதையே தான் கீதையாக போதித்தார்..
அவ்வாறே தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திலும் பற்றின்மையே தானாய் திகழ்கிறார்! கலியில் தேவைப்படுவதால் துவளாத தயையும் சேர்கிறது!
எப்படி சமாதானப் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தாலும் பாபா தனது கிருஷ்ணாவதாரத்தில் கௌரவர்களை கை கூப்பி வணங்கிவிட்டே விடை பெற்றார்..அதே கை கூப்பி வணக்கம் பொது தரிசனத்தில் இறுதியாக அனைவரையும் பார்த்து ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திலும்...!
அவரது செய்கை அப்படியே அப்பட்டமான கிருஷ்ணத்தனம்! யோக விழிப்புணர்வோடு இருக்கும் ஒரு சிலரே அதனை உணர்ந்து கொள்ள முடியும்!
அந்தக் கைக் கூப்புதலில் பாபா பொது தரிசனத்திலிருந்து விடை பெறுகிறேன் என்று மட்டுமா செய்கையால் பேசினார்?
"பக்தர்களே போதும் உங்கள் அறியாமையில் இருந்து விலகி வாருங்கள்!" என்றார்!
அது மட்டுமா? மிக முக்கியமான ஒரு செய்தி
இரண்டு கைகள் ஒன்றோடு ஒன்று இணைவது போல்
ஷிர்டி பாபா பக்தர்களும், சத்ய சாயி பாபா பக்தர்களும் ஒன்றோடு ஒன்று இணைந்திருங்கள்!
ஒற்றுமையே சாயி பக்தர் என்பதற்கான அடையாளம் என்பதை கைக்கூப்பி அடையாளப் படுத்திக் காட்டுகிறார்!
(Source : Sri Krishna Sri Sathya Sai | page : 200 | Author : Dr. J. Suman Babu )
பாபாவே ஸ்ரீ கிருஷ்ணர் எனும் பிரபஞ்சப் பேருண்மையை நாம் உணர உணர பாபா சமாதியாகவில்லை... அவர் நம்மிடமே தான் இருக்கிறார் எனும் மற்றொரு ரகசியத்தையும் நாம் உணர்ந்து கொள்வோம்!
"சம்பவாமி யுகே யுகே!" எனும் சொல் சர்வ சத்தியம்! ஸ்ரீ கிருஷ்ணர் சத்ய சாயி அவதாரத்தோடு நிறுத்தப்போவதில்லை ஸ்ரீ பிரேம சாயியாகவும் நம்மிடையே தொடரப் போகிறார்!
அது வரை "நான் தான் வாசுதேவன்" என்று துவாபர யுகத்தில் ஒரு கோமாளி அரசன் பௌண்டிரகன் உளறிக் கொண்டிருந்ததைப் போல் "நான் தான் பிரேம சாயி" என்று சிலர் யூ.டியூபிலும் திரிவார்கள்! ஜாக்கிரதையாக இருப்போம்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக