தலைப்பு

சனி, 4 ஜூன், 2022

1948'ல் சனாதன சாரதியை அனுபவித்துச் சிலிர்த்த கப்பல் பார்த்தசாரதி!

பாபாவின் ஆதிகாலத்து பக்தர்களின் சிலிர்க்க வைக்கும் நேரடி வாக்குமூலங்கள் பற்பல... அதை ஒட்டுமொத்தமாகத் திரட்டினால் பாற்கடலாய் இதயத்தில் அமுத அலையோசையே எழும்... அத்தகைய பக்தர் ஒருவரின் அனுபவங்கள் சுவாரஸ்யமாய் இதோ...


பாபா தன்னை அவதாரம் என பேரறிவிப்பு நிகழ்த்துவதற்கு முன்பே அவர் இறைவனே! பேராற்றல் வடிவினரே... கோவிலுக்குள்ளேயே வராமல் சிவன்கோவில் கருவறையில் தன்னை தரிசிக்க வைத்ததும்... ஒரு காச நோயாளியை சுற்ற வைத்து தனது குரல்வழி பஜனை அதிர்வலைகளால் நொடிப்பொழுதில் காச நோயை குணமாக்கியதும்... காச நோயை மட்டுமல்ல மனதின் காசு நோயையும் பாபாவே பக்குவம் தந்து குணப்படுத்துகிறார்! தம்பிராஜு அவர்கள் இல்லத்திற்கு வந்து பசிக்கிறது எனக் கேட்டு இருக்கின்ற சிறிதளவு உணவே போதும் என தன்னோடு வந்திருந்த பலபேருக்கு போதும் போதும் என்ற அளவிற்கு உணவு வழங்க வைத்ததும் பாபா தனது பேரவதார பேரறிவிப்புக்கு முன் நிகழ்த்தியதே... பாபா ஸ்ரீ ஷிர்டி சாயியாக ஸ்ரீ சத்ய சாயியாக ஸ்ரீ பிரேம சாயியாக திருவுடல் எடுத்து அவதரிப்பதற்கு முன்னும் பின்னும் இறைவனே...! அந்தத் திருவுடல் என்பது பாபாவின் பல கருவிகளில் ஒரு கருவியே...! கட்டுமரம் - கப்பல்- ஓடம் என வாகனங்கள் வேறு...  பயணம் ஒன்றே என்பது போல்.. உருவங்கள் வேறு இறைவன் ஒன்றுதான்! இப்படி தனது பேரவதாரப் பேரன்பில் பல கோடி பக்தர்கள் பாபாவை உணர்ந்திருக்கின்றனர்...‌


அந்த வரிசையில் கப்பல் கம்பெனி ஒன்றில் பாகஸ்தராக விளங்கிய பார்த்தசாரதி அவர்கள்... 1948ல் பாபா சென்னைக்கு விஜயம் செய்திருக்கிற போது பார்த்தசாரதி வீட்டு அருகே தங்கி இருந்தமையால்... பார்த்தசாரதி சனாதன சாரதியை முதன்முதலில் தரிசிக்கிறார்! அந்த முதல் தரிசனம்.. பாபாவின் பேரன்பின் அதிர்வலைத் தழுவுதல்... அதனால் ஆட்கொள்ளப்பட்ட பார்த்தசாரதி குடும்பமே புட்டபர்த்திக்கு வந்து 1 மாதகாலம் தங்குகிறார்... பறவைகள் வேடந்தாங்கல் வருவது போல்... பக்தர்கள் பிரசாந்தி நிலையம் வருவது! அங்கே தங்கிய அருள் ததும்பும் நாட்களில் பார்த்தசாரதி அனுபவித்தவை ஏராளம்... பாபாவின் கவின் மிகு குவிந்திருக்கும் கேசத்தைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றுவதைக் கண்டு சிலிர்த்துப் போகிறார் பார்த்தசாரதி... பாபாவின் புருவமத்தியிலிருந்து ஒளிக்கதிர் வீசுவதையும் நேரிலேயே கண்டு வியந்து போகிறார்... பாபா இறைவனே என உணர்ந்து கொள்கிறார்...! அந்நாட்களில் பாபா சிரிப்பும் வேடிக்கையுமாக பக்தர்களோடு கலந்துரையாடுகிறார்.. இது தான் சகஜ ஆன்மீகம்... சகஜ நிலையிலேயே மனம் அடங்கி ஆன்மாவோடு ஒன்றுகிறது! "ஓம் ஸ்ரீ சாயி சுலபப் பிரசன்னாய நமஹ" என்ற பாபாவின் 108 நாமங்களில் ஒன்று இதனையே வலியுறுத்துகிறது!


நாள்தோறும் பாட்டுகள் , பஜனைகள் முதல் பல அற்புதங்கள் பாபா செய்து காட்டி... பக்தர்களோடு ஆன்மீகப் பயணங்கள் செல்வது வரை அநேக திருச்செயல்கள் நிகழ்கின்றன! கொடுத்து வைத்தவர்கள் பாபாவின் அருகாமையை கொடுத்து வைத்திருந்தனர்... அப்படி செல்கிற பயணங்களில் பாபா மூடிய பாத்திரத்தை தட்டி சுடச்சுட பதார்த்தங்கள் வரவழைத்தல் பார்த்தசாரதி முதல் வந்திருக்கும் அனைவருக்கும் வழங்குகிறார் பாபா! புட்டபர்த்தியில் மட்டும் ஒரே ஒரு கற்பக மரமிருக்கிறது என நினைத்தால்... அப்படி இல்லை.. பயணங்களில் பாபா செல்கிற போது.. திடீரென நிறுத்தி அங்குள்ள மரங்களை கற்பக மரமாக்கிக் கூட வந்திருப்பவர்களுக்கு  வேண்டியவற்றை வழங்குகிறார்... ஆக புட்டபர்த்தியில் இன்றளவும் இருப்பது பாபா சிருஷ்டிகளுக்கு கருவியாக இருந்த ஒரு சாட்சி மரமே தவிர பாபா எந்த மரத்தையும் கற்பக மரமாக்குபவர்.. எந்த மனிதனையும் தனது கருவியாக்குபவர்... சாலை ஓர மரங்களை பாபா கற்பக மரங்களாக மாற்றி சிருஷ்டித்த பொருட்களுக்கு சாட்சியானவர்களில் பார்த்தசாரதியும் ஒருவர்!


ஒருமுறை ஆஸ்துமா நோயினால் தவித்துக் கொண்டிருந்த பார்த்தசாரதிக்கு பாபா ஒரு ஆப்பிள் பழத்தை சிருஷ்டித்துக் கொடுத்து உண்ணச் செய்கிறார்... அது முதல் ஆஸ்துமா அஸ்தியாகி காற்றோடு கரைந்து காணாமல் போகிறது! அது போல் அவரது தாயாருக்கு ஒருமுறை கண்ணில் காட்ரேக்ட்... பாபா ஒரு வெண்துணியில் மல்லிகைப் பூக்களை வைத்து அவர்களின் கண்களில் கட்டிவிட்டு தினசரி பஜனையிலும் கலந்து கொள்ளச் சொல்கிறார்... அந்த அம்மையாரும் பக்தி சிரத்தையோடு கலந்து கொள்கிறார்...தினந்தோறும் பஜனையின் பேரதிர்வலைகள்... மகிமை மல்லிகையின் இதம்... பாபாவின் கருணைப் பதம் ... 10 நாட்கள் கடந்து போகிறது... பிறகு கட்டைப்பிரிக்கிறார் பாபா... காட்ரேக்ட் மல்லிகை மலரிலிருந்து மணம் பிரிந்து போவது போல் பிரிகிறது... பார்வை மிகத் தெளிவாகிறது... 10 ஆண்டுகள் கடந்து பார்த்தசாரதியின் தாயாரும் சனாதன சாரதியான பாபாவின் பாதங்களில் இறுதியாக கலந்து போகிறார்! இப்படி வலியே இல்லாமல் வைத்தியம் செய்வது பாபாவின் பெருங்கருணையே!

பாபாவே அருட்பெருஞ்சோதி!

பாபாவே தனிப்பெருங்கருணை!


(ஆதாரம் : கருணை பொழியும் ஸ்ரீ சத்ய சாயி / பக்கம் :36 / ஆசிரியர் : பி.எஸ் ஆச்சார்யா ) 


பாபா பேரற்புதம் புரிவது என்பது அவரது சுபாவம்... பாபா இறைவன் என்பதால் இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமே இல்லை... ஆச்சர்யங்கள் நம்மை சரணாகதிக்கே அழைத்துச் செல்கிறது... அப்படி செல்வதே சரியான வழிமுறை! பாபா மேலான ஒவ்வொரு வியப்பும் ஒவ்வொரு ஆச்சர்யமுமே "பாபா நீயே இறைவன்... நீ ஒருவரே கதி... உன் பாதமே எனது ஒரே புகலிடம்!" என உருகி பாபாவிடம் கரைந்து போவதே நமது மற்றும் பிறர் அனுபவங்களை உணர்ந்து சிலிர்ப்பதற்கான மிகச் சரியான அளவுகோல்! நம்மை தன்னோடு சேர்த்துக் கொள்வதற்கே சாயி அவதாரங்கள் மூன்றாக தொடர்கின்றன...!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக