தலைப்பு

வியாழன், 4 ஏப்ரல், 2024

ஸ்ரீ சத்ய சாயிபாபா ~ என் வாழ்க்கையின் ஒளி - லெப்டினன்ட் ஜெனரல் S.P. மல்ஹோத்ரா P.V.S.M. (Retd)

லெப்டினன்ட் ஜெனரல் S.P. மல்ஹோத்ரா P.V.S.M. (Retd) அவர்களுக்கு பாபாவை பற்றி எப்படி தெரிய வருகிறது என்பது பற்றியும், இவரது வாழ்க்கை முறைகளை சுவாமி எவ்வாறு மேம்படுத்துகிறார், வேண்டுகோள்களை ஏற்கிறார், நெருக்கடியான சமயங்களில் சுவாமி எவ்வாறு அருள் பாலிக்கிறார் என்பதை குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். இறைவனுடனான அவருடைய அனுபவங்களில் சில.... 


Lt. Gen. Malhotra and Smt. Prem Malhotra with Sri Sathya Sai at Srinagar, 1980

எங்களுக்கு பாபா உடனான முதல் சந்திப்பு 1974 ம்  ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் ஊட்டிக்கு சென்றிருந்த சமயத்தில் ஏற்பட்டது.   அந்த நேரத்தில், நான் தமிழ்நாட்டின் வெலிங்டனில் (நீலகிரியில்) பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் தலைமை பொறுப்பில் இருந்தேன். முந்தைய நாள் பாபாவின் தரிசனத்திற்காகச் சென்றிருந்த எனது குழுவின் பணி அதிகாரியான பிரிகேடியர் தீட்சித் அவர்களிடமிருந்து பாபாவின் வருகையைப் பற்றி அறிந்தேன். அதுவரை ஸ்வாமியைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. பாபாவின் அற்புதங்களைப் பற்றி கேள்விப்பட்டவுடன், அவரைப் பார்க்க வேண்டும் என்ற எங்கள் ஆர்வத்தைத் தூண்டியது, அடுத்த நாள் அவரை தரிசனம் செய்தோம். அவர் தெய்வீக தன்மையை உணர்ந்து மிக்க மன மகிழ்ச்சியுடன் திரும்பினோம். மறுநாள் காலை பாபா வெலிங்டனுக்கு வருகை தருவதாக தெரிந்து கொண்டதும், அவரை  எங்கள் கல்லூரி கோயிலுக்கு வந்து  பணியாளர்களையும் மாணவர்களையும் ஆசிர்வதிக்குமாறு கேட்டுக் கொண்டேன். பாபா மிகவும் அன்புடன் எனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். எங்கள் இடத்திற்கு சுவாமி வருகை தந்ததால் நாங்கள் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தோம்.


அன்றைய தினம் பாபா பெங்களூர் செல்கிறார் என்று நாங்கள் தெரிந்து கொண்டதும் அவரை இன்னொரு முறை தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கமா என்று முயற்சி செய்து பார்த்தோம். அதிர்ஷ்டவசமாக பாபா இன்னும் புறப்படவில்லை. அவர் எங்களை மிகவும் அன்புடன் நேர்காணலுக்கு அழைத்தார். அவர் அன்பும் கருணையும் கொண்டவராக இருந்தார், அந்த நொடியே நாங்கள் அவரிடம் ஈர்க்கப்பட்டோம். பாபாவின்  உன்னதத்தையும், அன்பின் ஒளியையும் உணரும் எனது  பயணம் தொடங்கியது. அவர் என் வாழ்க்கையின் போக்கை மாற்றினார். நான் கடவுளை நம்பினேன், ஆனால் வழக்கமான முறையில் ஒரு மதவாதி போல அல்ல. சுவாமியுடனான எனது தொடர்பு என்னை கடவுளின் உண்மையான அர்த்தத்தை  நோக்கிச் செல்ல வைத்தது. அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் பாபாவை "இரண்டு காலில் நடக்கும் அன்பு" என்று வருணித்தார். நடப்பது, உட்கார்ந்திருப்பது, பேசுவது, அமைதியாக இருப்பது என பாபா, எல்லா நேரத்திலும், எல்லா இடங்களிலும், எல்லோரிடமும் அன்பாக இருக்கிறார். அவருடைய தரிசனம் மட்டுமே பலரை நல்ல மன மாற்றமடைய வைத்துள்ளது.


சில மாதங்களுக்குப் பிறகு 1975 இல் நானும் என் மனைவியும் புட்டபர்த்தி ஆசிரமத்திற்கு சிவராத்திரி அன்று சென்றிருந்தோம். சிவராத்திரி அனுபவம் பிரமிக்க வைத்தது. பாபாவுடனான உரையாடல் எனக்கு தேவலோக அனுபவமாக இருந்தது.


Lt.Gen. Malhotra (centre) and his Indian Army colleagues with Sri Sathya Sai in Kashmir

முப்பது வருடங்களாக புட்டபர்த்திக்கு அடிக்கடி சென்று வருகிறோம். அவரது அன்பு தனித்துவமானது. அனைவருக்கும் ஒரே மாதிரியான அன்பை பொழிபவர். அதனை முழுமையாக புரிந்துகொள்வது மிகவும் கடினம்.  ஸ்வாமி எங்கள் பிரார்த்தனைகளைக் கேட்டு, காஷ்மீருக்கு வந்தது பெரிய வரம். இது காஷ்மீர் மக்களுக்கும் குறிப்பாக அவரது பக்தர்களுக்கும் உண்மையான வரப்பிரசாதமாக இருந்தது. அவர் தங்கியிருந்த காலத்தில், சாதி, மத வேறுபாடின்றி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீநகருக்குள் நுழையும் போது, ‘பூமியில் சொர்க்கம் என்று ஒன்று இருந்தால், அது இங்கே தான் இருக்கிறது’ என்று பெரிதாக எழுதப்பட்டிருக்கும். பாபா அங்கு இரண்டு வாரங்கள் தங்கிய சமயத்தில் இது நிஜமானது. அவர் தந்தை, தாய், நண்பர், குரு என அனைத்துமாக  இருக்கிறார். நமது கடந்த பிறவிகளின் பெரும் நல்ல கர்மங்களே பகவானை நமது  இல்லத்திற்கு கொண்டு வந்திருக்க வேண்டும்.


நெருக்கடியான தருணங்களில் எல்லாம் பாபா பெரும் பக்க பலமாக இருக்கிறார். எங்கள் மகன் 1978-ல் பயங்கர ஸ்கூட்டர் விபத்தில் சிக்கினார். நள்ளிரவில் வேகமாக வந்த டாக்சி அவர் மீது மோதி பலத்த காயமடைந்தார், ஆனால் அவர் ஹெல்மெட் அணியாத போதிலும் கூட அவரது தலை காப்பாற்றப்பட்டது சுவாமியின் கருணையே. குணமடைய சில மாதங்கள் ஆனாலும் நிரந்தர ஊனம் ஏதுமின்றி முழுமையாக குணமடைந்தார். 80 களின் முற்பகுதியில் எங்கள் மருமகன் ஒரு அரிய சிறுநீரக நோயினால்  பாதிக்கப்பட்டார். மருத்துவர்களிடம் அதற்கான வைத்தியம் இல்லை. அவர் குணமடைந்தாலும் நோய் மீண்டும் வரும் என்றும் அவர்கள் சொன்னார்கள். நாங்கள் மிகவும் கவலையடைந்து பாபாவின் உதவிக்காக அவரை தரிசித்தோம். ஸ்வாமி சில மருந்துகளை உருவாக்கி கொடுத்தார்.  மருந்து சாப்பிட்ட பிறகு சில நாட்களில் நோய் குறையத் தொடங்கியது, மீண்டும் அந்த நோய் வரவில்லை. சுவாமியின் பேரருள்.


Lt. Gen. S.P Malhotra with Sri Sathya Sai


நான் கண்ணில் அக்கி நோயால்  (ஹெர்பெஸ் ஜோஸ்டர்) பாதிக்கப்பட்டேன்.  சில முக்கியமான வேலைகளில் ஈடுபட்டிருந்த காரணத்தால் அதனை கவனிக்கமுடியாமல் மிகவும்  தீவிரமாகிவிட்டது. டெல்லி ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது என் கண்களை  திறக்க முடியாத நிலையில் இருந்தேன். இது மிக மோசமான நிலை என  மருத்துவர்கள் மிகவும் கவலைப்பட்டனர். டாக்டர்.பகவந்தம் மற்றும் திரு.சோஹன்லால் என்னைப் பார்க்க மருத்துவமனை வந்தனர். பாபா அவர்கள் மூலம் சில விபூதி பொட்டலங்களை அனுப்பி வைத்திருந்தார். பயணம் செய்யக்கூடிய அளவிற்கு உடல்நிலை தேறியவுடன், நான் சுவாமியின் தரிசனத்திற்கு  வந்தேன். அலட்சியமாக இருந்ததற்காக என்னைக் கண்டித்து, என் கண்களை எனக்கு பரிசளித்ததாக கூறினார். அப்பொழுது நான் அக்கி நோய்க்குப் பிறகு ஏற்படக்கூடிய கடுமையான  வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். நான் புட்டபர்த்தியில் ஒரு வாரம் தங்கியிருந்தபோது பாபா இந்த வலிகளைப் போக்கினார். வலி நிவாரணிகளை முற்றிலும் நிறுத்தி முழுமையாக குணமடைந்து திரும்பினேன். இந்த நோயினால் என் முகத்தில் தழும்புகள் ஏற்பட்டிருந்தன. இது ஒருபோதும் போகாது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். நாளடைவில் அந்த தழும்புகளும் மறைந்துவிட்டன. ஸ்வாமிக்கு தம் பக்தர்களின் மீதுள்ள அன்பு அளவில்லாதது, நான் மீண்டு வரும்போது அவருடைய கருணையை பரிபூரணமாக உணர்ந்தேன். சுவாமியே நமக்கு ஆணிவேராக இருக்கிறார் என்பதையும் உணர்ந்தேன். நமது அன்றாட வாழ்வில், துயரமான, தேவையான தருணங்களில் எல்லாம் அவர் நம்முடன் இருக்கிறார் என்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம்.


பாபாவின் அற்புதங்கள் எண்ணற்றவை, மனதைக் கவர்பவை. அவர் புரியும் மிகப்பெரிய அற்புதம் என்னவென்றால் ஓவ்வொருவரிடமும் அவர் ஏற்படுத்தும் மேன்மையான மனமாற்றம். அடுத்த தலைமுறையை சீர்படுத்துவதுதான் சுவாமியின் முக்கிய குறிக்கோள். 

கல்வி சேவைத் திட்டத்தின் கீழ் தொடக்க நிலை முதல் முனைவர் பட்டம் வரை அனைவருக்கும் இலவசக் கல்வியை வழங்க பல கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவருடைய மருத்துவ சேவை, வணிக மருத்துவ உலகிற்கு ஒரு கண் திறப்பாகும். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், அனைவருக்கும் இலவச மருந்துகளை வழங்கி, பாபாவின் மருத்துவ சேவைகளை, குறிப்பாக கிராமப்புற ஏழை மக்களுக்கு வழங்குகிறது. அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள 731 கிராமங்களுக்குத் தண்ணீர் வழங்கும்  குடிநீர்த் திட்டம். மனித வரலாற்றில் இணையற்ற இத்தகைய மாபெரும் சேவைத் திட்டங்கள் தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் பாபாவின் கருணைக்கு ஒரு மகத்தான உதாரணம்.


மனிதகுலத்திற்காக பாபா செய்திருப்பவை, செய்துகொண்டிருப்பவை அனைத்தும் முடிவற்றது. அவர் நம்மிடையே இருப்பதில் நாம் உண்மையில் பாக்கியசாலிகள். நம்மை ஸ்வாமி தன் பாதுகாப்பு அரவணைப்பில் எப்பொழுதும் வைத்துக்கொள்ள வேண்டிக்கொள்வோம். மனித விழுமியங்களுக்கான சாய் சர்வதேச மையத்தின் தினசரி நிர்வாகக் குழுவில் பணியாற்றும் பெருமையையும் பாக்கியத்தையும் எனக்கு வழங்கியதற்காக ஸ்வாமிக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பாபாவின் எதிர்பார்ப்புகளின்படி நான் நடந்து கொள்ள வேண்டும் என்று நான் அவரை மனதாரப் பிரார்த்திக்கிறேன்.


Lt.Gen. S. P. Malhotra

ஆதாரம்: சாய் ஸ்பர்ஷன் (2005)

தமிழில் தொகுத்தளித்தவர்: திருமதி சிந்துஜா, நெமிலிச்சேரி சமிதி


About the Author:

லெப்டினன்ட் ஜெனரல்(ஓய்வு) எஸ்.பி.மல்ஹோத்ரா, (பரம் வசிஷ்ட சேவா பதக்கம் பெற்றவர்) ராணுவ கமாண்டன்டாகப் பணியாற்றி, ஜி.ஓ.சி.- வடக்கு பிரிவு தளபதியாக ஓய்வு பெற்றவர்; இரண்டாம் உலகப் போரின் போது பர்மா மற்றும் கிழக்கு பகுதிகளில் பணியாற்றியவர்; டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் முதல் இந்திய துணை பயிற்றுநராக நியமிக்கப்பட்டவர்; பாலஸ்தீனத்தின் காஸாவில் ஐக்கிய நாடுகளின் அவசரப் படை பிரிவில் பணியாற்றியவர். ஒரு ராணுவ வீரருக்கான அரிய கவுரவமான விருதான பத்ம பூஷன் விருதினை பெற்றவர். 2010 இல் சாயி இறைவனின் பொற்பாதத்தில் இணைந்தார். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக