ஐந்தொழில் ஆற்றும் இறைவனான இரு அவதாரங்களும் முக்கியமான மூன்று இறைத் தொழிலை எவ்வாறு சிறப்போடு செயல்புரிகின்றன... சுவாரஸ்யமாக இதோ...!
அஹமாத்மா கு³டா³கேஸ² ஸர்வபூ⁴தாஸ²யஸ்தி²த: |
அஹமாதி³ஸ்²ச மத்⁴யம் ச பூ⁴தாநாமந்த ஏவ ச ||
"ஓ அர்ஜுனா! நானே பரமாத்மாவாக எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் நிறைந்திருக்கிறேன்! ஒவ்வொரு ஜீவ ராசிகளுக்கும் படைத்தல் - காத்தல் - அழித்தல் என மூன்று வித சம்பவங்களும் நிகழ்வது என்னால் மட்டுமே என்பதை நீ அறிவாய்!" என்கிறார் பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர்!
மூன்று முக்கிய முத்தொழிலுக்கும் தானே காரணம் என்பதை விளக்கி தெளிவுபடுத்தி அவரவர் கடமைகளை எந்தவித எதிர்பார்ப்பில்லாமலும் செயலாற்றி ஒவ்வொருவரையும் கர்ம யோகிகளாய் உயர்வடையச் செய்வதே பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னதமான உள் நோக்கம்!
(ஆதாரம் : ஸ்ரீமத் பகவத் கீதை - 10:20)
"உங்களுடைய எல்லா வாழ்க்கைக் கடினங்களையும் நான் அறிவேன்! நான் உங்களுக்குள்ளேயே உறைந்து இருப்பதே உங்களைப் பற்றி நான் சகலமும் அறிந்து கொள்வதற்கான காரணம்! இந்த இறை மின்சாரமே உங்கள் அனைவருக்குள்ளும் பாய்ந்து ஆன்ம ஜோதியை பிரகாசிக்கச் செய்கிறது! நானே உங்கள் இதயத்தில் ஒளிரும் மெய்யுணர்வுப் பேரொளி! நானே உங்கள் இதயத்தில் இயங்கி வருகிற ஆன்மீகப் பேருணர்வு!
பா - என்றால் படைத்தல் , க- என்றால் காத்தல் , வான் - என்றால் அழித்தல்! எவர் ஒருவர் இந்த மூன்றையும் செய்கிறாரோ அவரே பகவான்! அந்த பேருண்மையே எனது பெரும் ரகசியம்!" என்று தெள்ளத் தெளிவாய் விளக்குகிறார் பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணராகிய ஸ்ரீ சத்ய சாயி!
பாபாவே படைத்தல் காத்தல் அழித்தலை நிகழ்த்துபவர் என்பதற்கு ஆச்சர்ய சம்பவ உதாரணங்கள் அநேகம்!
அது பிரசாந்தி நிலைய கட்டுமானப் பணிகள் நிகழ்ந்து கொண்டிருக்கிற சமயம்! பாபாவே தனது கையால் அனைவருக்கும் இனிப்புப் பிரசாதம் தருகிறார்! அங்கு வந்திருந்த சர்மா எனும் நபர் அதை வாங்க மறுக்கிறார்! அவருக்கு பாபா இறைவன் என்பதில் எல்லாம் பெரிதாக நம்பிக்கை இல்லை! எல்லாம் அறிந்த எம்பிரான் பாபா அவர் முன் தனது கையை மூடி திறக்கிறார்! அங்கே குழுமிய அனைவரும் பாபா என்ன செய்யப் போகிறார் என்பதையே கவனித்துக் கொண்டிருந்தனர்... பாபா உடனே தனது மூடிய கையை திறக்கிறார்.. ஒரு மணல் பரப்பு அவரது கைகள் தாங்கிக் கொண்டிருக்கிறது...அதில் சிறு சிறு செடிகள் முளை விட்டிருந்தன...கொஞ்ச நேரத்தில் அதை அனைத்தும் மறைந்து போய் பாபா கையிலிருந்து புகையே கிளம்புகிறது...! பிறகு கையை மூடித் திறக்கிறார்... வெற்றுக் கைகளை காட்டுகிறார்.. சர்மா ஆச்சர்யப்படுகிறார்! அவரது கற்பூர புத்தி வேலை செய்கிறது! பாபா சாட்சாத் இறைவனே! தனது படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய இறை முத்தொழிலை சில நொடிகளில் செயல்முறையால் மௌன விளக்கம் அளித்துவிட்டார் என்பதை உணர்ந்து கொண்டவுடன் பாபா வழங்கிக் கொண்டிருந்த இனிப்பை முழு மனதோடு ஏற்றுக் கொண்டு உண்கிறார்! அப்போது அந்த இனிப்புச் சுவையோடு சேர்த்து இறை முத்தொழிலுக்குமான சுவையும் அவரால் ருசிக்கப்படுகிறது!
ஒரு முறை மானுடவியலாளர் (Anthropologist) ஒருவர் பாபாவை காண வருகிறார்! பாபாவால் பொருட்களைத் தான் உருவாக்க முடியும் உயிர்களை அல்ல என்று அவரே ஒரு கற்பனையைச் செய்து கொண்டு வருகிறார்! அவரிடம் எதுவும் பேசாமல் நேராக அவரை நேர்காணல் அறைக்கு அழைத்துச் சென்று.. இயற்கைப் படைப்புகள் பற்றி பாபா பல ரகசியங்கள் பேசுகிறார்! பேராச்சர்யப்படுகிறார் அந்த மானுடவியலாளர்! எதிர்பாரா விதமாக மேலும் ஒரு பேராச்சர்யம் அவருக்கு காத்திருக்கிறது..
பேசிக் கொண்டே திடீரென பாபா தனது வலது கையை உயர்த்திக் கீழ் நோக்கியும், இடது கையை கீழேயே மேல் நோக்கியும் வைக்கிறார்.. அது அப்படியே உயர்த்துகிறார்.. பாபா அப்படியே வலது கையை மேலே இழுக்க இழுக்க ஒரு ஜீவன் உருவாகிறது! வாலே இல்லாத குரங்கு அது! பாபா கையை தூக்கத் துக்க அதுவும் வளர்கிறது! அப்படியே நேர் காணல் அறையில் குதித்துக் குதித்து ஓடுகிறது! பாபா ஒரு சிருஷ்டி வாழைப்பழம் அளிக்கிறார்... அதையும் உண்கிறது! அவரோ அச்சத்தோடு எதிர் நோக்க.. பாபாவோ புன்னகைக்க... மீண்டும் அதனை கைகளில் தாங்கி... பாபா மறையச் செய்திட... அந்த மானுடவியலாளருக்கு பாபாவே முத்தொழிலையும் ஆற்றி வருகிறார் என்பதை அவர் பரவத்தோடு உணர்கிறார்!
அந்தப் பரவசம் குறையாத அந்த மானுடவிடலாளரோ அதனை ஒரு தந்தியாக எழுதி அவரது இல்லாத்தார்க்கு தெரியப்படுத்த... வீட்டில் சேர்வதற்கு முன்னமே அந்த புட்டபர்த்தி தபால் துறை அதிகாரி அதனை வாசித்து ஆச்சரயப்பட்டு.. அவர் மனம் திறந்து அந்தத் தந்தியை பகிர்ந்ததே அந்த நேர்காணல் அறையின் ரகசியம் முதன்முதலில் வெளியே கசிகிறது!
சிவசாயியான பாபா நந்தி வாகனன் மட்டுமல்ல தந்தி வாகனன் என்பதும் இங்கே அதிசயமாய் உணரப்படுகிறது!
(Source : Sri Krishna Sri Sathya Sai | page : 191 - 193 | Author : Dr. J. Suman Babu )
ஓம் ஸ்ரீ சாயி சம்ஹாராய நமஹ என்பது பாபாவின் அழித்தல் தொழிலையே குறிக்கிறது! உயிர்களை அழிப்பது மட்டுமல்ல அறியாமையை அழிப்பது , அகந்தையை அழிப்பது, மனிதரின் தீய குணங்களை அழிப்பதே கலியுகத்தில் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரின் பிரத்யேகமான சம்ஹாரம்! துவாபர யுக விதி வேறு.. கலி விதி வேறு! *கலியில் மிக விரைவிலேயே பெரும்பாலான மனிதனுக்கும் புத்தி பேதளித்து விடுகிறது..! துவாபர யுகத்தில் அப்படி இல்லை! ஆகவே தான் மனித மனதை சம்ஹாரம் செய்வதற்கும், ஆசைகளை துண்டிப்பதன் மூலமாக தர்மத்தை நிலைநாட்டுவதற்கே சாயி அவதாரங்கள்!
ஆக...ஞானத்தைப் படைத்து - தர்மத்தை காக்க - பகைமை உணர்வை அழிப்பதே சாயி அவதாரங்களின் ஒரே நோக்கம்!
பக்தியுடன்
*வைரபாரதி*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக