போலியான ஆசாமிகள் உண்மையான அவதாரத்திடம் சவால் விட்டால் என்ன நேரும்? பிரபஞ்ச நெருப்பிடம் சிறு பிரகாசத்தைச் சுமக்கும் மின்மினிப் பூச்சிகள் சவால் விட்டால் என்ன நேருமோ அது நேரும்! ஆம்...இரு யுகங்களிலும் இரு அவதாரங்களும் பல சவால்களை எதிர் கொண்டிருக்கிறார்கள்... அப்படி சில மூடர்கள் சவால் விட்ட அந்த விநோத சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...!
அது துவாபர யுகம்! ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்து ஆள்கின்றன காலகட்டம்! கருச தேசத்தில் ஒரு அரசன். அவர் பெயர் பௌண்டிரகன்! மிகவும் கொடூரமான அரசன்! வரியாலும் அதர்ம நெறியாலும் மக்களை வதைக்கிறவன்! எரிகிற கொள்ளியில் பெட்ரோல் விடுவதைப் போல் அந்த அரக்க குண அரசனை சுற்றி இருந்த கோமாளி அமைச்சர்கள் "பிரபு! தாங்கள் தான் வானிலிருந்து பூமிக்கு இறங்கி வந்த வாசுதேவன்!" என தங்களது சுய லாபத்துக்காக அளந்து விடுகிறார்கள்! அரசனை புகழ்வது எதார்த்தம்! ஆனால் இறைவனுக்கே சமமாக வைத்து புகழ்வது விபரீதம்! அந்த விபரீதம் அங்கே அரசவையில் நாளுக்கு நாள் அரங்கேறிக் கொண்டிருந்தது! அது அதிகமானதே தவிர குறையவே இல்லை! இதில் கொடுமையிலும் கொடுமை அந்த மூட அரசன் அதை எல்லாம் உண்மை என்று நம்பியது தான்! அப்படி பெட்ரோல் ஊற்றிய கொள்ளிக் கட்டியை அவனே செங்கோல் என்று நினைத்து கையில் பிடித்துக்கொண்டது போல் சுடப் போகிறது என அப்போது அவனுக்குப் புரியவில்லை! தானே துவாபர யுகத்தின் உண்மையான அவதாரம்! ஸ்ரீ கிருஷ்ணனோ தன்னை அவதாரம் என நினைத்துக் கொண்டு இந்த பூமியையே ஏமாற்றிக் கொண்டு வருகிறார் என்று கற்பனை செய்து கொள்கிறான் அவன்! உண்மையை உணரத்தான் உயிரையே பணயம் வைக்க வேண்டி வரும் ஆனால் கற்பனை செய்வது மிகவும் சுலபமானது! ஆக அந்த அரசனது மூடத்தனமும் மூர்க்கத் தனமும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வளர்கிறது!
இதனை அறிந்த எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணரோ "நானே உண்மையான வாசுதேவன்! நீ என்னுடைய பெயரை பயன்படுத்துகிறாய் என கேள்விப்படுகிறேன்! அது மாபெரும் பிழை! அப்படி செய்து நற்பாதையில் செல்லும் மக்களையே நீ குழப்பிக் கொண்டிருக்கிறாய்! நீ உன் பாவ தவறை உணர்ந்து அந்த அபத்த பேச்சுகளை மீண்டும் தொடராதே! மீறினால் உன்னை போர்க்களத்தில் வதம் செய்துவிடுவேன்!" என்று ஒரு தூதுவன் மூலம் செய்தி அனுப்பி எச்சரிக்கிறார்!
இறைவனோ எச்சரிக்கிறார் ஆனால் அந்த மூடனோ அந்த செய்திக்குப் பின் மேலும் கொக்கரிக்கிறான்!
"போர்க்களத்தில் நான் வருகிற போது.. உன்னை வதம் செய்து.. உன் சடலத்தை கழுகுக்கு விருந்தாக்குவேன்!" என்று ஸ்ரீ கிருஷ்ணர் மீதம் எழுதி இருந்த மடலை அந்தத் தூதுவன் வாசிக்க.. அந்த மூட அரசன் கோபத்தில் மீண்டும் மூடனாகி உறுமுகிறான்! பூனை உறுமினால் சிங்கமாக முடியாது என்பது போல் இருந்தது அவனது ஊளை உறுமல்!
போரில் சந்திப்போம் என்று பதில் கூறிய அவன்... இரு அக்ஷௌகினி படைகளை திரட்டிக் கொண்டு வேகமாக குதிரைகளில் வருகிறான்! ஆடு தானே தன்னை பலி கொடுக்க வருவது போல் இருந்தது அந்தக் காட்சி! "அந்த கண்ணப் பயலை நசுக்கி விடுங்கள் மகாப் பிரபு! உங்களை விட்டால் வேறு யார் மண்ணில் இறங்கிவந்த அவதாரம்!? போங்கள்... சென்று அவனின் அகந்தையை பிதுக்குங்கள்!" என்று கோமாளி அமைச்சர்களும் போதாகுறைக்கு தூபம் போட... அந்த தூபப் புகையிலும் புழுதிப் புகையிலும் பாய்ந்து வருகிறான் அந்த மூட அரசன்! அந்த மூட அரசனின் நண்பன் , காசியிலிருந்து மூன்றாவது படையை வேறு கொண்டு வருகிறான்! தேவையில்லாத தலையீடு.. ஆயினும் அப்போது எமன் டிக் அடித்த டிக்கெட்டுகள் ஒவ்வொன்றாக ஒன்று சேர்கின்றன!
பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணருக்கோ தாருகன் ரதம் ஓட்ட.. பார்த்தனுக்கு சாரதியான பார்த்த சாரதிக்கே சாரதியான தாருகன் வேகமாக களத்திற்கு விரைகிறான்!
அங்கே அந்த மூட அரசன் ஸ்ரீ கிருஷ்ணரை போலவே வேடமிட்டு.. போலி மாலைகள், போலி கௌஸ்துப மணியை மார்பில் அணிந்து கொண்டு நின்றதைப் பார்த்து ஸ்ரீ கிருஷ்ணரால் தன் சிரிப்பை அடக்கவே முடியவில்லை! ஸ்ரீகிருஷ்ணரின் ரதக் குதிரைகளே வேடிக்கையாக கனைத்தன... கொல்! என்று அகம் சொன்னதால் விரைந்த ஸ்ரீ கிருஷ்ணர் கொல்' எனச் சிரித்தே விட்டார்!
உடனே ஆத்திரம் பொறுக்காத அந்த மூட அரசன் அம்பராத் தூணியைத் திறந்து அம்பு மழை பொழிகிறான்! அது மழை அல்ல பிழை என்று அவன் அறியவில்லை!
ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஐந்தாவது கரமாக விளங்கிடும் பாஞ்சஜன்யத்தை எடுத்து ஊதுகிறார்! இறந்த பிறகு ஊதப்படும் சங்கு.. அவன் உயிரோடு இருக்கும் போதே அவனுக்காக ஸ்பெஷலாக ஊதப்படுகிறது! பிறகு ஸ்ரீ கிருஷ்ணரோ தனது ஆயுதங்களை எடுத்து அவனது தேரை உடைத்து... அவன் தலையை மல்லிகைப் பூவைப் பறிப்பது போல் சர்வ சாதாரணமாக கொய்துவிடுகிறார்! உயிர் போகிற தருணத்தில் தன்னை வாசுதேவன் என்று கற்பனை செய்து கொண்டிருந்த அந்த அரசன் உண்மையான வாசுதேவரை உணர்ந்து கொள்கிறான்!
(ஆதாரம் : ஸ்ரீமத் பாகவதம் 10. 503)
இதே போன்ற சவால்களை ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரமான கலியுகத்திலும் எதிர் கொண்டிருக்கிறார்! ஒன்றல்ல இரண்டல்ல பற்பல... சவால்கள் ஒன்றே! சவால்களுக்குள்ளே பொதிந்திருந்த குற்றச் சாட்டுகளும் ஒன்றே! ஆனால் அதை ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் கலியுகத்தில் அணுகிய விதம் முற்றிலும் பேரன்பு மயமானது!
தன முகத்திற்கு முன்னால் பாபாவை தன் எதிரியாக நினைத்த சிலரோடும் சரி .. தன் முதுகுக்குப் பின்னால் தனக்கு துரோகம் செய்கிற பலரோடும் சரி பாபா பேரன்புடனேயே நடந்து கொண்டு வருவதே துவாபர யுகத்தினைக் காட்டிலும் ஒரு கூடுதல் தனிச் சிறப்பு!
ஒருமுறை இது போன்ற ஒரு சவால்! கே.எம் முன்ஷி - பவான்ஸ் பத்திரிகையின் ஆசிரியர்! ஆன்மீக சாதகரும் கூட... பாபாவை பம்பாயில் (மும்பை) ஒரு ஆன்மீக மாநாட்டிற்கு அழைக்கிறார்! அதே சமயம் ஒரு ஹட யோகி.. அவர் பெயர் எல்.எஸ் ராவ்! தண்ணீரில் நடந்து திரளான மக்களை தன்னிடம் கவர்ந்து கொண்டவர்! தினசரி தண்ணீரில் நடந்த வண்ணமாய் இருக்கிறார்.. அதைக் காணவே நித்தம் துளித் துளியான மக்கள் அலை என திரண்டனர்!
திடீரென அந்த சமயத்தின் ஒரு நாள்... "சத்ய சாயி பாபா இங்கே (மும்பை) வரப் போகிறாராமே! அவருக்கு உண்மையில் இறை சக்தி இருந்தால் என்னைப் போல் அவர் தண்ணீரில் நடந்து காட்டட்டுமே!" என்று வீர சவால் விடுகிறார்!
அவர் பாதத்தில் அருள் அமர்ந்து அவரை தண்ணீரில் நடக்கவும் வைத்தது.. அவரது நாவில் சனி அமர்ந்து அவ்வாறு பேசவும் வைத்தது! இதனை உடனே பிளிட்ஸ் பத்திரிகை "பாபாவால் தண்ணீரில் நடந்து காட்ட முடியுமா? என்று சவால் விடுகிறார் ஹட யோகி!" என்ற தலைப்பிலேயே அந்த சவால் செய்தியை வெளியிட்டு இருந்தது!
இந்தச் செய்தியை எப்படி பாபாவிடம் எடுத்துக் கொண்டு போவது என அழைப்பு விடுத்த முன்ஷி தர்ம சங்கடப் படுகிறார்! பாபா மிகச் சரியாக பெங்களூரில் இருந்து பம்பாய்க்கு விமானத்தில் வந்து .. பம்பாயில் இறங்க கால் வைக்கிற அதே நொடி.. பாபாவின் பாதம் விமானத்திலிருந்து இறங்கி தரையில் படுவதற்கும்... அதே நேரம் அந்த ஹட யோகியின் கால்கள் தண்ணீரில் படுவதற்கும் சரியாக இருக்கிறது.. பாபா தனது பாதத்தை தரையில் ஒரு அழுத்து அழுத்துகிறார்...
எப்போதும் தண்ணீரில் நடந்து காட்டும் அந்த யோகி.. அந்த நொடி தண்ணீரில் நடக்க அல்ல நிற்கவே முடியாமல் மூழ்கிப் போகிறார்! எப்படி பாபா தனது ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் தேரில் இருந்து கொண்டே கர்ணனின் மந்திர அஸ்திரத்தில் இருந்து அர்ஜுனரை காப்பாற்ற தரையை ஒரு அழுத்து அழுத்தினாரோ அப்படி அழுத்துகிறார் பாபா!
சில நேரங்களுக்குப் பிறகு ஒருசில பக்தர்கள் பாபாவிடம் நடந்த சம்பவம் பற்றி விளக்க "ஆம் எனக்கு தெரியும்! அவர் கை தேர்ந்த மாபெரும் ஹட யோகியே! அதில் சந்தேகமே இல்லை! அவரால் தண்ணீரில் நடக்க முடியும்! ஆனால் அவர் அப்படிச் செய்து மக்களிடம் பணம் சம்பாதிப்பது , அப்படிச் செய்து மக்கள் கவனத்தை ஈர்த்து தனது அகந்தையை மேலும் வளர்த்துக் கொள்வது என்பது மிகவும் தவறு! ஆகவே தான் நான் அப்படிச் செய்ய வைத்தேன்" என்று பாபா உண்மையை திறக்க...
பின்னாளில் அந்த ஹட யோகியும் பாபாவின் பக்தராகிவிடுகிறார்!
ஒருமுறை ஒரு அபூர்வ சம்பவம் நிகழ்ந்தது! மலேஷியா சிறைகளில் முன்னாள் அரசியல் கைதியாக இருந்த நபர் ஒருவர்! தினசரி குளியலறைக்குச் செல்வது போல் சிறைச்சாலைக்கு சென்று வருபவர் அவர்! ஆனால் சீனாவே அவரது பூர்விகம்! ஒருமுறை கடும் நோய்வாய்ப் பட்டு மருத்துவமனையில் மல்லாந்து கிடக்கிறார்... தெய்வாதீனமாக அவரது பக்கத்துப் படுக்கை நோயாளி ஒருவர் ஒருநாள் ஒரு படத்தை கொடுத்து "இவர் கடவுள்! இவரை வேண்டிக் கொள்! உன் நோய் சரியாகிவிடும்!" என்கிறார்! அந்த அரசியல் நபரும் அந்தப் படத்தை ஏற்றுக் கொண்டு தனது தலைமாட்டில் வைக்கிறார்... படத்திலிருந்து வெளிப்பட்ட அந்த அருவ அருவி அருளில் அவரது நோய் குணமாக பூரண ஆரோக்கியம் பெறுகிறார்! அது அந்தப் படத்தின் உள்ள கடவுளால் தான் நிகழ்ந்தது என்பதை அவர் உணர்ந்தும் கொள்கிறார்... பிறகு தனது இல்லத்திற்கு அந்தப் படத்தை எடுத்துச் செல்கிறார்... அப்போது அருவ அருள் அருவியாக பாய்ந்தது போல்... இப்போது விபூதி அருவியாக அந்தப் படத்தில் வழிந்தோடுகிறது! அக்கம் பக்கத்தினர் இதைக் கண்டு ஆச்சர்யப்படுகின்றனர்! அந்த அற்புதச் செய்தி கதவுக்குக் கதவு தட்டிச் சொல்வது போல் பற பற என்று பறக்கிறது!
இதனைக் கேள்விப்பட்ட ஒரு சீன மாந்த்ரீகர் அந்த அரசியல் நபர் வீட்டின் வெளியே நின்றபடி... "கடவுள் என்ற ஒன்றே கிடையாது! ஆகவே எனக்கு கடவுள் நம்பிக்கையும் இல்லை! எனவே உன் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்தியை நான் உடனே விரட்டுகிறேன்!" என்று கொக்கரிக்கிறார்!
பாவம் துஷ்ட சக்தியை நம்புகிற அவரது மனம் இறை சக்தியை நம்ப மறுத்தது போதாத காலமே!
"உன் வீட்டில் ஏதேதோ அமானுஷ்யமாக நடப்பதாக தெரிகிறது... கதவைத் திற.. உள்ளே வந்து அதனை ஒரு கை பார்க்கிறேன்.. எனக்காயிற்று அதற்காயிற்று பார்த்துவிடலாம்!" என்று சவால் விடுகிறார்!
கதவு திறக்கப்படுகிறது... அந்தக் கதவு அந்த மாந்த்ரீகரின் வாழ்க்கையையே திறந்து விடுகிறது என்று அப்போது அவர் அறிந்திருக்கவில்லை...
உள்ளே அவர் காலடி எடுத்து வைக்கிற போதே அவருக்கு உள்ளூற ஷாக் அடிக்கிறது... அடுத்த அடியை அவரால் எடுத்து வைக்கவே முடியவில்லை.. கால்கள் பின்னோக்கி இழுக்கப்படுகின்றன.. பிறகு வேகவேகமாக தனது கழுத்திலும் கையிலும் அணிந்திருந்த மாந்த்ரீக மணிகளை ஒன்று விடாமல் எல்லாவற்றையும் கழற்றி ஒரு துணியில் இறுக்க முடிந்து, ஒரு மரத்தில் கட்டி முடிச்சுப் போட்டு பிறகு உள்ளே நுழைய எத்தனிக்கிறார்.. இப்போது சகஜமாக நுழைய முடிகிறது.. உள் அறையில் இருந்த அந்தக் கடவுளின் புகைப்படத்தை அவர் தரிசித்த அடுத்த நொடி.. மிக மிகப் பரவசத்துடன் அந்தப் படம் இருக்கும் திசை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து... "என்னை மன்னித்துவிடுங்கள் ! நான் இங்கே வந்தது தீய நோக்கோடு தான்! எனது மாந்த்ரீக சக்தியை காட்டத் தான்! எனக்கு நீங்கள் யார் என்று தெரியாது! ஆனால் நீங்கள் உண்மையில் இறைவன் தான்! இறைவா என்னை மன்னித்துவிடுங்கள்!" என்று கண் கலங்கிய படியே அகம் உணர்ந்து மனம் திருந்தி புதிய மனிதராகச் செல்கிறார் அந்த முன்னாள் மாந்த்ரீகர்!
இது நிகழ்ந்தது 24 செப்டம்பர் 1989 ! ஹைதராபாத் "சிவம்" அதில் நிகழ்ந்த சாதனா முகாமில் இந்த அற்புத அனுபவம் பகிரப்பட்டது.. இதனை பகிர்ந்தவர் மலேஷியா இளைஞரான "டியோ யுவாங்"... அவர் வைத்திருந்த அந்தக் கடவுளின் படம் சாட்சாத் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரின் புகைப்படமே!
"நான் மந்திரிப்பதில்லை... பிளாக் மாஜிக்'கும் புரிவதில்லை... என்னுடைய தெய்வீகச் செயல்கள் மந்திரமோ தந்திரமோ அல்ல... முழுக்க முழுக்க இது எனது தெய்வீகப் பேராற்றலினால் செயல்படுகிற மகிமைகள்! இதனை குறுகிய மனதினரால் கண்டுணர முடியாது! காரணம் அந்த மனதின் கண்கள் மாயையால் கட்டப்பட்டிருக்கிறது! ஆகவே தான் என்னுடைய ஆன்மீகப் பேரியல்பை அதனால் அடையாளமும் கண்டு கொள்ள முடியவில்லை! எனக்கு இருக்கிற இந்த தெய்வீகப் பெருஞ்சக்தியை விட கூடுதலான சக்தி எந்த உலகத்திலும் எங்கேயும் இல்லை! இந்த இறை சக்தி நாளடைவில் குறைவதோ வற்றுவதோ இல்லை! என்னுடைய சரீரம் (உடம்பு) நிரந்தரமில்லை ஆனால் என்னுடைய இறை சக்திக்கோ, அதன் தெய்வீக மகிமைகளுக்கோ, ஆன்மீகச் செயல்களுக்கோ ஒரு முடிவே இல்லை! அது சர்வ நிரந்தரமானது! அதுவே என்றும் எப்போதும் நிலையானது!" என்று ஈடில்லா அந்தப் பிரபஞ்ச ரகசியத்தை பாபா ஒருமுறை பகிர்ந்தும் இருக்கிறார்!
(Source : Sri Krishna Sri Sathya Sai | Page No: 157 - 160 | Author : Dr. J. Suman Babu )
துவாபர யுகத்தில் இறைவனிடம் புல்லாங்குழல், கலியுகத்தில் இறைவனின் சிரசிலே குழல், இரண்டுமே காற்றில் பாடாத கானங்களே இல்லை! அது கையால் புரியாத தானங்களும் இல்லை! ஞான தானமே மிக உயர்ந்த தானம்!
ஒவ்வொரு யுகத்திலும் உதிக்கிற ஒரே இறைவன் ஒரே ஆடை - சிகை அலங்காரங்களோடு வருவதில்லை என்பதை நாம் முதலில் உணர்ந்து கொண்டாலே போதும் போலி பிரேம சாயிகள் யூடியூபில் காவி உடுத்தி கையால் விபூதி எடுத்து தானே பிரேம சாயி என கதை விடுவது பொய் என்று உணர்ந்து கொள்ள நம்மால் சுலபமாக முடியும்!
பிரேம சுவாமி தன்னை பிரகடனப்படுத்தப் போவது சர்வ நிச்சயம்! உண்மையான சூரியன் விடிகிற போது நட்சத்திரங்களே ஒளி இழந்துவிடும்... இந்த மின்மினிப் பூச்சிகள் எம்மாத்திரம்!??
ஒரே ஒரு வித்தியாசம்.. ஸ்ரீ கிருஷ்ணருக்கும் ஸ்ரீ சத்ய சாயிக்கும் தான் அவதாரம் என்று பிரகடனப்படுத்திய பிறகுதான் ஆயிரம் சவால்கள்! ஆனால் பிரேம சுவாமிக்கோ அதற்கு முன்பே பல சவால்கள்!
இறைவனுக்கு சவால்கள் என்பது நாம் நெய்வேத்யமாக படைக்கும் சர்க்கரைப் பொங்கலை விட சுவையானது! அதுவே இறை நிகழ்ச்சி நிரலில் என்றும் சுவாரஸ்யமானது!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக