எவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணர் உறுதியோடு கீதையாய் மொழிந்ததையே ஸ்ரீ சத்ய சாயியும் மொழிந்து ஆன்மீக உயர் லட்சியமான அத்வைதத்தை இதயத்தில் பதிவு செய்கிறார் என்பது சுவாரஸ்யமாக இதோ...!
ஈஶ்வர: ஸர்வ பூதானாம் ஹ்ருத்தேஶே
அர்ஜுன திஷ்டதி
ப்ராமயன் ஸர்வபூதானி
யந்த்ராரூடானி மாயயா. (18 : 61)
தமேவ சரணங் கச்ச ஸர்வபாவேன பாரத |
தத் ப்ரஸாதாத் பராம் சாந்திம் ஸத்தானம் ப்ராப்ஸ்யஸி சாச்வதம்
(18 : 62)
இது பகவத் கீதையில் பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனரிடம் தெளிவு படுத்துகிறார்! ஒட்டு மொத்த ஸ்ரீமத் பகவத் கீதையின் சாராம்சம்.. நீ வெறும் என்னுடைய கருவி! ஒவ்வொருவர் வாழ்க்கைச் சம்பவங்களை உள்ளடக்கிய உலகச் சம்பவங்களை நானே அரங்கேற்றுகிறேன் என்பதையே ஸ்ரீ கிருஷ்ணர் ஆணித்தரமாக வலியுறுத்துகிறார்! அந்த கீதை ஸ்லோகத்தின் பொருளானது
"அர்ஜுனா! நான் அனைவரது இதயத்திலும் உறைந்திருக்கிறேன்! மாயையாகவும் மர்மமான முறையில் செயல்படுகிறேன்! ஆகவே தான் ஒரு இயந்திரமாய் மாயையில் சிக்கி அதில் மனிதர்கள் சுழல்கிறார்கள்! எனவே உன்னுள் உறைந்திருக்கும் உண்மையான என்னையே நீ தஞ்சம் அடைவாயாக! அதன் மூலமாக என்னுடைய அதீத அருளால் நீ ஆன்மீக உயர் அமைதியை நிரந்திரமாய் பெறுவாய்!"
என்கிறார் பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர்!
இந்த வாய்மொழி வெறும் மொழி அல்ல அனுபவ சத்தியம் என்பதை அர்ஜுனர் ஸ்ரீ கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம் பெற்ற பிறகு உணர்கிறார்! ஸ்ரீ பகவத் கீதை ஞானம் என்பது பாதி தான்.. விஸ்வரூப தரிசனமே மீதி! இரண்டுமே ஒன்றிணைந்தபடியே ஸ்ரீ கிருஷ்ணரின் பேருண்மையை உணர்ந்து கொள்கிறார் ஸ்ரீ அர்ஜுனர்!
(ஆதாரம் : ஸ்ரீமத் பகவத் கீதை - 18:61,62)
இதே போல் ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில்...
"பலவிதமான மிக நீண்ட தேடுதல்கள்... பூமி முதல் சொர்க்கம் வரை.. கோவில் முதல் தேவாலயம் வரை... இப்படி மூலை முடுக்கெல்லாம் தேடித் தேடி இறுதியாக என்னிடம் வந்திருக்கிறீர்கள்! எங்கிருந்து ஆரம்பித்தீர்களோ அங்கேயே வந்து சேர்த்திருக்கிறீர்கள்! அதுவே ஆன்மா! அப்படி வந்து சேர்ந்து சுற்று வட்டத்தை நிறைவு செய்கிறீர்கள்! நீங்கள் யாரை காலம் காலமாக கோவில்களிலும் தேவாலயங்களிலும், மற்றும் இந்த உலகத்தில் எல்லாம் தேடிக் கொண்டிருந்தீர்களோ , ரகசியங்களின் ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டுமென அலைந்தீர்களோ, எது உங்கள் அருகினும் அருகே நிறைந்திருக்கிறதோ... அதுவே நீங்கள் (ஆன்மா)! அதுவே உங்களின் எதார்த்தம்! அதுவே ஆன்மா பெற்ற உடலுக்கும் மனதிற்குமான உண்மை! அதுவே உண்மையான சொத்து! ஆன்மாவே அங்கிங்கெனாது எங்கும் வியாபித்திருக்கிறது! அது சத்தியம்! அதுவே சத்தியம்! அதுவே உண்மையான உயிர் நண்பனும்.. உற்ற உறவினரும்!" என்று அதே பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சத்ய சாயியாக சற்று கூடுதல் விளக்கமும் தருகிறார்!
கீதையில் உங்களுக்குள் உறைந்திருப்பது நானே என்று விவரித்து விட்டு... எப்படியாக உறைந்திருக்கிறேன் என்பதை கூடுதலாக தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் விளக்குகிறார்!
நீக்கமற நிறைந்திருக்கிறேன் என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.. ஆன்மாவாக நிறைந்திருக்கிறேன் என்கிறார் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்!
(Source : Sri Krishna Sri Sathya Sai | Page : 193 | Author : Dr. J. Suman Babu )
பேராத்மாவின் சிறு துகளே ஜீவாத்மா! பேராத்மா என்கிற பரமாத்மா லட்டு எனில் அதில் ஒட்டி இருக்கிற பூந்தியே ஜீவாத்மா! ஆகவே தான் தன்னிலிருந்து மாயையால் பிரிந்த ஜீவாத்மாவிலும் தானே நிறைந்து எந்த பிறவி முக்திக்கேற்ற பிறவியோ அதில் அந்தந்த ஆன்மாக்களை கடைத்தேற்றுகிறார் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்!
பூமி என்பது விளையாட்டு அரங்கமே! பலவித நிபந்தனைகளோடு விளையாட வேண்டியே ஜீவாத்மா பூமிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது! நிபந்தனைகளை மீறாமல் விளையாடி முடிக்கிற வரை மீண்டும் மீண்டும் அதே விளையாட்டரங்கத்திற்கு அனுப்பப்படுகிறது ஜீவாத்மா!
நிறைய தோற்றுத் தோற்று விளையாடிய ஆன்மா மட்டுமே அலுத்துப் போகிறது! குழந்தைத்தனமான ஆன்மாக்கள் அந்த விளையாட்டிலேயே காலத்தை வீணடிக்கின்றன! ஆக வெற்றி தோல்வி என்பது விளையாட்டில் இல்லை... விளையாட்டை முடித்து விட்டு பத்திரமாகவும் துரிதமாகவும் வீடு (வீடுபேறு) அடைவதிலேயே இருக்கிறது!
ஆகவே விவேகிகளே வாழ்க்கையில் கடைத்தேறுகிறார்கள்...! வெறும் மந்த புத்தி உள்ளவர்கள், சொத்தைப் பெருக்கி, உறவுகளைப் பெருக்கி, பதவி புகழை இறுகப் பிடித்தபடி கர்ம மூட்டைகளை மேன்மேலும் அதிகரித்து மூச்சுத் திணறியபடி மீண்டும் மீண்டும் அந்த மூச்சால் நிரப்பப்பட்டே பூமிக்கு திருப்பி அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக