தலைப்பு

சனி, 30 நவம்பர், 2019

அவருடன் ஒன்றாக இணைய சாயியை சார்ந்து இருங்கள் -ரகுராம் அனுமுலா (Alumni, SSSIHL)

இந்த கட்டுரையில், ஸ்ரீ சத்யசாய் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரான ரகுராம், சாய் மாணவராக தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

இதை தொடங்குவதற்கு முன், எங்கள் அன்பான தாய் சாயிக்கு, எனது மனமார்ந்த அன்பையும் நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன். சுவாமி என் மீதும் எங்கள் குடும்பத்தினர் மீதும் தனது அன்பையும் கருணையையும் பொழிந்த சம்பவங்கள் எண்ணற்றவை. அவர் மிகச் சிறந்த ஆசிரியர். ஆனால் மிகவும் அன்பானவர். சகிப்புத்தன்மை கொண்டவர். அவரது வடிவமைப்புகள் எளிதில் தெரியவோ, கற்பனை செய்யவோ முடியாதவை. சுவாமியின் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் மாசற்ற அம்சம் அவருடைய அன்புதான். அவரது அன்பானது நாம் அனுபவிப்பதற்காகவே அன்றி எந்தவொரு மனிதனின் ஆராய்ச்சி மற்றும் புரிந்து கொள்ளும் முயற்சிக்காக இல்லை. சுவாமி நமக்கு அனுபவங்களை தருவதற்கு ஒரு காரணம் இருக்கும். அவர்மீது நம்முடைய அன்பை வளர்க்கும்படி அவர் அனுபவங்களைத் தருகிறார்.

பகவான் 'சோதனையே என் சுவை' என்கிறார். அவர் நம்மை சோதிப்பதே நாம் பலப்பட்டு அவரை மட்டுமே சார்ந்து இருக்க கற்றுக் கொள்வதற்காகவேதான். அவரது நிறுவனத்தில் நான் ஒரு மாணவராக இருப்பது எனது அதிர்ஷ்டம் என நான் கருதுகிறேன். ஏனென்றால் சுவாமி இந்த நிறுவனங்களை ஒரு பாலமாக பயன்படுத்தி நம் வாழ்க்கையை தெய்வீக அன்பு மற்றும் க்ருபையில் நிறைக்க முடிவு செய்துள்ளார். அவர், அவர் கூறியது போல 'தெய்வீக தேர்'  என்ற 'சாரதி' பாத்திரத்தை ஏற்றுள்ளார். ஆகவே அவருடனான எனது பயணத்தில் அவரது அன்பின்  சில அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சுவாமியை பார்த்த அனைவருமே அவருக்கு பாத நமஸ்காரம் செய்ய ஆசைப்படுகிறார்கள். அவரது எல்லையற்ற அன்பினால் அவர் அந்த சலுகையை எனக்கு பலமுறை வழங்கியுள்ளார். ஆனால் நான் ஒருபோதும் திருப்தி அடையவில்லை. ஒரு கொடைக்கானல் பயணத்தின் போது அவரது கால்களை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மசாஜ்  செய்த புகைப்படங்களை எனக்கு காட்டியபோது 'பாத சேவை' செய்ய வேண்டும் என்ற எனது விருப்பம் அதிகமாக வளர்ந்தது. அந்த வாய்ப்பை எனக்கு வழங்குமாறு சுவாமியிடம் ப்ரார்த்தனை செய்துவிட்டு அதனை மறந்தேவிட்டேன். சில மாதங்களுக்குப் பிறகு ஒரு மாலை வேளையில் சுவாமி தரிசனம் கொடுத்துக்கொண்டு இருக்கும்போது, என் முன்னே வந்ததும் சுவாமி நின்றுவிட்டார். பிறகு தனது இடப்பக்கத்தில் இருப்பவரிடம் ஏதோ பேசினார். நானோ அவரது வலப்பக்கத்தில் இருந்தேன். திடிரென்று பாதசேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் கிளிக் ஆனது. உலகெங்கிலுமுள்ள பக்தர்களால் வணங்கப்படுகின்ற சுவாமியின் தாமரைப் பாதங்களை மெதுவாகவும் மென்மையாகவும் மசாஜ் செய்து ஆசீர்வதிக்கப்பட்ட இந்த சேவையில் என்னை மூழ்கடித்துக் கொண்டேன். இன்னொருமுறை முழு நீளமான சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய ஆசை என்னுள் முளைத்தது. என்னுடைய இந்த ஆசையையும் அவர் நிறைவேற்றினார். இந்த சிந்தனை கூட அவரால் விரும்பப்பட்டது. அவரைத்தொட்டு நேருக்கு நேராக இப்படி ஒரு ஆசை இருக்கிறது என்பதை சொல்லத் தேவையில்லை. அவருக்கு உடல் தொடர்பு தேவையில்லை. சுவாமியின் பாதங்களை என் இதயத்தில் பதித்து அவரது அன்பையும் இரக்கத்தையும் அனுபவிப்பது முக்கியம் என்பதை இந்த அனுபவத்தின் மூலம் புரிந்து கொண்டேன்.


ஸ்ரீ சத்ய சாய் ப்ரைமரி பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிக்கும் போது எனக்கு கடுமையான தொண்டை தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக வழக்கமாக உணவை உண்பது போல் சுலபமாக இல்லாமல் உணவை விழுங்குவது கடினமாகவும் வேதனையாகவும் இருந்தது. இதன் கூடவே எனக்கு அதிகமான காய்ச்சலும் இருந்தது. அதனால் என் தினசரி அட்டவணை பாதிப்புக்குள்ளானது. ஒரு ராத்திரி என் மனதை விட்டு சுவாமியிடம் கதறி அழுதேன். அடுத்த நாள் மதிய வேளையில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்த போதில் சுவாமி பள்ளிக்கு வருகிறார் என்ற செய்தி எனக்குக் கிடைத்தது. திடீரென்று என் உடல்நிலை சரியாகி, நான் பலம் பெற்று சுவாமியை காண கீழே ஓடினேன். சுவாமி தன் வாகனத்தில் என் அருகில் வரும்போது, அமைதியாக என் மனதில் என் இக்கட்டான சூழ்நிலை பற்றி அவரிடம் கூறினேன். 

அவர் என் அருகில் வந்தபின், பாதிக்கப்பட்ட என் தொண்டை பகுதியை சட்டென்று பார்த்துவிட்டு சென்றுவிட்டார். பிறகு எல்லாமே சரியாகிவிட்டது. அவரது அருளின் சிறப்பு மழையில் நான் நன்றியுடன் நனைந்தேன். அடுத்த நாளே தொண்டை தொற்று முற்றிலும் எந்தத் தடையமும் இல்லாமல் மறைந்து விட்டதை உணர்ந்ததில் நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் இந்த கருணைச் செயலின்  பின்னணியில் சுவாமியின் நோக்கம் என்ன? அது நாம் அவரை (சுவாமியை) சார்ந்து இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே. நாம் முழுமையாக நம்புவதற்கு அவர் நித்தியமாக இருந்து அவருடன் மட்டுமே முழு இணைப்பை உறுதி செய்ய விரும்புகிறேன்.

வேத புருஷ சப்த ஞான யாகத்தில் கலந்து கொள்வதற்காக தசரா திருவிழாவின்போது பெரும்பாலான மாணவர்கள் பூர்ண சந்திரா மண்டபத்திற்குள் சென்ற போது, ஆரம்பப் பள்ளியின் சிறு குழந்தைகளாகிய நாங்கள் சாய் குல்வந்த் மண்டபத்தில் அவரது தொடர்புக்காக ஆவலுடன் காத்திருந்ததை நான் மிகவும் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறேன். அவர் மெதுவாகவும், மனதாரவும் எங்களை நோக்கி நடப்பார். பின்பு எங்களை அழைப்பார். செல்லமாக முதுகில் தட்டுவார். சில வார்த்தைகள் பேசுவார். சிறிது நேரம் நிற்பார். இப்படி சிறு குழந்தைகள் அனைவரையும் அவரது கண்களில் மிகுந்த அன்புடன் பார்ப்பார். அவர் கீழே இறங்கியவுடன், தாயை சுற்றி இருக்கும் குழந்தையைப் போல் நாங்கள் அனைவரும் சுவாமியை சுற்றி நிற்போம். அவர் தனது கால்களை பிடித்துக் கொள்ளவும், ரோஜா இதழ்களைப் போன்ற மென்மையான பாதங்களை மசாஜ் செய்யவும் அனுமதிப்பார். அத்தகைய தருணங்களில் அவர் எங்களுக்காக மட்டுமே இருப்பதைப் போல் உணர்ந்தோம். எங்கள் கவனமெல்லாம் அவர்மீது மட்டுமே இருந்தது. ஆழ்ந்த மற்றும் ஆனந்தமான மெளனத்தின் தருணங்கள் அவை. தாமரை மலரின் அமிர்தத்தை சுவைக்கும் வரை தேனீ சப்தமிட்டுக் கொண்டே இருக்கிறது. அதில் உள்ள அமிர்தத்தின் போதை இனிப்புடன் தேனீ தொடர்பு கொண்டபின் தன் சலசலப்பை நிறுத்தி விடுகிறது. இவ்வாறு அவரது இருப்பு தெய்வீக  அமிர்தத்தைக் கொண்ட தாமரையின் இருப்புக்கு சமமானதாகும். தேனீக்களாகிய நாம் அமைதியாக அந்த இனிமையைப் பருகுகிறோம். தாய் வடிவான சாய் தனது அன்பால் நம்மை விளிம்பு வரை நிரப்பும் போது எந்த வார்த்தைகளாலும் அதை விவரிக்க முடியவில்லை. மௌனம் மட்டுமே பேசுகிறது.

Raghuram Anumula
Student (2013-2016), Department of Mathematics and Computer Sciences
Sri Sathya Sai Institute of Higher Learning
Prasanthi Nilayam Campus

ஆதாரம் : Sai Nandana 2015 (90th Birthday Offering)
தமிழாக்கம்: D. காயத்ரி சாய்ராம், காஞ்சிபுரம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக