தலைப்பு

திங்கள், 15 ஏப்ரல், 2024

கனல் எறிந்தாலும் கல் எறிந்தாலும் மந்தஹாசம் குறையாத இரு அவதார அகம்!


இரு அவதாரங்களின் மேல் பொறாமைப் பட்டு இரு யுகங்களிலும் தீய குணங்கள் பெற்றோர் என்னவெல்லாம் செய்தனர்... ? அதை எவ்வாறு இரு யுகத்து அவதாரங்களும் எதிர்கொண்டனர்? சுவாரஸ்யமாக இதோ...!

அது துவாபர யுகம்! தானே வாசுதேவன் என்று உளறிக் கொண்டு தன்னையே அவதாரம் என்று கருதிக் கொண்டிருந்த அரசன் பௌண்டிரகனை ஸ்ரீ கிருஷ்ணன் எச்சரித்தும் அவனது மூட மதி திறக்கவில்லை... கோபத்தில்  ஸ்ரீ கிருஷ்ணரை எதிர்த்து அவன் போர் வேறு புரிவதற்கு பாய்ந்தோடி வர... ஸ்ரீ கிருஷ்ணர் அவனது தலையைக் கொய்தபடியால் தரையில் சடலமாய் சாய்கிறான்!

     இதைக் கேள்விப்பட்ட அவனது புதல்வர்களான வசுதேவா , சுதக்ஷினா இருவரும் அவர்களது தந்தை சாவுக்கு ஸ்ரீ கிருஷ்ணரை பழி வாங்க துடிக்கிறார்கள்! அவர் சந்திக்காத பழியும் இல்லை.. பார்க்காத பலியும் இல்லை... ஆகவே எல்லாம் அறிந்த ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களை எதிர் கொள்ள தயாராகவே இருக்கிறார்! அவர்களே நேரடியாக செல்ல பயந்து ஒரு திட்டம் தீட்டுகிறார்கள்! திட்டமோ வட்டமோ ஸ்ரீ கிருஷ்ணருக்கு முன் அவை யாவும் நட்டமே! 

     ஆயினும் அவர்கள் இருவரும் ஒரு நெருப்பு வளையத்தை உருவாக்குகிறார்கள்! அதற்குப் பெயர் கிருத்யா! அதை உருவாக்கி சுழல விட்டு.. அதன் திசையை துவாரகைக்கு திருப்பி விடுகிறார்கள்! ஸ்ரீ கிருஷ்ணர் மட்டுமல்ல அவர் ஆள்கிற துவாரகா சாம்ராஜ்யமே சாம்பலாக வேண்டும் என்ற தீய நோக்கம்! அது தீ'ய நோக்கம் என்பதால் தான் அவர்கள் அழிப்பதற்கு என்றே தீயை அனுப்புகிறார்கள்! அந்தக் நெருப்புக் கோளம் மேலிருந்து துவாரகையை சுற்றி வளைக்கிறது... ஆகாயமே கண்ணுக்கு தெரியாத விஸ்வரூப நெருப்புச் சுழல் அது! துவாரகை மக்கள் "கிருஷ்ணா கிருஷ்ணா!" என பயத்தால் பதைபதைக்கிறார்கள்! சர்வ உலகின் ஒரே பாதுகாவலர் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகையால் காவலுக்கு கண்ணனுண்டு! என்ற நம்பிக்கையில் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரண் அடைகிறார்கள்! உடனே ஸ்ரீ கிருஷ்ணர் மந்தஹாசம் குறையாமலும் அந்த மர்மப் புன்னகை மாறாமலும் தனது சுண்டு விரலை உயர்த்துகிறார்... மக்கள் அனைவரும் அவரது சுண்டு விரலையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்...


சுதர்ஷன சக்கரம் தோன்றி சுழல்கிறது... ஆகாயக் குடையாக நெருப்புச் சக்கரம் சுழல.. ஸ்ரீ கிருஷ்ணரின் சுண்டு விரலில் சுதர்ஷனம் சுழல... நெருப்புக்கு எதிராக சக்கரத்தை ஏவி விடுகிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.. அப்படியே காற்றில் அது எகிறி.. விஸ்வரூபமெடுத்து ஒரு நெருப்பையும் விடாமல் குடித்து ஏப்பம் விட்டு அந்த சுதர்ஷன சக்கரம் ஸ்ரீ கிருஷ்ணரிடம் திரும்பாமல் நேராக சுதக்ஷினாவை வதம் செய்த பிறகு சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து! என்று திரும்புகிறது! மக்கள் அனைவரும் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்! வாழும் போதே சிதை வைக்கத் துணிந்த அந்த அரக்கர்களிடம் இருந்து காப்பாற்றியதற்காக ஸ்ரீ கிருஷ்ணரை துவாரகை மக்கள் நன்றி பாராட்டுகிறார்கள்! 

ஸ்ரீ கிருஷ்ணரின் காவல் நிழலில் இருக்கிற வரை மக்களுக்கு பயம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது மீண்டும் புலனாகிறது!

(ஆதாரம் : ஸ்ரீமத் பாகவதம் - 10-535) 


இதே போன்றதொரு நெருப்பு சதி துவாபர யுகத்தில் மட்டுமில்லை கலியுகத்திலும் ஸ்ரீ கிருஷ்ணரை விடவில்லை! இறை அவதாரம் எடுக்கிற போதெல்லாம் பகையும் சேர்ந்தே முளைப்பது போல்.. ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் நிறைய பழிகளையும் சதிகளையும் எதிர்கொண்டிருக்கிறார்! துவாபர யுகத்தில் ஒரு சிலர் எனில் கலியுகத்தில் அநேகர்! (பலர்)... ஆகவே சக்கரத்தை கையில் எடுக்காமல் அதை விட வலி தந்து மனம் திருந்த வைக்கும் ஆயுதமான பேரன்பை கையில் ஏந்தியே அத்தனை முட்டுக்கட்டைகளையும் தனது சன்மார்க்கப் படிக்கட்டுகளாக பாபா அமைத்திருக்கிறார்!

அது பாபாவின் பௌதீக இளமைக் காலம்! ஒருமுறை சுப்பம்மாவிடம் பாபா இனி தான் வீட்டில் தங்கப் போவதில்லை என்று சொல்லிவிடுகிறார்! அது இறைத் தாய் ஈஸ்வராம்பா வீட்டையும் குறிக்கிறது.. பாபா அடிக்கடி தரிசனம் தரும் பக்கத்து வீட்டு சுப்பம்மா இல்லத்தையும் குறிக்கிறது! சுப்பம்மாவுக்கு ஒரே சோகம்! காரணம் பாபாவின் மேல் யசோதைக்கு நிகரான அத்தனை பாசம் அவளுக்கு! யசோதையாவது கோபப்படுவாள், உரலில் கட்டி வைப்பாள்... ஆனால் இந்த யுகத்தில் சுப்பம்மாவோ பாபாவை தனது இதய உரலில் கட்டி வைத்ததைத் தவிர எதையும் செய்ய அறியாள்! அவளுக்கு பாபா என்றால் தனது உயிரை விடவும் மேலான பரமாத்மா! அவள் அத்தனை சாதுவும் கூட...

மனம் கேட்கவில்லை அவளுக்கு... சரி வீட்டின் அருகே தனியாக பால வயது பாபாவுக்கு ஒரு குடில் அமைத்துத் தருகிறார்! அந்தக் குடிலிலேயே தன்னை தேடி வருகிற பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார் பாபா! தூரம் அதிகமில்லை.. ஆகவே சுப்பம்மாவின் பார்வை எல்லையிலேயே பாபா இருக்க அவளுக்கு ஒரு ஆத்ம திருப்தி!


ஒருமுறை பாபாவின் மேல் பொறாமைப்பட்ட ஒரு சில தீய குணம் கொண்டவர்கள் நேராகக் குடிலுக்கு வெளியே பதுங்கிப் பதுங்கி வருகிறார்கள்! நேரமோ ஈ காகம் கூட உலவாத நள்ளிரவு! புட்டபர்த்தி மக்களோ நன்றாக தூங்கிக் கொண்டிருக்க... எப்படியாவது பாபாவை அழித்துவிட வேண்டும் என்ற தீய நோக்கம்! அது 'தீ'ய நோக்கம் என்பதால் தீ வைக்க தீப்பெட்டியை எடுத்து உரசுகின்றனர்... ஒருவன் பாபாவின் குடிலையே பார்க்கிறான்! அது ஓலைக் குடில்.. தீ வைத்தால் பற பற என பற்றிக் கொள்கிற அளவிற்கு காய்ந்த ஓலைகள்! "பாபாவாவது சாமியாவது... குடிலை எரித்து விட்டால் தான் பாபா என்று தன்னை அழைத்துக் கொண்டிருக்கிற அந்தச் சின்ன பயலும் திருந்துவான், அவனை பார்க்க வருகிற மக்களும் திருந்துவார்கள் என்ற குருட்டுத்தனமான எண்ணம் அவர்களுக்கு...!" தீக்குச்சியும் தீப்பெட்டியும் முட்டி மோதுகிறதே தவிர நெருப்பே உற்பத்தியாகவில்லை... ! குச்சிகள் தலை கவிழ்ந்து உடைகிறது! தீக்குச்சிகளுக்கே தெய்வம் யார்? என்று தெரிந்திருக்கிறது.. சில மனித தீவட்டிகளுக்குத் தான் தெரியவில்லை என்றபடி... குச்சியும் எரியவில்லை குடிலும் எரியவில்லை.. குழம்புகிறார்கள்! 

உடனே படார் என்று சத்தம் கேட்கிறது... எதிரே பார்த்தால்... அவர்கள் மனம் நினைத்துக் கொண்டிருந்த அந்த 'சின்னப் பயல்' என்கிற

பாபாவை பார்த்து அதிர்கிறார்கள்! தீக்குச்சி உரசும் ஓசை என்ன வெடி வெடிக்கும் ஓசையா? எப்படி அவர் காதுகளில் கேட்டு வெளியே வந்தார்? திகைக்கிறார்கள்! மீதம் இருந்த தீக்குச்சுகள் தீப்பெட்டுக்குள்ளே நமட்டு சிரிப்பு சிரிக்கிறபடியான நிலைமை!


"என்ன குடிலை கொளுத்த முடியவில்லையா? ஏன் பங்காரு! இத்தனை சிரமப்படுகிறீர்கள்? இதோ என கையில் ஒரு சிருஷ்டி தீப்பெட்டி!" என்கிறார் பாபா.. அது உடனே உருவாகிறது!

வெறுங் கையோடு கதவு திறந்தவர் கையில் தீப்பெட்டியா? மேலும் திகைக்கிறார்கள்! 

"இது தான் சாயி பிரான்ட் தீப்பெட்டி! இதை வைத்து குடிலை கொளுத்துங்கள்!" என்று அவர்கள் முன் பாபா அந்த ஸ்பெஷல் தீப்பெட்டியை வீசிப் போட... ஏதோ தங்கள் மீது வெடி குண்டே வெடிக்க வருவது போல் நடுநடுங்கி சிதறிப் போகிறார்கள்!

இத்தோடு முடிந்ததா? அது தான் இல்லை...!

இன்னொரு முறையும் இது நிகழ்கிறது! ஆனால் இந்த முறை தீக்குச்சியும் தீப்பெட்டியும் உரசிக் கொண்டாலும் தீப் பிடிக்க மாட்டேன் என்று ஒத்துழையாமை இயக்கம் நிகழ்த்தவில்லை..

தீ தீக்குச்சியின் தலையில் கிரீடமிட... குடிலை நோக்கி விரைகிறது... எப்படி துவாபர யுகத்தில் துவாரகை மேல் நெருப்பு வளையம் விரைந்ததோ அப்படி! 

குடிலோ ஜோ என பற்றிக் கொண்டு எரிகிறது... 

ஏதோ தீ மணம் வருகிறதே என மக்கள் வெளியே வந்து பார்க்க... ஓ என்று அலறுகிறார்கள்! குடிலில் தீ அதைப் பார்த்த மக்களின் குடலிலும் பயத்தீ! பாபாவோ எதுவுமே‌ நிகழாதது போல் கூலாக வெளியே வருகிறார்.. "நான் இருக்க ஏன் பயப்படுகிறீர்கள்?" என்று கேட்கிறார்! உடனே ஆகாயத்தை நோக்கி விரல்களை நீட்டுகிறார்... ஜோ என்று மழை பொழிய ஆரம்பிக்கிறது... வானத்திலிருந்து குதித்த மழை நேராக குடிலில் மட்டும் விழுந்து கொண்டிருக்கிறது! மக்கள் பரவசப்படுகிறார்கள்!

பாபா நெருப்பை மட்டும் அணைப்பவர் அல்ல மக்கள் மனதில் இருக்கும் கோப நெருப்பையும் சேர்த்து அணைத்து அவர்களை கருணையால் அணைத்து உயர்த்துபவர் என்பதையும் மக்கள் புரிந்து கொள்கின்றனர்!


இன்னொரு முறை பாபா பல்லக்கில் அமர்த்தப்பட்டு  அழைத்துவரப்படுகிறார்! அவர் நெற்றிக் கண் பகுதியிலிருந்து விபூதி ஊற்றெடுக்கிறது... மக்கள் பரவசமோடு பாபாவை அழைத்து வருகிறார்கள்! ஆனால் எங்கோ தீஎரிகிற வாசனை வருகிறது... எங்கே என்று உற்றுப் பார்த்தால்.. பொறாமை கொண்ட வயிறுகள் சில பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன...

அவற்றால் அந்தப் பல்லக்கு வைபவத்தை தாங்கவே முடியவில்லை! அது விஜய தசமி! வெற்றியின் திருநாள்! தீய குணத் தோல்விகள் ஆன்மீக வெற்றியை என்ன செய்துவிட முடியும்!?

பாவம் தரையில் திறந்து விடப்பட்ட கற்களே அந்தப் பழிக்கு ஆட்பட்டன.. அந்தப் பொறாமை பிடித்தவர்கள் கற்களை நேராக நறுக் நறுக் என்று வீசுகிறார்கள் பாபாவின் பல்லக்கு மீது!

அவர்களுக்கு எப்படித் தெரியும் பாபா தான் கல்லுக்கே சாப விமோச்சனம் கொடுத்தவர் என்று... கல் மனதை கனி மனதாக்கவே எழுந்த பேரவதாரம் என்று... பாபா கல் எறிந்த பக்கம் பார்க்கக் கூட இல்லை.. ஆனால் ஒன்று கூட பாபா மேலோ கூடி இருந்த பக்தர்களின் மேலோ படவே இல்லை! எறிந்தவர்களுக்கு ஒரே குழப்பம் தாங்கள் எறிந்தது கல்லா இல்லை பஞ்சா என்று... எறியும் போதே வேறு திசையில் பறந்துவிட்டதா? மீண்டும் எறிகிறார்கள்! அதே நிலை! ஒன்றுமே புரியாமல் அவர்கள் பாபாவின் பல்லக்கு நகர்வதையே அதிர்ச்சி கலந்த பரவசத்தோடு பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்!


ஒருமுறை பாபா பெங்களூரில் பல மக்கள் திரண்டிருக்க... அது கீதா யக்ஞம்! ஆன்மீக ஞானப் பொழிவை பாபா மேடையில் ஆற்ற.... அதே போல் ஒரு சில விஷமிகள் அந்த யக்ஞத்தை கலைக்கவும்..  பாபாவின் பேச்சை குலைக்கவும் முடிவு செய்கிறார்கள்! விநாச காலே விபரீத புத்தி! தெரியவில்லை அவர்களுக்கு...

அந்த தீயக் குணத்தவர்களில் ஒருவன் சர்ர் என்று ஒரு கல்லை மேடையை நோக்கி வீச...‌ பாபாவின் தலையில் பட்டு ரத்தம் வரும் என அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்க... அது விர்ர் என மலராக மாறி பாபாவின் காலடியில் விழுகிறது! எறிந்தவன் திகைக்க... பார்த்தவர்கள் காரணம் புரியாமல் பரவசப்பட... மேலும் எறிகிறான் கல் மீண்டும் பூவாகிறது! 

ஏன் கல் பூவானது? 

கல்லான உன் இதயத்தோடு நீ என்னிடம் வேகமாக வந்தால் உன்னை நிதானப்படுத்தி பூவாக்குவேன் என்பதை பாபா சொல்லாமலேயே எறிந்தவனுக்கு புரியவைக்க.. அது முதல் எறிந்தவன் புரிந்தவனாகி.. பாபாவின் பக்தியில் சிறந்தவனுமாகிறான்!

"அறியாமையில் உள்ளவர்கள் என்னைப் பற்றி புறம் பேசுகிற போது... நான் என்னையே கடவுள் என்று சொல்லிக் கொள்கிறேன்! பிறகு சில நேரங்களில் ஒரு சாதாரண மனிதனைப் போலவும் நடந்து கொள்கிறேன் என்கிறார்கள்! இரு விதமாகவும் நடக்கிறேன் என்கிறார்கள்! அது உண்மை இல்லை! நான் எப்போதுமே இறைவன் தான்! அதை இதயத் திறப்போடு ஏற்றுக் கொண்டு அந்த பிரபஞ்ச ரகசியத்தை நீங்கள் முதலில் உணர முற்படுங்கள்! இறைவனாகிய நான் ஒரு நாளும் ஒரு போதும் மாறாமல் என்றென்றும் நிலைத்திருப்பேன் என்பதை ஒரு நாளும் நீங்கள் மறக்கவே கூடாது!" என்கிறார் மிக ஆணித்தரமாக பாபா! 

(Source : Sri Krishna Sri Sathya Sai | Page : 160 - 162 | Author : Dr. J. Suman Babu ) 


பாபாவே சாட்சாத் ஸ்ரீ கிருஷ்ணர் என்பது வெறும் நம்பிக்கை சார்ந்த மொழிதல் அல்ல! இறைவனுக்கென்றே மங்களமான பிரத்யேக குணங்கள் உண்டு , அது மண்ணில் அவதரிக்கிற போதே மனிதர்களை அணுகுகிற போதே வெளிப்படுகிறது! ஸ்ரீ கிருஷ்ணருக்கு இருந்த அதே இறை குணமே ஸ்ரீ சத்ய சாயிக்கும் இருக்கிறது! ஸ்ரீ கிருஷ்ணருக்கு இருந்த அதே சர்வ ஞானமே , பூரண பேரன்பே ஸ்ரீ சத்ய சாயிக்கும் இருக்கிறது! ஸ்ரீ கிருஷ்ணருக்கு இருந்த அதே கர்மாவை மாற்றி அமைக்கும் பேராற்றலே ஸ்ரீ சத்ய சாயிக்கும் இருக்கிறது! ஏன்? ஏனெனில் அதே ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி! யுக வித்தியாசத்தால் மட்டுமே அப்போது தீயவரை அழிப்பதில் தீமையை அழித்தார் ஸ்ரீ கிருஷ்ணர்! கலி ஆகையால் தீமையை அழிப்பதில் தீயவரை நல்லவராக்குகிறார் அதே ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக