அறிவுரை வழங்கும் ஆசிரியர்களுக்கு யார் அறிவுரை வழங்குவது? இறைவனே! ஆம் அறிவுக்கு ஞானமே அறிவுரை வழங்கி நல்ல வழியில் ஆற்றுப்படுத்த முடியும்! அத்தகைய ஆற்றுப்படுத்துதலை இறைவன் ஸ்ரீ சத்ய சாயியே கீதோபதேசமாய் புரிகிறார் இதோ...
அன்பார்ந்த ஆசிரியர்களே! கற்றுக் கொடுப்பது என்பது உன்னதமான பணி! அது ஆன்ம விடுதலைக்கான ஆன்ம சாதனை! அது தூய்மையான பேரன்பை விதைக்கச் செய்கிறது, அனைவருடனும் அது பகிரவும் செய்கிறது! ஆசிரியர்களே வருங்கால சந்ததிகளின் தன்னம்பிக்கையையும், தற்சார்பு வாழ்க்கையையும் உறுதி செய்கிறார்கள்! ஆன்ம விழிப்புணர்வு நிலையைக் கூட மாணவர்கள் அடைய ஆசிரியர்களே உதவுகிறார்கள்!
சந்தோஷமான இல்லங்களுக்கும், வளமையான சமுதாயத்திற்கும் , அமைதியான தேசத்திற்கும் ஆசிரியர்களே பொறுப்பாகிறார்கள்! வெறும் அறிவுறுத்துதலோ வழிநடத்துதலோ மட்டுமல்ல ஆசிரியர்கள் உத்வேகப்படுத்துவதிலும் , தங்களை நோக்கி நல்ல விதமாய் கவர்ந்து இழுப்பதிலும் உதாரணமாகத் திகழ்கிறார்கள்! எப்போதும் தங்களது ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்கள் மூலமாகவே குழந்தைகள் தங்களின் பண்பையும், நடத்தையையும், நம்பிக்கையைம் கற்றுக் கொள்கிறார்கள்! ஆகவே ஆசிரியர்கள் எளிமைக்கும், பண்புக்கும், நேர்மைக்கும் , ஒற்றுமைக்கும் சிறந்த ஒரு உதாரணமாகத் திகழ வேண்டும்! அப்போது தான் கல்வி என்கிற கற்றல் மற்றும் கற்பித்தலின் வல்லமை சிறந்த வண்ணம் தழைத்தோங்கும்! அத்தகைய பண்பாசிரியர்களே சத்தியத்திற்கும், பேரன்புக்கும் , பயபக்திக்கும் கலங்கரை விளக்கமாக திகழ்கிறார்கள்! அத்தகைய ஆசிரியர்களின் அறிவு வெளிச்சத்தில் கற்கும் மாணவர்கள் , இல்லங்களில் அன்பொளியை ஏற்றுபவர்களாய்; தைரியம், தன்னம்பிக்கை , ஆனந்தம் இவற்றை முழுவதும் வெளிப்படுத்துபவர்களாய் மாண்பில் மங்காதபடி வாழ்வார்கள்! அந்த கலங்கரை ஜோதி அணையாது ஒளிரட்டும்! அந்த அக விளக்கு மேலும் ஞானத்தோடு பிரகாசிக்கட்டும்!
நல்ல ஆசிரியர்கள் + நல்ல மாணவர்கள் = நல்ல தேசம்!
- ஞானாசிரியர் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி
(Source : Sanathana Sarathi | September: 1986 | Book : Bapu to Baba | Page : 34 | Author : V.K.Narasimhan)
கல்வி என்பது மனதில் நெருடிக் கொண்டிருக்கும் அறியாமை எனும் கல்'லை வி'லக்குவது, கல் + வி = கல்வி! மாணவர்களை அவர்களே கல்வியாளர்களாக மட்டுமின்றி கலைஞர்களாகவும் உருவாக்குகிறார்கள்! அவர்கள் சிற்பிகள்! ஏற்றி விட்டு அழகு பார்க்கும் ஏணிகள்! சிகரம் மீது ஏறி சிகரத்தை விட உயர்வாகத் தெரிவது போல் ஒரு பிரம்மிப்பை ஏற்படுத்தும் பொருப்புகள் (மலைகள்), அத்தகைய ஆசிரியர்கள் எனும் பொருப்புகளுக்கே கூடுதல் பொறுப்புகள் இருக்கின்றன... தனது ஒரு அவதாரத்தில் கீதையையே பகிர்ந்து கீதாசிரியராகத் திகழ்ந்து, கலியுகத்தின் ஒவ்வொரு சாயி அவதாரத்திலும் ஞானாசிரியராக விளங்கும் பேரிறைவன் பாபாவை தவிர வேறு எவரால் அத்தகைய பொறுப்பு மிகுந்த ஆசிரியர்களை மேலும் ஆற்றுப்படுத்தி வழிகாட்ட இயலும்?!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக