தலைப்பு

சனி, 27 ஏப்ரல், 2024

இரு அவதாரங்கள் வெளிப்படுத்திய சிவ அம்சங்கள்!

ஸ்ரீ கிருஷ்ணர் விஷ்ணு அவதாரம் தானே.. எப்படி அவர் சிவனின் அம்சமாகிறார்? பாபாவும் ஸ்ரீ கிருஷ்ணர் என்கிற போது அவரும் சிவமா? எப்படி? ஆச்சர்யப்படும்படியான ஆதாரப் பூர்வமான பதிவுகள் சுவாரஸ்ய சுருக்கமாக இதோ..!


அது துவாபர யுகம்! பிரேமையே சேவைக்கரமாகக் கொண்டிருக்கும் பாரதத்தின் அளப்பரிய தியாக ஜோதி வீர அபிமன்யுவை சைந்தவன் சூழ்ச்சியால் பத்ம வியூகம் அமைத்து வதம் செய்கிறான்! கௌரவர்கள் என்பவர்கள் சூழ்ச்சிகளின் ஒட்டுமொத்த சுயரூபங்கள்! ராஜ உடை அணிந்த நரிகள்! வஞ்சகமே தனது நெஞ்சகத்தில் வலி காணும் நய வஞ்சகர்கள்! ஆகவே தான் ஸ்ரீ கிருஷ்ணர் அந்த சூழ்ச்சிகளை எல்லாம் முறியடிக்க பாணடவர்கள் எனும் பத்து கண்களுக்கு ஒற்றை இமையாக இருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்! போரில் மாண்ட மரணமிலா பெருவாழ்வு கண்ட அபிமன்யுவுக்கு விழுந்த சதிவலை எண்ணி அர்ஜுனர் சைந்தனை கொன்றே தீர்வது எனும் தீர்க்கமான ஓர் முடிவுக்கு வருகிறார்! ஆனால் ஸ்ரீ கிருஷ்ணனோ ஆற்றுப்படுத்துகிறார்! எடுத்தோம் கவிழ்த்தோம் என்பது கடவுள் செயல் இல்லை ஆகையால் அவனைக் கொல்வது அத்தனை எளிது இல்லை என்று ஒரு ரகசிய சூட்சுமம் சொல்லித் தருகிறார் ஸ்ரீ கிருஷ்ணர்! அது தான் பசுபதாஸ்திரம்! அது வரமாக கிடைக்கப் பெற்றால் தான் அந்தக் கொடிய தந்திர அரசனான சைந்தவனை அழிக்க முடியும்!

ஆகவே ஸ்ரீகிருஷ்ணர் தனது அப்த நண்பரான அர்ஜுனரை பசுபதாஸ்திரம் பெற அழைத்துச் செல்கிறார்! அந்த அஸ்திரம் யாரிடம் இருக்கிறது? பசுபதாஸ்திரம் பசுபதியிடம் இருக்கிறது! பசுபதி எங்கே இருக்கிறார்? இமாலயத்தில்...! இமாலயப் பகுதியில் எங்கே இருக்கிறார்? கைலாசத்தில்!

வழக்கம் போல் அர்ஜுனர் தனது ஸ்ரீ கிருஷ்ணரை மலர்களால் அர்ச்சனை செய்து... சந்தனக் குழம்பால் கன்னம், கை , பாதங்களைத் தடவி பிறகு அவரை வழிபட்டு அவருடனேயே செல்கிறார்!

அது கைலாயம்! அர்ஜுனரின் புத்ர சோக இதய உஷ்ணத்தை அந்த தெய்வீகக் குளிர் கொஞ்சம் தணிக்கிறது! முகத்தில் அடிக்கும் பனிக்காற்று கண்ணீரால் முக்கி எடுத்த அவரது ஈரக்கண்களை கொஞ்சம் காய வைக்கிறது! ஸ்ரீ கிருஷ்ணரோடு கைலாயம் செல்வது என்பது மழையில் நனைந்து கொண்டே ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல்... அப்படி ஒரு ஆன்ம குளிராக இருந்தது அர்ஜுனருக்கு...! அதே பரவசத்திற்கு மேலும் பரவசம் சேர்க்கும் வண்ணம் சிவ தரிசனம் பெறுகிறார் அர்ஜுனர்! சிவனை நேருக்கு நேர் தரிசிக்கிற போது இரட்டிப்பு சிலிர்ப்பாகிறது! 

ஏன்? எந்த மலர்களால் ஸ்ரீ கிருஷ்ணரை அவர் அர்ச்சித்தாரோ அதே மலர்கள்... அதே விதமாக அவர் மேனியை அலங்கரித்துக் கொண்டிருந்தது...எந்தப் பூமாலையை ஸ்ரீ கிருஷ்ணருக்கு சூட்டினாரோ அதே பூமாலை! அதே சந்தனக் குழம்பு, தடவிய அதே அர்ஜுனரின் விரல் தடம் உட்பட... அதே அட்சதையும் கூட.. பிரம்மித்துப் போய் ... ஸ்ரீ கிருஷ்ணரும் ஸ்ரீ சிவனும் வேறு வேறல்ல என்பதை முதன்முதலாக உணர்ந்து கொள்கிறார் அர்ஜுனர்!

 "நான் பாரதப் போரில் யுத்தம் புரிகிற போது ஒரு நெருப்பு உருவம் தரையிலேயே பாதம் படாமல் என் போர் சமயத்தில் உதவி புரிந்ததே அது யார்?" என்று கேட்கிறார் அர்ஜுனர்.. "அது வேறு யாருமல்ல.. அது சாட்சாத் சிவனே!" என்கிறார் வேத வியாசர்!

"ஓ பரப்பிரம்மமே! நீ உனது ஆகாய வாயால் ஒட்டு மொத்த உலகத்தையே விழுங்குகிறாயே! உனது நாவினை நீ எல்லா திசையிலும் கூர்மையோடு திருப்புகிறாயே! இதை கண்டு நான் அச்சத்தோடு திகைப்புறுகிறேன்!" என்று அர்ஜுனர் ஸ்ரீ கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம் கண்டு கைக்கூப்பி பேசிய மொழிகள் இவை...! அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் "நான் எமன்! உலகத்தின் ஒட்டு மொத்த அழிவுகளின் ஆணி வேராகத் திகழ்பவன்! நானே எதிரிப் படைகளை இதற்கு முன்பும் வீழ்த்தினேன்! ஆகவே நீ என்னுடைய வெறும் கருவி தான் என்பதை மட்டும் ஒரு போதும் மறந்துவிடாதே!" என்று ஸ்ரீ கிருஷ்ணர் அழிவைக் குறித்துப் பேசுகிறார்! அழிக்கும் கடவுள் சிவனாகிய ருத்ரனும் ஸ்ரீ கிருஷ்ணரும் ஒருவரே எனும் மெய்மைத்துவத்தை அர்ஜுனர் இன்னமும் ஆழமாக உணர்ந்து கொள்கிறார்! உடல் சிலிர்க்கிறது! போர்க்கள காற்றலைகள் சிவ உடுக்கை சப்தம் போல் ரீங்கரிக்கின்றன! அதர்ம அழிவிற்கு தான் வெறும் கருவியே என்பதை உணர்ந்து ஆன்ம சமாதானம் அடைகிறார் அர்ஜுனர்!

(ஆதாரம் : மகாபாரதம் - துரோண பர்வம் | ஸ்ரீமத் பகவத் கீதை - 11-32)


அதே போல் ஸ்ரீ கிருஷ்ணர் தானே சிவ அம்சம் என்று தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திலும் சாட்சி பூர்வமாய் நிரூபித்திருக்கிறார்! 

அது பாபாவின் பௌதீக இளமைக் காலம்...! பாபாவே தானும் சிவனும் வேறு வேறு அல்ல என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்! வெறும் வார்த்தையால் மட்டுமா? அதுதான் இல்லை! அதற்கான பேரனுபவங்களையே கடல் கடலாய் வழங்கி இருக்கிறார்! வழங்கியும் வருகிறார்!

     ராமராஜு எனும் ஹோஸ்பெட் முனிசிபாலிட்டி தலைவர் பாபாவை சர்வ மரியாதையோடு அப்போது நடத்தி இருக்கிறார்! பாபாவின் பௌதீக அண்ணன் சேஷம ராஜுவுக்கு பாபா மேல் இருந்த அடிப்படை சந்தேகத்தையும் தீர்க்கிற தருணம் இதோ நெருங்குகிறது! 

ஒரு மாறுதலுக்காக பாபாவோடு சேஷம ராஜு தம்பதிகள் ஹோஸ்பெட் வந்து அங்கிருந்து  ராமராஜுவோடு சேர்ந்து ஹம்பி எனும் ஊருக்கு செல்கிறார்கள்! அது விஜயநகரப் பகுதியில் இருக்கும் ஒரு பண்டைய நகரம்! பழம்பெரும் அரண்மனை, கோவில் போன்றவற்றை தரிசிக்கிறார்கள்! கணபதி, நரசிம்மர் போன்ற தெய்வச் சிலைகளை கண்டு ஆனந்தப்படுகிறார்கள்! இறுதியாக அவர்கள் விருபாக்ஷா கோவிலுக்கு வருகிறார்கள்! அது சிவ ஸ்தலம்! அது அக்டோபர் 19,1947... சத்யம் (பாபாவின் இளமைக் காலப் பெயர்) அந்தக் கோவிலைப் பற்றி "தெய்வத்துவமான கோவில்!" என்கிறார்! ஆனால் சத்யம் கோவிலின் வெளியேவே நின்று விடுகிறார்.. அவர்கள் அழைத்தும் அவர்  செல்லவில்லை... உள்ளே செல்கிறார்கள் மற்றவர்கள்.. அது ருத்ர அதிர்வலைகள் நிரம்பி வழிகின்ற சிவ சன்னதி! அர்ச்சகர் சிவனுக்கு பூ அர்ச்சிக்கிறார்... சேஷம ராஜு, ராம ராஜுவோடு அங்கே உள்ளே தரிசிக்க‌... அர்ச்சனைப் பூக்கள் எல்லாம் சிவலிங்கத்தின் மேல் விழாமல் சத்யாவின் மேலே விழுகிறது! உள்ளே சிவ லிங்கத்திற்குப் பதிலாக பாபாவே அவர்களுக்கு காட்சி தர... 

சேஷமராஜுவோ திகைக்கிறார்.. குழம்புகிறார்.. கண்களைக் கசக்கி மீண்டும் பார்க்கிறார்.. வேர்க்கிறது! ஒரு வேளை சத்யா தான் தவறாக சன்னதிக்குள் வந்திருப்பானோ ? என சந்தேகப்பட்டு வாசலுக்கு ஓடுகிறார் சேஷமர்.. பாபா எங்கே நின்றாரோ அங்கேயே மர்மப் புன்னகை சிந்தியபடி நின்று கொண்டிருக்கிறார்!

இது போல் புட்டபர்த்தி ஹனுமான் கோவிலுக்குள் அழைத்துச் சென்ற  நண்பர்கள் கோவில் சன்னதியை வலம் வர அழைத்த போதும் பாபா செல்லவில்லை.. உள்ளே இருப்பவர் தன்னை தடுக்கிறார் என்கிறார்! ஒரு பெருங்குரங்கு வேறு கிளையில் இருந்து குதித்து பாபாவின் கைகளைப் பிடித்து இழுக்கிறது! 

உண்மை தான் ! ஆஞ்சநேயர் தான் ராமரை சுற்ற வேண்டும்.. ராமரே ஏன் ஆஞ்சநேயரை சுற்ற வேண்டும்?! ஸ்ரீ ராமரும் சிவ அம்சம் என்பது இங்கே நினைவில் குறிப்பிடப்பட வேண்டியது! 

    

அது பாபாவின் அவதாரத் திருநாள்! ஈஸ்வரன்னை பூந்திக் கொட்டைகளை அரைத்து எண்ணெயில் சேர்த்து பாபாவின் தலையில் தடவி விட எத்தனிக்கிறார்.. அந்த சமயத்தில் உறவினர் வெங்கடராமராஜுவும் அதைச் செய்திட முன் வருகிறார்!

"நீங்கள் அதை அவன் தலையில் ஊற்றுங்கள்.. நான் நன்றாக அவனின் தலை முடியைச் சிலுப்பி விடுகிறேன்!" என்றதும்...

பாபா உடனே "என் தலையிலேயே கங்கை இருக்கும் போது.. இதெல்லாம் எதற்கு?" என்று கேட்கிறார்!

அதிர்ந்து போன அந்த உறவினர் "என்ன கங்கையா? எங்கே காட்டு!" என்று திகைப்புடன் கேட்க..

"இதோ நன்றாக உற்றுப் பாருங்கள்!" என்று தலையைக் காட்ட.. தலைக்குள் ஓர் மர்ம முகம் தோன்றி அதன் வாயிலிருந்து கங்கை நீர் பீய்ச்சி அடிக்க... அது இறைத் தாய் ஈஸ்வராம்பா மற்றும் அந்த உறவினரும் அதில் நனைந்து பேரானந்தத்தை அனுபவிக்கின்றனர்! 

பாபாவுக்கு அன்று சாதாரண குளியல் தான் ஆனால் அவர்கள் இருவருக்குமே பாபாவால் அன்று அசாதாரண குளியலே சம்பவிக்கிறது!

அது 1947. சிவராத்ரி வைபவம்! பாபா ஆத்ம லிங்கத்தை தனது  அதரத்திலிருந்து உதிரத்தில் கலந்த ஆத்ம லிங்கத்தை உற்பத்தி செய்கிறார்! 

"இதுவே மகரிஷி கபிலர் வேதத்தில் விவரித்த ஆத்ம லிங்கம்! இந்த ஆத்ம லிங்கத்தை தரிசிக்க நீங்கள் மிகவும் புண்ணியம் செய்திருக்கிறீர்கள்! ஆம்! இதனை உளமாற தரிசித்த அனைவருக்கும் மறுபிறவி என்பதே இல்லை!" என்கிறார் பாபா!

   அது 1963. குருபூர்ணிமை நெருங்குகிறது! பாபாவுக்கு ஒரு பக்கம் பக்கவாதம் என பேசிக் கொள்கிறார்கள்! தரிசனம் இல்லை எனவும் பக்தர்களின் தலையில் இடிவிழுகிறது! மனிதரின் பேதத்தை, லௌகீகப் பிடிவாதத்தை , கர்ம சாபத்தை, அகந்தை மூர்க்கத்தை  நீக்க வந்த இறைவனுக்கே வாதமா? இது நியாயமா? குமுறினர்...! பிறகு பாபா ஒரு கையால் சிருஷ்டி கங்கை நீர் தெளித்து தன்னை சரிப்படுத்திக் கொள்கிறார் குருபூர்ணிமா அன்று! அன்றே "கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்: எனும் மந்திரத்திற்கு ஏற்ப ... முதன்முதலாக தனது இறை நிலை விளக்கம் அளிக்கிறார்! தான் ஒரு பாதி சிவம் ஒரு பாதி சக்தி அம்சம்! பரத்வாஜ மகரிஷிக்கு கொடுத்த வரத்தால் ஷிர்டியில் சிவனாகவும், புட்டபர்த்தியில் சிவசக்தியாகவும், அடுத்த இறுதி உச்சக்கட்ட அவதாரமாகிய ஸ்ரீ பிரேம சாயி சக்தியாகவும் அவதரித்து / அவதரிக்க உள்ளதையும் உள்ளது உள்ளபடி மிகத் தெளிவாகப் பகிர்ந்து பக்தரகளைப் பரவசப்படுத்துகிறார்!

ஒரு வெளிநாட்டு பக்தர்.. பெரிய ஜான் என அழைக்கப்படுகிறார்...விலை உயர்ந்த கேமரா கொண்டு வந்ததில் ஒரே ஒரு புகைப்படம் எடுக்க அனுமதிக்குமாறு பாபாவிடம் அவர் பிரார்த்தனை செய்ய.. முதலில் "காத்திரு காத்திரு!" என்று தெரிவித்து தாமதப்படுத்திய பாபா! பிறகு பூர்ண சந்திர அரங்கில் நடந்து வந்து .. ஜானை நெருங்கி.. "இப்போது எடு!" என்று பாபாவும் அனுமதி தர... ஃபோட்டோ நெகட்டிவை கழுவிப் பார்க்கிற போது அவரது கண்களை ஆனந்தக் கண்ணீர் கழுவிக் கொண்டிருக்கிறது... 

அந்தப் புகைப்படத்தில் பாபாவின் நெற்றிக் கண்ணை பார்த்து பேராச்சர்யமோ அவரை அப்போது தழுவிக் கொண்டிருக்கிறது!


ஒருமுறை சேவைத்திலகம் கஸ்தூரி வாரணாசி (காசி) செல்ல.. சிவ லிங்கம் இருக்கும் இடத்தில் அடர்ந்த கேசம், பாபாவின் முகம் அப்படியே அபயக் கரம் நீட்டுகிறது! தானே சிவ அம்சம் என்பதையும் அது காட்டுகிறது!

அந்த அனுபவத்தை பாபாவுக்கு அவர் கடிதம் எழுத... 

"எனது பெயர் எனது ரூபத்தோடு வேறுபட்டதல்ல... முழு இதய சுத்தியோடு எனது பெயரை அழைத்தாலோ, தொடர்ந்து ஜபித்தாலோ எனது உருவம் உனது முன்னர் தோன்றும்! ஆகவே எதற்காக இதனை கடிதமாக நீ எழுதுகிறாய்? நான் தான் உனக்கு நேரடியாக தரிசனம் தந்து கொண்டிருக்கிறேனே! எங்கெல்லாம் எனது நாமம் உச்சரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் எனது தெய்வீகப் பேரருப்பு நீக்கமற குடிகொள்ளும்!" என்று ஆன்மீக ரகசியத்தை அவருக்கு பதில் கடிதமாக எழுதுகிறார் பாபா!

(Source : Sri Krishna Sri Sathya Sai | Page : 162 - 168 | Author : Dr. J. Suman Babu) 

சோம முகமும் சூர்ய நேத்திரமும் கொண்டவர் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்! ஆகவே தான் *சோமநாத லிங்கத்திற்கு பாபா புத்துயிர் அளித்தார்! ஜோதி வடிவ அண்ணாமலை என்கிறோம்.. ஆகவே தான் பாபா நாம் கடைத்தேற்ற ஜோதிர் தியானம் அளித்தார்! சிவன் ஒரு ஆன்மக் கனல்! அந்த சிவமாகிய பாபாவை நாம் நமது அன்றாட தியானத்தில் அனுபவிக்கலாம்! சிவனும் தனது பக்தைக்காக பிட்டைத் தின்று பிரம்படி பட்டார்.. பாபாவும் தனது பக்தர்க்கு நேர வேண்டிய பாம்புக்கடியை தானே ஏற்றார்! சிவனோ ஒரே ஒருமுறை ஆனால் சிவ (சக்தி) அம்சமாகிய பாபாவோ பலமுறை வஞ்சகர்களால்  விஷம் அருந்தி இருக்கிறார்! விஷப் பாம்புகளையே ஆபரணமாக அணிந்தவருக்கு விஷம் எப்படி வேலை செய்யும்?

  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக