மனிதர்கள் உணர்ந்தாலும் உணராவிட்டாலும் ஒவ்வொரு மனிதரும் கடவுளின் சொரூபமே! மனிதருக்கு விளைகின்ற இன்பமும் துன்பமும் தனிப்பட்ட உணர்தலுக்கானது மட்டுமல்ல.. அடுத்தவர்களின் இன்ப துன்பங்களைப் புரிந்து கொள்வதற்காகவும் தான்! இன்னும் சொல்லப்போனால்... ஒவ்வொரு மனிதரும், தாம் பெற்றிருக்கும் உடல்.. பிறருக்கு சேவை செய்வதற்காகப் பெற்ற வரமாகக் கருத வேண்டும் என்று வேதமும் "பரோபகாரார்தம் இதம் சரீரம்" என்று பிரகடனம் செய்கிறது! துரதிர்ஷ்டவசமாக, இன்று மனிதனுக்கு சேவை என்றால் என்ன என்றே தெரியவில்லை. மனிதர்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு செயலும் வணிக நோக்கத்திலேயே செய்யப்படுகிறது. மனிதர்கள், ஏதாவது ஆதாயம் இருந்தால் ஒழிய... ஒருவரை சந்தித்து சிரித்துப் பேசி நலம் விசாரிப்பதைக் கூட பயனற்ற காரியமாக கருதத் தொடங்கிவிட்டனர். 20ம் நூற்றாண்டில்... மனித வாழ்க்கைக்கு அடிப்படையான.. உணவு, நீர் மற்றும் மருத்துவம் ஆகிய மூன்றுமே உச்சகட்ட வணிகமயம் ஆகிவிட்டது. அப்படியே போனால்.. மனிதன் மிருகநிலைக்கு எளிதில் தள்ளப்பட்டு மீண்டும் பல உலக யுத்தங்கள் வெடிப்பது நிச்சயம் என்ற சூழ்நிலையில் தான் இறைவன் பூர்ணாவதாரம் ஸ்ரீ சத்யசாயியாக பூமிக்கு வந்தார்.
நீர், கல்வி மற்றும் மருத்துவம் என்கிற மூன்று அடிப்படை விஷயங்களையும் உயர்தரத்தில், பாரபட்சமின்றி அனைவருக்கும் இலவசமாகத் தருவதற்கு சங்கல்பித்தார். "மருத்துவத்தை வணிகமயமாக்கக் கூடாது. மருத்துவர்கள் தியாக உணர்வோடு ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும்!" என்று வலியுறுத்தியதோடு நில்லாமல்.. யாருமே கனவிலும் நினைத்துப் பார்க்கவியலாத தரத்தில், இலவச மருத்துவ சேவையை, உலகத்துக்கே முன்னுதாரணம் ஆகும்படி வழங்கிகினார். 1990ம் ஆண்டு நவம்பர் 23ம் நாள், பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா... இன்னும் ஒரே ஆண்டில், 1000 கோடி ரூபாய் செலவில் இலவச மருத்துவமனை துவங்கப் போவதாக அறிவித்தபோது... உலகமே வியப்பில் ஸ்தம்பித்துப் போனது! இன்றுவரை புட்டபர்த்தி மற்றும் பெங்களூரு ஒயிட்ஃபீல்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில், இலவச ஆபரேஷன்களே லட்சக்கணக்கில் நிகழ்துள்ளன! சுவாமியை முன்னுதாரணமாகக் கொண்டு எத்தனையோ இலவச மருத்துவமனைகளும் மருத்துவ சேவைகளும் நாளுக்குநாள் வளர்ந்து வருவதை நாமும் காண்கிறோம். உலகமே வியக்கும் இத்தகைய மருத்துவ சேவைத் திட்டங்களுக்கெல்லாம் ஒரே காரணம் சுவாமியின் தன்னலமற்ற அன்பே ஆகும். அடிப்படை ரோடு மற்றும் பேருந்து வசதிகள் இல்லாத காலத்திலேயே சுவாமி, புட்டபர்த்தியில் ஒரு பொது மருத்துவமனையை நிறுவி இலவசமாக மருத்துவ உதவிகளை வழங்கினார் என்பது இங்கே குறிப்பிடத் தகுந்தது! அத்தகைய ஆரம்பகால பொக்கிஷ சேவைப்பணியில் பங்குபெற்ற சாயிசேவகர் டாக்டர் B சீதாராமையாவின் அனுபவங்களை புண்ணியாத்மாக்கள் வரிசையில் காண்போம்.
🌷டாக்டர் பிக்கின சீதாராமையா:
1950களின் மத்தியில், சுவாமியைப் பற்றி முதன்முதலாக.. தனது தங்கை வெங்கடசுப்பம்மா மூலமாக கேள்விப்பட்டார் டாக்டர் சீதாராமையா. பாபாவைப் பற்றிய தனது தங்கையின் விவரிப்புகளால் ஈர்க்கப்பட்டு அவரை சந்திப்பதில் ஆர்வம் கொண்டார். ஒரு சிவராத்திரி நிகழ்வின்போது புட்டபர்த்திக்கு வருகை புரிந்த சீதாராமையாவுக்கு பாபாவின் அருட்கடாக்ஷம் உடனே அமையப் பெற்றது. முதல் பயணத்தின் போதே சுவாமியுடன் கலந்துரையாடும் அற்புத சந்தர்ப்பமாக "இன்டெர்வியூ" அவருக்கு அமைந்தது. அந்த நேர்காணலில்... சுவாமி தனது அன்பை மட்டுமல்லாமல்... வேறுயாருமே அறிந்திராத ஜென்ம ரகசியங்களையும் அவருக்கு வெளிப்படுத்தினார். அன்பாலும் ஆச்சர்யத்தாலும் ஸ்தம்பித்துப்போன டாக்டர் சீதாராமையா அந்தக் கணமே.. பாபாவே இறைவனின் மனித அவதாரம்! என்பதை பரிபூரணமாக உணர்ந்தார்.
டாக்டர் சீதாராமையா ஆந்திராவின் கோணசீமா பகுதியைச் சேர்ந்தவர். கோதாவரி நதியினால் மூன்றுபுறமும் சூழப்பட்ட பகுதியாதலால் கோண-சீமை என்று அழைக்கப்படும் பிரதேசம். புட்டபர்த்தியில் இருந்து ஏறத்தாழ 750 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரதேசம். பாபாவின் மீது உருவான ஸ்திரமான நம்பிக்கை மட்டுமே அவரை புட்டபர்த்திக்கு அடிக்கடி வரவழைத்தது. தொழில்ரீதியாக அவர் ஒரு புகழ்பெற்ற மருத்துவராக இருப்பினும், ஆழமான ஆன்மீகத் தேடலைத் தன்னகத்தே கொண்டிருந்தார். அன்றைய மதராஸில் பிரசித்திபெற்ற அரசாங்க மருத்துவராக, அறுவை சிகிச்சை நிபுணராக சேவையாற்றி ஓய்வுபெற்றவர். தனது பணி ஓய்வு ஆண்டுகளை, ஆன்மீக முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தவே 1955ம் ஆண்டு… அவர் புட்டபர்த்திக்கு குடியேறினார்.
🌷 மருத்துவமனை மேலதிகாரி:
புட்டபர்த்தி கிராமத்தில்... ஸ்ரீ சத்யசாயி மருத்துவமனை கட்டிடத்திற்கான அடிக்கல் 1954ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி நாட்டப்பட்டது. ஆயினும் மருத்துவமனைக் கட்டிடம் 1956 தசராவின்போது நிறைவுற்றுத் திறக்கப்பட்டது. ஆனால் மருத்துவ சேவைகள் என்பது அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே சிறப்பான முறையில் நடந்து வந்து கொண்டிருந்தது. மருத்துவமனையின் திறப்பு விழாவிற்கு 15 நாட்களுக்கு முன்பாக, அதுவரை பல முக்கிய சேவைகள் செய்து வந்த டாக்டர் சுப்பாராவ் என்பவர் இறந்துவிடுகிறார். அந்த நிகழ்வைத் தொடர்ந்து பாபா, டாக்டர் சீதாராமையாவை அழைத்து, "நீயே வரப்போகும் இந்த மருத்துவமனைக்கு சுப்பரின்டென்டென்டாகப் பொறுப்பேற்க வேண்டும்!" என்கிறார். ‘சுவாமி தங்கள் அருகாமையில் அமைதியான முறையில் எனது ஆன்மீக சாதனைகளைத் தொடரவே புட்டபர்த்திக்கு குடியேறினேன்’ என்று தனது சங்கடத்தை வெளிப்படுத்தினார் டாக்டர் சீதாராமையா. “பங்காரு... இந்த சந்தர்ப்பம் உனது பேரதிர்ஷ்டம் என்பதை உணர முயற்சி செய்! நானே உனக்குள் இருந்து இந்த பணிகளைச் செய்வேன்! எனது தெய்வீகப் பணித்திட்டத்தில் நீ ஒரு கருவியே!” என்று அவருக்கான பிரத்யேகப் பிரகடனத்தைச் செய்தார் பாபா. தான் கொடுத்த வாக்கிற்கேற்ப பாபா, தினம்தோறும் மருத்துவமனைக்கு விஜயம் செய்தார். சில சமயங்களில்.. நீங்கள் கொஞ்சம் ஓய்வெடுங்கள் என்று சொன்ன வண்ணம்... சுவாமியே நோயாளிகளிடம் பேசி அவர்களுக்கு வைத்தியக் குறிப்புகளையும் வழங்கினார். சுவாமியின் வருகையும், மருத்துவ சேவை குறித்த சிறப்பு கவனமும் டாக்டர் சீதாராமியாவிற்கு அளப்பரியா ஆனந்தத்தைக் கொடுத்தது.
🌷 ஸ்ரீ சத்யசாயி இலவச மருத்துவ சேவைகள்:
புட்டபர்த்தி பொது மருத்துவமனையில்... ஆரம்பகாலத்தில் ஒரே ஒரு தளம் மட்டுமே. அதில் பெரிய மத்திய அறை, ஆண் மற்றும் பெண் நோயாளிகளைப் பிரிக்க நடுவில் ஒரு பெரிய திரை. பெண்கள் பிரிவுக்கு அருகில் பிரசவத்திற்காக ஒரு சிறிய அறை இருந்தது. இதை அடுத்து உள்நோயாளிகளுக்கான நான்கு படுக்கைகளுடன் கூடிய பெண் வார்டு இருந்தது. இதேபோல், ஆண்கள் பகுதிக்கு அருகில் ஒரு மருந்தகம் இருந்தது, அதன் ஜன்னல் வெளிப்புறமாக இருந்தது. அதனை அடுத்து ஆண்களுக்கான வார்டு இருந்தது
நோயாளிகள் மற்றும் ஏழைகளுக்காக பாபாவின் கருணை மருத்துவமனைக் கட்டிடத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. மருத்துவமனைக்கு ஒரு வேனைக் கொடுத்தார் சுவாமி, அதில் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் ஒவ்வொரு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று மருத்துவமனைக்கு வர இயலாதவர்களைச் சென்றடைவார்கள். இந்த நடமாடும் மருத்துவ சேவையானது, புட்டபர்த்தியைச் சுற்றியிருந்த கிராம மக்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவியது.
அன்று, தனது கருணையை ஒரு சிறிய மருத்துவமனைக் கட்டிடமாக வெளிக்கொணர சத்யசாயி பகவானுக்கு இரண்டு ஆண்டுகள் பிடித்தன என அறிகிறோம். ஒரு 35 ஆண்டுகாலம் கழித்து... அதே அவதாரம் 150 ஏக்கர் நிலப்பரப்பில் 1000 கோடி ரூபாய் செலவில், விமான நிலையத்துடன் கூடிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை வெறும் 11 மாதங்களில் கட்டினார் என்பதையும் அறிகிறோம். இறைவனின் பணி ஆரம்பத்தில் வேகம் குறைந்ததாகவும் சிறியதாகவும் தென்பட்டாலும், இறுதியில் உலகையே வியக்க வைக்கும் வண்ணம் மாபெரும் அற்புதமாக நிறைவுறும் எனும் உண்மை இங்கே விளங்குகிறது.
டாக்டர் சீதாராமையா அனுபவித்த, குறிப்பாக... மருத்துவம் தொடர்பான பாபாவின் மகிமைகளை, பல சுவாரஸ்யமான சம்பவங்களை, படிப்பினைகளை பகுதி-2ல் காணலாம்.
தீயகர்மா என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது நோய்களே. நோயின் தாய் பாவ கர்மாவே! ஆனாலும் நோயினால் விளையும் அவதி என்பது அவரவர் பக்குவத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. இறைபக்தி நிறைந்தவர்கள், தாம் அனுபவிக்க வேண்டிய எந்தவித நோயையும் சகித்துக் கொண்டு, அதை நினைத்து மனதாலும் அவதியுறாமல் எளிதாகக் கடந்துவிடுகிறார்கள்! அப்படிப்பட்ட நோயுறும் சூழ்நிலை என்பது கிட்டத்தட்ட எல்லோருக்குமே ஏற்படக் கூடிய ஒன்றே. இத்தகைய நோயுறும் சூழலில்... மனம் தளர்ந்து அநீதி வழி வாழ்கையைச் செலுத்தாமல் இருப்பதற்கு அவர்களுக்கு (குறிப்பாக ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும்), தக்க சமயத்தில் உதவி வழங்குவது மிகவும் அவசியம். அத்தகைய உதவியைச் செய்யவே பகவான் பாபா தனது சேவைத் திட்டங்களிலேயே பெரியதாக மருத்துவ சேவையை முன்வைத்து உலகுக்கு வழிகாட்டுகிறார். இந்த மாபெரும் சேவையின் ஆரம்பகாலத்தில் சுவாமிக்கு அருகிலிருந்து பங்காற்றிய டாக்டர் சீதாராமையாவின் அனுபவங்கள் எண்ணற்றவை!
🌷சுவாமியின் சிறந்த கருவி: எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத, கிராமங்கள் மட்டுமே சூழ்ந்த ஒரு சிற்றூரில், உலகின் பல்வேறு பிரதேச மக்களும் வந்துசெல்லும் இடமாகிய, புட்டபர்த்தியில்... மருத்துவமனை என்பது இன்றியமையாத ஒன்று என்பதை பகவான் தீர்க்கமாக அறிந்திருந்தார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம், பாபாவை தரிசித்தபின் ஏற்படும் ஆனந்தத்தினால் உந்தப்பட்ட பக்தர்கள் தன்னிச்சையாக மேற்கொண்ட சிரமதானத்தினால் (இலவச கட்டிட வேலையினால்)... அப்படியொரு கட்டிடம் உருவாகியிருந்தது. டாக்டர் சீதாராமையா, ஆரம்பத்தில் இருந்தே... இந்த சேவைகளை நேரடியாக அருகிலிருந்து பார்த்தபடியால்... பின்னாளில் தாம் அங்கே மருத்துவராக சேவை செய்யும்போது சளைப்படையாமல் சேவை புரிந்தார். சில சமயங்களில், தொடர்ந்து பல மாதங்களுக்கு... மாற்று டாக்டர்கள் யாரும் இல்லாமல், சுவாமியின் ஒரு சிறந்த கருவியாக, டாக்டர் சீதாராமையா தனியாகவே சேவையாற்றுவார். மற்ற ஊர்களில் இருந்து மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள்... பாபாவின் மீதுள்ள நம்பிக்கையினால், புட்டபர்த்திக்கு வந்து வைத்தியம் செய்து கொள்வது சகஜமாக இருந்தது. வெளிநாட்டில் இருந்தும்கூட, பிரசித்தி பெற்ற பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களாலும் கூட குணப்படுத்தவே முடியாதவை என்று நிராகரிக்கப்பட்ட நோய்களும், இந்த மருத்துவமனைக்கு வந்து ஆச்சர்யப்படும் வகையில் குணமாகின. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு தனி ஆளாக... மருத்துவ பரிந்துரை வழங்கினாலும், ஒருபோதும் அந்த மருத்துவமனையில், நோயாளிகளுக்கு "உதவ முடியாத சூழ்நிலை" என்ற நிலையே வரவில்லை. ஏராளமானவர்களுக்கு உற்சாகத்துடனும் ஆர்வம் குன்றாமலும் சிகிச்சை அளிக்க முடிந்ததென்றால்... அதற்கு சுவாமியின் கிருபையே காரணம் என்று கூறுவார் டாக்டர் சீதாராமையா.
🌷கனவில் அறுவை சிகிச்சை:
அந்த மருத்துவமனையில்... டாக்டர் சீதாராமையாவின் மருத்துவ அறிவியலுக்கு சவால் விடும் வகையிலும்... ஆன்மீக சக்திக்கு ஆதாரம் அளிக்கும் விதத்திலும்… சுவாமி, நூற்றுக்கணக்கில் அதிசயங்களை நிகழ்த்தினார். பம்பாயில் ஒரு ஜவுளி ஆலையில் வேலை பார்த்து வந்த எல் தங்கவேலு என்ற 40 வயது மனிதர், மலக்குடலில் புற்றுநோய் ஏற்பட்டு கடும் துன்பத்திற்கு ஆளானார். தங்கவேலுவின் முதலாளி, அதன் வைத்தியத்திற்கென அவரை சுவிட்சர்லாந்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்த மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றனர். பிறகு பாபாவைப் பற்றி கேள்விப்பட்டு, அவருடைய ஆசிர்வாதத்திற்காக பிரசாந்தி நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். பகலில், புட்டபர்த்தி மருத்துவமனைக்கு சென்று சில வலிநிவாரணி மருந்துகளை மட்டுமே பெற்றனர். பின்னர், தங்கவேலு பிரசாந்தி நிலையத்தில் உள்ள ஒரு கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, பாபா அவரது கனவில் வந்தார். கனவில் பாபா, கையில் கூர்மையான மருத்துவக் கருவியுடன் தோன்றி அவருக்கு அறுவை சிகிச்சை செய்தார். தத்ரூபமான அந்த அதிசயக் கனவின் முடிவில் கண்விழித்த தங்கவேலுவுக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது. ஏனென்றால் கண்விழித்தபோது, அவரது உடலிலும் ஆடைகளிலும் இரத்தக் கறைகளைக் கண்டார். அதேசமயத்தில்... அவரது வலி நீங்கி மிகவும் நிம்மதியாக உணர்ந்தார். தான் கண்டா கனவின் ஒரு காட்சி நிஜத்தில் நிகழ்ந்து... தனது புற்றுநோய் நீங்கப் பெற்றதை எண்ணி எண்ணி வியந்த தங்கவேலு... இந்த பேரதிசய நிகழ்வு மற்றவர்களுக்கும் பாபாவின் மகிமையை புரியவைக்க வேண்டும் என்று டாக்டர் சீதாராமையாவுக்கு 'கனவில் நிகழ்ந்த அறுவை சிகிச்சை' அற்புதத்தை கடிதமாக எழுதியனுப்பினார்.
🌷சுவாமியின் மகிமைகளுக்கு சாட்சி:
ஒருமுறை, மைசூரில் இருந்து முப்பது வருடகால முடக்கு வாத நோயால் அவதியுறும் ஒரு பக்தர்... இறுதியில் சிறுநீரகமும் பழுதடைந்து, கடுமையான ஜுரத்துடன் புட்டபர்த்திக்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டு இறக்கப்பட்ட பாபா, டாக்டர் சீதாராமைய்யாவை அழைத்து சில மருந்துகளை அந்த நோயாளிக்கு இன்ஜெக்ஷனாக கொடுக்கும்படி பரிந்துரைத்தார். அல்லோபதி, ஆயுர்வேதம், ஹோமியோபதி என்று பலவித மருத்துவ முறைகளையும் பல ஆண்டுகளாகப் பின்பற்றித் தோல்விகண்டிருந்த அந்த நோயாளி... பாபாவே தனக்கு வைத்தியம் செய்ய வேண்டும் என்றும் வேறெந்த வைத்தியமும் தனக்கு வேண்டாம் என்றும் கெஞ்சினார். உடனே பாபா கருணையுடன் தனது அங்கயசைப்பில் ஒரு சிறிய பாட்டிலை வரவழைத்தார். அதில் இருந்த மருந்தில் இரண்டு சொட்டு நீருடன் கலந்து, நாளுக்கு இருமுறை என்ற முறையில் குடித்து வரும்படி கட்டளையிட்டார். பத்தே நாட்களில் நடக்கத் தொடங்கிய அந்த நோயாளி பதினைந்தே நாட்களில் பூரணமாகக் குணமடைந்தார். டாக்டர் சீதாராமையாவின் மருத்துவ அறிவின்படி மனிதர்களின் எந்த மருந்தும் சிகிச்சையும்... அத்தனை வேகத்தில் குணப்படுத்தியிருக்க இயலாது.
ஒரு மருத்துவராக, அவரால் அறிவியலை உபயோகித்து விளக்கம் அளிக்க முடியாத வகையில்.. எண்ணற்ற நோய்கள் குணமாகின. தில்லியின் மொராதாபாதைச் சேர்ந்த ஒரு மனிதர் நாக்கில் புற்றுநோய் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகாலம் அங்கே வைத்தியம் செய்தும் இந்தப் பலனும் இல்லாமல் போகவே, புட்டபர்த்திக்கு வந்து சேர்ந்தார். பாபாவை தரிசனம் செய்தபின்னர் மருத்துவமனைக்கு சென்று அங்கே டாக்டர் சீதாராமையாவிடம் தனது திக்கற்ற நிலையை சொல்லிக் கதறி அழுதார். புற்றுநோய்க்கான சிறப்பு சிகிச்சை ஏதும் அந்த சமயத்தில் அங்கெ இல்லாதபடியால்... சுவாமியை மனதில் தியானித்தபடி டாக்டர் அவரது நாக்கில் கிளிசரின் போரிக்-கைத் தடவி விட்டு, சில பி-காம்ப்ளெக்ஸ் மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பினார். அந்த பக்தரும் புட்டபர்த்தியில் இருந்து பாபாவின் படத்தையும், சில விபூதி பொட்டலங்களை வாங்கி தன்னுடன் எடுத்துக்கொண்டு ஊர் திரும்பிச் சென்றார். ஓராண்டுக்குப் பின்னர் ஒருநாள் அதே பக்தர் டாக்டரைத் தேடி வந்து தன்னுடைய நாக்கின் புற்றுநோய் பூரணமாகக் குணமடைந்ததைக் காட்டினார். மேலும் அது சுவாமியின் செயல் தான் என்பதற்கு ஆதாரமாக தனது வீட்டிலுள்ள எல்லா தெய்வ படங்களில் இருந்தும் விபூதி உருவாகிக் கொட்டுவதையும் கூறி ஆனந்தத்தைப் பகிர்ந்து சென்றார்.
🌷பாபாவின் பட்டியலிட்டு மாளா அதிசயங்கள்:
குடல் உபாதையால் அவதியுற்ற பெண்மணிக்கு தியானத்தில் காட்சியளித்த பகவான் "உனக்கு வைத்தியம் தேவை இல்லை!" என்றுகூறி குணப்படுத்தியது, தொடையில் கட்டியுடன் காய்ச்சல் ஏற்பட்ட ஒரு மனிதரை, சுவாமி வெறுமனே முதுகில் தட்டி "உனக்கு ஒன்றும் இல்லை!" என்று கூற அது குணமானது, 62 வயதான ஒரு பெண்மணி தனது சர்க்கரை மற்றும் ரெத்த அழுத்தம் சுவாமியின் பார்வையிலேயே குணமானது, ஒரு மாணவனுக்கு கண்மணியில் ஏற்பட்ட கொப்புளத்தினால் ஐம்பது சதவீத பார்வைக் குறைபாடு ஏற்பட்டிருந்ததை, பாபா சந்தித்த கணத்திலேயே குணமாக்கியது, இன்னும் எத்தனையோ வயிற்றுக் கட்டிகள், தலை நோய்கள், டைபாயிடுகள், வயிற்றுப்போக்குகள், மாரடைப்புகள், முடக்குவாதங்கள், புற்றுநோய்கள், விபத்தினால் விளைந்த உடற்சேதங்கள் என்று ஆயிரமாயிரம் நோயாளிகளை சுவாமி குணப்படுத்துவதை பலமுறை முதல் சாட்சியாக கண்ணுற்ற டாக்டர் சீதாராமையா பல சம்பவங்களைத் தனது குறிப்பேட்டிலும் பதிந்து வைத்திருந்தார். அதிசயிக்க வகையில் குணமான பலரின் கடிதங்களையும், பாபா தனக்கு எழுதிய அன்புக் கடிதங்களோடு… தன்னிடத்த்தில் பொக்கிஷமாக வைத்திருந்தார்.
இந்தத் தீவிரமான மகிமைகள் எல்லாவற்றிற்கும் மேலாக, சுவாமி சிலநேரங்களில் குறும்பாக சில லீலைகளை... டாக்டர் சீதாராமையாவிற்கு செய்து காண்பிப்பது உண்டு! பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கச் செல்லும்முன் வேடிக்கையாக டாக்டரிடம் வந்து... "என் டெம்பரேச்சரை (உடல் உஷ்ண அளவு) செக் செய்யுங்கள்" என்று கூறுவார் சுவாமி. பரிசோதித்துப் பார்க்கும்போது சுவாமியின் உடல் உஷ்ணம், தர்மாமீட்டரின் உச்சபட்ச அளவைக் காட்டும்! சிரித்தபடி விலகிச் சென்று தரிசன ரவுண்டுகளின் முடிவில் மறுபடி பரிசோதிக்க சொல்வார்.. அப்போது நார்மல் உஷணத்திற்கு திரும்பி இருக்கும். ஒரு சமயம் இதேபோல இதயத் துடிப்பை பரிசோதிக்கச் சொல்லி அதே வகையிலான அதிசயத்தைக் காட்டிச் சிரிப்பார். கொடிய நோயைத் தீர்க்கும்போதும், இதுபோன்ற குறும்பு லீலைகள் நடத்தும்போதும் சுவாமி ஒரே நிலயில் இருந்தார் என்பதைக் கண்ணுற்ற டாக்டர் சீதாராமையா, தனக்கு... வர்ணிப்புகளில் அடங்காத மேலான ஆன்மீகப் படிப்பினையும் வழங்கப்படுவதை உணர்ந்து திருப்தியுற்றார். சமத்காரம் எனப்படும் மகிமைகளை பாபா செய்வது, 1. மனிதர்களில் சம்ஸ்காரம் எனப்படும் தெய்வீக உயர்மாற்றத்தைக் கொண்டுவந்து, 2. பின்னர் பரோபாகாரம் எனப்படும் "அடுத்தவருக்கு உதவுதல்" என்ற நிலைக்கு முன்னேற்றி, 3. சாஃஷாத்காரம் எனும் முக்திநிலையை மனிதர்களுக்கு அருள்வதற்காகவே! - என்கின்ற பேருண்மையை நன்கு உணர்ந்து ஆனந்தித்தார்.
டாக்டர் சீதாராமையாவிற்கு.... தனது இறுதி ஆண்டுகளில், அவரது நினைவு குறைந்தாலும் பக்தி பன்மடங்கானது! ஒருமுறை, யாரும் அருகே இல்லாத சமயத்தில் 'படுத்த படுக்கையாக' இருந்த அவருக்கு சுவாமியே வந்து ஆடைகளை மாற்றிவிட்டு உதவியதை இன்றும் அவரது குடும்பத்தினர் நன்றியோடு நினைவு கூறுகின்றனர். அந்த வண்ணம் இருந்த அவர் பல மாதங்கள் கழித்து 1989ம் ஆண்டு ஸ்தூல உடலை விட்டு... இறைவனின் பாதங்களை அடைந்த தினம், பாபா "பீஷ்மாச்சார்யரைப் போல, உத்தராயணம் வரும்வரை சீதாராமையா காத்திருந்து சென்றிருக்கிறான்" என்று கூறி ஆசீர்வதித்தார். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாகவே சுவாமியின் 60வது பிறந்த தினத்தில்... லட்சக்கணக்கில் குவிந்திருந்த மக்களின் முன்பாக "வழிகாட்டிகள்" என்று வருணிக்கப்பட்ட 1.ஸ்ரீமான் N கஸ்தூரி, 2.பூஜாரி கிஷ்டப்பா, 3.ஸ்ரீ கோனம்மா மற்றும் 4. ஸ்ரீ க்ருஷ்ணம்மா இவர்களுடன் டாக்டர் சீதாராமையாவும் கவுரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சுவாமியின் தனது அளப்பறியா கருணையினால், டாக்டர் சீதாராமையாவின் குடும்பத்தை பல தலைமுறைகளாக இன்றுவரை சீரோடும் சிறப்போடும் காத்துவருகிறார் என்பதை சொல்லவும் வேண்டுமா?
✍🏻 கவிஞர் சாய்புஷ்கர்மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக