தலைப்பு

சனி, 2 நவம்பர், 2024

🦚 கலியுக கந்தன் ஸ்ரீ சாயிநாதன்!


1947ம் ஆண்டு அது சுதந்திர ஆண்டு.
தங்கவேல், பெங்களூரைச் சேர்ந்த முருக பக்தர். செல்வந்தர். திருமணமாகிப் பல வருடங்கள் ஆகியும் தங்கவேலு தம்பதிக்கு குழந்தை பாக்கியம் மட்டும் கிட்டவில்லை. அதற்காக ஒவ்வொரு முருகன் கோயிலுக்காய்ச் சென்று வேண்டிக் கொண்டார்கள். 

அப்படியே புட்டபர்த்திக்கும் வந்து பாபாவை தரிசித்தார்கள். அப்போது பாபா, சித்ராவதி நதிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் தங்கவேலு தம்பதியரும் அவரை பின் தொடர்ந்தார்கள். சித்ராவதி நதியின் மணலில் பக்தர்களுடன் வட்டமிட்டு அமர்ந்த பாபா, ஆற்று மணலில் கையை விட்டுத் துளாவினார். 


சில விநாடியில் ஒரு பெரிய மாங்கனி அவர் கையில் வந்தது. அதை எடுத்து தங்கவேலுவிடம் கொடுத்து, கணவனும் மனைவியுமாய் அதை உண்ணச் செய்தார். வயிறும் மனமும் நிறைந்து போனது அவர்களுக்கு மனசுக்குள் ஒரு மாற்றம் நுழைய சந்தோஷமாய் பெங்களூருக்குத் திரும்பிச் சென்றார்கள்.

ஒரு வருடம் ஓடிப் போயிற்று.
தங்கவேல் தம்பதியர் மீண்டும் புட்டபர்த்திக்கு ரொம்ப சந்தோஷமாக வந்தார்கள், கையில் குட்டிக் குழந்தையோடு! 
பாபாவின் அருளால் பிறந்த குழந்தைக்கு பாபாவையே பெயர் வைக்குமாறு வேண்டினார்கள். 

உடனே பாபா, பரிவோடு அந்தப் பச்சைக் குழந்தையைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டார். 'முருகன்' என்றே குழந்தைக்குப் பெயர் சூட்டிய பாபா, “தங்கவேலு, உங்களுக்குக் குழந்தை பிறந்தால் முருகப்பெருமானுக்கு வெள்ளியால் ஒரு வேல் செய்து சாத்துவதாக வேண்டிக் கொண்டீர்கள் இல்லையா?" என்றார்.
“ஆமாம் ஸ்வாமி’
“அது போல் வெள்ளியில் ஐந்தடியில் ஒரு வேல் செய்து உங்கள் வீட்டில் வைத்திருக்கிறீர்கள் அல்லவா?’
“ஆமாம் ஸ்வாமி’ என்றார்கள் தம்பதிகள்.

அப்போது பூஜையறையில் பளிச்சென்று ஒரு மின்னல் பாய்ந்தது. குளிர் மின்னல்!
அங்கேயிருந்த ஷீர்டி பாபா, பர்த்தி பாபா  சிலைகளுக்கு மத்தியில் ஐந்தடி நீளமுள்ள வெள்ளி வேல் ஒன்று பளபளவென்று மின்னியது. தங்கவேலு, முருகனுக்குத் தருவதற்காக செய்து வைத்திருந்த வெள்ளி வேல்!
“இதுதானே நீங்கள் உங்கள் வீட்டில் வைத்திருக்கும் வேல்?" என்று புன்னகைத்தார், பாபா.

🌻 அந்த தம்பதி மெய்சிலிர்த்துப் போனார்கள். பாபாவையே முருகனாக பாவித்துத் தலை வணங்கினார்கள். அந்த ஐந்தடி நீள வெள்ளி வேல் இன்றும் புட்டபர்த்தியில் பூஜையறையில் இருக்கிறது. முருகனாக! பாபாவாக! 

ஆதாரம்:  ஜன 23,2013 அன்று வெளிவந்த தினமலரின் ஆன்மீகமலர் புத்தகத்திலிருந்து.


2 கருத்துகள்: