இந்த உலகத் தோற்றத்திற்கு தாங்களே காரண கர்த்தா என்று பிரகடனப்படுத்தும் இரு அவதாரங்களின் நேரடி வாக்குமூலம் சுவாரஸ்யமாக இதோ...!
அது துவாபர யுகம்! கீதை சொல்வதற்கே அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனரிடம் போர்க்களத்தில் உரையாடுகிறார்! மற்ற அனைவருக்கும் ஒரே ஒரு போர்க்களமே... அர்ஜுனருக்கோ அங்கே இரண்டுப் போர்க்களங்கள், அவரது மனதையும் சேர்த்து...!
ஆகவே அவரை தெளிவுப்படுத்த ஸ்ரீ கிருஷ்ணர் அவருள் ஏற்கனவே உள்பொதிந்திருந்த விழிப்புணர்வை பெரிதாக்குகிறார்! ஆக... ஆன்ம விழிப்புணர்வுக்கான பொக்கிஷமே ஸ்ரீ மத் பகவத் கீதை!
"ஏ அர்ஜுனா! நானே இந்த உலக மேடையின் இயக்குநர்! இதில் அசையும் மற்றும் அசையா பொருட்கள் இருப்பதே என்னுடைய சங்கல்பத்தினால் தான்! இந்த பேரியற்கையே என்னுடைய கைகளில் கட்டுப்பட்டிருக்கிறது... அதில் நானே பன்னெடுங்காலமாக பல்வேறு உயிரினங்களை படைத்துக் கொண்டு வருகிறேன்! என்றுள்ளிருந்தே அவை யாவும் தோன்றுகின்றன... என்னுடைய தெய்வீகப் பேராற்றல் அளப்பரியது! இந்த உலகில் நீ காணும் சக்தி, மகிமை, பன்முகத்தன்மை, மற்ற அனைத்தும் என்னாலேயே சிருஷ்டிக்கப்பட்டது! நீ காண்கிற ஒளிர்மிகு சூரியன், சந்திரன், நெருப்பு யாவும் என் ஒளியையே தான் சிறிதளவு உள்வாங்கி ஒளிர்கிறது! நான் இந்த பூமியில் நுழைந்ததே இந்த உயிரினங்களுக்கு ஆதரவு அளிக்கத்தான்! சந்திரனின் ஒளியாக நானே பலவித செடிகளுக்கும் ஊட்டச்சத்து அளித்து வருகிறேன்! நானே பசியாக பூமியின் உயிரனங்களுக்குள் உயிர் வாழ்கிறேன்.. அப்போதே அவை சாப்பிடும் உணவு நன்றாக ஜீரணமாகிறது! நானே அனைத்து உயிரங்களின் உள்ளும் நிறைந்திருக்கிறேன்! என்னாலேயே ஞாபக சக்தி, பொருட்கள் பற்றிய அறிவு, வாழ்வின் மிகச் சரியான பிரதிபலிப்பு யாவுமே பூமியில் இயங்கி வருகிறது!
(ஆதாரம் : ஸ்ரீ மத் பகவத் கீதையில் பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர்)
அதே ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திலும்...
"இந்த பரந்து விரிந்த உலகை என்னுடைய முழுமையான சங்கல்பத்தினால் நானே உருவாக்கினேன்! அதற்கு முன் வரை எதுவும் என்னைப் பற்றி அறிந்திருக்கவில்லை! என்னுடைய சுய சங்கல்பித்தினாலேயே மலைகள் நிமிர்ந்த, மலர்கள் மலர்ந்தன, நதிகள் நடந்தன, பூமி மேலும் கீழும் சுற்றியது, கடல் அலையோடியது,சூரிய சந்திரன் ஒளிர்ந்தன, பாலைவனம் விரிந்தது, எல்லாமே பன்முகத் தன்மையோடு வடிவெடுத்தன... பிறகு வெவ்வேறு உயிரினங்கள் முதல் பறவை இனம், மிருக இனம், மனித இனம் என உருவானது! பிறகு அவை பேச, கேட்க, நடமாட கற்றுக் கொண்டன... இதில் மனிதனுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தேன்... அதற்கு ஒரே ஒரு காரணம் என்னவெனில் என்னுடைய ஞானத்தையே அவனுக்குள்ளே பொதிந்து வைத்ததனால் தான்!" என்று தெள்ளத் தெளிவாய் மொழிகிறார்!
சற்று உற்று நோக்கினால்.. கீதையும் பாபா வாசகமும் ஒன்றே ஆயினும் சற்று கூடுதல் விளக்கத்தை பாபா அவதாரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார் என்பதே உண்மை! காரணம் துவாபர யுகத்தில் பாதி மந்த மனம் பாதி சுறுசுறுப்பான மனம் பெற்ற மனிதர்களே அதிகம்! ஆனால் கலியுகத்தில் அனைவரும் மந்த புத்தி உள்ளவர்கள்! ஆன்ம ஞான வாசனையை முழுதுமாய் மறந்துவிட்டவர்கள் கலிப் பிறவிகள்! ஆகவே ஸ்ரீ கிருஷ்ணருக்கு இன்னமும் கூடுதலாக விளக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது!
(Source : Sri Krishna Sri Sathya Sai | page no: 193 - 194 | author : Dr j. Suman Babu )
கீதையை நன்றாக படித்து விட்டு பாபா தன்னை கிருஷ்ணராக காட்டிக் கொள்கிறாரா? என்கிற சந்தேகம் எழலாம்! இல்லை - முற்றிலுமாக இல்லை! பாபா சொல்வதையும் கீதையையும் ஒப்புமைப்படுத்திப் பார்த்தால் கீதையில் உள்ளதும்... அதே சமயம் கீதையில் உள்ளவை இன்னமும் விரிவாகவும், ஆழமாகவும் , மிக முக்கியமாக பலவித எளிமை உதாரணங்களோடும் பாபா விளக்கி இருப்பது தான் கூடுதல் ஆன்மீகச் சிறப்பே!
இவை எல்லாம் பாபா இலவசமாக புரிந்தார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்! ஆயிரக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டு "ஆன்ம ஞானம் போதிக்கிறேன் வாருங்கள்!" என்று கிளம்பிய சில வியாபார கூட்டத்தில் ஒருவர் அல்ல பாபா!
காரணம் சாட்சாத் ஸ்ரீ கிருஷ்ணரே பாபா! ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கைச் சம்பவங்களையும் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரின் வாழ்க்கைச் சம்பவங்களையும் ஒப்புமைப்படுத்தினாலே "பாபா யார்?" என்பதை துல்லியமாக உணர்ந்து ஆன்மா வரை அழியாமல் நாம் பதிவு செய்து கொண்டு விடலாம்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக