எவ்வாறு இரு அவதாரங்களையும் மனிதர்களால் மண்ணுலகில் தரிசிக்க முடிகிறது எனும் பேருண்மையும், நல்ல செயல்களே புண்ணியங்களாக உருமாறுகின்றன எனும் பிரபஞ்ச ரகசியமும் சுவாரஸ்யமாக இதோ...!
அது துவாபர யுகம்! அது பாரதப் போர் நிகழும் களம்! அர்ஜுனருக்கு ஸ்ரீ கிருஷ்ணர் தனது விஸ்வரூப தரிசனம் அளிக்கிறார்! அதுவரை அர்ஜுனர் ஸ்ரீ கிருஷ்ணரை சாதாரண கண்களால் தான் காண்கிறார்! அவர் தனது விஸ்வரூபத்தை காட்டிய பிறகே அர்ஜுனர் ஸ்ரீ கிருஷ்ணரின் நிஜ ரூபத்தை நேருக்கு நேர் உணர்கிறார்!
அப்போது பார்த்தனோ பார்த்த சாரதியின் பிரபஞ்ச தரிசனத்தையே பார்க்கிறார்! மற்ற அனைவருக்கும் அவர் சாதாரண நபராகத் திகழ அர்ஜுனருக்கோ சர்வ வல்லமை வாய்ந்த பிரபஞ்ச இறை வடிவிலேயே தரிசனம் தருகிறார் ஸ்ரீகிருஷ்ணர்!
ஐவர்களில் அர்ஜுனர் மிகப் புண்ணியம் செய்தவர்; அதற்கு முக்கிய காரணம் ஸ்ரீ கிருஷ்ணர் மேல் அவர் வைத்த பேரன்பு, நட்பு, பிரியம்! ஆகவே தான் பாண்டவர்களில் மூத்தவரான தர்மரின் தேரில் அமராமல், தர்மருக்கு விஸ்வரூப தரிசனம் காட்டாமல்... ஐவரில் இடைப்பட்டவருக்கு ஸ்ரீ கிருஷ்ணர் அளித்த அளப்பரிய வாய்ப்பு அது! அர்ஜுனர் கூர்மைமானவர், ஆகவே தான் தனது கருவியாய் ஸ்ரீ கிருஷ்ணர் அவரையே தேர்ந்தெடுத்தார்! அர்ஜுனர் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சடுதியில் சரணாகதி அடைபவர்.. எனவே தான் அவருக்கு பிரத்யேகமாக கீதை! காரணம் உண்மையில் அர்ஜுனர் புண்ணியம் செய்தவர்!
அதே போல் தான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்தக் கலியுகத்திலும் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணராய் அவர் தேர்ந்தெடுத்த அர்ஜுனர்களுக்கே தன்னை முழுவதுமாய் வெளிப்படுத்துகிறார்!
ஒருமுறை ஜான் ஹிஸ்லாப் பாபா காரில் பாபா மற்றும் சில பக்தர்களோடு பயணிக்க... முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் ஹிஸ்லாப் , பாபாவை தரிசிக்க பின் இருக்கைக்கு கழுத்தைத் திருப்புகிறார்... அப்போது கழுத்து மட்டும் திரும்பவில்லை பேராச்சர்யமே அவர் பக்கம் திரும்புகிறது!
அப்போது திடீரென பாபாவின் முகம் நிறம் மாற... ஹிஸ்லாப் புருவம் உயர்கிறது... அந்த நிறம் ஸ்ரீ கிருஷ்ணரின் நீல நிறமாய் உருமாற..
"சுவாமி அது என்ன நீலம்?" என்று கேட்கிறார்!
அது ஹிஸ்லாப்'பிற்கு மட்டுமே தெரிந்த முக மாற்றம்! அந்த முக மாற்றமே ஹிஸ்லாப்'பின் அக மாற்றத்திற்கானது! அர்ஜுனர் கண்ட விஸ்வரூபம் போல் நீல ரூபம் அவருக்கு மட்டுமே கண்களில் தெரிகிறது!
"ஆழமானவை எல்லாமே நீலமாகத் தான் இருக்கும்!" என்கிறார் பதிலுக்கு பாபா! மேற்கொண்டு எதையும் பாபா விளக்கவில்லை... அது ஸ்ரீ கிருஷ்ணர் நிறம் அல்லவா என்றே ஆச்சர்யப்படுகிறார்! அதற்கு முழு தெளிவும் அப்போது அவருக்கு கிடைக்கவில்லை ...!
ஒரு சில நாள் கடந்து... ஒரு அஸ்ஸாம் தம்பதிகள் பாபாவை தரிசிக்க வருகிறார்கள்.. அவர்களது புண்ணியம், வந்த உடனேயே நேர்காணலுக்கு அழைக்கிறார் பாபா! கூடவே ஹிஸ்லாப்'பையும் அழைக்கிறார்! அது நேர்காணல் அறை ! பாபா ஹிஸ்லாப்பை நோக்கி அவர்களிடம் ஏதேனும் சாயி அனுபவம் பகிரச் சொல்ல... புதிதாக வந்திருக்கும் அவர்களுக்கோ.. சமீபத்தில் நிகழ்ந்த தனதுஷகார் அனுபவத்தை ஹிஸ்லாப் பகிர...
"அது ஸ்ரீ கிருஷ்ணர் முகம் அல்லவா!" என்று அந்த அஸ்ஸாம் நபர் ஆச்சர்யப்பட ..
"அது உண்மையான ஸ்ரீ கிருஷ்ணர் முகம் தான் ! ஓவியர்கள் வரையும் முகமல்ல...!" என்று பாபா தெளிவுபடுத்த..
"சுவாமி! ஆயிரக்கணக்கான வருடம் முன்பு ஸ்ரீ கிருஷ்ணர்" என்று ஹிஸ்லாப் எதையோ பேச வர..
"என்ன ஆயிரக்கணக்கான வருடம்..?! நான் தான் அந்த ஸ்ரீ கிருஷ்ணா... எனக்கு ஏது கால நேர கட்டுபாடுகள் எல்லாம்!" என்று பாபா குறுக்கிட்டு தெளிவுபடுத்த..
"ஆ... நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம்! மிகவும் சரியான காலத்தில் பிறந்திருக்கிறோம்!" என்று ஹிஸ்லாப் ஆச்சர்யப்பட...
"ஆம்! இது உண்மையிலேயே துவாபர யுக காலத்தை விட விலை மதிக்க முடியாத காலம்! இப்போதே உங்கள் முன்னமே ஸ்ரீ ராமரின் உண்மையான ரூபத்தையும் ஸ்ரீ கிருஷ்ணரின் உண்மையான ரூபத்தையும் நீங்கள் தரிசித்துக் கொண்டிருக்கிறீர்கள்!" என்று பாபா அதனை மேலும் ஆழமாய் விளக்கி ஆமோதிக்கிறார்!
"பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகள் இறை தரிசனம் பெற வேண்டி பல ஆண்டு தவம் இருந்த பிறகே இறை தரிசனம் பெறுவார்! ஆனால் திரேதா யுகத்தில் வானரர்கள் எந்த தவமும் இன்றி இறை அவதாரத்தை தொட்டு வணங்கி ஆனந்தம் பெற்றனர்... துவாபர யுகத்திலோ கோபிகைகள் குழந்தை ஸ்ரீ கிருஷ்ணரோடு விளையாடி ஆனந்தம் பெற்றனர்... இதோ கலியுகத்தில் உங்கள் முன்னே ஸ்ரீ சத்ய சாயியாய் இறை அவதாரம் வீற்றிருக்க.. நீங்கள் செய்த பூர்வ புண்ணியத்தால் தரிசனம், ஸ்பரிசனம், சம்பாஷனம் , பாத சேவனம் போன்றவற்றை ஆன்மா குளிர அனுபவிக்கிறீர்கள்! இது எவ்வளவு புண்ணியக் கொடுப்பினை தெரியுமா!!!" என்று பாபாவே முன்பு ஒருமுறை பகிர்ந்திருக்கிறார்!
வெறும் நீல முகப் மாறியது மட்டுமல்ல பலருக்கும் பாபா விஸ்வரூப தரிசனமே காட்டி இருக்கிறார்!
ஆரம்ப காலத்தில் சத்யா என்ற பெயரில் ஆரம்பித்து பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயியாக இப்போது வரை புண்ணியம் செய்தவர்கள் விஸ்வரூப தரிசனம் பெற்றிருக்கிறார்கள்! பெற்றும் வருகிறார்கள்!
பரம பக்தை அமெரிக்கா ஜெயந்தி மோகன் அவர்கள் ஒருமுறை பஜனையில் இருக்கும் போதே .. (அவரது) ஆன்மா வேறொரு உலகத்தில் செல்ல... பாபா விஸ்வரூப தரிசனமே காட்டி இருக்கிறார்! பரவசத்தில் பற்பல நிமிடங்கள் அப்படியே உறைந்து போயிருக்கிறார்! இதனை அவரே பகிர்ந்திருக்கிறார்!
பழம் பெரும் பக்தர் கீதாஞ்சலி சுப்ரமண்யத்திற்கு பாபாவே பிரத்யேகமாக விஸ்வரூப தரிசனம் வழங்கி இருக்கிறார்! அதனை அவரது புதல்விகளே ஸ்ரீ சத்ய சாயி யுகத்திற்கு நேர்காணல் வழங்கி இருக்கிறார்கள்!
பாபா யாரை தனது கருவியாக தேர்ந்தெடுக்கிறாரோ அவரிடம் தன்னை திறந்து காட்டி, அவருக்குள் இருக்கும் தெய்வீகத்தையும் சேர்த்து உணர வைக்கிறார்! அதில் நாமும் ஒருவராக இருக்க அவர் வழியை வழுவாது கடைபிடிக்க வேண்டும்!
(Source : Sri Krishna Sri Sathya Sai | page : 196 - 198 | author : Dr. J. Suman Babu)
புண்ணியமாம் பெரிய புண்ணியம் என்று நீங்கள் நினைக்கலாம்! கண்ணெதிரே பாவம் செய்கிறார்கள் ஆனால் நன்றாக இருக்கிறார்கள் என்று நாம் பிறரை பார்த்து வெறுப்படையலாம்! ஆனால்
நாம் நம்முடைய இந்த வாழ்க்கையை மட்டுமே பார்க்கிறோம், யோசிக்கிறோம்! ஆனால் நமக்கு இது முதல் வாழ்க்கை இல்லை.. நாம் நிறைய பிறவிகள் எடுத்து மீண்டும் மீண்டும் பிறந்து வருகிறோம் என்பதனை ஏனோ மறந்துவிடுகிறோம்!
இந்த ஜென்மத்தில் பாவம் செய்கிறவன், அவன் ஏற்கனவே செய்த புண்ணியத்தால் நன்றாக இருக்கிறான்.. நாள்பட நாள்பட அந்த புண்ணியமும் குறைந்து.. புதிய பாவத்தில் மாட்டிக் கொள்கிறான்!
தீய செயல்கள் பாவமாகவும்,
நல்ல செயல்கள் புண்ணியமாகவும் நமக்கே வந்து சேர்கிறது.. எப்படி உணவை சாப்பிட்டால் அது விட்டமின் புரோட்டீனாக மாறுகிறதோ அப்படி!
அவரவர் செய்த வினைகளுக்கு ஏற்ப அதனதனை நிகழ்த்த விட்டும் அதனை அனுபவிக்க வைப்பதும் சாட்சாத் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரே!
ஆகவே நாம் நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை எண்ணங்களில் கூட தீமை நினைக்காமல் இருப்பதே நம் பிறவியின் கடைத்தேற்றலுக்கு வழிவகை செய்கிறது!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக