சகலம் ஸ்ரீ கிருஷ்ண மயம் போலவே சகலம் ஸ்ரீ சாயி மயம் என்கிற ஆன்மீகப் பேருண்மையை வாசிப்பவர்களின் இதயங்களில் ஆழமாகப் பதிகிறபடி இரு அவதாரங்களுமே அதனை எவ்வாறு பிரகடனப்படுத்துகிறார்கள் எனும் ஆச்சர்ய மொழிகள் சுவாரஸ்யமாக இதோ...!
அது துவாபர யுகம்! குழம்பி இருந்த அர்ஜுனரை ஸ்ரீ கிருஷ்ணர் தெளிவுப்படுத்துகிறார்! அர்ஜுனன் பாணம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே அவனுக்குள் ஸ்ரீகிருஷ்ணர் ஞானம் செலுத்துகிறார்... அதுவே பகவத் கீதை! அது சாதாரண நூல் அல்ல.. போர் புரிய வலியுறுத்தும் நூலும் அல்ல.. யாருக்கு என்ன கடமையோ அதை எதிர்பார்ப்பின்றி தவம் போல் செய்யச் சொல்கிற சீர்திருத்த நூல் கீதை! ஸ்ரீ மத் பகவத் கீதை ஒரு துவாபர யுகப் பொக்கிஷம்!
பல்வேறு ஞான ஒளிச் சிதறல்களை அர்ஜுனனிடத்தில் அவர் தெளிக்கிறார்.. அப்படிச் செய்து வருகிற போது ஸ்ரீ கிருஷ்ணர்
"அர்ஜுனா! என்னுடைய தெய்வீக ரூபத்தை பார்! அது பன்முகத்தன்மை வாய்ந்தது! அது நூற்றுக் கணக்கான , ஆயிரக்கணக்கான ரூபங்களாக விரிவடைகிறது! ஆதித்யர்கள், வசுக்கள் , ருத்ரர்கள், அஸ்வினிகள், மாருதிகள் மற்றும் உன்னால் அடையாளம் காண முடியாத பல பாரா முகங்களாகவும் இப்படி எல்லா உருவங்களும் என்னுள்ளேயே அடங்கி இருக்கிறது! என்னுடைய பிரபஞ்சப் பேருருவம் உயிரூட்டப்பட்ட பொருட்களிலும், உயிரூட்டப்படாத பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது! எப்படி நானே எல்லா உருவங்களாக இருக்கிறேன் என்பதை நீ முதலில் கவனி!" என்கிறார்!
(ஆதாரம் : ஸ்ரீ மத் பகவத் கீதை : 11 - 5 ,6,7)
இதைப் போலவே ஸ்ரீ கிருஷ்ணர் தனது கலியுக அவதாரமான ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திலும் இதையே மீண்டும் தெளிவுப்படுத்தி அனைவர் இதயத்திலும் ஞானம் பாய்ச்சுகிறார்!
"ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும் நீங்கள் என்னையே வழிபடுகிறீர்கள்! நானே உங்களுடைய பிரார்த்தனையை எல்லாம் உள்வாங்குகிறேன்! எல்லாவித யுகங்களின் யாகங்களிலும் நானே அவிர்பாகம் பெறுகிறேன்! உங்களுடைய பூஜையறையில் நீங்கள் வழிபடும் இறை ரூபங்களில் நானே நிறைந்திருந்து, உங்களுடைய பிரார்த்தனைகள் அனைத்தையும் கேட்டு, காலம் கனிந்து உங்களுக்கான பலனை தர நானும் ஆர்வமாய் காத்திருக்கிறேன்!
"ஓ இறைவா! எங்களை கண் திறந்து பார்க்க மாட்டாயா? எங்கள் புலம்பல்களைக் கேட்க மாட்டாயா?" என்று நீங்கள் இதய ஆழத்திலிருந்து கசியவிடுவதை எல்லாம் நானே கேட்கிறான்! என்னுடைய இந்தக் கண்ணாலேயே நான் உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்! என்னுடைய காதுகளாலேயே நான் உங்கள் இதயக்குரலைக் கேட்கிறேன்! நீங்கள் இறைவனை எந்த வடிவத்திலோ அல்லது என்ன பெயர் சொல்லி அழைத்தாலுமே நானே பதில் அளிக்கிறேன்! ஏனெனில் , எல்லா தோற்றங்களும் என்னுடையவையே!"
என்று ஸ்ரீ கிருஷ்ணர் பாபாவாக அவதாரம் எடுத்து நம்மிடையே மேலும் ஆழமாக கீதை ஞானத்தைத் தெளிவுபடுத்துகிறார்!
(Source: Sri Krishna Sri Sathya Sai | Page : 178 | Author : Dr. J. Suman Babu)
எல்லாமே பாபாவே எனும் பேருண்மையை நாம் உணர்ந்து கொள்வதால், பாபாவுக்கு ஏதாவது அதில் தனிப்பட்ட நன்மையா? இல்லை! ஒரு துளி கூட இல்லை! ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணருக்கு இந்த பூமியில் இருந்து எதுவும் தேவையே இல்லை! பாபா அப்படி சொல்வது தன்னை புகழ்ப்படுத்திக் கொள்ள அல்ல... பக்குவமாக அணுகினால் இதில் ஒரு தெளிவு நமக்குப் பிறக்கும்...
"எல்லாமே பாபாவே!" என்கிற போது, நமக்கு யார் மீதும் வெறுப்பு தோன்றுவதில்லை! தன் மதமே புனிதமானது, பிறர் மதம் யானைக்குப் பிடித்த மதம் என்றெல்லாம் சிலர் நினைக்கிற கொடும் நினைவு சாந்தமாகி, சமாதானமாகி, இதயம் சுத்தமாகிறது!
நாம் நேசிப்பதும் பாபாவையே, வெறுப்பதும் பாபாவையே, அப்படி நமது உயிருக்கும் மேலான பாபாவைத் தான் நாம் வெறுக்கிறோம், கோபப்படுகிறோம், குறை சொல்கிறோம் என உணர்ந்து கொண்டால் உடனேயே தீய குணங்களுக்கு எல்லாம் வலிக்காமலேயே தீ வைக்கப்பட்டு, நல்ல குணங்கள் நமக்குள்ளேயே பாபாவால் நிலைநாட்டப்படுகிறது!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக