தலைப்பு

சனி, 10 ஆகஸ்ட், 2024

கடைசி மூச்சிலும் கடவுளை நினைப்பவர்க்கு முக்தி கொடுக்கும் இரு முழுமை அவதாரங்கள்!

எவ்வாறு நமது மரணப் படுக்கையில் இறைவனையே நினைத்துக் கொண்டு மூச்சு விட்டால் இறைவனின் பாதங்களையே அடையும் முக்தியைப் பெறலாம் எனும் பேருண்மையை இரு அவதாரங்களும் அதற்கு செயல் வடிவம் தந்தார்கள் எனும் ஆச்சர்யப் பதிவுகள் சுவாரஸ்யமாக இதோ...!

அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம்
ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஸய:  

போர்க்களத்தில் பேசிய ஞான மொழி! ஏன் போர்க்களத்தில் பேச வேண்டும்? ஓய்வாக இருக்கையில் ஒரு பூந்தோட்டத்தில் ஜிலுஜிலு என இருவரும் காற்று வாங்கிக் கொண்டிருக்கையிலேயே இது நிகழ்ந்திருக்கலாமே! பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் எதையும் காரண காரியமில்லாமல் புரிவதில்லை! போர்க்களத்தில் தான் நின்று கொண்டிருந்தார் அர்ஜுனர்... புறப் போர்க்களத்தை விட அவரை பாடாய் படுத்தியது மனப் போர்க்களமே! ஆகையால் தான் நமது மனப் போர்க்களத்திற்கான மாமருந்தே மாதவன் மொழிந்த மகத்துவ கீதையே!

"யார் ஒருவர் கடவுளின் சிந்தனையிலேயே காலத்தை நகர்த்திகிறார்களோ... அவர்களின் கடைசி நொடிகளில் கூட கடவுள் சிந்தனையோடு ஒன்றி இருக்கிறார்களோ... அவர்களுக்கு நான் என்னுடைய தரிசனத்தை அளிப்பேன்! என்னுடைய சிந்தனையிலேயே யார் யாரெல்லாம் தங்களது இன்னுயிரை விடுகிறார்களோ அவர்களை என்னுடனேயே நான் இணைத்துக் கொள்கிறேன்! அதில் எந்த சந்தேகமும் உனக்கு வேண்டாம்!" என்கிறார் பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர்!


அதைப் போலவே குருஷேத்ர யுத்தத்தில் செஞ்சோற்றுக் கடனால் கௌரவர் பக்கம் இருந்து போர் செய்த பீஷ்மர் அம்புப் படுக்கையில் சாய்கிறார்... அப்படியே 58 நாட்கள் கடந்து போகிறது! மார்கழி மாதம் வருகிறது... ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனக்கு கருணை காட்டி பாதகதி அளிக்க மனதிற்குள் பிரார்த்தனை செய்கிறார் அவர்! 

சரியான அதே சமயம் பீஷ்மரை பார்க்க ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களோடு வர "ஓ தேவதேவா! திரிவிக்ரமா! சங்கசக்ர கதாதாரி! என்னுடைய நமஸ்காரங்களை ஏற்பாய்! நீயே முடிவற்ற இறைவன் ! நான் விடை பெற உன் அருள் வேண்டும்! எனக்கு அனுமதி கொடு! நர நாராயணன் எனும் இருவரில் நீயே நாராயணன் என்பதை நான் உணர்ந்தேன்! வியாசரும், நாரதரும் எனக்கந்த ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டனர்! நீ அகம் திறந்ததால் தான் எனக்கு உன் பாதகதி கிடைக்கும்!" என்கிறார் பீஷ்மர்!

நினைத்த போது மரணிக்கும் அவரே மரணிக்க ஸ்ரீ கிருஷ்ணரின் அருளை வேண்டுகிறார் என்பது ஸ்ரீ கிருஷ்ணர் இறைவனே என்பதை அவர் உணர்ந்ததற்கான உதாரணம்!


அதற்கு பேரிறைவனோ "ஓ பார்திவா! உனக்கு தெரியாது.. உனது இந்த உடம்பு என்ன பாவம் செய்திருக்கிறது என்று... ஆனால் நீயோ சிறந்தவன்! ஆகையால் நான் உனக்கு வரம் அளிக்கிறேன்... நீ என்னை வந்து அடைவாய்! அதற்கான அனுமதியையும் நான் உனக்கு அளிக்கிறேன்! "வசு" என்கிற எனது ரூபத்தை நினைத்துக் கொள்! உனக்கு நானே முக்தி அளிக்கிறேன்!" என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்! அவர் சொல்லிய பிரகாரமே பீஷ்மர் உயிர் பிரிகிறது! ஸ்ரீ கிருஷ்ணரிடமே அவர் ஐக்கியமாகிறார்! அப்பேர்ப்பட்ட பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருக்கும் போது ஸ்ரீ கிருஷ்ணரின் முன்னிலையில் பக்திப்பூர்வமாய் உச்சரித்தது தான் *ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்* என்பது குறிப்பிடத்தக்கது! அதை நாம் அன்றாடம் பாராயணம் செய்ய  இதய அமைதியும் பாதகதியும் அவருக்குக் கிடைத்தது போலவே கிடைக்கும் என்பதில் நாம் துளி கூட சந்தேகப்பட வேண்டியதில்லை! 


(ஆதாரம் : ஸ்ரீ மத் பகவத் கீதை - 8.5 | மகா பாரதம் - அனுசாசனிக பர்வம் | ஸ்ரீ மத் பாகவதம் - 1.217, 225) 


ஆம் அத்தகைய *பேரிறைவனான ஸ்ரீ கிருஷ்ணரே அவரது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் இந்தக் கூற்றை இன்றளவும் செயல்படுத்தி வருகிறார்!* சொல் வட்டத்திலிருந்து விலகிச் செயலாற்ற அவதாரங்கள் மனிதர்கள் இல்லை! சொன்ன சொல்லை அட்சரம் வழுவாமல் அதனை நிறைவேற்றும் சாட்சாத் இறைவனே அவதாரம் என்பதற்கான ஆதார உணர்வுச் சான்றே இவை அனைத்தும்...! 


"குருஷேத்ர போர் 3138 BC யில் 

நடக்கிறது! பீஷ்மர் தனது படைகளோடு 9 நாட்கள் போர் புரிகிறார், பிறகு போரில் அவரோ வீழ்த்தப்பட்டு 58 நாட்கள் அம்புப் படுக்கையில் கிடக்கிறார்! எட்டாவது நிலா நாளில் பரமாத்மாவோடு அவரது ஆத்ம ஜோதி ஐக்கியமானது! அது சுபகிருது வருடத்தில் மார்கழி மாதத்தில் நிகழ்ந்தது! அந்தக் காலகட்டத்தில் இப்போது நாம் ஒப்புமைப்படுத்திப் பார்க்கிற போது அது ஒரு ஏகாதசி நாள் , 11 ஆவது நிலா நாள் என்று கணக்கிடுகிறார்கள், ஆனால் அது முற்றிலும் தவறு! பீஷ்மரின் ஆன்ம ஜோதி கலந்ததோ ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நாளில் தான்! அதுவே புனிதமாக இருக்கும் என்பதால் அந்த நாளையே தேர்ந்தெடுக்கிறார் பீஷ்மர்! ஆம் அன்று அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம்! புனித நாளில் பிறப்பது எவ்வாறு விசேஷமோ அவ்வாறே புனித நாளில் இறப்பதும் அத்தனை விசேஷமே! அதுவே பலருக்கு அடுத்த பிறவிக்கான அஸ்திவாரத்தையும் இடுகிறது!" என்று ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரே பீஷ்மரின் ஐக்கியத்தைத் தெளிவுபடுத்துகிறார்!

இப்படி பாபா தன் பாதம் சேர்த்த புண்ணியாத்மாக்கள் பலர்..


அதில் முதன்மையானவர் யசோதை போன்ற சுப்பம்மா! அப்போது பிரசாந்தி நிலையம் எழுப்பப்படுகிறது! பாபாவோ "இன்னும் ஒருவருடம் நீ உயிர் வாழ்வாய்!" என்கிறார் சுப்பம்மாவை பார்த்து... "கவலைப்படாதே நானே உனக்கு கங்கை நீர் அளித்து என்னோடு உன்னை ஐக்கியப் படுத்திக் கொள்கிறேன்" என்கிறார்! அதற்குள் பாபாவுக்கு பல சேவை- பல பயணம்! நாட்கள் இப்படியே ஓடுகிறது! சுப்பம்மாவோ மரணப் படுக்கையில் பாபாவோ  அன்மீகப் பயணத்தில்... சுப்பம்மா உயிர் அஸ்தமனம் ஆகிறது... இதற்கு மேலும் சாயி ஆதவன் வருவார் என்ற நம்பிக்கையே யாருக்கும் இல்லை! வாக்கு கொடுத்தாரே அது என்னானது.. ? காற்றலைகள் கூட குழம்பின...

சர்ர் என்று கார் குழம்பிய அந்தக் காற்றுக்கு பதில் தந்து கொண்டே விரைகிறது.. பாபா "சுப்பம்மா!" என்கிறார்! அஸ்தமனம் ஆன உயிர் மீண்டும் உதயமாகிறது..‌இமைக் கதவுகள் திறக்க... பாபாவை தரிசிக்க... கண் வழியேவும்.. பாபா அளித்ததில் வாய் வழியேவும் கங்கை கசிகிறது! அப்படியே இறுதியாக இமைக் கதவுகள் சாற்றப்படுகின்றன... சுப்பம்மா எனும் புண்ணியாத்மா பாபா எனும் பரமாத்மாவோடு ஐக்கியமாகிறது!

அது கோடை வகுப்பறையின் (Summer Camp) 11 ஆவது நாள்! பெங்களூர் - வொயிட்ஃபீல்ட் பிருந்தாவனத்தில்  ஈஸ்வராம்பாவும் இருக்கிறார்! ஆன்மீக நிகழ்வுகள் அனைத்திலும் ஒரு சாட்சியாய் அவர் கலந்து கொள்கிறார்! அந்த நாட்களில் ஒரு நாள் அவருக்கு பலத்த காய்ச்சல்... இரவில் பாபா வந்து கவனித்துவிட்டுப் போகிறார்... சற்று பரவாயில்லை என்றபடி ஈஸ்வராம்பா எழ பக்தை பெத்த பொட்டு அம்மாவிடம் பாபா சாட்சாத் இறைவன்! என்கிறார் இறைத்தாய் ஈஸ்வராம்பா! 

இப்போது தான் தங்களுக்கு புரிந்ததா? என்று பெத்த பொட்டு அம்மையார் கேட்க..

காய்ச்சல் பொழுதில் பாபா வந்து செய்த கவனிப்பில்‌... பாபா இறைத்தாய்க்கு ஸ்ரீ ராமச்சந்திர ரூபத்தையும் தரிசனமாக கொடுத்திருக்கிறார்! அதை பரவசத்தோடு இறைத்தாய் பகிர... கனவா? அது பெத்த பொட்டு அம்மையாரின் பெத்த சந்தேகம்! இல்லை கனவே இல்லை.. கண்களை திறந்து சுயநினைவோடு தான் இருந்தேன் என இறைத்தாய் வாக்குமூலம் பகிர...

அதற்கு அடுத்த நாள் ஆரோக்கியத்தோடு மாடிப்படி ஏற... அருகே பெண்ணும் பேத்தியும் இருந்தும்.. அவர்கள் பெயரை அழைக்காமல் "சுவாமி சுவாமி!" என்று அழைக்க... "வருகிறேன் வருகிறேன்!" என்று பாபா அடுத்த நொடியே குரல் எழுப்ப...

பிரபஞ்ச இறைவனையே வயிற்றில் சுமந்த அந்த பாசத்தாய் தனது சுவாசத்தை பாபாவின் பாதங்களில் ஐக்கியப் படுத்துகிறார்!

அழைத்த குரலுக்கு கஜேந்திரனுக்காக அப்போதும்... அழைத்த குரலுக்கு கிரக அம்மாயிக்காக இப்போதும் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரே பாதகதி வழங்குகிறார்!


இப்படி ஏராளமான உதாரணங்கள்... 

அது திவகர்ல வெங்கடவதனி, தெலுங்குப் பேராசிரியர் அவர்.. அவருக்கோ சிறுநீர்த் தொந்தரவு...பாபா அவருக்கு இளநீர் அனுப்புகிறார்.. ஆனால் ஒரு பாதியையே  அருந்துகிறார்! பிறகு 7 வருடம் கடந்து சரியாகிறது!  அப்போதே முழுதாய் குடித்திருக்க வேண்டும் என்பதை அவர் உணர்கிறார்! ஆனாலும் மீண்டும் அதே தொந்தரவு! பாபாவையே தனக்கு அறுவை சிகிச்சை செய்யச் சொல்ல.. பாபா மௌனம் சாதிக்கிறார்! பிறகு "வலி இல்லா மரணம் வேண்டும்!" என்று பாபாவிடம் கேட்க... அறுவை சிகிச்சையை மேற்கொள்ள சொல்கிறார் பாபா! அவருக்கோ பாபா சொன்னது புரியவில்லை... ஆனால் அவர் அறுவை சிகிச்சைக்காக கோமா நிலையில் உணர்வற்று இருக்கிற போதே உயிர் வலியின்றி பிரிகிறது! பாபாவிடமான அவரது பிரார்த்தனையும் நிறைவேறுகிறது! 


"ஒரு பறவை கிளையில் அமர்ந்திருக்கிறது! அது அமர்ந்திருக்கும் கிளையை வெட்டினால் அதுவும் வீழ்ந்து போகுமா? இல்லை! அது போல் தான் மனிதனுக்கு ஏற்படுகிற மரணமும்" என்கிறார் பாபா! 

புரோகிதர் சேஷகிரி ராவுக்கும் அதே விதமான மனநிலை! மரணிக்க வேண்டும் என்பதே... அப்படியே படுத்துக் கொள்கிறார்... மரண உணர்வு பீறிட்டு எழுகிறது! அங்கு வந்த பாபா "என்ன இது! டிக்கட் இல்லாமல் பயணிக்க முடியுமா? நான் இன்னும் உனக்கு டிக்கட் வழங்கவில்லை... பயணிக்க அனுமதியும் தரவில்லை! எழுந்திரு!" என்கிறார். அவரும் எழுந்து விடுகிறார்! ஆறு மாதம் ஓடுகிறது! அவர் உடல்நிலை சீர் குலைகிறது! மிகுந்த வலியால் அவதிப்படுகிறார்! அதை காண சகிக்காத ஒரு பக்தர் "சுவாமி! அவர் கேட்கும் போதே அவருக்கு மரணத்தை நீங்கள் வழங்கி இருக்கலாம்! இப்போது அவரோ தாளாத வலியையே அனுபவிக்கிறாரே!" என்று  ஆதங்கப்படுகிற போது

"உனக்கு எதுவும் தெரியாது! அது என் சங்கல்பமே!  அப்போதே மரணத்தைக் கொடுத்திருந்தால் அவனது பூர்வ கர்மாவை யார் அனுபவிப்பது? அவனுக்கு இது தான் கடைசிப் பிறவி! பிறகு என்னோடே ஐக்கியமாகிவிடுவான்! ஆகவே மிச்சம் மீதி ஏதுமின்றி கர்மாவை அவன் இப்போது அனுபவிக்கிறான்!" என்று பாபா தெளிவுப்படுத்துகிறார்!

பிறகு, சேஷகிரி ராவின் அருகே வந்து அவர் பெயரை பாபா அழைக்க.. அவரும் கண்களை திறக்க.. பாபாவே தன் கையால் பாலை ஸ்பூனில் அளிக்க.. "இப்போது நீ என்னோடு ஐக்கியமாகலாம்!" என்று தனது அமுத அதரத்தால் பாபா அனுமதி மொழிய.. அப்படியே அவரது உயிர் பாபாவின் பாதங்களில் ஐக்கியமாகிறது! 

நதி வளைந்து வளைந்து அலைந்து அலைந்து கடைசியில் கடலில் கலந்து போவதற்குச் சமமானது பாபாவிடம் நாம் கலந்து போவதற்கான நமது இந்த வாழ்க்கை!


"தலை எழுத்தை மாற்ற முடியாது என்று பலர் கூறுகிறார்கள்! விதியை அனுபவித்தே ஆக வேண்டும் என்கிறார்கள்! அது முற்றிலும் தவறு! *கடவுளின் அருள் இருந்தால் நீங்கள் எந்தவிதமான வலியையும் அனுபவிக்காமல் உங்களின் கடந்த கால கர்மாவை எளிதாக தாண்டலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்!* எப்படி அறுவை சிகிச்சையின் போது டாக்டர்கள் மயக்க மருந்து கொடுத்து உணர்ச்சி இழக்கச் செய்கிறார்களோ, அப்படி இறைவன் உங்களது வலி வேதனையை தனது கருணை அருளால் அகற்றி கடந்த கால கர்மாவை கடக்கச் செய்கிறார்! ஆகவே *கடவுளை மறக்காதீர்கள்! கடவுள் வகுத்த வாழ்வை வாழுங்கள்! கடவுளின் அருளுக்கு பாத்திரமாகும்படியான நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்!"* என்கிறார் கடவுள் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்!


(Source : Sri Krishna Sri Sathya Sai | page : 183 - 191 | Author : Dr. J. Suman Babu) 


பாபாவை நினைக்காமல் இந்த உலகத்தை நினைப்பதற்கு அப்படி என்ன உருப்படியான நிகழ்வு இந்த உலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது? பாபாவை இறுகப் பிடிக்காமல் உறவுகளைப் போய் இறுகப் பிடிப்பதற்கு அப்படி என்ன அந்த உறவில் ஆழம் இருக்கிறது? கானல் நீரும் கங்கை நீரும் ஒன்றா? கானலால் நமது ஆன்ம தாகம் தீர்ந்தது விடுமா? 

*உலகம் எனும் சர்க்கஸ் நிகழ்விலும், உறவு எனும் சந்தையிலும் ஒரு கர்ம யோகியாகவே நாம் திகழ்ந்து வந்தால் எந்த மரணத் துயரும் இல்லை!*

*பலாப்பழத்தை எண்ணெய் தடவி அறுப்பதைப் போல்.. பூமியை நமது பற்றின்மையாலேயே அறுத்தெறிய வேண்டும்!*


  பக்தியுடன் 

*வைரபாரதி*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக