தலைப்பு

செவ்வாய், 30 ஜூலை, 2024

எல்லா சமயங்களுக்குமான சமமான இரு சமத்துவ அவதாரங்கள்!

இரு அவதாரங்களும் ஒரு சமயத்திற்கான கடவுளர் அல்ல , அவர்கள் இருவருமே எல்லா சமயங்களுக்குமான இறைவன் என்பதை ஆச்சர்ய சம்பவங்களின் வாயிலாக உணர்த்தும் உன்னதப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!


அது துவாபர யுகம்! ஸ்ரீ கிருஷ்ணரே இயக்குநர்! மற்ற அனைவரும் அணிந்திருந்தது அவரே நிர்மாணித்த வேடம்! அதை உணர்த்த அர்ஜுனருக்கு ஸ்ரீ கிருஷ்ணர் நடத்துகிறார் பாடம்! அதுவே பகவத் கீதை!

யே யதா மாம் ப்ரபத்யந்தே

தாம்ஸ் ததைவ பஜாம்-யஹம்

மம வர்த்மானுவர்தந்தே

மனுஷ்யா: பார்த ஸர்வஷ:

 

யோ யோ யாம் யாம் தனும் பக்த:

ஷ்ரத்தயார்சிதும் இச்சதி

தஸ்ய தஸ்யாசலாம் ஷ்ரத்தாம்

தாம் ஏவ விததாம்-யஹம்


அதாவது, "எந்த வழியில் மனிதன் என்னை அணுகினாலும் அதே வழியில் அவனுக்கு என் அன்பை திரும்ப வழங்குகிறேன்! ஓ அர்ஜுனா! இறைவனை அடைகிற எந்த மார்க்கத்தை (வழி) மனிதன் கடைபிடித்தாலும் அது என் மார்க்கமே! எந்த வடிவத்தில் இறைவனை வழிபட்டாலும் அந்த வடிவத்தின் மேல் நம்பிக்கை வழங்குகிற அந்த இறை வடிவமாகவே நான் என்னை ஸ்தாபிதம் (பேரிருப்பு) செய்து கொள்கிறேன்!" என்கிறார் பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர்! 


(ஆதாரம் : ஸ்ரீ மத் பகவத் கீதை - 4.11 | 7.21)


இதையே ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் 

"எந்த பெயரிலோ அல்லது எந்த வடிவத்திலோ நீங்கள் என்னை ஆத்மார்த்தமாக வழிபட்டாலும், அதற்குரிய நியாயமான பலனை நானே உங்களுக்கு வழங்குகிறேன்!" என்கிறார்!

இவை வெறும் வாய் மொழி அல்ல.. செயல் வடிவங்களாகவே இன்றளவும் தொடர்கிறது.. அதற்கான உதாரணங்கள் அநேகம்! அநேகம்! 


ஒருமுறை அருணை ஜோதியான பகவான் ரமணரின் அடியாரில் ஒருவரான சுவாமிஜி அமிர்தானந்தர் பாபாவை தரிசிக்க வருகிறார்! அப்போதே அவருக்கு 85 வயது! பகவான் ரமணர் எப்படி அவரை அழைப்பாரோ அப்படியே பாபாவும் அழைக்கிறார்!

"அமிர்தம்" என்ற அவரது அழைப்புப் பெயர் அவர் இதயத்திற்கு அமுதமே ஊற்றுகிறது! 

"நீங்கள் 41 நாள் தொடர்ந்து உங்களின் சிறுவயதில்  கணபதி ஹோமம் செய்தீர்கள் அல்லவா! ஹோமத்தின் இலக்கு அக்னியில் கணபதியை தரிசிப்பது தானே! தரிசித்திருக்கிறீர்களா?" என்று பாபா கேட்க..

"ஆம்! நீங்கள் சொல்வது உண்மை சுவாமி! நான் ஹோமம் செய்தது என்னுடைய ஏழாவது வயதில்... ஆனால் மகா கணபதியின் தரிசனம் எல்லாம் எனக்கு கிடைக்குமா?" என்று கேட்கிறார் பெரியவர்! 

*"நிச்சயமாக.. நீங்கள் அப்போது செய்த ஹோமத்திற்கு இப்போது பலன் கிடைக்கப் போகிறது!" என்று சொல்லி அவரை உற்றுப் பார்க்கச் சொல்கிறார் பாபா... அவரின் எதிரே பாபா  தங்க நிறமாக உருமாறி ஸ்ரீ மகா கணபதியின் தரிசனத்தை அவருக்குக் கிடைக்கச் செய்கிறார்! பாபாவே சாட்சாத் விநாயகரும் என்பதை பெரியவர் உணர்ந்து கொள்கிறார்! இதில் இன்னொரு சூட்சுமம் ஒளிந்திருக்கிறது - பாபா இறைவனே என்பதற்கான பேருண்மையும் உட்பொதிந்து இருக்கிறது!

ஆம் பெரியவர் எனும்  சுவாமிஜி அமிர்தானந்தர் 7 வயதில் மகா கணபதிக்கு ஹோமம் புரிந்த போது பாபா பூமியில் அவதரிக்கக் கூட இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது!

விஞ்ஞானி டாக்டர் பாலகிருஷ்ணன் ஹைதராபாத்தில் அகில உலக கருத்தரங்கம் நிகழ்த்துகிறார்! அதில் ஜப்பானை சேர்ந்த பௌத்த மதத்தினரான ஒரு ஜப்பானிய விஞ்ஞானியும் கலந்து கொள்கிறார்! பாபா கடவுளே என்று அந்த விஞ்ஞானியிடம் எதேர்ச்சையாக பால கிருஷ்ணன் பகிர... அப்போது ஹைதராபாத் வந்திருந்த பாபாவை தரிசிக்க அழைத்துச் செல்கிறார் அந்த விஞ்ஞானி  பால கிருஷ்ணன்! 

இரு விஞ்ஞானிகளும் சாயி மெய் ஞானத்தின் சந்நதிக்கு வருகிறார்கள்!

அந்த ஜப்பானிய விஞ்ஞானியின் முன் பாபா ஒன்றை சிருஷ்டி செய்து காட்டுகிறார்...

"இது என்ன?"

"இதயம்!"

"இது யாருடைய இதயம்?"

ஜப்பான் புல்லட் டிரைன் போல் வேகமாகி வார்த்தைகள் பிடிபடவில்லை அவருக்கு...!

தெரியவில்லை என்கிறார் ஜப்பானியர்!

"அது உன் இதயம் தான்! ஆச்சர்யப்படாதே! இப்படித் தான் இருந்தது! இப்படியே இருந்தால் குழந்தை பிழைக்காது என்றார்கள் அல்லவா மருத்துவர்கள்?! உன் தந்தை தத்துவவாதியாக இருந்தாலும் கடவுளின் நல்ல பக்தர்! நீலமாக மாறி இறந்து போன உனது உடலை பார்த்து அழுதபடி "ஓ தத்தகத்தா ! நான் உன்னிடம் வேண்டினேன் என்பதற்காக நீ எனக்கொரு குழந்தை கொடுத்தாய்! இப்போது அது பிணமாக இருக்கிறதே...! இது தான் நீ எனக்கு வரமாகக் கொடுத்த குழந்தையா?" என்று கடவுளிடம் அழுதார்! ஆகவே தான் நான் உன் இதயத்தை சரி செய்து மீண்டும் உனக்கு உயிரளித்தேன்!" என்று தெளிய வைக்கிறார் பாபா! 

இதில் ஒரு சூட்சுமம்... சுவாமிஜி அமிர்தானந்தரை போல் இந்த ஜப்பானிய விஞ்ஞானியும் மிக வயதானவர்! அவருடைய தந்தையார் பகவான் புத்தரை வேண்டுகிறார்! அந்த சம்பவம் தந்தை மகன் தவிர வேறு யாருக்கும் இது வரைக்கும் தெரியாத ரகசியம்!அப்படி எனில் அவர்கள் வழிபடும் புத்தர் பாபாவே என்பதை அந்த வயதான விஞ்ஞானி உளப்பூர்வமாக உணர்ந்து கொள்கிறார்! 


ஒருமுறை ஒரு பெண்மணி பாபாவிடம் தனது மகனை பற்றி "அவனை இங்கே அழைத்தேன்.. இங்கு வராமல் திருப்பதி சென்றிருக்கிறான் சுவாமி" என்று ஆதங்கப்படுகிறார்! உடனே பாபாவோ "பெருமாளும் நானும் வேறு வேறல்ல... அவரே நான்! நானே அவர்!" என்று தெளிவுப்படுத்த...

புட்டபர்த்தி வேறு திருப்பதி வேறல்ல என்பதையும்! பாபாவே பெருமாள் என்பதையும் , தனது மகன் பாபாவையே தரிசிக்க திருப்பதி சென்றிருக்கிறான் என்பதையும் அந்த ஆதங்கப் பெண்மணி உண்மையை உணர்ந்து கொண்ட பின் ஆ'தங்கப் பெண்மணியாக ஆச்சர்யமோடு ஜொலிக்கிறார்!


ஒருமுறை ஒரு புரோகிதர் ஒரு ஒரு பக்தரிடம் ருத்ராபிஷேகம் செய்யச் சொல்கிறார்! அவரும் அந்த வழிபாட்டுச் செயலை நிறைவேற்றுகிறார்!  பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் புட்டபர்த்தி சென்றிருந்த போது அவருக்கு நேர்காணல் வழங்கிய பாபா

"உனது வழிபாடு ஏற்கனவே என்னிடம் வந்து சேர்ந்துவிட்டது!" என்று கூறுகையில்... அவரே ஆச்சர்யப்பட்டுக் கொண்டே குழம்புகிறார்! அது வெய்யில் அடித்துக் கொண்டே மழை பெய்வது போல் அவரது மனதிற்குள் ஒரு சூடான ஜில்லிப்பு! 

பிறகு பாபாவே "அந்த புரோகிதர் சொல்லி நீ செய்த ருத்ராபிஷேகத்தை நான் ஏற்றுக் கொண்டு விட்டேன்!" என்று தெளிவுப்படுத்த... பரவசத்தோடு பாபாவின் கால்களில் விழுகிறார்! விழுகிற போது அறியாமையும் சேர்ந்தே விழுந்து பாபாவே சாட்சாத் சிவபெருமானும் என்பது அவருக்குப் புரிகிறது! அப்போது சிவனின் ஜடையில் வழிந்து கொண்டிருந்த கங்கைத் துளிகள் அவரின் விழி வழி வழிந்து கொண்டிருந்தது!

ஒருமுறை அமெரிக்க தம்பதிகள் பாபாவை தரிசிக்க வருகிறார்கள்! கணவரோ தீவிர பாபா பக்தர்.. ஆனால் மனைவியோ ஜீசஸ் பக்தை! 

நேர்காணல் அளித்த பாபாவிடமே அதைக் கேட்கிறார்... தான் கிறிஸ்துவராக வாழ வேண்டுமா? அல்லது ஹிந்துவாக மாற வேண்டுமா? என்று... பாபாவோ தனது ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் போல் ஒரு மர்மப் புன்னகை புரிந்தபடி அவர்களிடம் மிகப் பரிவோடு மற்ற விஷயங்கள் பேசுகிறார்! நேர்காணல் இறுதியில் பாபாவின் அனுமதியோடு அவர்கள் பாபாவையும் தனியாகப் புகைப்படம் எடுக்க.. அவர்களது தேசத்திற்குச் சென்று அதை பிரின்ட் செய்கிற போது ... பாபாவின் உருவம் ஜீசஸ் உருவமாக மாறி இருக்க... 

அந்தப் பெண்மணி அந்த நொடியிலேயே "ஜீசஸுமே பாபா தான்!" என்பதை உணர்ந்து கொண்டு சாயி பக்தையாக மாறிப் போகிறார்!


வேதமே "ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி" என்கிறது!

எந்த வடிவில் இறைவனை வழிபட்டாலும் இறைவன் ஒன்று தான்! என்பது வேத வாக்கியம்! அதுவே ஸ்ரீ கிருஷ்ண வாக்கியமும், அந்த ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சத்ய சாயியாக அவதரித்த போது அவர் மொழிந்ததும் மற்றும் அனுபவம் தருவதும் அதே வாக்கியமே! சர்வ சத்தியமான வாக்கியம் அது! வெறும் வாக்கியம் மட்டுமல்ல ஆன்மீக வாழ்வியல் மெய்யுணர்வே அதில் அடங்கி இருக்கிறது!


(Source : Sri Krishna Sri Sathya Sai | page : 178 - 183 | author : Dr J. Suman Babu ) 


"நீ ஹிந்து மதத்திற்கே மாறி விடு!" என்று பாபா அந்த அமெரிக்க பெண்மணியிடம் சொல்லவே இல்லை! அவள் மாறவா? என்று கேட்டும் மௌனம் சாதித்தார்! அந்த மௌனம் சம்மதத்திற்கானது அல்ல! எம்மதமும் சம்மதமான பாபாவே பரப்பிரம்மம் என்பதற்கான ஆன்மீக செயல்பாடு அது! பாபா வெறும் மத குருமார் அல்ல... எல்லா மதங்களுக்கும் யார் இலக்கோ ? அந்த இறைவனே சாட்சாத் ஸ்ரீ சத்ய சாயி அவதாரம்! அதையே தான் ஸ்ரீ கிருஷ்ணராக இருக்கையிலும் பாபா தனது கீதையிலும் வலியுறுத்துகிறார்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக