ஒரு சம்பவம் வழி ஆன்மீகம் விளக்குவது சனாதனம்! நினைவை விட்டு அகலாமல் இருக்க தார்மீகக் கதை வழி தர்ம விதை தூவுவது இறையியல் மரபு! அதனை பேரிறைவன் பாபா கையில் எடுக்கிறார்! தனது ஞானப் பொழிவில் , அறம் பொருளின் அர்த்தம் விளங்க குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லி எளிமையாக புரிய வைக்கும் சாயி யுக்தி இது! அப்படி அற்புதச் சம்பவம் வாயிலாக , நன்நெறியே கோயிலாக, அவர் ஆன்மீகம் தூவிய ஆன்ம வீரிய சாயி விதைகள் இதோ...!
📝 1. சரணாகதி:
சரணாகதி என்றால் எல்லாவற்றையும் கடவுளின் முடிவுக்கே விட்டுவிடுவது! ஒரு சமயம், ஒரு பிராமணர் பல பேர் துணி துவைத்துக் கொண்டிருந்த ஓர் ஆற்றங்கரையை தாண்டிப் போய்க் கொண்டிருந்தார்! அங்கிருந்தோர் அவருடைய தோளிலே இருந்த அழகான புதிய பட்டுச் சால்வையைக் கண்டார்கள்! திடுகிட்டுப் போனார்கள், ஒரே அதிர்ச்சி! "அய்யோ! இது அரண்மனை சால்வை ஆயிற்றே, இதை நம்மிடம் துவைக்க கொடுத்திருந்தார்கள், அது தொலைந்து போனது என்று தானே நினைத்திருந்தோம்! ஓ அதை இவன் தான் திருடி இருக்கிறானா? சும்மா விடக் கூடாது இவனை!" என்று அந்த அந்தணர் மேலே பாய்கிறார்கள் துணி துவைப்பவர்கள், அடிக்கிறார்கள்! துணி துவைப்பது போல் அந்த அந்தணரை துவைத்து எடுக்கிறார்கள்! அப்போது அந்த பிராமணர் "நாராயணா நாராயணா!" என்று ஓலம் இடுகிறார்!
உடனே வைகுந்தத்தில் இருந்த ஸ்ரீ மன் நாராயணர் அந்த பிராமணர் அடி வாங்குவதை பார்த்து உடனே எழுந்து கீழே பூமியை நோக்கி இறங்க எத்தனிக்கிறார், அடுத்த நொடி .. அப்படியே தன்னையே ஆற்றுப்படுத்திக் கொண்டே, போய் தன் பாம்பணையிலேயே வந்து அமர்ந்து விடுகிறார்! எல்லாவற்றையும் கவனித்த ஸ்ரீ லஷ்மி தேவி , "ஏன் இவ்வாறு செய்கிறீர்கள், உங்கள் பக்தர் தானே, நீங்களே சென்று காப்பாற்ற வேண்டியது தானே!" என்று கேட்க.. நீயே அந்த வேடிக்கையைப் பார், என்று நாராயணர் தனது ஆள்காட்டி விரலால் கை காட்டுகிறார்! கீழே பூமியைப் பார்த்த ஸ்ரீ லஷ்மி தேவி, "என்ன இப்படி நடக்கிறது?" என்று அதிர்ச்சி அடைகிறார்!
"போக்கிரிகள் மத்தியில் மாட்டிக் கொண்ட அந்த ஏழை பிராமணனுக்கு உதவ விருப்பினேன்! ஆனால் அவனோ "அடிக்கு அடி - உதைக்கு உதை!" என்று திருப்பிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டான், பார்த்தாயா? எனவே என்னுடைய உதவி , இனி அவனுக்கு தேவையில்லை!" என்று ஒரு மர்மப் புன்னகை சிந்தியபடி ஸ்ரீ லஷ்மி தேவியிடம் விளக்கிச் சொல்கிறார் ஸ்ரீம் நாராயணர்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Page : 1 | Author: Sri Sathya Sai Baba)
ஒரு விளைவுக்கு எதிர் விளைவை நாம் புரியாமல் அதையும் பேரிறைவன் பாபாவின் சங்கல்பம் என்று விட்டுவிடுவதே சரணாகதி! அப்போதே சாயி அருள் நம் மீது பொழிகிறது! நாம் செய்பவரல்ல, வெறும் கருவியே என்று உணர்ந்தாலேயே உயர் சரணாகதி நிலை வாய்க்கிறது!
📝 2. நல்லோர் தொடர்பு!
ஒரு மரத்தில் இரண்டு கிளிகள் குடி இருந்தன! அவை இரட்டைப் பிள்ளைகள் போல் தோற்றத்தில் அச்சாக ஒத்து இருந்தன! ஒரு வேடன் அவற்றைக் கண்ணி வைத்துப் பிடிக்கிறான்! பிடித்தவன் விற்க முயற்சிக்கிறான்! அந்த இரண்டு கிளிகளையும் தனித்தனியாக இரண்டு நபர்களிடமும் விற்று விடுகிறான்! ஒருவர் கொடூர உள்ளம் படைத்த கசாப்பு கடைக்காரர்! இன்னொருவரோ வேத பாடசாலை வைத்திருக்கும் ஒரு முனிவர்!
பல ஆண்டுகள் கடக்கிறது! தான் விற்ற அந்தக் கிளிகளின் இருப்பிடத்திற்கு சென்று பார்க்கிறான் வேடன்! பார்த்து அதிர்ச்சி அடைகிறான்! அப்படியே அச்சு அசல் ஒரே தோற்றத்தில் ஒரே குணத்தில் இருந்த கிளிகள் தற்போதோ தலை கீழாக மாறிப் போயிருக்கின்றன...
அந்தக் கசாப்பு கடைக்காரரிடம் வளரும் கிளியோ , கெட்ட வார்த்தைகளை பேசிக் கொண்டிருக்கின்றது... வேத பாடசாலை ஆசிரமத்தில் வளரும் கிளியோ அழகாக வேத மந்திரங்களை ஓதுகின்றது! அந்த விநோதக் காட்சியைப் பார்த்த வேடன் அதிர்ச்சியோடு ஆச்சர்யப்படுகிறான்!
ஆம்!! சூழ்நிலையின் தாக்கம் அவ்வளவு ஆற்றல் வாய்ந்தது! எனவே நல்லோர் நட்பை / தொடர்பை நாட வேண்டும்! நல்லோரின் பாதுகாவல் மிகவும் அவசியம்!!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
வளரும் விதம் வளர்க்கும் விதத்திலும் அடங்கி இருக்கிறது! திருடனிடம் வளர்பவன் திருடனாகவும், ஒரு யோகியிடம் வளர்பவன் யோகியாகவும் அகம் மாறுகிறான்! சாயி பக்தர்கள் நாம் அனைவரும் பேரிறைவன் பாபா வளர்த்து வளரும் குழந்தைகள் என்பதால், நமது வாழ்க்கை நற்குணத்தில் மட்டுமே பரிமளிக்க வேண்டியது அவசியம்!
3. கடவுளை நினைக்க நேரம் ஏது?
டாக்டர் ஜான்சன் ஒரு பிரபலமான ஆங்கிலச் சிந்தனையாளர்! அவரிடம் ஒருவர் ஒரு கேள்வி கேட்கிறார்! அனைவரின் மனதிலும் உறுத்திக் கொண்டிருக்கும் அடிப்படைக் கேள்வியே அது!
"கடவுளுடைய பெயரை இடைவிடாது சொல்வதற்கு, எனக்கு நேரம் கிடைப்பதே இல்லை! என்ன செய்வது? நூற்றுக்கணக்கான பொருள்களோடு நாளும், காலை முதல் மாலை வரை ஏன்? இரவு நெடுநேரம் வரை கூடப் போராட வேண்டியிருக்கிறது!" என்று கூறுகிறார்! அந்தக் கூற்றில் மையமாக இடம் பெற்றிருக்கும் கேள்வியே அனைவர் மனதில் ஊடுறுவி இருக்கும் பொதுமறைக் கேள்வி!
அந்தக் கேள்விக்கான விடையாக அறிஞர் ஜான்சன்
"எப்படி கோடிக்கணக்கான மக்கள் , இந்த பூமியில் தாங்கள் வாழ்வதற்கான இடத்தை கண்டுபிடித்துள்ளார்கள்? இந்த பூமியோ , மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழந்திருக்கிறது! எஞ்சியுள்ள ஒரு பகுதியிலும் ஏராளமான மலைகள் , பாலை நிலங்கள் , அடர்ந்த காடுகள் , பனி படர்ந்த பகுதிகள் நிறைய உள்ளன! இந்த நிலையிலும் , அவர்கள் எப்படி தங்களுக்குரிய இடத்தைத் தேடிக் கண்டுபிடித்துள்ளனர்?" என்று ஒரு கேள்வியை கேள்வி கேட்டவரிடமே கேட்கிறார்!
அதற்கு அந்த நபர், "மனிதன் தான் வாழ்வதற்குரிய இடத்தை முயன்று, வருந்திப் போராடிக் கண்டுபிடித்துவிடுகின்றான்!" என்கிறார்!
அதற்கு டாக்டர் ஜான்சன் "அதே போலத்தான், மனிதனும் எப்படியோ முயன்று வருந்திப் போராடித்தான் ஒரு நாளில் சில நிமிடங்களை வழிபாட்டுக்காகக் கண்டுபிடித்து ஒதுக்கிக் கொள்ள வேண்டும்!" என மிகத் தெளிவாகக் கூறுகிறார்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Page : 1 | Author: Sri Sathya Sai Baba)
தேவையற்ற சிந்தனையில், பேச்சில், கேளிக்கையில் நேரத்தை செலவழிப்பதை விட்டுவிட்டாலே போதுமானது! நேரம் தாராளமாக நமக்கு நிரம்ப நிரம்ப இருக்கிறது! நேரத்தை செலவழிப்பதில் ஒரு கஞ்சனாகவும் , அன்பை செலவழிப்பதில் ஒரு வள்ளலாகவும் பேரிறைவன் பாபா வகுத்த நெறியோடு வாழ்வோமாக!
📝 4. ஆன்மீகத்தில் நேர்மையாக இருங்கள்!
ஆன்மீக உலகில் நீங்கள் மிக நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்! அடியார் போல் நடித்து - பாசாங்கு செய்து உங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றிதீர்கள்!
ஓர் ஊரில் ஒரு பிச்சைக்காரன் இருந்தான்! தனக்கு உணவு கிடைக்க வேண்டி ஒரு வீட்டினை சென்றடைந்தான்! அவன் பரதேசியின் தோற்றத்தில் மிகப் பசியாகவும் இருக்கிறான்! அவ்வீட்டில் இருந்து கடமை உணர்வு மிகுந்த ஒரு மூதாட்டி அவனை அழைத்து "முதலில் நீராடி விட்டு வா! உணவு தருகிறேன்!" என்கிறாள்!
அதற்கு அவன், மிக சாமர்த்தியமாக "ஓ! நான் ஏன் குளிக்க வேண்டும்? கோவிந்தேதி சதா ஸ்நானம்" நான் இப்போது "கோவிந்தா" என இறைவனின் திருப்பெயரைச் சொல்லிவிட்டேன்! அது குளித்ததற்கு சமானம் அல்லவா!" என்று சமாளிக்கிறான்!
அதற்கு அந்த புத்திசாலி மூதாட்டி "அப்படியானால், ராம நாமாம்ருதம் சதா போஜனம், இராம ராமமே உணவுக்கு ஒப்பானது! நானும் உனக்கு இந்த மேற்கோளையே காட்டி, இராம நாமத்தையே உணவாகப் படைத்துவிட்டேன்! எனவே உடனே இங்கிருந்து போய்விடு!" என்கிறாள்!
ஆக, உங்களுடைய அகங்காரத்தையோ , செருக்கையோ வளர்த்துக் கொள்வதற்காக சாத்திரங்களையோ சமய நூல்களையோ பயன்படுத்தாதீர்கள்!
அவை உங்களைப் பணிவுடையவர்களாக , செருக்கற்றவர்களாக ஆக்க வேண்டும்! அதே நேரத்தில் உள்ளத்தில் ஆசை முளைப்பதைத் தடுப்பதாகவும் இருக்க வேண்டும்! உங்களுடைய இயற்கைத் தன்மை தெய்வீகமாகும்! என்ன நடந்திருக்கிறது என்றால், மாயை தனது அழுக்கால் அதை மூடி மறைத்திருக்கிறது!
துணி துவைப்பவர் என்ன செய்கிறார்? உங்கள் துணிகளை வெள்ளையாக்குவதில்லை, அதற்கு பதிலாக அதில் உள்ள அழுக்கை மட்டும் நீக்குகிறார்! அப்போது என்ன நடக்கிறது எனில், அதில் ஏற்கனவே உள்ள அதே வெண்மையே மீண்டும் வெளிப்படுகிறது! அதே போல் மனித மன அழுக்கை, நீதி எனும் சோப்பால் தேய்த்து , பயிற்சி எனும் நீரால் முக்கி எடுத்துத் துவைத்தால் இதயம் சுத்தமாகிறது!
(ஆதாரம் : Oka Chinna Katha | Page : 1 | Author: Sri Sathya Sai Baba)
பாசாங்கினால் (Pretendence) அல்ல பக்தியினாலேயே ஆன்ம பலம் அதிகரிக்கிறது! பேரிறைவன் பாபாவும் அப்பேர்ப்பட்ட பக்திக்கே பாதுகாவலாக விளங்குகிறார்! அந்த பக்தியே இதய சுத்திக்கும் , தெளிந்த புத்திக்கும் வழிவகை செய்கிறது!
📝 5.இறைவன் நினைவு எப்போதும் தேவை!
அஜாமீளாவின் கதையினை கேட்டதால் மன எழுச்சி பெற்ற கடைக்காரர் ஒருவர் இருக்கிறார்! தன்னுடைய இறுதி மூச்சு பிரிகிற சமயத்தில் , கடவுளின் திருப்பெயரை குறுக்கு வழி ஒன்றை பயன்படுத்தி கூறியபடி உயிர் பிரிந்தால் முக்தி வரும் என்று கற்பனை செய்து கொள்கிறார்! அந்தக் குறுக்கு வழியை செயல்படுத்த, தன்னுடைய பிள்ளைகளுக்கு இறைவனின் பல்வேறு அவதாரப் பெயர்களைச் சூட்டுகிறார்!
அவருடைய இறுதி காலமும் நெருங்குகிறது! படுக்கையில் கிடக்கிறார்! மரணம் இந்த நொடியோ... அடுத்த நொடியோ என்றபடி இழுக்கிறது!! அவருக்கோ ஆறு பிள்ளைகள்! ஆறு முறை குறுக்கு வழியை அவர்களை அழைக்கும் சாக்கில் இறைவனின் ஆறு பெயர்களை அழைக்கிறார்! உயிர் பிரியப் போகிறது... இறைவனின் ஆறு பெயரை அழைத்த போதும்.. இறுதியான எண்ணம் ஒன்று வலுக்கிறது.. "இவர்கள் ஆறு பேர் இங்கே இருந்தால், நம் கடையை யார் கவனித்துக் கொள்வது??" என்ற எண்ணம் மனதில் எழுகிறது, அடுத்த நொடியே உயிர் பிரிகிறது!
இங்கே நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும்! அவருக்கு அவருடைய கடையே உயிர் மூச்சாக விளங்கி வருகிறது! கடைசி காலத்தில் கூட, இறைவனின் பெயரை பிள்ளைகளுக்குச் சூட்டி அழைத்தும் கூட, கடைசி நொடியில் கடவுளின் நினைவு வரவே இல்லை! இதையே 'சமஸ்காரம்' என்கிறோம்! இறுதியில் இறப்பு வரும் நொடியில் இறைவனை நினைப்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல!! அதற்கு வெறுப்பில்லா - வன்மம் இல்லா - வலிமையான முனைப்புடன் கூடிய நற்பண்பு தேவை! செருக்கும் பேராசையும் நிறைந்த சூழ்நிலையில் இறைவன் மேல் உள்ள நினைப்பு எழவே எழாது! மரணம் முன்னறிவிப்பு செய்து விட்டா வருகிறது? நொடியில் படம் எடுக்கும் புகைப்படக் கலைஞன் போன்றவனே எமன்! எப்போது புகைப்படம் எடுத்தாலும் உங்கள் முகம் புன்சிரிப்போடு திகழ வேண்டும்! அது போல் எப்போதும் இறைவனின் திருநாமத்தை உங்கள் உதடு உச்சரித்துக் கொண்டிருந்தால் கடைசி காலம் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையே இல்லை!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
ஆன்மீகத்திற்கு வேறெந்த குறுக்கு வழியும் இல்லை - ஒரே வழி - சுயநலமற்ற திடமான பக்தி ஒன்றே! அந்த பக்தியே பேரிறைவன் எனும் வாரணத்திற்கான அங்குசம்! அப்போதே சுரந்து காக்கிறது காவலருள் எனும் பாசாங்குசம்!
📝 6. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி...!
உங்களின் இந்த மனித உடல் இறைவனின் கோவிலாகும்! இறைவனே ஒவ்வொரு உடம்பின் சொந்தக்காரர் ஆகிறார்! இந்த உண்மையை நீங்கள் உணர்ந்தாலும் உணராவிட்டாலும் உடலினுள் கடவுள் குடியமர்ந்துள்ளார்!
நல்ல செயல்கள் செய்வதில் உங்களை ஊக்கப்படுத்துபவரும், தீய செயல்கள் செய்வதிலிருந்து தடுக்க உங்களை எச்சரிக்கை செய்பவரும் இறைவனே!
இறைவனின் அந்தக் குரலை நன்கு உற்றுக் கேளுங்கள்! அந்தக் குரலுக்கு அடி பணியுங்கள்! அப்படி அடி பணிந்தால் உங்களுக்கு எந்த துன்பமும் வந்து சேராது!
ஒரு பெண் தன்னுடைய விலை உயர்ந்த வைர நெக்லஸ் தொலைந்து போய்விட்டதென மிகவும் கவலைப்பட்டு ஓர் இடம் கூட விடாதபடி வீடு முழுக்கத் தேடிப் பார்க்கிறாள்! அது கிடைக்காததால், ஒருவராலும் ஆறுதல் சொல்ல முடியாதவாறு அழுது கொண்டிருக்கிறாள்! பிறகு தற்செயலாக நிலைக்கண்ணாடியின் முன் நின்று பார்த்த பொழுது, ஆச்சர்ய அதிர்ச்சி அடைகிறாள்!
அவளுக்கு போன உயிரே மீண்டும் வந்தது போன்ற சந்தோஷ உணர்வு! ஆம் பல மணிநேரமாய் தேடிக் கொண்டிருந்த அந்த வைர நெக்லஸ் , அவள் கழுத்திலேயே தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறாள்! அது புதிதாக தோன்றவில்லை, எல்லா நேரமும் அவள் கழுத்தில் தான் இருக்கிறது, ஆனால் அதை அவள் கவனிக்காமல் வீடு முழுக்க தேடிக் கொண்டிருந்தாள்!
அது போலவே, கடவுளும்!
நீங்கள் அவரை அறிந்தாலும் அறியாவிட்டாலும் அவர் சதா உங்கள் உடம்பினுள் உள்ளத்தினுள் தான் உறைந்திருக்கிறார்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
சதா நிறைந்திருப்பவர் பேரிறைவன் பாபா! அவரை உணர்தலே நம் அன்றாட வாழ்வின் லட்சியம்! *"அஹம் பிரம்மாஸ்மி"யை நாம் உணர்வதற்காக அவதரித்தவரே பரப்பிரம்ம பாபா!* சாயி சூரியனில் இருந்து வெளிப்படுகிற கிரண கீற்றுகளே நாம்! அத்தகைய பேரிறைவன் பாபாவின் பாதத்தில் நாம் அனுபூதி எய்துவதே ஆன்மா அணிந்து கொள்கிற விபூதி!
📝 7.ஈஸ்வர சங்கல்பம் நடக்குமா?
நான் உங்களுக்கு ஈஷ்வர சங்கல்பம் பற்றியும் , அது எப்படியேனும் நடந்தே தீரும் என்பதைப் பற்றியும் ஒரு கதை சொல்லப் போகிறேன்!
கைலாயத்தில் ஒருநாள் பார்வதி சிவகணங்கள் அமர்ந்து சிவபிரான் ஞான மொழிகளைக் கேட்க ஒரு மண்டபம் கட்ட வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பிக்கிறார்!
ஆனால் சிவனுக்கோ அதைக் கட்ட வேண்டும் என்ற எந்தவித சங்கல்பமும் இல்லை! ஜோதிடர்கள் இதைக் குறித்து ஆராய்கிற போது சனியின் அனுகூலம் இல்லாததால் மண்டபம் கட்டினாலும் எரிந்துவிடும் என்கின்றனர்!
அதை மீறி மண்டபம் பார்வதி தேவியின் வற்புறுத்தலால் கட்டப்படுகிறது!
சனியை சமாதானம் செய்விக்க பார்வதியால் சிவன் அனுப்பப்படுகிறார்! தனது உடுக்கை ஒலி கேட்டால் சனியின் கோபம் தணியவில்லை எனும் சமிஞ்கையை புரிந்து கொண்டு , மண்டபத்தை எரித்துவிடும்படியும் கூறி சனியை நோக்கி விடை பெறுகிறார் ஈஸ்வரன்!
ஈஸ்வர தரிசனம் பெற்ற சனி பரவசப்படுகிறார்! தான் எரிக்க மாட்டேன் எனவும் சொல்லி ஈஸ்வரனை மகிழ்விக்கிறார்! வரம் அளிக்க வந்த சிவனின் தாண்டவத்தில் ஒன்றை கண்ணாற தரிசிக்க வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்! உடனே தனை மறந்து நடனமாடும் சிவன் கையில் இருந்த உடுக்கையை அசைக்க, அது சப்தம் எழுப்ப, சிவன் ஏற்கனவே சொன்ன அறிவுரைப்படி கோபமாகத்தான் இருக்கிறார் சனி என நினைத்துக் கொண்டு, யார் மண்டபத்தை கட்டியே தீர வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருந்தாரோ, அந்தப் பார்வதி தேவியே மண்டபத்திற்கு தீ வைக்கிறார்! அது வெந்து விபூதியானது!
ஆகவே தெய்வீக சங்கல்பம் நடந்தே தீரும்! அந்தத் தெய்வீகத் திட்டத்தில் சனி என்பவர் ஒரு கருவி மட்டுமே!!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
மனிதன் விரும்புகிறான், இறைவனோ சங்கல்பிக்கிறான்! மனித விருப்பமும் இறை சங்கல்பமும் பெரும்பாலான நேரம் பொருந்திப் போவதில்லை! ஏனெனில் மனிதனின் விருப்பத்தில் தீமை இருக்கிறது, ஆனால் இறைவனின் சங்கல்பத்தில் உலக நன்மை மட்டுமே ஊடுறுவி இருக்கிறது! அத்தகைய பேரிறைவன் பாபாவின் சங்கல்பமே நமது இந்த வாழ்க்கையும் காலமும்!
📝 8. மன்னன் கண்ட கனவு!
ஒரு பேரரசன் உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென அவன் ஒரு கனவு காண்கிறான்! தெருவில் பிச்சை எடுப்பது போல் அந்த கொடூரக் கனவு நீள்கிறது! யாரும் அந்தக் கனவில் அவனுக்கு பிச்சை அளிக்கவில்லை, பசியோ வயிற்றை கிள்ளோ கிள் என்று கிள்ளுகிறது! அந்தக் கனவில் ஒவ்வொரு வீடாக பரிதாபகரமான தந்தை உடையோடு, அழுக்கு உடம்போடு அந்தப் பேரரசர் பிச்சை எடுக்கையில் ஒரு வீட்டார் அவமானப்படுத்தி ச்சீ என்று தள்ளி விடுகிற போது, கீழே விழப் போகிற சமயத்தில் கனவு கலைந்து ஆ என்று கூப்பாடு போட்டு வேர்த்து விறுவிறுத்த படி எழுந்து கொள்கிறார் அந்தப் பேரரசர்! சப்தம் கேட்டு அவர் தாய் படுக்கை அருகே வருகிறார்! ஆனாலும் நீ பேரரசன் என்று எதுவும் சொல்லி அறிவுறுத்தவில்லை! காரணம் - எழும் போதே தான் பிச்சைக்காரன் அல்ல என்பதை உணர்ந்து விடுவார் பேரரசர்! அது போல் இந்த உலகம் உண்மையானது அல்ல! இவ்வுலகம் வெறும் கனவுலமே! மயக்கம் என்கிற மாயை தனைவிட்டு விலகுகிற போது மனிதனால் தன்னை "தான் யார்?" (உடல் இல்லை - மனம் இல்லை - ஆன்மா!) என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது!
அரண்மனையில் வளர்கிற இளவரசன் குழந்தைப் பருவத்தில் தொலைந்து வேடுவக் குலத்தால் வளர்க்கப்படுகிற போது தான் வேடன் என்பதாகவே நம்புகிறேன், உண்மை தெரிகிற போதே தான் யார் என்று அவனுக்குப் புரிகிறது! அதை உணராமல் வேடனாக நடந்து கொள்வதாலேயே அவனுக்குரிய இளவரசு உரிமை பறிபோய்விடுவதில்லை! அவனை அந்நிலையில் இருந்து மீட்டெடுக்கும் போது, தான் யார் என்பதை உணர்ந்து கொண்டு விடுவான்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
நாம் காண்கிற நீண்ட கனவே இந்த உலகம்! அதில் தொங்கிக் கொண்டிருக்கும் நீர்க்குமிழி சம்பவத் தொகுப்பே இந்த வாழ்க்கை! உலகம் என்கிற அலைபாய்கிற கடலில் அல்ல கரையில் தான் ஞானம்! அதுவே பேரிறைவன் பாபா என்கிற ஆன்ம ஞானம்!!
📝 9. வெளிப் பார்வையைக் கண்டு:
பக்தி என்பது வெளித் தோற்றத்தில் காணப்படும் கண்ணீர்ச் சொரிவோ, பூரிப்போ, மனக்கிளர்ச்சியோ , இத்தகைய அடையாளங்களை வைத்துக் கொண்டு எல்லாம் அளக்க இயலாது! பக்தி என்பது ஓர் உள் முகப் புரட்சி! அது நம் மதிப்பீடுகள் , மனநிலை ஆகியவற்றில் ஏற்படும் ஒரு பெரும் அகமாற்றமாகும்!
ஒருமுறை ஓர் இடத்தில் புராணச் சொற்பொழிவு நடந்து கொண்டிருக்கிறது! ஓலைச்சுவடியை பிரித்து அந்த பாகவதர் அருமையாக பொருள் விளக்கிப் பேசிக் கொண்டிருக்கிறார்! அதைக் கேட்கும் கூட்டத்தில் அமர்ந்திருக்கும் ஒரு பெண்மணியோ கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்!
இதை அந்த பாகவதர் கவனித்துவிடுகிறார்! ஆஹா அந்தப் பெண்மணிக்குத் தான் எத்தனை பக்தி, நம் பிரசங்கம் வேறு பிடித்திருக்கிறது என்று நினைத்து சந்தோஷப்படுகிறார்! அந்த நிகழ்வின் முடிவில், மேடையிலேயே அந்த பாகவதர் அந்தப் பெண்மணியை புகழ்கிறார்! எத்தனை பக்தி தெரியுமா? என்று கூடி இருந்தவர்களிடம் அந்தப் பெண்மணி பற்றி ஆகா ஓகோ எனப் பேசுகிறார்! தான் வைத்திருந்த புனித தீர்த்தத்தில் முதல் கரண்டி தீர்த்தத்தை அந்தப் பெண்மணிக்கே அளிக்கிறார்!
ஆனால் அந்தப் பெண்மணியோ அவர் சொன்ன அத்தனையையும் மறுக்கிறாள்! பக்தியின் காரணமாக தான் அழவில்லை என்று, என்ன காரணமோ அந்தக் காரணத்தை அவள் விளக்குகிற போது அந்த பாகவதர் முகத்தில் ஈ ஆடவில்லை!
அவள் உண்மையில் பாகவதர் சொன்ன விஷயங்களை முழுவதுமாக கவனிக்கவே இல்லை! அவர் ஓலைச்சுவடியைப் பிரிக்கிற போது அந்த ஓலைகளில் கட்டி இருந்த கருப்புக் கயிற்றை கவனிக்கிறாள்! அது சமீபத்தில் இறந்து போன கணவன் தன் இடுப்பில் கட்டி இருந்த கருப்புக் கயிற்றை நினைவுப்படுத்தியதால் தான் அழுகிறாள்! அதைக் கண்ட பாகவதர் பலவித கற்பனைகளை செய்து கொள்கிறார்! அதை அவள் சொன்னபோது பாகவதருக்கு குடம் குடமாக அசடு வழிகிறது!
வெறும் வெளி அடையாளங்கள் பார்ப்பவரைத் தவறாகக் கருதச் செய்யும்! ஆனால் அவை எப்போதும் உடன் இருப்பவரும், அனைத்திற்கும் சாட்சியாக இருக்கும் கடவுளை ஏமாற்ற முடியுமா?
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
மீசை வைத்திருப்பவர் எல்லாம் பாரதியார் ஆகிவிட முடியுமா? பூனைக்கும் தான் மீசை இருக்கிறது! அதனால் கவிதைகள் எழுத முடியுமா? அது போல் கருப்பாக இருப்பவர் எல்லாம் ஸ்ரீ கிருஷ்ணரும் இல்லை! விபூதி, லிங்கம் எடுப்பவர் எல்லாம் பேரிறைவன் பாபாவும் இல்லை! அப்படி எடுக்கிற எத்தனை நபர் அனைத்தும் அறிந்து , பேரன்பைச் சொரிந்து இந்த சமுதாயத்திற்கு இன்றளவும் சேவை செய்கிறார்கள்? ஆக யாரும் நம்மை ஏமாற்றுவதும்லை, நம்முடைய அறியாமைக் கற்பனைகளே நம்மை ஏமாற்றுகின்றன!
📝 10. கடவுள் தொலை தூரத்திலா இருக்கிறார்?
இந்த உலகம் தான் உன் அருகிலே , உங்களைச் சுற்றி இருப்பதாக கற்பனை செய்து கொண்டிருக்கிறீர்கள்! ஆனால் இறைவனை சுட்டிக் காட்டும் போது மட்டும் எங்கோ ஆகாயத்தில் இருப்பதாக கையை வானத்திற்கு உயர்த்தி, எங்கோ ஓர் தூரத்தில் இருப்பதாக சுட்டிக் காட்டுகிறீர்கள்! இது முற்றிலும் உங்களின் கற்பனையே!
உண்மை என்னவெனில்...உலகமே உங்களை விட்டு தூரமாக இருக்கிறது! நீங்கள் தான் அதில் ஈடுபாடு கொண்டு அருகே இருப்பதாக நினைத்துக் கொள்கிறீர்கள்! ஆனால் இறைவன் தான் உங்களோடு , உங்களுக்குள்ளே , உங்களைச் சுற்றியும் இருக்கிறார்! அதை நீங்கள் உணரவில்லை! ஆகவே தான் இறைவன் எங்கேயோ அப்பால் இருப்பதைப் போல் யூகிக்கிறீர்கள்!
ஒருமுறை ஒரு படைத்தளபதி ஓடத்தில் பயணம் செய்கிறார்! அந்த ஓடத்தில் அமைச்சர், அரசர் என அனைவரும் பயணம் செய்கிறார்கள்! இந்த ஓடம் எங்கே மூழ்கி விடுமோ என்று படைத் தளபதிக்கு திடீரென பயம் வந்து, குளிர் காற்று வேறு மோத உடல் நடுங்குகிறது! தான் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதைக் கூட அந்த படைத் தளபதி உணரவில்லை! இதை உணர்ந்து கொண்ட அமைச்சர், அந்தப் படைத் தளபதியை தண்ணீருக்குள் தள்ளிவிடுகிறார்! உடனே தளபதி தத்தளிக்கிறார் , தண்ணீரைக் கொப்பளிக்கிறார், தான் எப்படியாவது மீண்டும் அந்த ஓடத்தில் ஏற வேண்டும் என்று முனைகிறார்! இப்போது அவருக்கு ஓடத்தின் மீதான பயமும் போய்விடுகிறது! ஓடத்தின் அருமையும் புரிகிறது! தான் அதில் இதுவரை பாதுகாப்பாகத்தான் இருந்தோம் என்பதையும் உணர்ந்து கொள்கிறார்!
ஆக...! கடவுள் மட்டுமே ஆதாரம் - அடிப்படை - பக்கபலம்! உலகம் வெறும் ஆதாயமே- அதாவது வெறும் துணையாக மட்டுமே பயன்படுகிறது! இறைவனே உங்கள் அருகில் இருக்கும் மூல முழுமைப் பொருள்! இறைவனே நெருக்கமான தோழன்! தனி மனிதனின் மூச்சும் உயிரும் இறைவனே! பிறகு எப்படி உங்களால் கடவுளைப் பற்றி கேட்டவுடன் அவர் வெகு தூரத்தில் இருக்கிறார் என்று ஆகாயத்தை காட்ட முடிகிறது?
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
மீனால் கடலை உணரவே முடியும்! கடல் எங்கே இருக்கிறது? என்று மீனிடம் கேட்டால், கரைக்கு அந்தப் பக்கம் இருக்கிறது என்று சொல்வது போல் தான் மனிதன், இறைவன் வெளியே இருப்பதாக கற்பனை செய்து கொள்கிறான்! இறைவன் இல்லாத இடமே இல்லை! நம் உள்ளும் புறமும் நீக்கமற நிறைந்திருக்கிறார்! அத்தகையப் பேரிறைவனே பாபா!!
📝 11. பொறுமையே அறம்!
சோதனையை வரவேற்க வேண்டும்! ஆன்ம முன்னேற்றத்தை கணக்கிடவே சோதனைகள் விளைகின்றன! எந்த ஒரு கல்விச் சான்றிதழும் சோதனைத் தேர்வில்லாமல் கிடைப்பதில்லை!
அது போல் இறைவன் உங்களை சோதனை செய்ய முடிவு செய்துவிட்டால் , ஓர் அணுகூலத்தையும் கொடுப்பார்! ஏனெனில் உங்களுடைய சாதனையை கண்டு ஒரு ஏற்பு முத்திரையை உங்கள் மேல் அவர் பதிக்க விரும்புவார்!
சோதனைகளுக்கு ஏற்ப உயர்ந்து நில்லுங்கள்! அதுவே இறைவனை மகிழ்ச்சி அடையச் செய்யும் வழியாகும்!!
ஒரு ஊரில் இறைவனால் சோதனை வைக்கப்பட்டு, அதில் தோல்வி உற்று அதனால் இறைவனிடம் இருந்து நற்சான்றிதழ் பெற முடியாத ஒரு பக்தர் இருந்தார்!
அவரின் தினசரி வழக்கம் என்னவெனில், மதியம் தினசரி ஒரு நபரை கண்டுபிடித்து அவருக்கு விருந்தோம்பல் செய்வது! வயிறாற அவரை உண்ணச் செய்வது!
அப்படி ஒரு நாள் - 100 வயதிற்கும் மேற்பட்ட ஒருவர் அவர் தெரு அருகே தள்ளாடித் தள்ளாடி நடந்து போகிறார்! மதியம் வேறு நெருங்குகிறது! உச்சியில் சூரியன் சூடு பறக்க எரிய ஆரம்பிக்கிறான்! அவரை அந்த பக்தரோ வம்படியாக அழைத்து தனது வீட்டிற்கு அழைத்து வந்து விருந்து உண்ண உபசரிக்கிறார்!
உணவு பரிமாறப்படுகிறது!
உணவு உண்பதற்கு முன் இறை நாமத்தை உச்சரித்து விட்டே சாப்பிடுவார் அந்த பக்தர்! அப்படி அவர் கண்மூடி இறை நாமம் சொல்லும் போதே, அந்த இலையில் இருந்த உணவை மடக்கு மடக்கென்று சாப்பிட ஆரம்பிக்கிறார் அந்த பெரியவர்! அதைப் பார்த்த பக்தருக்கோ கோபம் நெஞ்சைத் தள்ள, கோபப்பட்டு அந்தப் பெரியவரை வீட்டை விட்டே தள்ளி "இறைவன் பெயரைக் கூட சொல்லாத உனக்கு, இங்கே சாப்பாடு இல்லை! போய் பிச்சை எடு!" என்று கத்தி கதவடைக்கிறார்!
அந்த பக்தரின் கனவில் அன்று இரவே கனவில் சென்ற இறைவன்
"நீ அப்படி செய்தது மிகப் பெரிய தவறு! 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தும் , என் பல பெயர்களில் ஒரு பெயரைக் கூட , அதுவும் ஒருமுறை கூட உச்சரிக்காத அவனை நானே இத்தனை ஆண்டுகாலம் பொறுத்திருந்து வாழ வைக்கிற போது, அவனை ஒரு சில நிமிடங்கள் கூட உன்னால் பொறுத்துக் கொள்ள முடியாதா?" என்று கேட்கிறார்! மிக நியாயமான அறம் சார்ந்த கேள்வி அது!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
பேரிறைவன் பாபா நம்மை நேசிக்கவே சொல்லி இருக்கிறார்! பிறரை எடை போட, சந்தேகக் கண்ணோடு பார்க்க, விமர்சிக்க, வெறுக்க நமக்கென்ன உரிமை இருக்கிறது?? யார் கொடுத்த வறட்டு தைரியம் அது? உலகத்தோடு கவனமாக இருக்க வேண்டுமே அன்றி வெறுப்போடு , விரக்தியோடு, இல்லை எனில் திமிரோடு இருப்பது என்பது அறமற்ற அறிவின்மையே!
📝 12.நம்பிக்கையே முக்கியம் - நாமமோ ரூபமோ அல்ல..!
முற்பிறவியில் நான் ஷிர்டி சாயிபாபாவாக இருந்த போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நான் இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்!
பகல்கான் என்ற ஓர் எளிமையான பக்தை இருந்தாள்! அவள் தனது சமையலறையில் சுத்தமாக வைத்திருப்பாள்! பதிவிரதை! தன் வீட்டுக் கிணற்றில் இருந்து மூன்று பித்தளைப் பாத்திரங்களில் அதை ஊற்றி, அந்த மூன்று பானைகளுக்கும் கங்கா, யமுனா , சரஸ்வதி என பெயர் வைத்திருந்தாள்! வழிப்போக்கர்கள் வந்தால் அதிலிருந்து தான் தண்ணீர் தானம் அளிப்பாள்! தூய்மையான உள்ளமும் திடமான நம்பிக்கையும் கொண்டவள் அவள்!
ஒருமுறை அவள் கணவன் காசிக்கு ஷேத்திராடனம் செய்ய தீர்மானித்திருந்தான்! அப்போது அவன் தாய் , கையில் ஒரு தங்க மோதிரம் அணிவித்து, இது ரட்சையாக (பாதுகாப்பாக) போகும் பயணத்தில் திகழும் என்று சொல்கிறாள்! அவன் காசிக்கு வருகிறான்! மணிகர்ணிகா காட்'டில் குளிக்கிற சமயத்தில் அவன் கையில் இருந்து தவறி கங்கைக்குள் விழுந்து விடுகிறது! அப்படியே வெறுங்கையோடு வீட்டுக்கு வருகிறான்! தாய் விசாரிக்கிறான்! "கங்கை விரும்பினாள் - எடுத்துக் கொண்டுவிட்டாள்!" என்கிறான்! அவன் அதைப் பற்றி கவலைப்படவே இல்லை! அதைக் கேட்ட அவன் மனைவி, ஒரு ஏழையின் சொத்தை என்றும் கங்கை எடுத்துக் கொள்ள மாட்டாள்! சரி! கங்கையிடமே திருப்பித் தரும்படி கேட்போம் என்று, சமையலறைக்குள் செல்கிறாள்! அதில் கங்கை என்று அவள் அழைக்கும் ஒரு பானையின் முன் நின்று கங்காதேவியிடம் வேண்டி, அந்தத் தங்க மோதிரத்தை மீட்டுத் தரும்படி கேட்டு, பானைக்குள் கையை நுழைக்கிறாள்! ஆம் ! உண்மைதான்! அந்தத் தங்க மோதிரம் அந்தப் பானைக்குள்ளே கிடைக்கிறது! ஆக! நம்பிக்கை தான் முக்கியம்! வடிவமோ- பெயரோ முக்கியமில்லை! எல்லா பெயர்களும் இறைவனுடையவையே! எல்லா வடிவங்களும் இறைவனே!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
"நம்பிக்கையே கடவுளை விடவும் பெரியது!" என்கிறார் பகவான் யோகி ராம்சுரத்குமார்! தன்னம்பிக்கையும் தெய்வ நம்பிக்கையுமே ஆன்மீக ஆகாயத்தில் நம்மை உயர்த்தும் சாயி சிறகுகள்!
📝 13. நான் அன்பு செய்வது போல் நீங்களும் அன்பு செய்யுங்கள்!
கோபியர்களுக்கு என்று வேறு எந்த இலக்கோ குறிக்கோளோ இல்லை! அந்த நிலையே தூய பக்தி! 'தான்' என்கிற நிலையை கடந்த பக்தி! அந்த தூய பக்தியே எந்தக் கேள்விகளுக்கும் இடமின்றி அலைபாயும் மனம் அற்று சரணடையச் செய்விக்கும்!
சென்ற நூற்றாண்டில் மஹாராஷ்டிரத்தில் வாழ்ந்த ஒரு ஸ்ரீ கிருஷ்ண பக்தையின் வாழ்வை உங்களுக்குச் சொல்லப் போகிறேன்!
அவள் வாழ்வில் நிகழும் சிறு சிறு நிகழ்வுக்கும் அவள் சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்லியே வாழ்கிறாள்! குறிப்பாக - நடப்பதே அவளுக்கு புனிதப் பயணமாகும்! பேசுவதையே ஜபமாக நினைக்கிறாள்! தன் கணவன் உணவுண்ட இடத்தை சாணம் கொண்டு மெழுகி , எஞ்சிய பசுஞ் சாண் உருண்டையை தூக்கி எறியும் செயலைக் கூட "கிருஷ்ணார்ப்பணம்" என்று சொல்லியே - (கண்ணனுக்கே ஒப்படைக்கிறேன்!) என்று சொல்லி செய்கிறாள்!
இப்படி ஒவ்வொரு நாளும் நடக்கிறது, அவள் தூக்கி எறியும் பசுஞ்சாண உருண்டை ஆனது , அருகே இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் அதை ஏற்றுக் கொள்ளும் விதமாக தனது காலடியில் அதை ஏற்றுக் கொள்கிறார்!
தினசரி யார் இந்த அசுத்தத்தை புரிந்தது? என்ற கோபத்தோடு அந்தக் கோவில் பூஜாரியான ஏழை அந்தணர் வருத்தப்படுகிறார்! அந்தப் பெண்மணியின் செய்கையை ஒருநாள் கண்டவுடன், அவளே இதற்குக் காரணம் என அறிந்து ஆத்திரத்தோடு வருகிறார்! கோவிலுக்குள் சென்று அவள் அப்படிச் செய்யவில்லை! அவள் தூரத்தில் இருந்து செய்வதன் ஆத்மார்த்தம் கோவில் ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹ காலடியில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதே ஆழமான உண்மை! ஆனால் அந்த ஏழை அந்தணரோ "இனிமேல் இப்படி செய்வாயா?" என்று அவளது கைகளை முறித்துவிடுகிறார்!
அப்படியே கோவிலுக்குள் நுழைகிற அந்தணர் அதிர்ச்சி அடைகிறார்! எந்த இடத்தில் எப்படி அவளது கை முறிந்ததோ, அப்படியே ஸ்ரீ கிருஷ்ணரின் விக்ரஹத்தில் முறிவு ஏற்பட்டிருந்தது!
அந்தணர் தான் செய்த தவறையும், அவளது தூய பக்தியையும் உணர்ந்து கதறி அழுகிறார்! அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் மறுமொழியாக
"நான் யாரை எல்லாம் அன்பு செலுத்துகிறேனோ , அவர்களை எல்லாம் நீயும் அன்பு செலுத்துவாயாக!" என்று அறிவுறுத்துகிறார்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
இதோடு பேரிறைவன் பாபா நிறுத்திக் கொள்ளவில்லை! "அது போலவே - நான் அனைவரையும் பாரபட்சமின்றி நேசிப்பதைப் போலவே நீங்களும் அன்பு செய்யுங்கள்!" முதலில் உங்களை நீங்களே அன்பு செலுத்துங்கள்!
"எனது தொண்டர்களுக்குள் - எனது பக்தர்களுக்குள் பொறாமை , பகைமை , வெறுப்பு ஆகியன இருப்பதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்! மேலும் நீங்கள் உங்களையே வெறுக்கவோ , உங்களையே இழிவாக , தரக்குறைவாக நினைக்கவோ நான் விட மாட்டேன்!" என்கிறார்!
இதை விட வேறு என்னவொரு ஞானம் நமக்கு வர வேண்டும்?
📝 14. படகே தண்ணீரில்...!- படகுக்குள் தண்ணீர் அல்ல!
நல்ல வினையாகிய அறச் செயல் (வினை - செயல்) ஒவ்வொருவராலும் செய்யப்பட வேண்டியவை ஆகும்! அப்படி செய்கிற அறம் புதுத் திருப்பத்தை ஒவ்வொருவர் வாழ்விலும் தருகிறது! அறச் செயலை எந்த இடத்திலும் செய்யலாம்! அதற்காக எல்லாம் காட்டிற்குப் போக வேண்டிய அவசியம் ஏதும் இல்லை! உங்கள் உடல் காட்டில் இருந்து மனம் மட்டும் சந்தைக் கடையில் அலைவதால் பயன் ஏதும் இல்லை!
ஒரு ஆன்ம சாதகர், சமீபத்தில் ஒரு யோகியிடம் மந்திரம் கற்றுக் கொண்டு அதைப் பயிற்சி செய்வதற்காக வீட்டில் நேரம் ஒதுக்குகிறார்! ஆனால் குழந்தைகளின் சப்தம், இயந்திரங்களின் சப்தம் என அவரால் ஜபத்தில் கவனம் செலுத்த இயலவில்லை! சரி! மனிதர்களே நடமாடாத பகுதிதான் இதற்கு சரிப்படும் என்று காட்டுக்கு செல்கிறார்! நல்ல ஒரு மரம் பார்த்து அதன் அடியில் அமர்ந்து கண்களை மூடியது தான் தாமதம், அந்த மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த பறவைகளின் சப்தங்களை தாங்கவே இயலவில்லை! எரிச்சல் அடைகிறார்! வீட்டில் அந்தத் தொல்லை என்றால் காட்டில் இந்தத் தொல்லை வேறா? என்று கொதிக்கிற போதே அந்தப் பறவைகள் அவருக்கு பிரசாதமாக தலைமேல் எச்சம் போடுகிறது! எரிச்சலே எரிச்சலடையும் வகையில் எரிச்சலடைந்து சடாரென எழுகிறார்! இங்கேயும் அமைதியில்லை என்று தீர்மானித்து உடலைத் துறந்து, வேறொரு பிறவி எடுத்து அதில் ஜபிக்கலாம் என்று சருகுகளை எல்லாம் ஒன்று கூட்டி தீ வைக்க முனையும் போது,
ஒருவர் வந்து, "நீ தீமூட்டி இறந்து போவதைப் பற்றி ஒன்றும் எங்களுக்கு கவலை இல்லை! ஆனால் காற்று இப்போது எதிர் திசையில் அடித்துக் கொண்டிருக்கிறது, இந்த சமயத்தில் நீ தீக்குளித்தால் உனது உடலின் பிண துர்நாற்றம் நாங்கள் குடியிருக்கும் பகுதியில் வீசி எங்களை தொந்தரவு செய்யும்! காற்று ஓயட்டும் பிறகு சந்தோஷமாக தீக்குளி! யார் உன்னை தடுக்கப் போவது?" என்று சொல்லிச் செல்கிறார்!
திடுக்கிட்டுப் போகிறார் அந்த ஆன்ம சாதகர்! சாவதற்குக் கூட சுதந்திரம் இல்லையா? எங்கிருந்து வந்தோமோ அங்கேயே செல்வோம் என்று வீட்டிற்கே திரும்பி, எல்லா இடமும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது , எனவே வீட்டிலேயே ஜபத்தை தொடர்வோம் என்று சமாதானம் அடைகிறார்! பெருமாளுக்கு புஜங்க சயனன் என்று ஒரு பெயர் உண்டு! புஜங்கம் என்றால் பாம்பு, அந்தக் கொடிய விஷப் பாம்பின் மீது படுத்தும் அமைதியாக இருப்பது போல், வெளி சூழ்நிலையில் மனதின் உள் சூழ்நிலை பாதிக்கப்படாமல் வாழ வேண்டும்! தண்ணீரில் தான் கப்பல் நுழைய வேண்டுமே அன்றி தண்ணீர் கப்பலுக்குள் நுழையாமல் நீங்களே உங்களின் உள் சூழ்நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
வெளி சூழ்நிலைக்கு பிற மனிதர்கள் காரணமாக அமையலாம்! ஆனால் உள் சூழ்நிலை எந்த நிலையில் இருக்கிறதோ அதற்கு நாமே காரணம்! புறசூழ்நிலை மீதோ பிற மனிதர் மீதோ பழி போட்டு நாம் நிம்மதி அற்று இருப்பது உலகியல் அறியாமையே! அனைத்தையும் பேரிறைவன் பாபாவின் பாதங்களில் ஒப்படைத்துவிட்டு அக்கடா என நம் ஆன்மீக சாதனையை கவனிப்பதே ஞான சாமர்த்தியம்!
📝 15. பொருட்களின் உண்மைத் தன்மை!
இந்நாளில் மக்கள் பொருளின் உண்மைத் தன்மையை உணர்வதைக் காட்டிலும் அதன் புறத் தோற்றத்தை மட்டுமே கவனத்தில் கொள்பவர்களாக இருக்கிறார்கள்!
ஓர் ஊரில் விநாயகர் பால் மிகுந்த பக்தி கொண்ட ஒருவர் இருக்கிறார்! அவர் மிகுந்த ஆர்வம் மிகுந்த அன்பன்! ஆகவே தான் சம்பாதித்த அனைத்து செல்வத்தை வைத்து விநாயகருக்கு தங்கச் சிலை மற்றும் விநாயகர் சம்பந்தமான மூஷிக வாகனம், திருக்குடை, மற்றும் அவருக்கான அபிஷேக பூஜைப் பொருட்கள் அனைத்தையும் முழுக்க முழுக்க தங்கத்தால் செய்து கொண்டார்! ஒரு பூஜைப் பொருட்களைக் கூட விடவில்லை, விநாயகருக்கு அர்ச்சனை செய்ய தங்க மலர்களைச் செய்து கொண்டார்! இப்படி எல்லாம் தங்கம்!
இப்படி நிகழ , திடீரென அவரது பொருளாதார சூழ்நிலை சரிகிறது! தான் செய்து வைத்த தங்க சாமான்களை விற்க வேண்டிய துர்பாக்கிய சூழ்நிலை ஏற்படுகிறது! ஆகவே அதை ஒரு தகுந்த கொல்லனிடம் கொடுத்து விற்றுக் காசாக்குகிறார்! அந்தக் கொல்லனோ ஒவ்வொன்றாக எடை போட்டு நிறுத்து அதற்குறிய பணத்தைத் தருகிறார்! அப்படி எடை போடுகிற போது மூஷிக வாகனமும் , விநாயகரின் சிலையும் ஒரே எடையாக இருக்கவே, இரண்டு பொருளுக்கும் ஒரே விலை தான் என்று அந்தக் கொல்லன் சொல்கிற போது, இந்த விநாயக பக்தருக்கோ கோபம் பொத்துக் கொண்டு வருகிறது!"அது எப்படி ? மூஷிக வாகனத்தை விட உயர்ந்தவர் தான் விநாயகர்!" என்று அவரிடம் வாதம் செய்கிறார் அந்த பக்தர்! ஆம் அவர் உண்மைத் தன்மையை மறந்துவிட்டார்! மாறாக வடிவம், பெயர் முதலிய வெளித் தோற்றத்திற்கு மதிப்பளித்தாரே தவிர அந்தப் பொருளுக்கான மதிப்பை அந்த பக்தர் புரிந்து கொள்ளவே இல்லை!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
தங்கத்தால் செய்தாலும் களிமண்ணால் செய்தாலும் இறைவன் இறைவனே! ஆகச் சிறந்த ஆடம்பரத்தை இறைவன் விரும்புவதே இல்லை! எளிமை தான் இதயத்து வலிமை! இல்லை எனில் மூன்று சாயி அவதாரங்களும் எளிமையான குடும்பத்தை தனது அவதார அஸ்திவாரமாக அமைத்து எழுந்திருக்க வாய்ப்பே இல்லை!
📝 16. கண்ணனுக்கு வந்த தலைவலி!
ஒரு சமயம் ஸ்ரீ கிருஷ்ணர் கூட தனக்கு கடுமையான தலைவலி வந்ததாக பாசாங்கு செய்தார்! நான் (சுவாமி தன்னை சுட்டிக் காட்டி) சென்ற வாரம் செய்தேன் அல்லவா?! அது போல்! தலைக்கு சூடான துணிகளைச் சுற்றியும் தனக்கு மேலும் தலைவலி இருப்பதாக நடித்தார்! அமைதியின்றி படுக்கையில் புரண்டார்! முகம் வேறு வீங்கி இருக்கிறது! ருக்மணி மற்றும் சத்யபாமா ஆகிய இரண்டே இரண்டு மனைவிகளும் (ஸ்ரீ கிருஷ்ணருக்கு இரண்டு மனைவிகள் மட்டுமே) செய்வதறியாது அதிர்ச்சி அடைகின்றனர்! அது என்ன களேபரம் என்று நாரதர் விசாரிக்க வருகிறார்! நடந்ததைக் கேள்விப்பட்டு பிரபஞ்சத்தின் தலைவனான ஸ்ரீ கிருஷ்ணருக்கே தலைவலியா? குழம்பிப் போகிறார்! ஒரே ஒரு மருந்து தான் இருக்கிறது என்று ஸ்ரீ கிருஷ்ணரே தெரிவிக்க... அந்த மருந்தை நாரதரை அழைத்து கொண்டு வரச் சொல்கிறார்! அவரும் சரி என்றவாறு ஸ்ரீ கிருஷ்ண பக்தர்களிடம் நாரதர் செல்ல.. "அய்யய்யோ! அது தான் மருந்தா!! அபச்சாரம்!! அத்தகைய மருந்து தர எங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை !" என்று ஒதுங்குகிறார்கள் பக்தர்கள்! நாரதர் ஆச்சர்யப்படுகிறார்! ஸ்ரீ கிருஷ்ணர் கேட்ட தலைவலிக்கான மருந்து பக்தர்களின் பாத தூளி (தூசி)! ஆகவே தான் அவ்வாறு அஞ்சி ஒதுங்குகிறார்கள் பக்தர்கள்! தன்னைத் தானே பெருமைப்பட்டுக் கொள்வது மட்டுமல்ல தன்னைத் தானே சிறுமைப்படுத்திக் கொள்வதும் அகந்தையே! தன்னைத் தானே இழிவாகப் பார்ப்பது, எதிர்மறையாகப் பேசுவது கூட அகந்தையின் மற்றொரு நாணயப் பக்கமே!
இது இவ்வாறு இருக்க கைவிரித்துச் செல்கிறார் நாரதர்! கோகுலத்திற்கு சென்று கோபிகைகளை விசாரித்தீரா? என்று ஸ்ரீ கிருஷ்ணர் கேட்க... அவர்களுக்கு பக்தியை பற்றி என்ன தெரியும் ? என்று நாரதர் வினவ... முதலில் விசாரித்துவிட்டு வாரும்! என்று ஸ்ரீ கிருஷ்ணர் உரைக்க...!
*"என்னது ஸ்ரீ கிருஷ்ணருக்கு, எங்களின் இதய மூர்த்திக்கு தலைவலியா?"* என்று அதிர்ச்சி அடைகின்றனர் கோபிகைகள்! இது தான் மருந்து என்று சொன்ன அடுத்த நிமிடம் கூட தாமதிக்காமல் , தங்களின் காலடியில் ஒட்டிக் கொண்டிருந்த மணலை சிறு தயக்கமும் இன்றி அப்படியே கை நிறைய தருகிறார்கள்! நாரதர் வியந்தே போகிறார்!
அவர் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரியாகச் சென்று சேர்கிற சமயம் அந்தத் தலைவலியே நீங்கி விடுகிறது! நாரதருக்கும் உண்மையான பக்தி என்னவென்பது புரிந்துவிடுகிறது!
அதே போல் அவனால் அனுபவிக்க இயலாது என்று சுவாமி நான் ஒரு பக்தன் நோயை வாங்கி அனுபவிக்கிறேன் எனில் அதற்கு ஒரு தகுந்த காரணம் இருக்கிறது! அந்த ஒருவனுக்காக அத்தனை பேரும் தரிசனம் இன்றி கஷ்டப்பட வேண்டுமா? என்று நீங்கள் கேட்கலாம்! அயோத்தி முழுக்க அழ வைத்துத் தானே ஸ்ரீராமர் காட்டுக்கே சென்றார்! அது போல் தான் இதுவும்!
ஸ்ரீ கிருஷ்ணர் நினைத்திருந்தால் மழையை தடுத்திருக்கலாம்! ஏன் செய்யவில்லை? அது இந்திர சபையின் தர்மம்! அது காக்கப்பட வேண்டும்! அதே சமயம் பக்தர்களை காக்க வேண்டும் , அதற்கே இறை அவதாரம்! ஆகவே தான் மலையைக் குடையாகப் பிடித்து தனது மகிமையை நிலை நிறுத்துகிறார்!
எனது இந்த செயல்களும் அதே முறை தான்!
இந்த மனித வடிவில் தெய்வீகம் இயல்பாய் உறைந்திருக்கிறது என்பதை சந்தேகப்படுகிற இந்த உலகிற்கு உணர்த்தவே, எல்லா வாய்ப்புகளையும் உருவாக்கி, எனது தெய்வீகத்தை நிலை நிறுத்தி, பக்தர்களை மீட்டு , தர்மத்தை காத்து வருகிறேன்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
பேரிறைவன் பாபாவின் திருச்செயல்களை நம்மால் முன்கூட்டியே யூகிக்க இயலாது! அதை அளக்கவும் , விவரிக்கவுமான கூரிய நுணுக்கமான அறிவாற்றல் நம்மிடம் இல்லை! "நடப்பது நடக்கிறது - செய்பவன் செய்கிறான்!" எனும் அருணை மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் கூற்றே சர்வ சத்தியம்! நாம் இந்த உலகத்தில் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே! சம்பவங்களுக்கான வெறும் சாட்சிகளே! விளையாடுபவர்கள் அல்ல நாம் வெறும் வேடிக்கைப் பார்ப்பவர்களே! அலகிலா வளையாட்டுடையார் பேரிறைவன் பாபா ஒருவரே!
📝 17. பார்வையற்றவரின் பகுத்தறிவு!
ஒரு ஊரில் ஒரு பார்வை அற்றவர் இருக்கிறார்! அவர் பக்கத்து வீட்டில் ஒரு கால் இல்லாதவர் இருக்கிறார்! இருவரும் நல்ல நண்பர்கள்! எங்கேயாவது பயணிக்க வேண்டும் என்றால் பார்வை அற்றவர் தோளில் அந்தக் கால் அற்றவர் ஏறிக் கொள்வார், பாதையை கால் அற்றவர் வழிமொழிய பார்வை அற்றவர் அவரையும் சுமந்து செல்வார் ! இது தான் அவர்களது வழக்கம்!
ஒருமுறை அவ்வாறு செல்கிற போது, செல்கிற வழியே ஒரு வெள்ளரிக்காய்த் தோட்டத்தைப் பார்க்கிறார் தோளில் அமர்ந்திருக்கும் அந்த கால் அற்றவர்! இலக்கோ தூரம், ஆகவே பசிக்கு சற்று அந்த வெள்ளரிக்காய்களை சாப்பிட்டு விட்டு செல்லலாம் என்று கூற... அதை உடனே ஆமோதிக்காமல் , அந்தத் தோட்டத்தில் வேலி இருக்கிறதா ? என்று கேட்கிறார்! அதற்கு இல்லை என்று இன்னொரு நண்பர் பதில் தர, சரி! காவல்காரர் இருக்கிறாரா? என்று அவர் மேலும் கேட்க, இல்லை எனும் பதிலே வர...
"வேண்டாம்! அந்தத் தோட்டத்தில் கசப்பான வெள்ளரிக் காய்களே இருக்கிறது, அதைச் சாப்பிடுவதால் பயனில்லை! அப்படி கசப்பான காய்கள் இருப்பதால் தான் அந்தத் தோட்டம் கவனிப்பார் அற்று இருக்கிறது, நாம் தொடர்ந்து பயணிப்போம் என்று சொல்லி விட்டு நகர்ந்துவிடுகிறார்!
தனது பகுத்தறிவு மூலமாக எதிர் இருந்த கசப்பை எளிதாக கடந்துவிடுகிறார் அந்தப் பார்வை அற்றவர்! அவரால் அந்தக் கால் அற்றவரும் கசப்பில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்!
நிகழ்வதற்கு முன்பே, வார்த்தையால் மொழிவதற்கு முன்பே அதன் விளைவுகளை நாம் பகுத்தறிந்து பார்ப்பதே ஆன்மீகம்! அதுவே பேரிறைவன் பாபா நமக்கு வழிவகுக்கும் சாயி அறம்! அதன் வழியே நம் வாழ்வை நாம் நகர்த்துவதே அக ஞான நிலைக்கான திருநகர்வு!
📝 18. பயத்தால் இறந்தோரே அதிகம்!
ஒருமுறை சன்யாசி வருவர் ஒற்றையடிப் பாதையில் நடந்து வருகிறார்! அப்போது காலரா தேவதையை எதிரே காண்கிறார்! (காலரா என்பது வாந்தி பேதி/ கொள்ளை நோய் ) எதிர் வருகிற காலரா தேவதையை பார்த்து அந்த சன்னியாசி, "அந்த ஊரில் இருந்து வருகிறாயா? எத்தனைப் பேர்களை உன் மடியில் எடுத்துக் கொண்டாய்?" என்று கேட்கிறார்! அதற்கு காலரா தேவதை "பத்து பேர்கள் தான் என்னால் இறந்தார்கள், அவர்களை மட்டுமே எடுத்துக் கொண்டு செல்கிறேன்!" என்கிறாள்!
அதற்கு அந்த சன்யாசியோ "நூறு பேர்களுக்கு மேல் அந்த ஊரில் இறந்ததாகக் கேள்விப்பட்டேனே, நீயோ பத்து பேர் என்று மட்டுமே சொல்கிறாயே!" என்று கேட்டதற்கு, "என்னால் இறந்தவர்கள் பத்து பேர் தான்! ஆனால் நான் வந்து விடுவேனோ என்ற பயத்தில் இறந்தவர்கள் தான் நூறு பேருக்கும் மேல்!" என்கிறாள் அந்த காலரா தேவதை!
ஆம்!! மனிதனோ ஆன்ம வடிவினன்! பயமற்றவன்! அவன் தன்னுடைய உண்மை இயல்பினை அறிந்து கொண்டால் , தளர்ச்சிக்கும் கோழைத்தனத்திற்கும் ஒரு நாளும் அவன் இடம் கொடுக்கவே மாட்டான்!
நிகழ்வுகள் கவலை அளிப்பதில்லை! நிகழ்வுகளின் மேல் நமக்கிருக்கும் மறுப்பே கவலை அளிக்கிறது! நிகழ்ந்த ஒரு நிகழ்வை ஏற்றுக் கொள்ள மறுக்கும் குணமே துன்பம் தருகிறது! அதைப் பற்றிய மீண்டும் மீண்டும் ஏற்படும் சிந்தனையே துயரம் தந்து இதயத்தைப் பிழிகிறது! இதனால் ஏற்படும் நாளைகள் பற்றிய எதிர்மறைக் கற்பனையே பயம் விளைவிக்கிறது! பாரத்தை பேரிறைவன் பாபாவின் பாதத்தில் போட்டு பிரசாந்தமடைவோம்! ஆனால் உண்மை என்னவெனில் பாரம் என்பது வேறொன்றுமில்லை மீண்டும் மீண்டும் நினைக்கப்படும் தேவையற்ற எதிர்மறை எண்ணக் குப்பைகளே!
📝 19. உழைப்புக்கேற்ற ஊதியம்!
திருக்காளத்தி எனும் காளஹஸ்தியில் இருக்கும் பெரிய கோவிலை கட்டிய பொழுது அங்கு நடந்த வரலாறு ஒன்று இருக்கிறது!
அந்தக் கோவிலை கட்டியவர் ஸ்ரீ அகத்திய மகரிஷி என்று மரபுகள் பேசுகின்றன! பிருகு முனிவரும் அந்தக் கோவிலைக் கட்டுவதற்கு உதவிகள் செய்தார்! பல நாட்கள் நடந்த அந்த கோவில் கட்டுமான வேலையின் ஒவ்வொரு நாள் இறுதியிலும் அந்தந்த கட்டிடத் தொழிலாளிகளை அழைத்து, அவரவர் செய்த செயலுக்கு ஏற்ப... ஊதியம் கொடுத்தார்! அது எப்படிப்பட்ட ஊதியம் எனில் ஆற்றிலிருந்து மணலை அவர்கள் மடியில் கொட்டுவது... அவர்கள் செய்த அதிக/ குறைந்த வேலைகளுக்கு ஏற்ப அந்த மண் பொன் ஆக மாறுகிறது! வேலையே செய்யாமல் வீணாகப் பொழுது போக்குபவர்களின் மடியில் இருக்கும் மண் மண்ணாகவே இருக்கும்!
இதில் எந்தவிதமான அநீதியும் இல்லை! ஆள் பார்த்து வழங்கும் தனிச் சலுகையும் இல்லை! இறைவன் முன்னால் அனைவரும் சமம், அதே போல் அவரவர் வேலைக்கு தகுந்த ஊதியமே நேர்மையான இறை முறை என்கிறபடியால் அது நிகழ்ந்தது! ஏனெனில் இறைவனே அனைத்தும் கவனித்துக் கொண்டிருக்கிறான், அவரை ஏமாற்ற முடியாது என்கிற உணர்வால் அனைவரும் தாங்கள் என்னென்ன வேலை செய்தார்களோ, அதற்கான ஊதியத்தை வாங்கிச் செல்கிறார்கள்! அதில் அதிகமும் இல்லை - குறைவும் இல்லை! இறைவன் கவனித்துக் கொண்டிருக்கிறான் எனும் பேருண்மை வாய்ந்த நோக்கத்தோடு செய்யப்படும் வேலையே வேலை! அது தான் நேர்மை! பயந்து கொண்டு வேலை செய்பவருக்கு அல்ல நேர்மையான மகிழ்ச்சியோடு வேலை செய்பவருக்கு இறைவன் சரியான கூலி வழங்குகிறார்! உங்களுடைய இதயம் தூய்மையானதாக இருந்தால், உங்களின் பணியும் தூய்மையானதாக இருக்கும்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
நேர்மையாக வேலை செய்தால் தான் ஒழுங்கான கூலி கிடைக்கும் என்கிறார் பேரிறைவன் பாபா! அப்போது லஞ்சம் வாங்கி, ஊழல் செய்து சேர்க்கப்படும் செல்வம்?? அது செல்வம அல்ல பாவம்! அந்தப் பாவம் மிகச் சரியான நேரத்தில் "கூலி" கொடுக்காமல் போகாது என்பதே இந்த தேசம் இதுவரை கண்டு வருகிற தெய்வீக அறம்!
📝 20. பேச்சுக்கேற்ற பண்பே!
எப்போதும் உங்கள் நாவில் உச்சரிக்கப்படும் இறைவனின் திருப்பெயரில் உள்ள இனிமையோடு மூழ்கி இருங்கள்! அது உங்களின் அன்றாடப் பேச்சை இனிமையாகவும் மென்மையாகவும் உருமாற்றும்!
உங்கள் வாய்ச் சொற்களால் நீங்கள் மதிக்கப்படுவீர்கள்!
ஒருமுறை ஒரு மாமன்னர் வேட்டைக்காக தனது பரிவாரங்களோடு குதிரையில் வருகிறார்! அவரது குதிரை வேகமாக வந்துவிட , பரிவாரங்களை செல்லும் வழியில் தவற விடுகிறார்! ஆகவே அதைக் குறித்து அங்கே இருந்த ஒரு பார்வையற்றவரிடம்
"அன்புக்கு இனிய தோழரே! இந்த வழியாகச் சென்றவர்களில் யாரையேனும் பார்த்தாயா?" என்று கேட்கிறார்!
அதற்கு அந்தப் பார்வையற்றவர் இல்லை என்று பதில் சொல்கிறார்!
சிறிது நேரத்தில் அமைச்சர் அந்த வழியே வர,
"ஏ தம்பி! இந்த பக்கமா? யாராவது போனாங்களா?" என்று கேட்கிறார்!
இல்லை என்ற அதை பதிலைச் சொல்கிறார் பார்வையற்றவர்!
சிறிது நேரத்தில், தளபதி வருகிறார்
"ஏய் முட்டாளே! இந்த தெசையில யாராவது போனாங்களா?" சொல்லித் தொலை!" என்கிறான்!
அதற்கும் ஒரே சுதியில் "இல்லை!" என்கிறார் பார்வையற்றவர்!
பிறகு ஒரு படை வீரன் வருகிறான்,
"ஏய் வெட்கங் கெட்ட குருட்டுப் பயலே! இப்படீக்கா யாராவது போனாங்களா, ஏதாவது சத்துமாவது கேட்டுச்சா, உன் அழுக்கு வாய திறந்து பதிலச் சொல்லு!" என்று கேட்கிறான்!
அதற்கு இல்லை என்ற பதிலே வருகிறார்!
கடைசியில், ராஜகுரு வருகிறார்,
"என் இனிய இதயமே! இந்தப் பக்கம் யாரேனும் போனார்களா? தயவு செய்து சொல்லேன்?" என்று கேட்கிறார்!
அதற்கு யாரையுமே பார்க்க முடியாத அந்தப் பார்வை அற்றவர், "ஒரு மன்னரும், அமைச்சரும், தளபதியும், வீரனும் சென்றார்கள்! அவர்களும் இதே கேள்வியைத் தான் என்னிடம் கேட்டார்கள்!" என்று யாரையுமே பார்க்காமல், அவர்களுடைய பேச்சை வைத்தே எடைபோட்டு மிகத் துல்லியமாகச் சொல்லிவிடுகிறார்! ஆக ஒருவருடைய பேச்சுமுறை அவருடைய பண்பினையும், தகுதியையுமே காட்டுகிறது!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
சொல் வாயில் இருந்து அல்ல - மனதில் இருந்தே வெளிப்படுகிறது! முதலில் சமூகத்திற்கு நாம் இனிய சொற்களைப் பேசுவதன் முலம் , அதையே சேவையாகச் செய்ய வேண்டும் என்கிறார் பேரிறைவன் பாபா! மனம் எய்து வாயில் இருந்து வெளிவருவது வெறும் சொல் அல்ல ஒவ்வொன்றும் அம்புகள்! அது போர் அம்புகளாக ரணம் செய்வதாக இல்லாமல், தூரிகை அம்புகளாக அன்பை ஒவ்வொருவர் இதயத்திலும் வரையட்டும்!
📝 21. மன்னன் பரிசளித்த சந்தனக் காடு!
நீங்கள் கட்டாயம் இந்த மனித உடல் எடுத்த நோக்கத்தை உணர வேண்டும்! மனிதர்களாகிய நீங்கள் இந்த மனித உடலை பெற்றதன் வழி தன்னிகர் அற்ற ஒரு அரிய வாய்ப்பினைப் பெற்றிருக்கிறீர்கள்! அதை நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும்! இந்த *மனித உடம்பின் வழி எத்தனை நன்மையை அடையலாம் என்பதை நீங்கள் எண்ண முயல வேண்டும்!*
ஒரு முறை ஒரு மன்னர் ஒரு மானைத் துரத்திக் கொண்டு நடுக்காட்டுக்கே வந்து விடுகிறார்! ஒரே பசி, தாகம், என்ன செய்வதென யோசிக்கிற போது, தூரத்தில் ஒரு குடிசை தெரிகிறது, தனது நகர்வல உடப்பில் செல்வதால் மன்னரை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை அந்த குடிசை வீட்டினரால்! அந்தக் குடிசையில் வசிப்பது ஒரு ஏழை விறகு வெட்டியின் குடும்பம்! ஏதும் இல்லாத காரணத்தினால் பழைய சோற்றை நீரை வார்த்துத் தாங்கள் உண்ண வேண்டியதை மன்னன் என்று அறியாமல் தருகிறார்கள்! அவரும் வயிறாற உண்கிறார்! *பசி வயிற்றைக் குத்திக் கிழித்ததில் , அந்த ஏழ்மை உணவோ ராஜ விருந்தான அறு சுவையாகவே மன்னருக்கு சுவைக்கிறது! மன்னரை தேடி படைகள் அந்தக் குடிசைக்கு வருகிற போதே , சாப்பிடுகிறவர் மன்னர் என்று அறிந்த உடனே அந்த விறகு வெட்டி பயப்படுகிறார்! பழைய உணவை வழங்கியதற்காக சிறையில் அடைத்துவிடுவார்களோ என்று அஞ்சுகிறார்!
மன்னர் பரம திருப்தியோடு அங்கிருந்து கிளம்புகிறார்! அடுத்த நாளைக்கு அரண்மனையில் இருந்து ஆள் வந்து அந்த விறகு வெட்டியை அழைத்துப் போகிறான்! "அய்யய்யோ! தண்டனை தரத் தான் அழைக்கிறார்களோ! தல போச்சு தல போச்சு!" என்று பயத்தில் நடுங்கிக் கொண்டே செல்கிறார், கூடவே அவர் மனைவி செல்கிறார்!
அரண்மனைக்கு சென்ற அடுத்த நொடி, மன்னனின் கால்களில் விழுந்து பழைய சோற்றை வழங்கியதற்காக மன்னிப்புக் கேட்கிறான்!
அதற்குச் சிரித்தபடி "உனக்கு பரிசு தரப்போகிறேன்!" என்கிறார் மன்னன்!
"அய்யயோ என் தலை தாங்காது!" என்று பதற..மன்னன் உண்மையை உணர வைக்க..
"உனக்கு பொருள் கொடுத்தால் , திருடர் அபகரிப்பர், நிலம் கொடுத்தால் உனக்கு விவசாயம் செய்யத் தெரியாது! ஆக அதோ அந்தச் சந்தனக் காட்டை உனக்கு பரிசளிக்கிறேன்! மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்து!" என்று வாழ்த்துகிறார்!
சிறிது காலம் கடந்து, அவன் இருப்பிடத்திற்கு சென்ற மன்னனுக்கு ஒரே அதிர்ச்சி! மன்னனை கண்டதும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறார் அந்த விறகு வெட்டி! "உனக்குத் தந்த சந்தனக் காடு எங்கே?" என்று கேட்கிறார் மன்னர்!
"அதை எரித்துத் தான் அதன் கரியை வைத்து வியாபாரம் செய்கிறேன்!" என்று மகிழ்ச்சியோடு சொன்ன அந்த விறகு வெட்டியைப் பார்த்து மன்னருக்கு ஒரே அதிர்ச்சி! தான் தந்த பரிசின் பயன் தெரியாமல் இப்படிச் செய்துவிட்டானே என்று ஒரே கவலை!
இப்படித் தான் மனிதன் கடவுள் தனக்கு அளித்த உடல் என்கிற பரிசின் பயனை சற்றும் சிந்திக்காமல் தேவையற்ற வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறான்! அளவுக்கு அதிகமாக சொத்துக்களைச் சேர்த்துவிட்டு அதிலேயே பயனற்று உழல்கிறான்! கடவுள் மனிதனுக்கு பரிசளித்த அவனது உடல் மற்றும் ஆயுட் காலத்தை அவன் இறுதிவரை வீணடித்துக் கொண்டே இருக்கிறான்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
நமது இந்த வாழ்க்கையே பேரிறைவன் பாபா அளித்த பரிசு என்பதை நாம் நமது வாழ்க்கையால், வாழ்க்கையில் ஊறித் ததும்பிடும் அன்பினால் அர்த்தப்படுத்துவோமாக!
📝22. முயற்சியே முதலில் தேவை!
நீங்கள் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் எல்லா திறமைகளையும் வழிபாட்டிற்குரியதாகவும் , பணிவு நிறைந்ததுமான முறையிலேயே பயன்படுத்தி வர வேண்டும்!
அது வரையிலும் , நீங்கள் இறைவனின் உதவியினையோ , அவருடைய குறுக்கீட்டினையோ வேண்டும் எனக் கேட்பதற்கு உங்களுக்கு உரிமை கிடையாது!
ஒருமுறை ஸ்ரீ அனுமன்பால் அன்பு கொண்ட ஒரு பக்தன் இருந்தான்! அவன் சந்தைக்கு வண்டிய நிறைய தானியப் பொருட்களை எடுத்துச் செல்ல எத்தனிக்கிறார்! ஆகவே வண்டி நிறைய தானியப் பொருட்களை ஏற்றிக் கொள்கிறார்! வண்டியையே மூடி மறைக்கும் அளவிற்கு ஏற்றுகிறார்! ஏற்றிவிட்டு அவர் அந்த வண்டியில் ஏறி ஓட்டுகிற போது, வண்டியில் அந்த தானிய முட்டையின் பாரம் தாங்காமல் ஒரு பக்கமாக சரிகிறது! அடுத்த நொடி, அந்த வண்டிச் சக்கரத்தில் ஒன்று சேற்றில் சிக்கிவிடுகிறது! உடனே வண்டியை விட்டு எழுந்து தனது இஷ்ட இறைவனான ஸ்ரீ அனுமனை துதிக்க ஆரம்பிக்கிறான், அந்த வண்டியை சேற்றில் இருந்து வெளியே எடுத்துத் தர வேண்டும் என்பதே அந்த பக்தனின் பிரார்த்தனையின் உள்ளிருந்த வேண்டுதல்! முதலில் 108 ஸ்ரீ அனுமன் அஷ்டோத்திரம் பிறகு 1008 சஹஸ்ரநாமம் சொல்லியபடி இருக்கிறான் அந்த பக்தன்! உடனே அவன் முன் தோன்றிய ஸ்ரீ அனுமான்
"அடேய் முட்டாள் பயலே! நீயாக வண்டியில் அதிக பாரம் ஏற்றுவாய், அது குடை சாயும், சற்று முயற்சி செய்து நீயாக அதை சேற்றில் இருந்து விடுவிக்காமல், என்னை ஏன் அழைத்துக் கொண்டிருக்கிறாய்? சோம்பேறியே!" என்று கோபப்பட்டு கடிந்து கொள்கிறார்! பாரங்கள் அனைத்தையும் இறக்கி, அவனுடைய தோள்களில் வண்டிச் சக்கரத்தை வைத்து சேற்றில் இருந்து விடுவிக்க வேண்டும்! தனிமனித முயற்சியே மிகவும் அவசியம்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்! ஆக நமது விதை நல்விதையாக இருக்கட்டும்! அதன் விதையில் ஈரம் மாறாமல் இருக்கட்டும் அறம்!! அதுவே நமக்காக அளிக்கப்பட்டிருக்கிற சாயி வரம்!
📝 23. பால்காரிகள் மேல் வழக்கு
பழக்கம் - வழக்கம் ஆகிய இரண்டு மட்டுமே வாழ்க்கையில் மதிக்கப் பெறும்! அறத்தை மற்றும் ஆன்ம சாதனையை மேற்கொள்வதில் இந்த பழக்க வழக்கம் மிகவும் முக்கியமானதாகும்!
ஒரு நபரின் செயல்களின் மூலமாகவே அவரை எடை போடுகிறீர்கள்! அந்தச் செயல்களில் ஒழுக்கம் இருந்தால் நல்லவன் என்றும், இல்லை என்றால் தீயவன் என்றும் ஒரு முடிவுக்கு வருகிறீர்கள்! சொல் - சொல் வழி செயல்கள் - இதுவே குணத்திற்கு சாட்சியாக திகழ்கின்றன!
ஒரு தெருவில் இரண்டு பால்காரிகள் இருக்கிறார்கள்! ஒருத்தி பணக்கார பால்காரி! இன்னொருத்தி ஏழைப் பால்காரி! அவளிடம் அதிகமான பசுவும், இவளிடம் ஒரே ஒரு பசுவும் இருக்கின்றன..! அந்த ஏழைப் பால்காரி மிகவும் சிக்கனமான வள்! அந்தப் பணக்கார பால்காரியோ ஊதாரித்தனமாக செலவு செய்பவள்! மாதக் கடைசியில் பணம் இன்றி தவிக்கிறாள்! அப்போது ஏழைப் பால்காரியோ அவளின் இக்கட்டான சூழ்நிலையில் தனது பாலின் ஒரு பங்கை அவளுக்கும் அளித்து உதவுகிறாள்!ஒருநாள் அந்த ஏழைப் பால்காரியிடம் இருந்த ஒரே ஒரு பசுவும் இறந்து போய்விடுகிறது! பாவம் அவள் என்ன செய்வாள்! தான் அப்போது அந்த பணக்கார பால்காரிக்கு உதவிய பாலை கொஞ்சம் கொஞ்சமாக தரும் படி கேட்கிறாள்! அதெல்லாம் முடியாது என்று மறுக்கிறாள் சுயநலமே புடவை கட்டி நடக்கும்படியான அந்த பணக்கார பால்காரி!
நிலைமை நீதிமன்றம் வரை செல்கிறது! அது வரை பால் ஊற்றி வந்த அந்தப் பணக்கார பால்காரி கூசாமல் நீதிபதியிடமே பொய் ஊற்றுகிறாள்! அவளிடம் தான் பாலே வாங்கவில்லை என்று சாதிக்கிறாள்! வைத்திருந்த ஒரே ஒரு பசுவையும் சாவுக்குக் கொடுத்த அந்த ஏழைப் பால்காரியின் மீது இரக்கம் கொண்டு, இருவரின் குணத்தையும் சோதிக்க ஒரு யுக்தியை மேற்கொள்கிறார்!
அந்த இரண்டு பேரையும் அழைத்து, நன்றாக கால்களை சுத்தம் செய்துவிட்டு நீதிமன்றம் நுழையும்படி நீதிபதி உத்தரவிட..
அந்த ஏழைப் பால்காரி அந்த ஒரு வாளியில் இருந்த தண்ணீரில் ஒரு சொம்பை மட்டும் சிக்கனமாக கால் கழுவப் பயன்படுத்திவிட்டு வர... இந்த பணக்கார பால்காரியோ வாளியின் எல்லா தண்ணீரையும் தறது கால்களில் கொட்டி விட்டு உள்ளே நுழைய... இருவர் மட்டுமல்ல இருவரின் செய்கையில் இருக்கும் குணத்தை புரிந்து கொள்கிறார் நீதிபதி, யார் சிக்கனம்? யார் ஊதாரி? என்ன பிரச்சனை ஏற்பட்டிருக்கும்? யார் பொய் சொல்கிறார்? எல்லாமே அந்த ஒரே ஒரு செயல்வழி தெளிவாகப் புரிகிறது நீதிபதிக்கு...!
மிக மிக நியாயமாக தீர்ப்பு வழங்குகிறார், அதில் அப்பால் இருந்த நீதி , சத்தியத்திற்கே சாதகமாகி அந்த ஏழைப் பால்காரி வயிற்றில் பாலே வார்க்கிறது!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
நமது நடவடிக்கையே நமது குணத்தை காட்டிக் கொடுத்து விடுகிறது! ஆகவே சொல்லிலும் செயலிலும் நாம் கனிவையும் பணிவையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் பேரிறைவன் பாபா! தண்ணீர் கலவாத தூய பால் போல் ஆணவம் கலவாத இதயமே அறத்துப் பாலை அகிலத்திற்கு வார்க்கிறது!
📝24. நீ உனக்காகவே பிறந்திருக்கிறாய்!
சந்தேகப் பேய் உன்னை இழுத்துச் செல்ல நீ அனுமதிக்கவே கூடாது! சந்தேகம் தோன்றுவதே மனதின் அறியாமையில் இருந்து தான்! அறிவு எப்போது உதயமாகிறதோ அப்போது சந்தேகம் என்கிற இருட்டு எண்ணம் மறைந்தே போய்விடுகிறது!
ஒரு மனிதன் குதிரையில் அமர்ந்து சவாரி செய்து கொண்டிருக்கிறான்! மற்றொருவன் ஒரே படுக்கையை சுமந்து கொண்டு அவனின் பின் பக்கம் அமர்ந்திருக்கிறான்! அப்படியே அந்தக் குதிரை ஒரு ஊர் வழியாகச் செல்கிறது!
அந்த ஊரில் அதைப் பார்ப்பவர்கள், குதிரையை ஓட்டுபவர் பணியாளராக இருப்பார், கூட அமர்ந்திருப்பவர் எஜமானராக இருப்பார் என்று பேசிக் கொள்கின்றனர்! அந்த குதிரை நேராக ஒரு சத்திரத்தில் வந்து நிற்கிறது! இருவரும் இறங்குகிறார்கள்! விமர்சித்தவர்களும் என்ன நடக்கிறது என்று கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள்!
சத்திரத்தில் நுழைந்த உடன் படுக்கை விரித்து வெளியேவே படித்துக் கொள்கிறார் குதிரையின் பின் பக்கம் அமர்ந்தவர், குதிரை ஓட்டியவரோ உள்ளே சென்று படுத்துக் கொள்கிறார்! உடனே விமர்சனம் செய்த அதே நபர்கள் அப்போது, வெளியே படுப்பவர் தான் பணியாளர் என்றும், சத்திரத்தின் உள்ளே படுப்பவர் எஜமானர் என்றும் மாற்றிப் பேசுகிறார்கள்! அதே நபர்கள் - அதே வாய் , இப்போது மாற்றிப் பேசுகிறது!
ஆக அற்பமான அடிப்படையில் வரும் முடிவுகள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கின்றன!
ஆனால் நீ உன்னுடைய மேன்மைக்காக - நன்மைக்காக- உனக்காகவே பிறந்துள்ளாய்! வேறு எவருக்காகவும் இல்லை!
எப்படி பசி எனும் நோயை நீ தான் தீர்த்துக் கொள்ள வேண்டும், வேறு எவரும் உன் பசிக்காக சாப்பிட முடியுமா? அது போல் தான் உன் அறியாமை எனும் நோயினை நீ தான் போக்கிக் கொள்ள வேண்டும்! வேறு எவரும் இந்த இரண்டிலிருந்து உன்னை காப்பாற்றவே முடியாது!
"உத்தரத் ஆத்மா ந ஆத்மா நாம்", அதாவது உன்னை நீயே காப்பாற்றிக் கொள்! என்பதே ஆகும்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
பிறரின் அபிப்ராயங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன! அதற்கு எல்லாம் நாம் மாறி மாறி நடந்து கொண்டே போனால் வாழ்க்கையில் ஒரு முடிவுக்கே வர இயலாது! மனிதனின் சொற்கள் மாறுபவை, பேரிறைவன் பாபாவின் சொல்லோ மாறாதவை! ஆகையால் மனிதரை நேசிக்கவும், இறைவன் சொல்படி நடக்கவும் நாம் முயற்சிகள் எடுப்போமாக!
📝 25. இறைவன் ஏன் அவதாரம் எடுக்கிறார்?
எதற்காக இறைவன் அவதாரம் எடுக்க வேண்டும் என்று நீங்கள் கேட்டால்?
மக்கள் "ஒன்றை" மறந்து "பல" வற்றின் பின்னால் ஓடும் போது அறம்-தர்மம் தேய்கின்றது! நீதி நலிவடைகின்றது! அப்போது அன்பே இயங்காது! தியாகம் செயல்படாது! மனிதச் செயல்களில் பற்றின்மை இருக்காது! எனவே கடவுள் மனித உருவம் எடுத்து மண்ணில் அவதரிக்கின்றார்! அவதரித்து உலகில் பண்புகளை மீண்டும் மக்கள் இதயத்தில் நடுவதற்காக, மனதின் நல்லொழுக்கத்திற்கு மறுமலர்ச்சி தருவதற்காக!
எத்தனையோ சிறு தெய்வங்கள் இறைவனின் ஏவலுக்காகவே காத்திருக்கும் போது, ஏன் இறைவன் பூமியில் அவதரிக்கிறார் என்றால், இதற்காகத் தான்!!
ஏன் இறைவன் அவதாரம் எடுக்க வேண்டும்? என்ற கேள்வி ஒருமுறை அக்பரின் ராஜ சபையிலும் முன்வைக்கப்பட்டது! விளக்கத்தைக் கேட்டு அக்பர் இந்து மதக் கொள்கையான "உருவமற்ற கடவுள் - அறத்தைக் காப்பாற்ற உருவத்தை மேற்கொள்வார்! இவ்வுலகத்திற்காக மேலிருந்து கீழே இறங்கி வருகிறார்!" என்ற கோட்பாட்டில் அவருக்கு நம்பிக்கையே இல்லை! அதைக் கேட்டு வாய் விட்டுச் சிரிக்கிறார் அக்பர்!
அந்தச் சிரிப்பைப் பார்த்த அரசவையில் இருந்த இசைப்பேரரசர் தான்சென், இந்த அவதார விஷயத்தை தங்களுக்கு விளக்க ஒருவார காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்கிறார்! அக்பர் சரி என்று சொல்ல... அந்த ஒருவார காலக்கெடுவும் நெருங்கிக் கொண்டே வருகிறது!
அந்த நாட்களில் ஒருநாள் அக்பர் தனது பரிவாரங்களுடன் படகில் செல்கிறார்! அருகே இசைப்பேரரசர் தான்செனும் அமர்ந்திருக்கிறார்! திடீரென சளக் என்று சப்தம் கேட்கிறது, என்ன என்று திரும்பிப் பார்த்த அக்பர் அதிர்ச்சி அடைகிறார்! காரணம் அவரது மகன் தண்ணீருக்குள் விழுவதை பார்க்கிறார், அவர் பார்த்த அடுத்த நொடி தானே தண்ணீருக்குள் குதித்துவிடுகிறார்! கையில் ஏந்தியபடி படகில் ஏறுகிறார், அது மகனல்ல, மகனின் பொம்மை என்று தெரிய திகைப்படைகிறார்!
"நானே அவ்வாறு செய்தேன்! உங்கள் மகன் பத்திரமாகவே இருக்கிறான்! உங்களுக்கு ஒரு விஷயத்தை உணர்த்த வேண்டும் என்பதற்காக!" என்கிறார் தான்சென்!
"அப்படி என்ன விஷயம்?" என்று அக்பர் கர்ஜிக்க!
"இதோ இந்தப் படகில் உங்கள் படைத் தளபதி இருக்கிறார், வீரர்கள் கூட இருக்கிறார்கள், அவர்களிடம் கட்டளை இட்டால் அடுத்த நொடி இந்தத் தண்ணீருக்குள் குதித்திருப்பார்கள், ஆனால் நீங்களே ஏன் நேரடியாக உங்கள் மகனைக் காப்பாற்ற குதித்தீர்கள்?? அது போல் தான் இறைவன் தானே நேரடியாக கீழே இறங்கி இந்தப் பூமியில் அவதரிக்கிறான், அதுவும் எதற்காக தனது பிள்ளைகளாகிய உலக மக்களை அதர்ம ஆழத்தில் இருந்து மீட்டெடுக்க... ஆம் நீங்கள் செய்தது போலவே தான்!" என்றவுடன் தான் அக்பருக்கு அவதாரத்தைப் பற்றிய பேருண்மையே புரிய வருகிறது! கர்ஜித்த அவர் அந்த ஓடத்திலேயே தெளிந்த நீரோடை ஆகிறார்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
மனிதரின் மன எதிர்மறை எண்ணத்தில் இருந்து நேர்மறை எண்ணத்திற்கு இறைவன் அவதரித்து நல்வழிப்படுத்தி, நல்ல குணவானாக மாற்றுகிறான்! பேரிறைவன் பாபா அவதரித்ததே அதற்காகத்தான்!
ஒருமுறை ருக்மணியும் , சத்ய பாமாவும் ஸ்ரீ கிருஷ்ணர் திரௌபதிக்கு நிறைய அருள் புரிவதை நினைத்து ஆச்சர்யம் அடைகின்றனர்! திரௌபதி பாண்டவர்களின் ராணியாக இருந்தாலும் அவளுடைய வாழ்க்கையோ பெருத்த அவமானங்கள், இழப்புகள் நிறைந்ததாக இருக்கிறது! ஸ்ரீ கிருஷ்ணரோ அவளை பல இக்கட்டான சூழ்நிலையிலும் , சங்கடமான சமயங்களிலும் காப்பாற்றி இருக்கிறார்! அந்த அளவுக்கு ஸ்ரீ கிருஷ்ணரையே பக்தியால் எவ்வாறு ஈர்க்கிறாள்? என்பதை அறிய வேண்டும் போல் இருந்தது இருவருக்குமே! அதை உணர்ந்த ஸ்ரீ கிருஷ்ணர் தானே அவர்கள் இருவரையும் துரௌபதியின் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்கிறார்! அது இந்திர பிரஸ்தம்! அர்ஜுனன் வேட்டைக்குச் செல்ல... துரௌபதி குளித்து வெளியே வருகையில் , ஸ்ரீ கிருஷ்ணரின் மனைவிகள் வர.. வரவேற்கிறாள், தனது ஈர கூந்தலை சிக்கெடுக்க முயற்சிக்கையில், தனது மனைவிகளை ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு உதவிடச் சொல்ல.. அவர்களும் சிக்கு எடுக்க... மனதில் இருந்த கேள்விச் சிக்கல்களும் அவிழ்ந்து கொள்கின்றன...
ஆம்! துரௌபதியின் தலை முடி ஒவ்வொன்றிலும் "கிருஷ்ணா கிருஷ்ணா" எனும் ஓசை எழுவதை கேட்டுப் பரவசம் அடைகிறார்கள்! அப்போதே புரிந்து விடுகிறது , கூந்தலே இத்தனை ஜபிக்கிறது என்றால் , அவளது உள்ளம்!!
புரிகிறது... அவளது உன்னத பக்தியையும் உணர்கிறார்கள்!
அந்த ஈரத் தலைமுடியின் துளிகள் தெறிக்க இருவரின் இதயமுமே குளிர்ந்து போகிறது!
அது போல் தான் ஸ்ரீ அனுமனும், ஸ்ரீ அனுமனின் வாலின் ரோமத்தில் கூட ராமநாமம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது! "ரோம ரோமமு நாம நாமமே!" என்பார்கள்! ஏனெனில் அந்த திருப்பெயரின் மகிமை அவர் உடல் முழுக்கப் பரவி இருக்கிறது! ஸ்ரீ அனுமன் சுந்தரன், ஏன்? ராம நாமத்தை தனது இதயத்திலேயே குடி வைத்திருப்பதால் தான்! ஸ்ரீ இராமனுடைய மகிமை அவர் முகத்தில் பிரதிபலித்ததால் தான் அந்த முகதேஜஸே சூரியனைப் போல் பிரகாசிக்கிறது! பார்ப்பதற்கு அத்தனைக் கவர்ச்சி! ஸ்ரீ அனுமனோ இனிமையான துணைவன், காரணம் என்ன தெரியுமா? ஸ்ரீ அனுமன் ஸ்ரீ ராமரை மட்டுமே பேசுகிறார்! ஸ்ரீ இராமரை பற்றி மட்டுமே பாடுகிறார்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
ஜப யோகம் அத்தனை சக்தி வாய்ந்தது! தேவையற்ற வார்த்தைகளை ஜபம் நசிக்கிறது! மேலும் மேலும் அனுபூதி அடைய ஆன்மாவுக்குப் பசிக்கிறது! அந்த இறை நாம ஜபத்தாலேயே ஆன்மானுபூதி அடைந்த மகான்கள் பற்பலர்! ஜபம் மிகப் பெரிய காவல்! பேரிறைவன் பாபா வலியுறுத்துகிற அகப் பக்குவத்தை நாம் அடைய ஜபமும் மிகப் பெரிய கிரியா ஊக்கி!
27. இல்லறம் ஆன்மீகத்திற்கு ஏற்றதா?
மகான் ஸ்ரீ சந்த் கபீர் அவர்களை ஒருவர் அவர் இல்லத்தில் சந்திக்கிறார்! *இல்லற வாழ்க்கையை மேற் கொள்வதன் மூலம் ஆன்மீக முன்னேற்றம் தடைபடுமா?* என்று கேட்கிறார்! அவசியமான அடிப்படைக் கேள்வி! அதற்கு கபீர் ஒரு நிகழ்வு வழி பதில் சொல்கிறார்!
திடீரென கபீர் தனது மனைவியை அழைத்து, "ஊசியில் நூல் கோர்க்க வேண்டும், அந்த விளக்கை ஏற்றிக் கொண்டு வாயேன்" என்று கேட்கிறார்! "பட்ட பகலிலேயே உங்களுக்கு கண்ணு தெரியலியே? இப்படி நொள்ள கண்ணனை போய் எனக்கு நிக்கா செய்து வைத்தார்களே!" என்று எந்த ஒரு கடுஞ்சொல்லும் எதிர்த்துப் பேசாமல் , தீபத்தை ஏற்றி வந்து மனைவி கபீர் அவர்களின் கைகளில் தருகிறார்! அதை வாங்கிக் கொண்டே , வந்திருந்த நண்பரிடம் "இப்படி ஒரு மனைவி அமைந்தால் ஆன்மீக முன்னேற்றத்திற்கு எந்த ஒரு தடையும் இருக்காது!" என்கிறார்!
வேறொரு ஊரில் வேறொரு தம்பதிகள்!
கணவனோ தர்மவான்! அவன் மனைவியும் மகனும் அந்த குணத்திற்கு எதிரானவர்கள்! சமயம் கிடைக்கும் போதெல்லாம் அதிதி தேவோ பவா என்று சாதுக்கள் மற்றும் நல்லோரை வீட்டுக்குள் அழைத்து உணவு உச்சரிப்பது அவனது வழக்கம்! ஆனால் அவன் மனைவியோ அவனுக்கு நேர் எதிர்!
அப்படி ஒருவரை ஒரு நாள் அழைத்து வந்து வீட்டில் உட்கார வைத்து , கடையில் பால் வாங்கப் போய்விடுகிறான் அந்தக் கணவன், வந்திருந்த விருந்தினரோ கை கால் முகம் அலம்பி, சிரமப் பரிகாரம் செய்தபடி விருந்துக்காக மிகுந்த பசியோடு அமர்கிறார்! அப்போது விருந்துக்கு அழைத்தவனின் மனைவி அவரிடம் வந்து
"என்ன இது! விபரம் புரியாதவராக இருக்கிறீர்கள்! அவர் இப்படித் தான் ஒவ்வொருவராக விருந்துக்கு அழைத்து, கம்பால் நல்ல அடி உதை அளித்து விரட்டுவார், கொஞ்ச நாளாகவே புத்தி சரியில்லை அவருக்கு, இன்று உங்களை என்ன செய்யப் போகிறாரோ!" என்று கூசாமல் பொய் சொல்கிறாள், அவரோ திடுக்கிட்டு எழுகிற போது, சரியாக அவன் உள்ளே வர... இவர் பயந்து வெளியேற... மனைவியிடம் விபரம் கேட்க..
"அவர் என்ன கை கால் அலம்புவதற்கு கம்பு வேண்டும் என்று கேட்கிறார்! விசித்திரமானவராக இருக்கிறாரே! எதற்கு? என்று கேட்டால், கோபம் வேறு அவருக்கு வருகிறது! சரியான ஆளைத் தான் இன்று பிடித்து வந்திருக்கிறீர்கள்!" என்று அவனிடம் அவன் மனைவி மாற்றிப் பேச,
"கம்பு தானே, கிணற்றடியில் வழுக்கி விழக் கூடாது என்பதற்காக கேட்டிருப்பார், இதோ நான் கம்பு கொடுத்து மீண்டும் அழைத்து வருகிறேன்!" என்று சொல்லி கம்போடு அவரை நோக்கி "நில்லுங்கள் நில்லுங்கள்!" என்று ஓடுகிறார்!
"அய்யய்யோ! அந்த அம்மா சொன்னது உண்மை தான்! அந்தப் பைத்தியம் நம்மை அடிக்க வருகிறது! இது என்னடா சோதனை!" என்று தப்பித்தோம் பிழைத்தோம் என்று மூச்சு வாங்கியபடி ஓடியே போகிறார் விருந்துண்ண வந்தவர்!
இப்படி மனைவி அமைந்தால், ஆன்மீக முன்னேற்றம் மிகவும் கடினம்! இந்நாளில் மனைவிமார்கள் கணவனின் நல்ல குணத்தையோ, செயலையோ பாராட்டுவதில்லை! நல்ல வழியில் கணவன் செல்ல ஊக்குப்படுத்துவதில்லை!
அப்படி அமைந்தால், அவர்கள் வாழ்க்கைத் துணை அல்ல.. வாழ்க்கைத் தடை!
ஒவ்வொரு குடும்பத்திலும் வசுதேவ தியானமே மேற்கொள்ள வேண்டுமே தவிர வசு(பணம்) தியானம் அல்ல!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
மனைவி அமைவதெல்லாம் இறைவனல்ல, நமது பூர்வ புண்ணிய/ பாவ கர்மா கொடுத்த வரம்/சாபம்! இப்படியே கணவன் அமைவதும்! இதில் விவாகம் மட்டுமே மங்களம் என்று மக்கள் நினைக்கிறார்கள்! திருமணம் என்பது ரயிலில் இணைக்கப்படும் ஒரு பெட்டி போலவே! பேரிறைவன் பாபாவே அந்த வாழ்க்கை ரயிலை ஓட்டும் இஞ்சின்! பெட்டிகள் இணையலாம் - பிரியலாம், ஆனால் பயணத்திற்கு இஞ்சினே முக்கியம்! நமது உண்மையான ஒரே வாழ்க்கைத் துணை பேரிறைவன் பாபா மட்டுமே!
📝 28. வேரா? கயிறா?
📝 29. ரா - மா
இறைவனின் திருவடித்தைக் காட்டிலும் அவனது திருப்பெயராகிய திருநாமமே நீங்கள் விரும்பிய பலனை அளிக்கக் கூடியதாகும்!
தன்னைக் காப்பாற்ற ஸ்ரீ கிருஷ்ணர் வரவேண்டி துரௌபதி என்ன செய்தாள்? புறா தூது விடவில்லை, தூதுவரை அனுப்பவில்லை, அவனின் திருநாமம் மட்டுமே உள்ளம் உருக ஓதினாள்! அதுவே அவனை இழுத்து வந்தது அல்லவா!
திரேதா யுகத்தில் இராமாயண இதிகாசம் நிகழ்கையில், நளனும் வானரங்களும் பாலம் கட்டுவதற்காக கற்களை வீசினர் அது மூழ்கியது, சரி! என ஒவ்வொரு கல்லிலும் ராமா என எழுதி கடலில் வீசினார், அது மூழ்காமல் மிதந்தது! ஆனால் என்ன பிரச்சனை எனில், ஒரே நேர்கோட்டில் மிதக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிதந்தது, இப்படி மிதந்தால் எவ்வாறு ஒரு பாலத்தின் வடிவம் வரும்? எனவே யோசித்தனர்! சரி, ஒரு கல்லில் 'ரா' எழுதி மிதக்க விட்டு, மற்றொரு கல்லில் 'மா' எழுதி மிதக்க விட்டனர்! ஆம் அந்த ஸ்ரீ ராம நாம மகிமையால் அந்த இரண்டு கற்களும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்கின்றன! அதனால் பாலமும் உருவானது!
ஆக இறைவனின் திருப்பெயரானது உங்களுக்கு ஆன்மிக மேன்மை கூடிய முக்தியையே அடைய ஒரு பாலமாக திகழ்கிறது! இறை அருளை அது பொழிகிறது!
அப்படி நீங்கள் இறை நாமத்தை உங்கள் உயிர் மூச்சாகக் கொண்டால், உங்கள் வாழ்வில் துக்கத்திற்கும் அச்சத்திற்கும் இடமே இருக்காது!
மீரா என்ன செய்தாள்? சதா ஸ்ரீ கிருஷ்ண நாமத்தையே ஜபித்தாள்! ஆகவே தான் அவளுக்கு விஷம் வைத்த பாலை பருகத் தந்த போதும், அது தேனாய் அவளுக்கு இனித்தது!
பக்தர் பத்ர ஹரி என்ன சொன்னார்? "கடவுளே! இந்தத் துன்பங்கள் எல்லாம் என்னை தின்கின்றன! அவை யாவும் என்னை "நானாக" இருக்க அனுமதிப்பதில்லை! ஆகவே நான் உன்னையே சரண் அடையப் போகிறேன்! இனி பொருளை வேண்டி உன்னிடம் கெஞ்சப் போவதில்லை! பரம்பொருளாகிய உன்னை மட்டுமே நாடப் போகிறேன்! அது போதும் எனக்கு! அதுவே கவலையை கடக்க உதவும் ஆன்ம ஞானம் தருகிறது! மனம் உலகை திருமணம் புரியும் போது கட்டுகள் வருகிறது, ஆனால் இறைவா! மனம் உன்னையே திருமணம் புரிகிற போது அந்தக் கட்டுகளில் இருந்து விடுதலை அடைகிறது!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
இறை நாமம் வேறல்ல இறை ரூபம் வேறல்ல! கஜேந்திரன் எனும் யானை இறை நாமத்தைத் தான் அழைத்தது! என்ன நடந்தது? அதற்கு முக்தியே வந்தது! ராம நாமத்தைக் கூட தலைகீழாக உச்சரித்த வால்மீகி தான் ரிஷியாகி ஸ்ரீமத் இராமாயணத்தையே எழுதினார்! இறை நாமத்தின் மகிமையால் மட்டுமே இது சாத்தியப்பட்டது! இல்லை எனில் அம்பை ஏந்திடும் வேடன் எங்கிருந்து எழுத்தாணி எடுப்பான்?? ஆகையால் யாருக்கு? எப்போது? ஆன்மஞானம் வரும் என்பதை பேரிறைவன் பாபாவே முடிவு செய்கிறார்! நம் கூட நடமாடிய சாதாரணன் கூட நாளைக்கு மகானாகலாம்! இதற்கு உறுதுணையாக இருப்பதில் இறை நாமத்திற்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது!
📝 30. பட்டியல் தயாரித்த தேவதை!
"யார் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களை நேசிக்கிறார்களோ , அவர்களையே இறைவன் நேசிக்கிறார்! என்ற சத்தியமான நீதியை புகட்டும் கதைகளை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா?
ஒரு சமயம் ஒரு சூஃபி துறவி ஒருவர், அவர் பெயர் அபூ பென் ஆதம் , தனது இல்லத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்! அப்போது அவரது படுக்கை அறையின் ஜன்னல் வழியே ஒரு வெளிச்சம் வீசுவதை கவனிக்கிறார்! என்ன வெளிச்சம் அது? என உற்றுப் பார்க்கிறார்! ஒரு காட்சி அவர் மனதை அப்படியே ஆச்சர்யப்பட வைக்கிறது! புல்லரிக்கிறது அவருக்கு! அருகே சென்று பார்க்கிறார்,
சிறகு விரித்த ஒரு தேவதை தங்கப் பேனாவால் ஒரு பட்டியலை எழுதிக் கொண்டிருக்கிறாள்!
அவளை விசாரிக்கிறார் அபூ பென் ஆதம்! தான் தேவதை என்றும், கடவுளின் தூதர் என்றும், இன்று கடவுள் விரும்புபவரின் பட்டியலை தயார் செய்து கொண்டிருக்கிறேன் என்கிறாள்!
அவரோ ஆவலோடு "அதில் என் பெயர் இருக்கிறதா?" என்று கேட்க...
"இல்லை! உங்கள் பெயர் இல்லை!" என்கிறாள்!
"ஓ நான் கடவுள் மீது பக்தியே செலுத்துவதில்லையா? ஏன் அவர் நம்மை விரும்பவில்லை? என்னுடைய நிலை தான் என்ன?" என்ற கேள்வியோடு துக்கமாக வீட்டுக்குச் சென்றுவிடுகிறார்!
அடுத்த நாள் , சிலரை சென்று சந்திப்பதற்காக வெளியே செல்கிறார்! மீண்டும் வீட்டுக்கு வருகிற போது இரவாகிவிடுகிறது! அதே போல் ஜன்னல் வழியே ஒளி.. வெளியே சென்று பார்க்கிறார்! அதே தேவதை! அதே தங்கப் பேனா! அதே பட்டியல் தயாரிப்பு! புரிந்து கொண்டபடி
ஆதங்கத்தோடு "இன்றாவது இந்தப் பட்டியலில் என் பெயர் இடம் பிடித்திருக்கிறதா?" என்று கேட்கிறார்!
தேவதையோ "இன்று உன் பெயர் மட்டுமே இடம் பிடித்திருக்கிறது!" என்கிறாள்!
பேராச்சர்யப்படுகிறார் அவர்!
"நீ மக்களுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை என உணர்ந்து , அதை செயல்முறை படுத்தினாய்! ஆகவே தான் இன்று உன் பெயர் இந்தப் பட்டியல் முழுக்க இடம் பிடித்திருக்கிறது!" என்று தேவதை சொன்ன போது, ஆனந்தம் அடைகிறார் அவர்!
"இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் என்று இந்நாள் வரை நீ வார்த்தையால் சொன்னாலும், அதை நீ நடைமுறைப்படுத்தவில்லை! கடவுள் எல்லா ஜீவராசிகளிலும் நிறைந்திருக்கிறார் என்பதால், நீ கடவுளை நேசிப்பது என்பது சகல ஜீவராசிகளையும் நேசிப்பதே! அதை விட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவரைச் சுருக்காமல், அங்கே மட்டும் வழிபடுவதே கடவுளை அடைகிறது என்று நினைப்பது அவரை தாழ்த்துவதாகிறது!" என்று அந்த தேவதை சொன்னவுடன் அவர் தெளிவடைகிறார்! எனவே கடவுளைப் பற்றிய உங்கள் எண்ணமும் குறுகியதாகவே உள்ளன! கடவுள் எல்லாவற்றிலும் நிறைந்திருப்பவர் என்பதை முதலில் உணருங்கள்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
எல்லாம் அறிந்திருப்பது - எங்கும் நிறைந்திருப்பது - எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருப்பது - இதுவே இறை உயர் நிலை! இப்படி பரிபூரணமாகத் திகழ்வதால் தான் பாபா பேரிறைவன்! அந்தப் பேரிறைவன் பிரசாந்தி நிலையத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த பிரபஞ்சத்திலேயே நீக்கமற நிறைந்திருக்கிறார்! எங்கிருந்து வழிபட்டாலும் , எங்கிருந்து சேவை செய்தாலும், எங்கிருந்து அவர் நாமம் ஜபித்தாலும் மற்றும் இசைத்தாலும், எந்த வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்றாலும் , என்ன துதி செய்தாலும் , என்ன ஆன்ம சாதனை புரிந்தாலும் அது அனைத்தும் பேரிறைவன் பாபாவிடமே வந்து சேர்கின்றன! இதுவே பரம சத்தியம்!
📝 31. கணவனுக்குப் பாடம் புகட்டிய மனைவி!
ஒரு சிறு கதை ஒன்று இங்கே இருக்கிறது! ஒரு ஊரில் ஒரு கணவனும் மனைவியும் வாழ்ந்து வருகிறார்கள்!
மனைவியோ பக்தி சிரத்தை மிகுந்தவள்! கணவனோ அதற்கு நேர் விரோதம்! காலையிலேயே எழுந்து வீட்டு வேலை மற்றும் கணவனுக்கு பணிவிடை செய்பவள் மனைவி! அவனோ தாமதமாக எழுந்து, பல் கூட தேய்க்காமல் காபி அருந்தி, அலுவலகத்திற்கு பிறப்பவன் அவன்! அவளோ இறைவனிடம் வழிபாடு செய்பவள்! அதற்கு நேரமே இல்லை - கடமை தான் கடவுள் என்று கடமைக்கு வாழ்பவன் அவள் கணவன்!
இதை அவனிடமே " விலங்குகள் கூடத் தான் வாழ்கின்றன, இறை வழிபாடு செய்வதில்லை! அப்படியா மனிதனும் வாழ வேண்டும்! இந்த மனித உடல் கிடைத்ததே இறைவனை வழிபடத்தான்! பறவைகள் சம்பாதிப்பதில்லை, சேர்த்து வைப்பதில்லை , ஆனால் சாப்பிடுவதில்லையா ? உயிர் வாழ்வதில்லையா? இப்படி இறைவனை நினைக்காமல் வாழ்வதற்கு ஏன் மனிதனாக வாழ வேண்டும்? " என்று கேட்க.. "நீ ஒரு பேதை! உனக்குப் புரியவில்லை! எனக்கு வேலை தான், வேலைக்குப் பின்னே நேரம் கிடைத்தால் இறைவனை நினைப்பேன், இதில் என்ன தவறு?" என்று கேள்விக்கே கேள்வி விடுக்கிறார்!
அவனிடம் பேசிப் பயனில்லை என அமைதியாகிவிடுகிறாள்!
அவன் உணரும் சமயம் வருகிறது! ஒரு முறை திடீரென அவனுக்கு உடல் நலம் சரியில்லாமல் போகிறது, விஷக் காய்ச்சல்! மருத்துவரை அழைத்து நிறைய மருந்து மாத்திரைகளை கொடுத்து கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறாள் மனைவி! ஒரு வாரம் ஆகிறது - சற்று காய்ச்சலின் கொடிய வீர்யம் குறைகிறது! இன்னொரு வாரம் - மாத்திரைகள் மூன்று வேளையும் - தினம் தினம் கொடுத்தே ஆக வேண்டும் என்று சொல்லி விட்டுச் செல்கிறார் மருத்துவர்!
இது தான் அந்த சந்தர்ப்பம்!
கணவனுக்குப் பாடம் புகட்டியே ஆக வேண்டும் என்று நினைக்கிறாள் மனைவி! மனைவி ஒரு மந்திரி அல்லவா - அதை நிரூபிக்க முயல்கிறாள்!
அந்த நாள் மூன்று வேளையில் ஒரு வேளை கூட அவனுக்கு மாத்திரையே கொடுக்கவில்லை, இரவே வந்து விட்டது! உடனே அவன் அதற்கான காரணம் கேட்கிறான்!
"என்ன அவசரம் , நோய் தணிந்த பிறகு மாத்திரை சாப்பிட்டால் போகிறது, இப்போதென்ன அதைப் பற்றி?" என்று கேட்கிறாள்!
"இதென்ன இப்படிப் பேசுகிறாய், நோய் இருக்கும் போது தானே மாத்திரை சாப்பிட வேண்டும், அப்போது தானே குணமாகும்?" என்று அதிர்ச்சியோடு கணவன் கேட்கிற போது,
"அதே போல் தான், நல்ல உடல் நலத்தோடு , இளமையில் - பணியில்- நடக்க முடியும் போதே இறைவனை வழிபட வேண்டும்! அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், வேலையில் இருந்து ஓய்வு அடைந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று வாழ்க்கையில் எந்த பயனும் இல்லை, ஐந்தில் விளையாதது - ஐம்பதில் மட்டும் எப்படி விளையும்? " என்று கேட்க, தனது பெருந்தவறை உணர்கிறான் அவளின் கணவன்!
அது போல் தான், எமன் பாசக் கயிற்றை வீச நெருங்கும் காலத்தில் எப்படி உங்களுக்கு திடீரென இறைவன் மேல் பக்தி வரும்? இளமையில் இருந்தால் தான் முதுமையில் வரும்! இல்லையேல் இல்லை! ஆக நீங்கள் இப்போதே இறைவனை வழிபட வேண்டும்! காலம் போய்க் கொண்டே இருக்கிறது! அதை பயனுள்ள வகையில் இறை வழிபாடு செய்து மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்!
ஆகவே தான்
சீக்கிரமாக ஆரம்பியுங்கள்
கவனமாக பயணியுங்கள்
பாதுகாப்பாக சேர்ந்திடுங்கள்
( Start Early - Drive Slowly - Reach Safely ) என்கிறேன்!
அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்றால், எப்போதும் அந்த "அப்புறம்!" வரவே வராது! இது தான் உங்களின் மிகச் சரியான காலம் - ஆகவே இந்தக் காலத்தை வீணடித்தால் வாழ்க்கையையே வீணடிப்பதற்குச் சமம்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
கையில் வெண்ணெய் இருக்கும் போது நெய்க்கு மனிதன் தண்ணீரில் தூண்டில் போடுகிறான்! ஆம்! பேரிறைவன் பாபா நமக்குள்ளேயே இயங்கி வருகிற போது , தேவையற்ற நமது வீணான செயல்களினால் அதை உணராமல் , நம்மையும் நாம் பக்குவப்படுத்தாமல் வாழ்க்கையை வீணடிப்பது சரியா? எனும் ஒரு கேள்வி! அது கேள்வி அல்ல அதுவே நம்மை இறை சாயி உணர்வை எய்த வைக்கும் அதி ருத்ர மகா வேள்வி!
சத்தியம்!📝 32. ஸ்ரீ ஆதிசங்கரர் வாழ்வில் இருந்து...!
நான் இப்போது சங்கரர் வாழ்வில் இருந்து அழகானதொரு நிகழ்வை விளக்க இருக்கிறேன்!
ஒரு நாள் அவர் காசியில் இருந்து போது நிகழ்ந்த அக மாற்றச் சம்பவம் இது!
ஒரு குறுகிய சந்தின் வழியே ஸ்ரீ ஆதசங்கரர் ஆற்றில் குளித்து விட்டு அப்படியே நடந்து வருகிறார்! அப்போது தான் அந்த நிகழ்வு அவர் ஞானம் தருவதற்காகவே அரங்கேறுகிறது!
தீண்டத் தகாதவன் என்று அன்றைய சமுதாயத்தில் கற்பனை செய்யப்பட்ட ஒருவர் அப்போது ஸ்ரீ ஆதிசங்கரர் எதிரே வருகிறார்!
உடனே அவரை பார்த்த ஆதிசங்கரர் "விலகி நில்! அப்போது தான் நான் தீட்டுப்படாமல் செல்ல ஏதுவாக இருக்கும்!" என்கிறார்!
அதற்கு எதிரே நிற்பவர்
"யாரை விலகச் சொல்கிறீர்கள்? உடலையா? எதற்கு தீட்டு? உடலுக்கா? ஜீவன் இல்லாவிட்டால் , உடல் வெறும் சடலம், அந்த உடலால் எவ்வாறு பேச முடியும்? அப்படி இயங்காத உடல் இன்னொரு உடலுக்கு எப்படி தீட்டு ஏற்படுத்த முடியும்? ஆக! உடல் எப்படி தானாக விலகி இருக்க முடியும்? விலகி இரு என்று சொல்வதற்கு உடலுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? ஒரு வேளை நீங்கள் ஆன்மாவை சொல்கிறீர்களா? ஒரே ஆன்மாவே நீங்களும் நானும், அப்போது உங்களை நீங்களே விலகி இருக்கச் சொல்கிறீர்களா?" என்று கேட்டுவிட்டு கூர்மையான ஒரு பார்வை பார்க்கிறார்!
அந்த நொடியே ஸ்ரீ ஆதிசங்கரருக்கு எதிர் நிற்பது யார் எனப் புரிகிறது, இத்தனை ஞானம் பேசுபவர் , தன் அறியாமையை விலக்கவே வந்திருக்கிறார் எனபதையும் உணர்கிறார்! அப்படியே உடல் முழுவதையும் அவர் பாதத்தில் கிடத்துகிறார்! வணங்குகிறார்! எதிர் வந்த உருவம் , காசி விஸ்வநாதராக தோன்றி தரிசனமும் தருகிறது!
ஆன்ம ஞானத்தை அடைந்தவர் எவரும் குலம் கடந்தவர்! அதை அடைய ஆன்ம சாதனை புரிபவருக்கும் குல பேதம் இல்லை! யார் அத்வைத சாரத்தை இதயத்தின் இயக்கமாக வைத்திருக்கிறாரோ, அவர் உண்மையான ஆன்ம ஒளியைப் பெற்றவராகிறார்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
"தள்ளிப் போ!" என்று சொல்கிற வரை பாதி சங்கரராகவே இருக்கிறார்! எப்போது யாவரும் சமம், அனைத்திலும் பேரிறைவனே உறைந்திருக்கிறார் என்பதை உணர்ந்த உடன், பாதி சங்கரர் ஆதி சங்கரர் ஆகிறார்!
குல பேதம் என்பது குண நாசத்தை அளிக்கிறது! அனைத்து ஜீவராசிகளும் பேரிறைவன் பாபாவையே சுவாசிக்கிறது! ரத்தத்தில் கூட பேதம் இருக்கிறது! ஆனால் சுவாசத்தில் பேதமே இல்லை! அந்த அத்வைத சாரத்தை இதயத்தில் ஊற்றி ஆறு இறை மார்க்கத்தை இணைத்து அதே ஆதி சங்கரர் ஜோதி சங்கரராக நமது வீட்டு திருவிளக்கின் பேரொளியில் பிரகாசமாய் இன்றளவும் ஜொலிக்கிறார்!
📝 33. அர்ஜுனன் தேரில் ஸ்ரீ அனுமன் கொடி!
அர்ஜுனன் "தான்" என்ற அவனது தற்பெருமையை கட்டுப்படுத்துமாறு ஸ்ரீ கிருஷ்ணரால் பலமுறை பயிற்சி அளிக்கப் பெறுகிறார்!
ஒருமுறை அர்ஜுனன் மகாபாரதப் போருக்கு முன் இராமேஷ்வரத்தின் அருகே இருக்கும் "இராம சேது" பாலம் அருகே தங்கி இருக்கிறார்! அர்ஜுனன் ஸ்ரீ அனுமனுக்கே கேட்கிறபடி "அது எல்லாம் ஒரு பாலமா? அதற்கு போய் இத்தனை சிரமப்பட்டு கற்களைப் போட்டு அமைக்க வேண்டும்! அப்போது நான் மட்டும் இருந்திருந்தால் என்னுடைய அம்புகளாலேயே உறுதியான பாலத்தை ஏற்படுத்தி இருப்பேன்! வானரர்களுக்கு அத்தனை திறமை இல்லை என்பதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை!" என்று ஆங்காரமாய் சிரிக்கிறான்!
உடனே ஸ்ரீ அனுமன் அவன் முன் தோன்றி, "சரி , இப்போதே என் முன்னே ஒரு அம்புப் பாலத்தை அமைத்துத் தான் காட்டேன்! அதன் உறுதி எத்தகையது என்று சோதித்துத் தான் பார்த்துவிடலாம்!" என்று சொல்கிற போது,
உடனே ரோஷம் கொண்டு , தனது அம்புகளால் ஒரு பாலத்தை அமைத்து விடுகிறான்!
"ஓஹோ பலே பலே!" என்றவாறு ஸ்ரீ அனுமன் "ஜெய் ஸ்ரீ ராம்!" என்று அந்தப் பாலத்தின் மேல் கால்களை வைக்கிற அடுத்த நொடி, அம்புப் பாலம் தூள் தூள்!
அம்புப் பாலம் மேலும் வம்புப் பாலம் ஆகிவிட கூடாது என்பதாலும், அர்ஜூனனால் வேறேதும் அசம்பாவித சம்பவம் நிகழக் கூடாது என்பதாலும் ஸ்ரீ கிருஷ்ணர் அங்கே உடனே தோன்றி,
"ஓ போட்டி நடத்துகிறீர்களா? நடுவர் இல்லாமலா!? அதற்காகத் தான் வந்திருக்கிறேன்! இப்போது மீண்டும் போட்டி தொடங்கட்டும்!" என்று ஸ்ரீ கிருஷ்ணர் வலியுறுத்த!
மீண்டும் அம்புப் பாலத்தை உருவாக்குகிறான் அர்ஜுனன், அதன் மேல் கால் வைக்கிறார் அனுமன், இப்போது அந்த சுக்கல் நூறாக உடையவே இல்லை! அடி மேல் அடி எடுத்து வைக்கிறார் ! பாலம் திடமாக இருக்கிறார்! "ஆஹா ! பலே பலே!" "ஜெய் ஸ்ரீ ராம்!" என்று குதிக்கிறார்! அப்போதும் பாலம் உறுதியாக இருக்கிறது!
போட்டி முடிகிறது! பிறகு அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீ அனுமனோடு நடக்க, ஸ்ரீ கிருஷ்ணரின் முதுகை கவனிக்க, ரத்தக் கோடுகள் இருப்பதைப் பார்த்து திடுக்கிடுகிறான்!
"நீ ஜெயிக்க வேண்டும்! என்பதற்காக நான் தான் அந்த பாலத்தை என் முதுகில் சுமந்தேன்!" என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிற போது , அர்ஜுனன் கண் கலங்குகிறான்! தலை குனிகிறான்! அந்த நொடியே அவனது தலைக்கனமும் , தற்பெருமைப் பேச்சும் அன்றோடு முடிவடைகிறது!
ஸ்ரீ அனுமனின் மகிமையையும் ஒருங்கிணைந்து உணர்ந்து நெகிழ்ந்த அர்ஜுனன், பாண்டவரோடு சேர்ந்து கௌரவர்களை எதிர்த்துப் போரிட அனுமனை அழைக்கிறான்!
"அவர்கள் எனது வீரத்துக்கு குறைவானவர்கள், ஆகையால் அவர்களோடு நான் போரிடுவது சரியல்ல! ஒன்றும் பிரச்சனை இல்லை, நான் உன் தேர்க் கொடியில் அமர்ந்து அந்த மகாபாரத யுத்தத்தைப் பார்வையிடுகிறேன்! அதுவே போதுமானது!" என்கிறார்!
மகிழ்ந்த அர்ஜுனன் ஸ்ரீ அனுமனை பணிகிறான்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
வாழ்வில் வெற்றி என்பதும் தோல்வி என்பதும் நிலையில்லாதது! எப்போதும் நிலையானது கலியுக ஸ்ரீ கிருஷ்ணரான பேரிறைவன் பாபாவின் கருணை மட்டுமே! அந்தக் கருணை எப்போது நமக்கு கிடைக்கும்? எப்போது நாம் அகந்தையை விடுகிறோமோ, நாமே அனைத்தையும் சாதிக்கிறோம் என்கிற மிதப்பை விடுகிறோமோ, நாம் வெறும் பாபாவின் கைக் கருவியே என்பதை உணர்கிறோமோ அப்போதே பாபாவின் கருணை மழை பொழிந்து, ஆன்மாவே சாந்தியில் நனைகிறது!!
📝 34. சொற்களால் மனதை மாற்ற முடியுமா?
உங்கள் எண்ணத்தைப் பின் தொடரும் கருத்துத் திரிபானது (Distortion) மிகவும் பயப்பட வேண்டிய ஒன்று!
"ஓ சுவாமி! அனுபவம் மிக்கவர்களையும், மிகுந்த அறிவாளிகளையும், புலவர்களையும் எங்கள் மத்தியில் பேச அழைக்கிறாரே, அவர்களின் வெறும் பேச்சால் மட்டும் மன மாற்றம் வந்து விடுமா?" என்று நீங்கள் சந்தேகப்படலாம்! அதற்கு ஒரு கதை மூலம் உங்களுக்கு அதனை புரிய வைக்கிறேன்!
அது ஒரு பள்ளிக்கூடம்! வசதி படைத்த ஒரு பெரியவர் அந்தப் பள்ளிக் கூடத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகிறார்! ஆனால் அவரை வரவேற்க தலைமை ஆசிரியர் வரவே இல்லை! மிகுந்த கோபம் கொண்டு வகுப்பறை வகுப்பறையாக அவரை தேடுகிறார்! அவரோ ஒரு வகுப்பறையில் மாணவர்களோடு ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்!
மிகுந்த ஆவேசத்தோடு நுழைந்த அவர்
"என்னை வரவேற்பதை விட இங்கே அப்படி என்ன முக்கியமான விஷயம் நடக்கிறது?" என்று கோபமாக கத்துகிறார்!
மிகவும் நிதானத்தோடு "என் மாணவர்களோடு நல்ல கருத்துகளைப் பேசிக் கொண்டிருக்கிறேன்!" என்கிறார் தலைமை ஆசிரியர்!
"ஓஹோ! அப்படி அந்த நல்ல கருத்துக்களைப் பேசினால் மட்டும் நாளையே அவர்கள் நல்ல மனிதர்களாக திகழ்ந்து விடுவார்களா?" என்று மேலும் ஆவேசமாகக் கேட்கிறார் சிறப்பு விருந்தினர்!
"ஏன் ஆக மாட்டார்கள்!? நிச்சயமாக நல்ல மனிதராக - தேசத்தின் நல்ல பிரஜையாக வருவார்கள்!" என்கிறார்!
"ஹா ஹா ..! வெறும் பேச்சாலா?? எனக்கு அதில் சுத்தமாக நம்பிக்கையே இல்லை!" என்கிறார்!
"உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ! ஆனால் நல்ல சொற்கள் நல்ல குணத்தை உருவாக்கும்!" என்று ஒரு செயல் செய்கிறார் தலைமை ஆசிரியர்!
"எழுந்திரு!" என்று ஒரு மாணவரை எழுப்பி,
"உடனே இவரின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு , சீக்கிரம்! சீக்கிரம்!" என்கிறார்!
அதைக் கேட்டு ஆத்திரம் கொண்ட அந்த விருந்தினர் தலைமை ஆசிரியரை ஆத்திரப்பட்டு அடிக்கவே பாய்கிறார்!
அப்போதும் நிதானம் தவறாத ஆசிரியர்
"இப்போது என்ன நடந்து விட்டது என , நீங்கள் இவ்வளவு கோபப்படுகிறீர்கள் ?? நான் உங்களை அடிக்கக் கூட இல்லை, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவே இல்லையே! பிறகு ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்?" என்று கேட்கிறார்!
சில விநாடி நீள் மௌனம்!!
"இப்போது புரிகிறதா? வார்த்தைக்கு இருக்கும் சக்தியை, எப்படி தீய வார்த்தைகள் தீய செயல்கள் செய்ய உந்தித் தள்ளுகிறதோ, அதே போலத் தான் நல்ல வார்த்தைகள் நன்மையை செய்யத் தூண்டி ஒருவனை நல்லவனாக்குகிறது!" என்று ஆசிரியர் தெளிவுபடுத்த...
அந்த விருந்தினருக்கு அவர் வெறும் ஆசிரியராக தெரியவில்லை - கீதாசிரியராகவே கண்ணுக்குத் தெரிகிறார்!
எனவே இவ்வுலகில் நீங்கள் நட்புறவை வளர்க்க.. உண்மையை கூட மென்மையாகப் பேச வேண்டும்! இனிமையான சொற்கள் மிகவும் முக்கியம்! புனிதம் அரங்கேற புனிதமான சொற்களே அஸ்திவாரம்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
ஆகவே தான் வள்ளுவர் "கனி இருக்கக் காய் கவர்ந்தற்று!" என்கிறார்! அலங்காரச் சொல் அல்ல அன்புச் சொல்லே அகத்தை மாற்றும் வல்லமை படைத்தது! இதற்கு ஒரே உதாரணம் - பேரிறைவன் பாபாவின் பேரன்பு வார்த்தைகளே! அவரின் பேரன்பு வார்த்தைகள் - பிரபஞ்ச வார்த்தைகள்! அதற்கு அழிவே இல்லை! உண்மையில் அவை தான் அழிவில் இருந்து நம்மையே காப்பாற்றி வருகிறது!
📝 35. தீப் பிடித்து எரிந்த மிதிலை!!
ஒவ்வொருவருக்கும் சமமாக மரியாதை - மதிப்பு - கௌரவம் கொடுக்கும் பண்பினை வளர்த்துக் கொள்ளுங்கள்!
உலகப் பொருட்களின் மீது எந்த அளவுக்கோ அந்த அளவுக்கே நீங்கள் அதற்கு மதிப்பு தர வேண்டும்! அளவை மீறினால், அந்தப் பொருள் பற்று உங்கள் நிம்மதியையே கெடுத்துவிடும்!
முனிவர்களிலேயே மிக தூய்மையானவர் - அறிவுப்பூர்வமானவர் ஸ்ரீ சுக மகரிஷி! மன்னனாகிய ஜனகர் உட்பட பலருக்கு ஸ்ரீ சுகர் குருவாக விளங்குகிறார்!
ஒரு நாள் ஜனகர் பாடம் கேட்க வருவதற்கு தாமதமாகிறது! மற்ற சீடர்கள் அனைவரும் வந்து விடுகின்றனர்! அது மிதிலை! அனைத்து சீடர்களும் ஸ்ரீ சுகர் முன் அமர்ந்திருக்க... ஜனகரை காணவில்லை! ஸ்ரீ சுகரோ பாடத்தை ஆரம்பிக்காமல் ஜனகருக்காக காத்திருக்கிறார்! அது மற்ற சீடர்கள் மத்தியில் பொறாமை நெருப்பை பற்ற வைக்கிறது!
"ஓஹோ அவர் மன்னர் என்பதால் தான் அத்தனை முக்கியத்துவமா?" என்று தங்கள் குருவையே பாரபட்சமானவர் என்று தவறாக நினைக்கின்றனர்!
இன்னொரு நாள் , ஜனகர் உட்பட அனைவரும் பாடம் கேட்க கூடி இருக்க.... எதிர்பாராத விதமாக மிதிலையே திடீரென தப தப தப என்று தீப் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது, அதைக் கண்ட சீடர்கள் - பதை பதைக்கிறார்கள்!
"எங்கள் குடும்பம் - எங்கள் சொத்து , ஓ குருநாதா, என்ன ஆனதோ! சென்று பார்த்துவிட்டு வருகிறோம்!" என்று அவசர அவசரமாக ஸ்ரீ சுகரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு பறக்கிறார்கள்! ஆனால் ஒரே ஒரு சீடர் மட்டும் அமர்ந்த இடம் விட்டு ஒரு பொட்டு அசைவின்றி அப்படியே அமர்ந்திருக்கிறார்!
ஆச்சர்யமாய் அந்தச் சீடரை பார்த்தவாறே பிற சீடர்கள் வேக வேகமாய் நகர்கிறார்கள்!
அந்த சீடர் வேறு யாருமல்ல - ஜனகர் தான்! சாதாரண பிரஜைகளான மற்ற சீடர்களே அடித்துக் கொண்டு ஓடுகிற போது, தனது சாம்ராஜ்யம் பற்றிக் கொண்டு எரிகிறது, அசரவே இல்லை அவர் !!
"ஜனகா! நீ செல்லவில்லையா?" என்று குருநாதரான ஸ்ரீ சுகர் கேட்கிறார்! "இல்லை குருநாதா! வெளிக் காட்சிகள் அனைத்தும் மாயத் தோற்றமே! ஆன்மா மட்டுமே நிஜம்! அது ஒன்றே சத்தியம்! என்னுடைய உடைமை என்றோ , உறவு என்றோ எதுவுமில்லை! நான் தூய்மையான ஆன்மாவே! மற்ற சுகபோக சாம்ராஜ்யங்கள் அனைத்தும் வெறும் கற்பனையே - கனவே! ஆகவே எதை இழக்கப் போகிறேன்? இந்த மண்ணில் காணும் காட்சிகளில் எது நிரந்தரம்? அப்படியே நிலைப்பதற்கு?" என்று பணிவோடு பதில் சொல்கிறார்!
நெருப்பேதும் தங்கள் வீட்டில் பற்றவில்லை என்ற நிம்மதி பெருமூச்சு விட்டு வந்த சீடர்களும் அதைக் கேட்டு ஆச்சர்யப்படுகிறார்கள்!"
"பார்த்தீர்களா? ஜனகனின் ஆன்ம ஞானத்தை!! இப்போது உங்களுக்கு புரிந்ததா அவர் ஏன் சிறப்பானவர் என்று! ஆன்மா தான் அனைத்தும் என்ற அரிய ஞானத்தை அவர் அடைந்துவிட்டார்! ஆம் அந்த நெருப்பு கூட என்னுடைய ஒரு மாய சிருஷ்டியே! ஏன் ஜனகருக்கு முக்கியத்துவம் தருகிறேன்? உங்களுக்கு ஜனகர் யார்? என்பதை உணர வைப்பதற்காக அப்படிச் செய்தேன்!" என்று சொல்கிறார் ஸ்ரீ சுக மகரிஷி!
இது தான் குருவின் தன்மை! பண்டைய பாரதத்தின் மகிமை! இந்த பாரதமே உலகின் குருவாகத் திகழ்ந்தது! மீண்டும் அது உயிர்ப்பிக்கப் பட வேண்டும்! நீங்கள் ஆன்ம ஞானத்தில் உங்களின் குழந்தைகளுக்கே முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்! மற்றவர் மகிழ்வில் நீங்களும் மகிழ வேண்டும்! ஏனெனில் மற்றவர் என்று யாருமே இல்லை! அனைவரும் தூய்மையான ஒரே ஆன்மாவே! அதே போல் மற்றவர் துயரத்தை உங்கள் துயரமாக உணர்ந்து அவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும்! அது தான் சாயி ஆன்மீகம்! பாரதத்தின் லட்சியம்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
இந்தத் திருச்சம்பவம் தான் நிதர்சனமான ஆன்ம ஞானம் தருகிற சாயி ஆன்மீகம்! பற்று அற்ற நிலை தான் ஆன்மீகத்தின் இடைவேளைக் காட்சி! பேரிறைவன் பாபாவோடு இரண்டறக் கலப்பது தான் இறுதிக் காட்சி! இடைவேளைக் காட்சி நிகழாமல் இறுதிக் காட்சிக்கு அது இட்டுச் செல்வதில்லை!
📝 36. கண்ணீர் விட்ட மலை!!
தகுந்த காரணம் இல்லாமல் இந்த உலகில் எதுவும் எப்போதும் நடைபெறுவதில்லை! அது தற்செயலாக நிகழ்ந்ததாகவோ , அதிசய நிகழ்வாகவோ உங்களுக்கு பார்ப்பதற்கு தோன்றலாம்! வேர்கள் எப்போதுமே கண்களுக்குப் புலப்படாது! ஆனால் மாபெரும் மரத்தை ஆழத்தில் ஊடுறுவி நிற்கும் வேரே தாங்குகிறது! அது போல் எல்லா நிகழ்வுக்குமான தகுந்த காரணங்கள்! இதில் காரணமே வேர்! செயல் என்பது மரமே!
இதைப் பற்றி நான் தர்ம ஷேத்திரத்தில் ஹிஸ்லாபிற்கு சொல்லிக் கொண்டிருந்தேன்!
இலங்கைக்கு ஒரு பாலம் வளைகுடாவில் கட்டப்பட்டு வருகிறது! அப்போது தீவிர சேவையாற்றுகின்றனர் வானரர்கள்! நிரம்ப உழைப்பு! அணில் கூட சேவையாற்றுகிற திகைப்பு! மேலும் ஏராளமான மலைகள் பெயர்க்கப்பட்டன, சரி! போதும் பாலம் உருவாகிவிட்டது என்ற நிலையில் கையில் ஏந்தப்பட்ட மலைகள் திருப்பி அனுப்பப்படுகின்றன! ஆக வரிசையாக மலையைச் சுமந்தபடி வானரர்கள் திரும்பிச் செல்கிறார்கள்! அதில் ஒரு வானவரின் தலைமேல் தண்ணீர்த் துளிகள் விழுகின்றன...! திகைத்துப் போகிறார்! ஆம் அந்த மலை, ஸ்ரீராமர் அவரது காலடியை தன் மேல் வைப்பார் என்ற நம்பிக்கையில் காத்திருந்த போது, அது நிகழாமல் போக.. ஆசை நிராசையான கண்ணீர்த் துளிகள் அவை! இதை உணர்ந்த ஸ்ரீமன் நாராயணர் தனது அடுத்த அவதாரத்தில் தன் ஸ்பரிசம் அதன் மேல் படுவதாக வாக்கு கொடுக்கிறார்! ஆகவே தான் தனது அடுத்த அவதாரத்தில் அதற்கு தன் ஸ்பரிசம் அருள்கிறார்! அதுவே கோவர்த்தன மலை!
இதை நான் சொல்கிற போது ஹிஸ்லாபிற்கு ஒரே ஆச்சர்யம்! உணர்ச்சியைப் பார்வைக்கு வெளிப்படுத்தாத உயிரினங்கள் மற்றும் ஜடப் பொருட்கள் கூட கண்ணீர் விடுமா என்பதே!
ஆனால் சரியாக இன்னொரு சம்பவமும் ஹிஸ்லாப் பார்வையிலேயே அரங்கேறியது!
கட்டிடப் பெண் தொழிலாளர்களுக்காக புடவை வழங்குவதற்காக நான் ஒரு பெட்டியில் புடவையை வைத்திருந்தேன்! நூறில் 96 புடவைகளை கொடுத்துவிட்டேன்! 4 புடவை மீதம் இருந்தது, திருப்பி அனுப்ப சொல்லிவிட்டேன்! பிறகு என் அறைக்குள் வந்த போது, ஹிஸ்லாப்'பும் உடன் இருந்தார்! அந்த அட்டைப் பெட்டியில் இருந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது!
என்னடா இப்படி வருகிறதே என்று ஆச்சர்யப்பட்டார்!
என் ஸ்பரிசம் பெறும் பாக்கியம் தங்களுக்கு இல்லையே என்று ஏக்கத்தின் ஊற்று - அந்தக் கண்ணீர்த் துளிகள்! அப்போது தான் ஹிஸ்லாபே உணர்ந்து கொண்டார்!
இந்த உலகில் இதயம் இல்லாத ஓர் பொருள் கூட இல்லை! இன்பம் அல்லது துன்பம் ஆகியவற்றை உணராத ஒன்று கூட இல்லை! உங்களுக்கு அதைப் பார்க்கக் கூடிய கண் மட்டும் தேவைப்படுகிறது! அதை கேட்கக் கூடிய செவி மட்டும் தேவைப்படுகிறது! அதனை எதிரொலி செய்கிற இதயம் மட்டும் தேவை! அவ்வளவே!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
மனித இனம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முறை வேறு! மற்ற ஜீவராசிகள் வெளிப்படுத்தும் முறை வேறு! இனத்திலேயே மனித இனத்தை தவிர வேறு எந்த இனமும் உண்மைக்குப் புறம்பாக நடிப்பதில்லை! ஆகவே தான் இறைவன் மனித வடிவெடுத்து நல்வழிப்படுத்த அவதரிக்கிறார்! மற்ற எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் உண்மை இருக்கிறது - அன்பு இருக்கிறது ஆனால் ஒரு துளி அளவிலும் சுயநலம் இல்லை! அந்த அன்பின் வெளிப்பாடே கண்ணீர்! அதிகாலை நிகழும் ஆனந்தப் பிரார்த்தனைக் கண்ணீர்த் துளிகள் தானே புல் மேல் எழும் பனித்துளிகள்!!!
📝 37. தற்கால குருமார்களின் நிலை!
ஒரு சமயம் மனிதன் ஒருவன் தனியாகப் பயணம் செய்கிறான்! அப்படித் தன்னந்தனியாக பயணிக்கிற போது வழியில் ஒரு ஆறு குறுக்கிடுகிறது!
"என்னடா இது இப்படி ஒரு தடை! இதைக் கடந்தாக வேண்டுமே! என்ன செய்வது?!" என்று யோசித்துக் கொண்டிருக்கிறான் அந்த மனிதன்!
வேறு எந்த மாற்று வழியும் இல்லை! யாரிடமாவது கேட்க வேண்டும்! இந்த ஆற்றை ஏற்கனவே கடந்தவர்கள், அல்லது அந்த ஊர்க்காரர்கள்! சரி என்று சுற்றும் முற்றும் பார்க்க.. அங்கே இருவர் அமர்ந்திருக்கிறார்கள்! அவர்களிடம் கேட்கலாம் என்று அவன் அணுக... அருகே செல்கிறான்!
"இந்த ஆறு? எப்படிப்பட்ட ஆறு? இதை எளிதாக கடந்து விட முடியுமா? தயவு செய்து சொல்லுங்கள்!" என்கிறான்!
அவர்களோ சற்றும் யோசிக்காமல் "அது ஒரு ஆறே இல்லை.. குட்டை அளவு தண்ணீர் தான்! இதற்கா பயப்படுகிறீர்கள்? மிக மிக எளிதாக கடந்துவிடலாம்!" என்று சர்வ சாதாரணமாகச் சொல்கிறார்கள்!
"என்ன இப்படி சொல்கிறார்கள்!" என்று அவர்களையே அவன் ஆச்சர்யமாகப் பார்க்க, அப்படி பேசிய இருவரில் ஒருவர் பார்வை அற்றவராக இருக்கிறார், இன்னொருவர் கால்கள் செயல்படாதவராக இருக்கிறார்! ஆக இவர்கள் எப்படி ஆறு பற்றி மிகச் சரியாக கூற முடியும்? அளந்து விடுகிறார்கள்! இவர்களை வாய் வார்த்தையை நம்பி ஆற்றில் இறங்குவது முட்டாள்தனமானது என்று உணர்ந்து கொண்டு அந்த இடம் விட்டு நகர்ந்து சென்றுவிடுகிறான்! அவனுடைய செய்கையானது மிகவும் கவனத்திற்குரியதாகும்!
இன்று நாம் வாழ்க்கை என்ற ஆற்றினை குடும்பம் என்ற பலு மிகுந்த மூட்டையுடன் கடக்க விரும்புகின்றோம்! இங்கே பல நவீன குருமார்கள் இந்தப் பார்வை அற்றவரைப் போலவே... கால்கள் இழந்தவர்களைப் போலவே தான் இருக்கிறார்கள்! அதாவது அந்த ஆற்றினைப் பற்றி அறிந்தவராகவோ, அதனை கடக்கும் முயற்சி எத்தகையது எனும் புரிதல் இருப்பவர்களாகவோ இல்லை! இது தான் இக்காலத்தின் நிதர்சனமான உண்மை!!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
வாய் வியாபாரிகளாக இருக்கும் போலியான பேர்களிடமே உலகப் பேராசை கொண்டவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள்! ஆன்மீக பலத்தால் இந்த உலக வாழ்க்கையில் மேலும் வெற்றி அடையலாம் என்ற கற்பனை எதிர்பார்ப்பிலேயே குருவை தேடுகிறார்கள்! ஆன்மீக பலம் பெறுவதால் வருவதில்லை - துறப்பதாலேயே வருகிறது! தியாகமே உள் ஞான ஜோதியை ஏற்றுகிறது! தற்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் சேவை மற்றும் பரஸ்பர பேரன்பினாலும், ஆன்ம சாதனையோடு கூடிய வாழ்வை நடைமுறைப் படுத்தினால் ஆன்மீக பலம் என்ன!! முக்தியே வாய்க்கும் என்பதை ஆன்மா வரை உணர்த்துவது பேரிறைவன் பாபா ஒருவரே!!
📝 38. "உண்மை" விலகினால்...!
அது ஒரு தேசம்! நீதி நெறி வழுவாத ஒரு வீர மன்னன் அரசாண்டு வருகிறான்! அவன் "உண்மை" தான் கடவுள் என்கிற உணர்வாளன்! அவன் தேசத்தில் யாரையும் பொய் பேச அவன் அனுமதிப்பதே இல்லை! "உண்மை எல்லா அறத்திற்கும் அடிப்படை!" என்று அரசாண்டு வருபவன் அந்த வீர மன்னன்!
அந்த காலகட்டத்தில் திடீரென ஒரு சோதனை ஏற்படுகிறது! நல்ல ஆடை அணிகலன் அணிந்த ஒரு பெண்மணி அவன் ராஜ்ய சபைக்கு வந்து "என் பெயர் தனலஷ்மி! இனி நான் உன் தேசத்தில் வசிக்கப் போவதில்லை ! இந்த நொடியே விடை பெறுகிறேன்! அதற்கு உன் அனுமதி வேண்டும்!" என்று சொல்கிறாள்! "சரி! உன் விருப்பம் போல் செய்!" என்று அவனும் சொல்லி விடுகிறான்! அவளும் விடை பெறுகிறாள்!
சில வாரம் கடந்து, வேறொரு அலங்காரப் பெண் உருவம், அதே கோரிக்கை! அவள் பெயர் "நேர்மை!" என்று சொல்கிறாள்! அவனும் தேசத்தை விட்டு நீங்க அனுமதி தருகிறான்!
வேறொரு வாரம், அழகான வாலிப உருவில் தன் பெயரை "நல்லொழுக்கம்!" என்று சொல்லிக் கொண்டே விடை பெற அனுமதி கேட்கிறான்! அந்த வீர மன்னனும் அனுமதி தந்துவிடுகிறான்!
தனம், நேர்மை , நல்லொழுக்கம் விலக... தானும் இருக்கப் போவதில்லை என மனித உரு கொண்டு அந்த மன்னனின் அரண்மனைக்கு வருகிறது "புகழ்!"
சரி உன் விருப்பம் என்று அதுவும் விடைபெற அனுமதி அளிக்கிறான்!
ஒருநாள் ஒரு மனித உருவம் அவன் அரசவைக்கு வருகிறது! "நானும் விடை பெறப் போகிறேன்! எனக்கும் அனுமதி வேண்டும்!" என்று அந்த மனித உருவம் கேட்கிறது!
"யார் நீங்கள்?" என்று கேட்க..
"நானா.. என் பெயர் "உண்மை" என்கிறது அந்த மனித உருவம்!
உடனே பதறியபடி யாரையுமே தலை குனிந்து வணங்காத அந்த வீர மன்னன் , அந்த "உண்மை"யின் காலடியில் விழுந்து கதறி அழுகிறான்!
"உண்மையே! தயவு செய்து நீமட்டும் என்னை விட்டு, என் தேசத்தை விட்டு செல்லாதே! என்னால் அதை ஒரு நொடியும் தாங்கவே இயலாது! நீ வெளியேற என்னால் அனுமதிக்கவே இயலாது!" என்று துக்கம் வெடிக்கப் பேசுகிறான்!
அந்த மனித உருவில் தோன்றிய "உண்மை"யும் மனம் இளகி "சரி இங்கேயே இருந்துவிடுகிறேன்!" என்று சொல்கிறது! அந்த வீர மன்னனும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறான்! உண்மை அங்கேயே தங்கியதை பற்றி அறிந்து, உண்மை இருக்கிற இடத்திலேயே தாங்களும் இருப்போம் என்று அவன் தேசத்தை விட்டு விலகிச் சென்ற "தனம்- நேர்மை - நல்லொழுக்கம் - புகழ்" அனைத்தும் மீண்டும் அவன் தேசத்தை நாடியே வந்துவிடுகின்றன!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
"உண்மை"யே பேரிறைவன் பாபா! உண்மையே நேர்மைக்கான உந்துசக்தி! கோழைகளால் அல்ல வீர மிகு தியாக உணர்வாளர்களால் மட்டுமே உண்மை உயிர் வாழ்கிறது! ஏனெனில் சத்தியம் எங்கே இருக்கிறதோ அங்கே மட்டுமே ஸ்ரீ சத்திய சாயி இருக்கிறார்!
📝 39. உங்கள் பார்வையை முதலில் சரியாக்குங்கள்!
தெய்வீகத்தை இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் , ஒவ்வொரு உயிரிலும் கண்டுணர்வதற்கு முன்னர் அதை உங்களுக்குள்ளேயே நீங்கள் கண்டு உணர வேண்டும்! உங்களின் ஒவ்வொரு சொல்லும் செயலும் அதனை வெளிப்படுத்துவதாக அமைதல் வேண்டும்!
ஒரு காலத்தில் ஒரு கோடீஸ்வரன் வாழ்ந்து வந்தான்! அவனுக்கு ஒரே வியாதி! அதனால் மிகுந்த மன உளைச்சல்! காரணம் - அவன் வயிற்றிலும் தலையிலும் உபாதை! அவன் சாப்பிடாத மாத்திரைகளும் இல்லை, செலுத்திக் கொள்ளாத ஊசிகளும் இல்லை! ஆனால் அவனது நோய் தணியவே இல்லை! கோடிகள் குவிந்து இருந்தும் வாழ்க்கை கசந்து வழிகிறது!
அவனது நல்ல நேரம்! ஒரு யோகியை தரிசிக்கிறான்! அவரோ அவனது நோய் தணிய ஒரு உபாயம் அருள்கிறார்!
இனி அவன் பார்க்கிற இடம் எல்லாம் அவன் ஒரு நிறத்தையே பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்!
"என்ன நிறம்?" இது கோடீஸ்வரன்!
"பச்சை" என்கிறார் யோகி!
உடனே பெயின்ட் அடிக்கும் பணியாளர்களை அழைத்து தான் பார்க்கின்ற ஒவ்வொரு இடத்திலும் பச்சை நிறத்தில் பெயின்ட் அடிக்க உத்தரவிடுகிறார்! பெயின்ட் அடிப்பவர்களுக்குப் பெரிய வசூல் வேட்டை! அவனால் நிறைய சம்பாதிக்கிறார்கள்!
பெயின்ட் அடித்தாயிற்று! அந்த சமயம் பார்த்து அந்த யோகி உள்ளே வருகிறார்! காவி நிறம் அணிந்து வரும் அந்த யோகியை அந்த கோடீஸ்வரனின் உதவியாளர் "பச்சை நிறம் தவிர எதற்கும் இந்த வீட்டில் அனுமதி இல்லை!" என்று தடுக்கிறார்!
அதற்குள் அந்த கோடீஸ்வரன் மாடியில் இருந்து கீழே வர...
"என்ன ஒரு முட்டாள்தனம் நீ செய்திருப்பது?" என்று கருத்தை உயர்த்துகிறார்!
"எத்தனை கோடிகளை தண்ணீர் போல் இறைத்திருக்கிறாய்! புத்தி இல்லையா? நான் சொன்ன விஷயத்திற்கு நூறு ரூபாய் கூட செலவு இல்லை!" என்கிறார் யோகி!
"அது எப்படி சாத்தியம்?"
"நான் என்ன சொன்னேன்?"
"பச்சை நிறமாக அனைத்தையும் பார்க்கச் சொன்னீர்கள்!"
"அதற்கு ஏன் பச்சை பெயின்ட் அடிக்க வேண்டும்? ஒரு பச்சை நிறக் கண்ணாடி அணிந்தால் போதாதா?" என்று கேள்வி கேட்க.. அந்தக் கோடீஸ்வரனுக்கு அப்போது தான் புத்தியே வருகிறது!
உலகத்தை உன்னால் மாற்ற முடியுமா? நீ உன்னை மாற்றிக் கொள்ளலாம் - அது மட்டுமே உன் கையில் இருக்கிறது! உலகத்தை திருத்தப் போகிறேன் என்று கிளம்பி விட்டால் , உன்னை யார் திருத்துவது?! உன் அளவில் உனக்கு மாற்றம் நிகழ வேண்டுமானால்... நீ பார்க்கிற அணுகுமுறையை நீ தான் மாற்றிக் கொள்ள வேண்டும்! உலகம் அல்ல! பிறர் உன் மீது வைக்கும் பார்வைக் கருத்தை விட , நீ பிறர் மீது வைக்கும் பார்வைக் கருத்து உன் நிம்மதியை சீர்குலைக்கிறதா? என்பதை நீ முதலில் கவனிப்பதே முக்கியம்! என்று அந்த யோகி அவரின் புத்தியை தெளிவு படுத்துகிறார்! எதிர்மறைப் பார்வை எதிர்மறைகளையே வளர்க்கிறது! நீ முதலில் அன்பு - கருணை கொண்டவனாக மாறினால்.. உலகமும் அதை உண்மையில் உனக்கு பிரதிபலிக்கும்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
ஆன்மீக வாழ்க்கையை நாம் வாழ்வது என்பது அடுத்தவர்களை திருத்த அல்ல! நம்மை நாமே திருத்திக் கொள்வதற்கே! வெறும் அறிவுரைகள் நிரம்பியது அல்ல ஆன்மீகம்! அக மாற்றம் நிரம்பியதே ஆன்மீகம்! அதுவே பேரிறைவன் பாபா வலியுறுத்தி வருகிற உண்மையான சாயி ஆன்மீகம்!
📝 40. வாழையடி வாழை!!
ஒரு வாழை மரத்தைப் பாருங்கள்! அதன் நுனி முதல் அடி வரை எல்லாம் பலனே! ஆம்!! வாழை மரமோ ஏராளமான பலன்களை தருகின்றது! அதன் இலை நாம் உணவு உண்ண பயன்படுகிறது! அதன் பூக்கள் சமையலுக்கு உதவுகிறது! அதன் பட்டைகள் நார்களை எடுக்கவும், பூக்கள் கட்டவும் பயன்படுகிறது!
ஆனால் வாழை மரத்தின் தலையாய பலன் என்ன?
அதில் இருந்து கிடைக்கக் கூடிய பழங்களே! அல்லவா?!!
இதனை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் தானே!! ஆனால் வாழை மரத்தின் பயன் அதன் தார் தான்! நீங்கள் வளர்ப்பதோ அதன் பழங்களுக்காகத் தானே! அதில் உள்ள பூக்களுக்கோ, பட்டைகளுக்கோ அல்ல.. உங்களின் முதல் நோக்கம் அதன் பழங்களே!!
அது போலவே - மனித உடலை நீங்கள் எடுத்ததற்கான தலையாய பலன் "மெய்ப் பொருளை" கண்டுணர்வதே! மற்றவை எல்லாம் பெரிதாக ஏதும் சிறப்பித்துக் கூற முடியாத, இடை இடையே நிகழ்கிற சிறு சிறு செயல்களே!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
மற்ற எல்லா இனமும் இனப் பெருக்கம் செய்வதற்கே பிறக்கின்றன! ஆனால் மனிதப் பிறவி மட்டும் அகப் பெருக்கத்திற்காகவே பிறக்கிறது! அதை சற்றும் உணராமல் மிருக வாழ்க்கை வாழ்வதை விட்டுவிட்டு பேரிறைவன் பாபா வகுத்த நெறியில் வாழ்கிற போதே நமக்கு பிறவிப் பயன் வாய்க்கிறது! அது வரை ஆன்மக் கதவு திறப்பதே இல்லை!
📝 41. வினைப் பயனே வாழ்க்கை!
ஒரு வீட்டின் முன்பு ஒரு பிச்சைக்காரர் உணவுக்காக கையேந்திக் கொண்டிருக்கிறார்! அந்த வீட்டில் இருக்கும் ஒரு பணக்காரன் காதுகளில் விழும்படி பிச்சை கேட்கிறார் அவர்! அந்த வீட்டு வாசற்கதவு மட்டுமல்ல அந்தப் பணக்காரனின் இதயக் கதவும் திறக்கப்படவில்லை!
"பழைய சோறாவது போடுங்கள்!" என்கிறார் அந்தப் பிச்சைக்காரர்! ஆனால் அந்தப் பணக்காரனோ கொடுஞ் சொற்கள் பேசி விரட்டுகிறான்! அதை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தக் கல் மனம் படைத்த அந்தப் பணக்காரனின் மருமகள்
"நாங்கள் இங்கே பழைய சோறு தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்! புதிய உணவு வகைகளை இப்போது தான் சமைத்துக் கொண்டிருக்கிறோம்!" என்று சொல்கிறாள்! அதைக் கேட்டதும் அவள் சொன்ன உள் அர்த்தம் புரிந்தபடி நகர்ந்து செல்கிறார் அந்தப் பிச்சைக்காரர்! எதுவும் புரியாதபடி உறுமல் முகத்தோடு காட்சி அளிக்கிறான் திமிர் பிடித்த அந்த முட்டாள் பணக்காரன்!
அவள் சொன்ன உள்ளர்த்தம் இது தான்! அந்தப் பணக்காரனின் தற்போதைய வாழ்க்கையானது பழைய (முற்பிறவி) நல்வினைகளால் ஏற்பட்டது மட்டுமே! ஆனால் அதை சிறிதும் உணராமல் அவன் பிறரை மனம் நோகடிப்பதில் புதிய உணவை (புதிய பாவ வினையை) சமைத்துக் கொண்டிருக்கிறான்! இதையே பழைய சோறு (முற்பிறவியில் செய்த வினைப் பயன்) தான் சாப்பிடுகிறோம்! புதிய உணவை (புதிய வினையை) சமைக்கிறோம்! என்று மிகவும் சத்திய மொழியைப் பேசுகிறாள்! ஆக முற்பிறவி பாவ/ புண்ணியமே உங்களுக்கு இப்பிறவி வாழ்க்கை!! இந்தப் பிறவியில் செய்கிற எதுவும் உங்களை ஒருநாளும் பின்தொடராமல் விடாது!!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
இதய வறுமை உடையவரே யாசகர்! கடவுளின் முன்பு பேராசையோடு கையேந்துபவரை விட வயிற்றுப் பசிக்காக கையேந்துவதில் என்ன குறையை சமூகம் காண்கிறது!? பேராசையும் சுயநலமுமே இழிவான குணங்கள்! தானும் தன் குடும்பம் மட்டுமே சுகமாக வாழ வேண்டும் என்று குதிரைக்கு கடிவாளம் இட்டது போல் வாழ்வதால் தான் மனித சமூகம் இன்னும் மேம்படவில்லை! இந்த மன வியாதிக்கான மருந்து பேரிறைவன் பாபாவின் காலடியில் இருக்கிறது! அதுவே பரந்து விரிந்த இதயம் பெறும் ஆன்ம ஞானம்!!
📝 42. செல்வமா? மெய்யறிவா?
ஒரு முறை செல்வத்திற்கும் ஞானத்திற்கும் ஒரு வாதம் ஏற்பட்டது! இருவரில் யார் உயர்ந்தவர் என்ற வாதம்!
செல்வம் : நான் தான் உயர்ந்தவன்
அறிவு: இல்லை இல்லை நான் தான் உயர்ந்தவன்!
செல்வம் : நான் இருந்தால் தான் பக்தர்கள் புட்டபர்த்திக்கே செல்ல முடியும்!
அறிவு : ஹா ஹா! நான் இருந்தால் தான் எது புட்டபர்த்தி? எது தர்மாவரம்? என்பதை அறியவே முடியும்!
செல்வம் : அறிந்தால் போதுமா? செல்ல வேண்டாமா?
அறிவு : சென்றால் போதுமா? அறிய வேண்டாமா?
செல்வம் : நீ என்ன பெரிதாகப் பேசுகிறாய்! நான் இருந்தால் தான் உன்னையே மதிப்பார்கள் தெரியுமா?
அறிவு : ஹா ஹா! மதிப்பா பெரிய மதிப்பு! நான் மட்டும் இல்லை என்றால் உன்னை மதிப்பதாக நடிப்பவர்கள் எல்லாம் உன்னை ஏமாற்றி கடத்திக் கொண்டு போய் விடுவார்கள்! நான் தான் உனக்கே பாதுகாப்பு!
"இதற்கு என்ன தான் முடிவு?" என்று ஒரு முனிவரிடம் நியாயமான தீர்ப்புக்காக செல்வமும் அறிவும் செல்கிறது! தங்களில் யார் பெரியவர் என்பதை அவரிடமே கேட்கிறது!
அதற்கு அந்த முனிவர்!
நீங்கள் இருவரும் சமமானவர்களே! சிறந்தவர்களே! நீங்கள் எப்போது உயர்கிறீர்கள் இழிவாகிறீர்கள் என்பது உங்களின் பயன்பாட்டை வைத்தே இருக்கிறது!
உங்களை யார் எப்படி பயன்படுத்துகிறார்கள்? நல்ல செயல்களுக்கா? தீய செயல்களுக்கா? அதை வைத்தே நீங்கள் நல்லவர்களா? தீயவர்களா? என்பது முடிவு செய்யப்படுகிறது!
மனிதனாக நீங்கள் தோன்றியதே நீங்கள் பெற்றுள்ள மாபெரும் செல்வமாகும்! நீங்கள் மனிதனாக இருக்கின்றீர்கள் என்ற அறிவை பெற்றால் மட்டும் போதாது! மனித குணமே மனிதனாக பிறந்ததற்கான அடையாளம்! காட்டுமிராண்டித் தனமான மிருக குணங்கள் இன்றி மனித குணம் பெற்று வாழ்கிற அறிவு வேண்டும்! ஆக நல்ல குணம் என்பது செல்வம்! நல்ல குணங்களோடு வாழ்வதே மெய்யான அறிவு!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
அறிவும் செல்வமும் இரண்டுமே பேரிறைவன் பாபா நமக்கு அளிக்கிற யாசகமே! இந்த இரண்டுமே சமமாக ஒருவனிடம் இருக்க வேண்டும்! ஒன்று உயர்ந்து ஒன்று தாழ்ந்தால் வாழ்க்கை எனும் வண்டி குடை சாய்ந்து விடுகிறது! ஆனால் அறியாமை மனிதனோ அறிவைத் தேடுவதே செல்வத்தை சேர்க்கத்தான் எனும் படியான அணுகுமுறையை மேற்கொள்கிறான்! இதுவே சமூக அவலங்களுக்கான காரணிகளாக அமைகிறது! சாயி ஆன்மீகம் மட்டுமே எல்லாவற்றிலும் ஒரு சமநிலை தருவதற்கான அகப் பயிற்சியை நமக்குள் ஏற்படுத்துகிறது!
📝 43. அந்த மூன்று நண்பர்கள்!
மாணவர்களாகிய நீங்கள் இரண்டே இரண்டு சாயி செய்திகளை மறந்துவிடவே கூடாது!
1. பிறருக்கு நீங்கள் செய்த உதவியை மறந்துவிட வேண்டும்!
2. உங்களுக்கு பிறர் செய்த தீமைகளையும் உடனுக்குடன் மறந்துவிட வேண்டும்!
நீங்கள் பிறருக்கு செய்த உதவியை மறக்கவில்லை என்றால் , அகந்தை ஏற்படும்! உங்களை விட அவர்களை தாழ்வாக நீங்கள் நினைக்கும் ஒரு தீய வாய்ப்பு ஏற்பட்டுவிடும்!
பிறர் உங்களுக்கு செய்த தீமைகளை நீங்கள் மறக்கவில்லை என்றால் அவர்களை பழி வாங்க வேண்டும் என்ற வன்மம் ஏற்பட்டுவிடும்!
இரண்டுமே தீய கர்மாவை உங்களுக்கு விளைவிக்கிறது!
எப்படி இரண்டே இரண்டு விஷயங்களை நீங்கள் உடனடியாக மறக்க வேண்டுமோ அது போல்
இரண்டே இரண்டு விஷயங்களை வாழ்நாளில் நீங்கள் ஒருமுறை கூட மறக்கவே கூடாது!
1. கடவுள் ஒருவரே!
2. உங்களுக்கு மரணம் நிச்சயம்!
கடவுள் ஒருவரே எனும் சத்தியம் உணர்வதில் பேதம் நீங்கி உலகனைத்தும் ஒற்றுமை உணர்வு மேலோங்குகிறது!
உங்களுக்கு மரணம் நிச்சயம் என்பதை நீங்கள் உணர்கிற போது, சுயநலம் அகன்று உலகப் பற்று விடுத்து - அந்த ஒரே கடவுள் வழியில் பயணிக்க அது ஆன்ம பலம் தருகிறது!
உங்களின் காரியங்கள் எதை வேண்டுமானாலும் நீங்கள் அடுத்த நாளைக்கு ஒத்திப் போடலாம்! ஆனால் உங்கள் அனுமதி இன்றியே உங்களுக்கு நிகழப் போகும் மரணத்தை உங்களால் ஒரு நொடி கூட தள்ளிப் போடவோ - விரைவில் வரச் சொல்லி தந்தி அனுப்பவோ முடியாது அல்லவா! மரணம் நிதர்சனம்! மரணம் எதார்த்தம்! மரண நினைவே பற்றற்ற நிலையை உங்களுக்குத் தருகிறது!
சாதாரண ஒரு பயணத்திற்கே நீங்கள் ஏகப்பட்ட முன்னேற்பாடுகளைச் செய்கிறீர்கள்! ஆனால் உங்களின் இறுதிப் பயணத்திற்கு என்ன தான் முன்னேற்பாடுகளை இதுவரை செய்திருக்கிறீர்கள்?
நீங்கள் உங்கள் வாழ்நாள் நெடுக மூன்று நண்பர்களோடு பயணிக்கிறீர்கள்!
அந்த மூன்றில் முதல் இரண்டு நண்பர்களை பெரிதாக நம்புகிறீர்கள்! அந்த இரண்டு நண்பர்கள் இருக்கும் அகந்தையில் தான் மனிதன் இரக்கமற்ற முறையில் நடந்து கொள்கிறான்! இதற்கு மிகச் சிறந்த உதாரணம் கௌரவர்கள்!
இப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கும் குருட்டு தைரியத்தில் செய்யத் தகாத செயல்கள் எல்லாம் செய்கிறான் மனிதன்!
அவனுக்கு தண்டனையை நீதிபதி தருவதற்கு முன் அந்த இரண்டு நண்பர்களையே துணைக்கு அழைக்கிறான்!
அதில் முதல் நண்பன் - "என்னால் உன்னோடு சிறைக்கு எல்லாம் வர இயலாது! வீடு வரை மட்டுமே தங்கி இருப்பேன்!" என்கிறான்!
இன்னொரு நண்பன் - "நான் நீதி மன்ற வாசல் வரை வருகிறேன் ; அதற்கு மேல் வரமுடியாது!" என்று சொல்லி அதிர்ச்சி அடைய வைக்கிறான்!
மூன்றாவது நண்பனோ- "நீ எங்கே சென்றாலும் உன் பின்னாலேயே வருவேன்! நீ சிறைக்கு சென்றால் கூட நானும் உன் கூடவே தொடர்வேன்!" என்கிறான்!
ஆக மனிதனோடு இறுதி வரை கூட வருவது அந்த மூன்றாவது நண்பனே!
ஆம் முதல் நண்பன் : செல்வம்
இரண்டாம் நண்பன் : உறவுகள்
மூன்றாம் நண்பன் : நல்வினை - தீவினைப் பயன்!
ஆக நீங்கள் மூன்றாவது நண்பனையே நம்ப வேண்டும்! அவனே உங்கள் கூட கடைசி வரை தொடர்கிறான்! அவனை நல்ல நண்பனாக (நல்வினை) வைத்திருப்பதும் ; தீய நண்பனாக (தீ வினை) வைத்திருப்பதும் உங்கள் கையில் மட்டுமே இருக்கிறது!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
அந்த மூன்றாம் நண்பன் நல்லவனாக அமைய முதலில் நாம் பேரிறைவன் பாபாவை நண்பராக்கிக் கொள்ள வேண்டும்! இல்லையேல் ஒரு கோடி பேர் நம் பின்னால் இருந்தாலும் ஒரு பயனும் இல்லை!ஆள் சேர்ப்பதல்ல ஆன்மீகம்! நல்லவற்றை சேர்க்க வேண்டும்! பாரபட்சமற்ற நன்மையே சாயி ஆன்மீகம்! எத்தனைப் படைகள் - எத்தனை வீரர்கள் ஆனால் என்ன பயன்? முட்டாள் துரியோதனன் தோற்றான்!
ஒரே ஒரு பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் துணை இருந்தார் - மிகச் சிறிய படையோடு கூடிய அர்ஜுனன் வென்றான்! எண்ணிக்கைக்கு அல்ல நல்ல எண்ணத்திற்கே பாபா துணை இருக்கிறார்! பாபாவை தவிர எதை வாழ்வில் அடைந்தாலும் அது நரகமாகவே முடிகிறது! நரகத்திலேயே நாம் வசித்தாலும் பாபா நம் கூடவே இருந்தால் அது தான் நிதர்சனமான சொர்க்கமே!
📝 44. வெளித்தோற்றம் முக்கியமே அல்ல!
ஒரு தேசம்! அந்த தேசத்தை மன்னர் ஆண்டு வருகிறார்! அவர் ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்று ஓர் திட்டம் தீட்டுகிறார்! ஆகையால் ஒரு ஒப்பந்தக்காரரை (கான்ட்ராக்டர்) நியமனம் செய்கிறார்! அவரை அழைத்து வந்து ஒரு நிபந்தனை விதிக்கிறார்! விசித்திரமான நிபந்தனை அது! அந்தக் கட்டிடம் எவ்வாறு கட்டப்பட வேண்டும் என்பதற்கான ஒரு நூதன நிபந்தனை! அதாவது அந்த கட்டிட அமைப்பாளர் மிக மிக வழு வழுப்பான மரங்களை கொண்டு வர வேண்டும் - அதனால் மட்டுமே இந்தக் கட்டிடத்தை நிறுவ வேண்டும் என்பதே! ஆணை இட்டது மன்னர் என்பதால் அவர் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை! ஊர் ஊராகச் சென்று வழுவழுப்பான மரங்களை தேடி அலைகிறார்! அப்படி ஒரு மரமே எங்கேயும் இல்லை! எந்த மரத்தை சோதனை செய்தாலும், அதில் கணுக்கள் இருக்கவே செய்கின்றன! அப்படி இப்படி அங்கே இங்கே என்று தேடி கடைசியாக ஒரு வழியாகக் கண்டு பிடித்துவிடுகிறார்!
நேரடியாக அதை வெட்டி மன்னரிடம் எடுத்துச் செல்கிறார்!
"நான் சொன்னது போலவே நீ கொண்டு வந்த மரங்கள் மிக மிக வழுவழுப்பாக இருக்கின்றன! மகிழ்ச்சி! இதனை வைத்து எப்படி கட்டிடம் எழுப்ப முடியும்?? வழுவழுப்பாக இருக்கிறதே தவிர வலிமையாக இல்லையே! இதை வாசலில் வேண்டுமானால் அலங்காரத்திற்கு வைக்கலாம் ! ஆனால் இதை வைத்து எல்லாம் கட்டிடம் எழுப்ப முடியாது என்று சொல்லி விடுகிறார்! ஆம் அவர் சுட்டிக் காட்டிய வழுவழு மரம் வாழை மரமே!
ஆகையால் உங்களின் புறத் தோற்றம் என்பது முக்கியமன்று! அகப் பண்பே மிகவும் முக்கியம்! அகப் பண்பு உள் வலிமை இருப்பதால் மட்டுமே வருகிறது! அகப் பண்பே ஒருவனின் தகுதியையும் சிறப்பினையும் தீர்மானிக்கிறது! இதயம் தூய்மையாக இருக்க வேண்டும்! இறைவனுடைய நாமத்தை உச்சரித்து உள்ளத்தை நீங்கள் தூய்மைப்படுத்த வேண்டும்! அது தான் ஆன்மீக நலன் பெறுவதற்கான பி12 வைட்டமின் மாத்திரையாகிறது! இதைத் தவிர வேறு மாத்திரையே அவசியமில்லை!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
பலாப்பழம் முள் முள்ளாகத் தான் இருக்கிறது! ஆனால் அதற்குள்ளே இருக்கிற பழம்? யோகிகள் எல்லாம் பார்க்க பராரிகளாகத் தான் இருப்பார்கள்! ஆனால் அவர்களிடமே ஆன்ம பலம் பொங்கி வழிகிறது! எளிமையும் தன்மையுமே ஆன்மீகம்! ஆகவே தான் கலியுகத்தில் சாயி அவதாரங்கள் செல்வந்தர் வீட்டில் இல்லாமல் ஏழ்மையான வீட்டில் அவதரித்தனர்! தோற்றத்தில் ஒரு தேற்றமும் இல்லை! வெறும் தோற்றமும் பேச்சையும் பார்த்துப் பார்த்துத் தான் இந்த உலகம் இன்னமும் ஏமாந்து கொண்டிருக்கிறது! பிரம்மாண்ட பேரிறைவன் பாபா நமது தோற்றத்தை பார்ப்பதே இல்லை - அகத்தை மட்டுமே உற்று நோக்குகிறார்!
📝 45. யார் ஏழை?
வல்லமை வாய்ந்த ஒரு மாமன்னர் இருக்கிறார்! அவர் போர் புரிந்து பல வித அரசாட்சியை தனக்குக் கீழே கொண்டு வருவதில் வல்லமை பெற்றவர்! ஆகையால் அவரது தேச பனி படர்ந்த எல்லையைத் தாண்டி, அருகாமை தேசத்தையும் தனது அரசாட்சிக் கீழே கொண்டு வர படையோடு பயணிக்கிறார்!
அந்தப் பனி படர்ந்த மலையை தாண்டுகிறார்! அப்படித் தாண்டுகிற போது ஒரு கணவாய் தென்படுகிறது! அதன் வழியே செல்லும் போது... எதிரில் துறவி போல் ஒருவரை காண்கிறார் அந்த மாமன்னர்!
அந்தத் துறவியோ வெறும் பாறை மீது அமர்ந்து.. குளிருக்கு இதமாக தனது முழுங்கால்களுக்கு உள்ளே தனது முகத்தைப் புதைத்திருக்கிறார்!
அதைப் பார்த்த அந்த மாமன்னர், மிகவும் பரிதாபம் கொண்டு, தனது போர்வையையும், மேல் சட்டையையும் அவர் மேல் வீசிப் போடுகிறார்! அந்தத் துறவியாகிய யோகி, அதை ஏற்காமல் ... இடது கையால் அதை புறம் தள்ளுகிறார்!
தள்ளி மாமன்னரை ஒரு பார்வை பார்க்கிறார்!
"இறைவன் குளிரில் இருந்து காப்பாற்ற எனக்கு தேவையான ஆடையை கொடுத்திருக்கிறார்! அது மட்டுமல்ல எனக்கு தேவையான அனைத்தையும் தீர்த்து வைக்கிறார்! ஆகவே வேறு யாரேனும் ஏழைக்கு இதை வழங்கிடுங்கள்!" என்கிறார்!
பெரிதான வியப்பில் மாமன்னன்! ஆடையற்ற அந்தத் துறவி தனக்கு ஆடை இருக்கிறது என்று சொல்கிறாரே! - புரியாமல்!
"அய்யா! நீங்கள் குறிப்பிட்டீர்களே அந்த ஆடை எங்கே இருக்கிறது?" என்று மாமன்னன் கேட்க..!
"இதோ இது தான் என் உடை!" என்று தனது தோலை சுட்டிக் காட்டுகிறார்!
கல்லறைக்கு போகும் வரை இந்த உடையை நான் அணிந்திருப்பேன் என்கிறார்! அதை பிறந்ததில் இருந்தே அணிந்து வருகிறேன்! கடவுள் எனக்கே எனக்காக நெய்து கொடுத்தது இது! வேறு யாரேனும் ஒரு ஏழைக்குக் கொடுங்கள் என்கிறார்!
"வேறு எந்த ஏழையை நான் எங்கே தேடுவேன்!" என்று அவர் துறவியிடம் கேட்க..!
"அது இருக்கட்டும்! நீங்கள் எங்கே செல்கிறீர்கள்!" என்று துறவி கேட்க...!
"நானா! நான் எதிரி நாட்டுக்குச் சென்று , அவனை வென்று அந்த அரசாட்சியையும் கைப்பற்றப் போகிறேன்! "
"நீங்கள் யார்?"
"நானா! நான் அந்த தேசத்தின் மாமன்னன்!"
"ஓ நீ மன்னனா! உன்னிடம் ஏற்கனவே அத்தனை பெரிய சாம்ராஜ்ஜியம் இருக்கிறதே! அதுவும் போதாது என்று அடுத்த நாட்டையும் கைப்பற்ற வேண்டும் என்று... இந்தக் கடுங்குளிரில் உயிரையே பணயம் வைத்து செல்கிறாயே!! ஹா ஹா ஹா... உன்னை விட ஏழை யாரேனும் இருக்கிறார்களா? ஆனால் நீ ஏழையை எங்கே தேடுவேன் என்று என்னிடமே கேட்கிறாய்! ஹா ஹாஹா!
விசித்திரமாக இருக்கிறது!
நீ தான் பரம ஏழை! திருப்தியே இல்லாத தரித்திர ஏழை.. ஆகவே உனக்கே நீ இந்த போர்வையைக் கொடுத்துக் கொள்!" என்று மீண்டும் கண்களை மூடிக் கொள்கிறார் துறவி!
அந்த கணமே மாமன்னனுக்கு புத்தி வருகிறது! உண்மையான வறுமை இதய வறுமையே என்று சுட்டிக் காட்டிய அந்த கண்மூடி தன்னில் லயித்த துறவியை வணங்குகிறான் மாமன்னன்! தன் செயலை நினைத்து வெட்கப்படுகிறான்! அத்தனை பெரிய சாம்ராஜ்யம் ஆண்ட போதும் பேராசை விடாமல் இருந்ததே என்று தன்னைத் தானே நொந்து கொண்டு தனது படையோடு தனது தேசத்திற்கே திரும்பச் செல்கிறார்! மிகச் சரியாக அப்போது பக்கத்து தேசத்தில் ஒரு வெள்ளைப் பூ மகிழ்ச்சியில் மொட்டவிழ்கிறது!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
திருப்தியின்மையே ஏழ்மை என்கிறார் பேரிறைவன் பாபா!
பலபேர் இங்கே பிறருக்கு காட்டிக் கொள்வதற்காகவே வாழ்கிறார்கள்! வெகு சிலரே சுயநலமின்றி பிறருக்காக வாழ்கிறார்கள்! பேராசையில் தனது நிம்மதியை இழக்கிறார்கள்! வயிற்றெரிச்சல் நெருப்பிலேயே குளிர் காய்கிறார்கள்! ஆனால் பேரிறைவன் பாபாவின் சாயி ஆன்மீகம் இதற்கு முற்றிலும் விரோதமானது! மிக எழிமையானது! பரோபகார தன்மை நிறைந்தது!
📝 46. திருடு போன அந்த ஒரு வைரம்!!
பழி பாவத்திற்கு அஞ்சாத மனிதன் ஒருவன் - அவன் ஒரு திருடன்! ஆன்மீக வாழ்க்கை வாழ நினைக்கிறான்! ஆகவே அவன் ஒரு துறவியை சந்திக்கிறான்! அவரோ உன் கெட்ட குணத்தில் ஏதேனும் ஒன்றை விட்டுவிடு என்கிறார்!
சரி! என்று இனி நான் பொய் பேசவே போவதில்லை என்று சத்தியம் செய்கிறான்!
அன்றைய இரவு அவனே அரண்மனையில் திருடச் செல்கிறான்! மேல் தளத்தில் ஏற்கனவே ஒரு திருடன் நுழைந்து கொண்டிருக்க... இருவரும் ரகசியமாகப் பேசிக் கொள்கிறார்கள்!
இருவரும் சேர்ந்தே திருடுவோம் என்ற முடிவுக்கு வந்ததும்.. அரண்மனை கருவூலம் திறக்கப்படுகிறது! எல்லா வைரங்களையும் அவர்கள் எடுக்கிறார்கள்! ஆனால் அந்த நேர்மையான திருடனோ சமமாகப் பங்கிடுகிறான்! ஆனாலும் அவன் மனசு கேட்கவில்லை.. சரி என்று ஒரு வைரத்தை தன் பங்கிலேயே எடுத்து அந்த கருவூலத்திலேயே வைத்துவிடுகிறான்!
ஆச்சர்யப்படுகிறான் மற்றொரு திருடன்!! பங்கில் கூட பிரச்சனை புரியவில்லையே என்றும்! அவனுக்குள் இரக்கமும் இருக்கிறதே என்றும்...!
சரி என்று அவன் முகவரியும் கேட்டறிகிறான் மற்றொரு திருடன்!
பொழுது விடிகிறது! கருவூலம் கொள்ளை அடிக்கப்பட்ட தகவல் கொரோனா போல் பரவுகிறது! விசாரிக்க அமைச்சரை அந்த இடத்திற்கு செல்ல உத்தரவிடுகிறான் மன்னன்! அங்கே சென்று திறந்தால் ஒரு வைரம் மட்டும் மீதம் இருக்க... பேராசை பிடித்த அமைச்சர் அதை எடுத்து மறைத்துக் கொண்டு.. எல்லா வைரங்களும் திருடு போய்விட்டன என்று பொய் சொல்கிறான்!
மன்னன் அர்த்த புஷ்டியோடு புன்னகை புரிய.. அந்தத் திருடனின் முகவரி சொல்லி அழைத்து வரச் சொல்கிறார் அந்த மன்னன்!
ஆம் நேற்று அந்தத் திருடனோடு மற்றொரு திருடனாய் மாறு வேடத்தில் இருந்ததே மன்னன் தான் என்பது அந்தத் திருடன் ராஜ்ய சபையில் அழைத்து வரும் போது தெரிந்து கொள்கிறான்!
பொய்யே சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்த அந்தத் திருடன் தானே திருடியது என்று ஒப்புக் கொள்கிறான்!
அமைச்சர் பதுக்கிய வைரமும் சேவகர்களால் வெளியே எடுக்கப்பட்டு - அமைச்சர் உடனே சிறைக்குக் கூட்டிச் செல்லப்படுகிறார்! அமைச்சர் பதவிக்கு நேர்மை தவறாமல் உண்மையை பேசும் அந்தத் திருடனையே நியமிக்கிறார் மன்னன்!
இது உண்மை பேசுவதற்கு கிடைத்த வெற்றி!
இன்னொரு கதை இருக்கிறது - மூன்று பாவங்களில் யாரேனும் ஒரு பாவம் புரிந்தால் போதும்.. அவர்களுக்கு பொன்னும் பொருளும் அளிக்கப்படும் என்ற ஒரு பரிசுப் போட்டி
1. வேதம் பொய் என்று பேச வேண்டும்!
2. மது அருந்த வேண்டும்!
3. பிறர் மனைவியை கடத்த வேண்டும்!
இதில் ஏதேனும் ஒரு பாவம் - கையில் பரிசு! இது தான் போட்டி!
யாரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளத் துணியவில்லை! அதில் ஒரு அந்தணர் போட்டிக்கு சம்மதித்து மது அருந்துகிறார்! மது அருந்தியதில் பித்து தலைக்கு ஏற வேதங்களை வசை பாடுகிறார்! அதை தடுக்க வந்த மனைவியை தள்ளி விடுகிறார்! அவளை தாங்கி பிடிக்க வந்த பக்கத்துவீட்டு பெண்மணியை கடத்தி செல்ல முயற்சிக்கிறார் அந்த போதை அந்தணர்! ஆக ஒரே ஒரு இழிவான பாவச் செயல் மற்ற இரண்டையும் சுலபமாகத் தூண்டிவிடுகிறது!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
உண்மை பேசுவது என்பதற்கு முதலில் தைரியம் வேண்டும்! யார் என்னை என்ன நினைப்பார் என்ற எதிர்பார்ப்பின்றி உண்மை பேசுவதே அறம்! ஆனால் அதே உண்மையை அடுத்தவரிடம் கொண்டு சேர்க்கிற போது மென்மையாகச் சேர்க்க வேண்டும் என்பதே பேரிறைவன் பாபாவின் ஆன்மீகம்! முதலில் உண்மை பேச வேண்டும் - அதையே மென்மையாக பேச வேண்டும்! இதுவே வேதம்! இதுவே ஆன்மாவில் மனம் லயிக்கச் செய்யும் தியான போதை! தியானத்திற்கு மிஞ்சிய சுகபோதை ஈரேழு உலகில் எதுவுமே இல்லை! அதற்கு இந்திர உலகின் சோம பானம் கூட இணை இல்லை! தியானத்தின் ஆழத்தை உணராத காரணத்தினாலேயே மனிதன் ஆரோக்கியத்தை கெடுக்கும் போதையில் அல்லல்படுகிறான்! உண்மையான போதை என்பது மனம் ஆன்மாவில் லயிப்பதே!
📝 47. ஏமாற்றாதே! ஏமாற்றப்படுவாய்!
நீங்களே உங்களை பக்தர்கள் அல்லது அடியார்கள் என்று பொய்யான உரிமைகளைக் கொண்டாடாதீர்கள்!
இதைப் பற்றிய அடியார்களின் மீது தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு! அவர்கள் பக்திச் சொற்பொழிவுகள் கேட்கிற நேரம் வரைத் தான் பக்தியோடு இருப்பார்கள்! சொற்பொழிவு முடிந்த பிறகு பழையபடி தனது கெட்ட குணங்களோடு இருப்பார்கள் என்பதே அந்தப் பழமொழி!
ஆகவே எப்போதும் நீங்கள் அன்பு, பொறுமை , பணிவு , வழிபாட்டுணர்வு , ஆகியவை நிறைய உள் சூழ்நிலையில் இருந்து நீங்கள் தவறினால் மனிதப் பண்புகளில் இருந்து விலகிவிடுவீர்கள்! ஆகவே பிறரிடம் உங்களுக்கு இறை பக்தி இருப்பதாக போலியாக நடிப்பதும் - மேல் பூச்சாகக் காட்டிக் கொள்வதும் கூடவே கூடாது! ஏனெனில் நீங்கள் பிறரை ஏமாற்ற முயற்சி செய்தீர்கள் என்றால் உங்களையும் பிறர் ஏமாற்றுவார்கள்!
ஆம்! ஒரு காலத்தில் ஒரு திருடன் வாழ்ந்து வந்தான்! அவன் பலே திருடன்! அவனுக்கு தெரியாத திருட்டு யுக்தியே இல்லை! எல்லா விதம திருட்டுக்கான தந்திரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தான்! திருடிய தடயமே இல்லாமல் திருடிக் கூடியவன்! அவனை யாருமே கையும் களவுமாக பிடித்ததே இல்லை! அவன் ஒருமுறை விலை உயர்ந்த பொருட்களை களவாடிவிட்டு , அவற்றை ஒரு பெரிய மூட்டையாகக் கட்டிக் கொண்டு வருகிறான்! அருகே கிணற்றடியில் ஒரு சிறுவன் ஓவென்று அழுது கொண்டிருக்கிறது! என்னவென்று விசாரிக்கிறான்!
"மாமா! மாமா! என் வைர நெக்லஸ் இதுக்குள்ள விழுந்திருச்சு மாமா! எனக்கு நீச்சல் தெரியாது!" என்று அழுகிறான் சிறுவன்!
"கவலப்படாத! மாமா இருக்கேன்ல.. நான் எடுத்துட்டு வரேன்! இங்கயே இரு" என்று கிணற்றுக்குள் குதிக்கிறான்! அவன் அப்படி குதிக்கிற போது அவனுக்குள் ஆயிரம் எண்ணங்களும் சேர்ந்து குதிக்கின்றன! "இந்த வைர நெக்லஸையும் நானே எடுத்துக் கொள்ளலாம்! பாவம் அந்த சிறுவன் நம்மை என்ன செய்து விடுவான்! ஏன் இதையும் விடுவானேன்!" என்று கிணற்றில் உள் நீச்சல் அடித்துத் தேடித் தேடிப் பார்க்கிறான் வைரம் மினுங்கவே இல்லை! மூச்சு முட்டுகிறது! எந்த குண்டுமணி நகையும் இல்லை- வைரமும் இல்லை வைக்கோலும் இல்லை! பெருத்த ஏமாற்றத்தோடு கிணற்றின் விளிம்பில் ஏறுகிறான்! அப்படி ஏறுகிற போது அவனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது!
அவன் கட்டி வைத்த அந்தப் பெரிய களவு நகை மூட்டையைக் காணவில்லை! அவன் தலையில் யாரோ கல்லைப் போட்டது போல் அவன் இதயம் கனத்துப் போகிறது! ஆம்! அந்தச் சிறுவன் அந்த பலே திருடனையே ஏமாற்றிவிட்டு களவு நகையையே களவாடிவிடுகிறான்! ஆக.. எவனெல்லாம் ஏமாற்றுகிறானோ அவனையும் அவனை விடவும் ஒரு ஏமாற்றுப் பேர்வழி ஏமாற்றுகிறான்! வல்லவனுக்கும் வல்லவன் உலகத்தில் இருக்கத் தானே செய்கிறான்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
நாம் பிறருக்கு தருவது எல்லாம் நமக்கு நாமே தருவது தான் என்கிறார் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி! நாம் பிறரை ஏமாற்றுகிறோம் என்று நினைக்கிறோம் - இல்லை! பிறரை ஏமாற்றும் சாக்கில் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்கிறோம்! சத்தியம் மூங்கில் அல்ல! அது ஒரு புல்லாங்குழல்! யாருக்காகவும் எதற்காகவும் புல்லாங்குழல் வளைவதே இல்லை!
📝 48. போதை பழக்கத்தில் இருந்து விடுபடுவது எப்படி?
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் அபின் உண்ணும் பழக்கத்திற்கு அடிமையான ஒருவன் அழைத்து வரப்படுகிறான்! அந்த போதை பழக்கத்திலிருந்து விடுதலை அடையும் நோக்கோடு அவரிடம் வருகிறான்! பரமஹம்சரோ ஒரு புதுப் பழக்கத்தை அவனுக்குக் கற்றுத் தருகிறார்! மிக எளிமையான அன்றாடச் செயல் அது!
எப்போதெல்லாம் அபின் புகைக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ "இதோ சாக்பீஸ்! இந்தா இதை எடுத்துக் கொள்! இதை வைத்து ஸ்லேட்டில் ஓம் என்று அழுத்தி எழுதிய பிறகு நீ அபின் புகைக்க வேண்டும், மீண்டும் புகைக்கும் படி எண்ணம் வந்தால் , மீண்டும் நான் கொடுத்த இதே சாக்பீஸ் வைத்து ஓம் எழுதிய பிறகு தான் பருகவேண்டும்! அப்படி சாக்பீஸில் ஓம் எழுதும் போது வாயாலும் நீளமாக ஓம் என்று உச்சரிக்க வேண்டும்! என்ன! புரிகிறதா!!" என்று ஒரு எளிய பயிற்சி முறையை சொல்லித் தருகிறார்!
"இதோ பார்! நான் தந்த இந்த சாக்பீஸ் முடியும் வரை தான் நீ அபின் புகைக்க வேண்டும்! சரியா?" என்கிறார்! அது ஒரு முழு வடிவ சாக்பீஸ்!
பரமஹம்சர் சொன்னபடியே அவனும் அந்த சாக்பீஸில் ஓம் எழுதி, ஓம் எழுதுகிற போதே அதையும் உச்சரித்து, அபின் புகைக்கிறான்! நாட்கள் கடந்து போக கடந்து போக, சாக்பீஸ் மட்டுமல்ல , அபின் புகைக்க வேண்டும் என்ற எண்ணமும் கரைந்தே போகிறது! மேலும் ஓம் என்ற உச்சரிப்பால் ஏற்பட்ட ஆன்மீக அதிர்வலைகள் அவனை அபின் போதையில் இருந்து ஆன்மீக போதைக்கு இட்டுச் செல்கிறது!
செயற்கை ரசாயன போதையைக் காட்டிலும் சிறிதளவு கூட துன்பமே தராத ஆன்ம போதையில் பேரமைதியாகி அவர் ஆழ்ந்து போகிறான்! பரமஹம்சரை மானசீகமாக நமஸ்கரிக்கிறான்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
ஆன்மாவில் மனம் ஆழ்ந்து போகிற பேரமைதிப் போதையை விட அதி அற்புதமான போதை வேறெதையும் இந்த உலகத்தால் என்றும் தர முடிவதே இல்லை! இந்த உலகத்தால் உற்பத்தி செய்யப்படும் ரசாயன போதைகள் நரம்பையே தளர்ச்சி அடையச் செய்கின்றன! ஆன்மீக தியான போதை மட்டுமே மனதை சாந்தப்படுத்தி , வாழ்வை பக்குவப்படுத்தி, பேரிறைவன் பாபாவை உணர்த்தி, ஆன்மாவையே கரையேற்றுகிறது - கடைத்தேற்றுகிறது!
📝 49. உலகிலேயே மிகவும் ஆச்சர்யமானது எது?
ஒரு சமயம் ஸ்ரீ பிரம்மா , ஸ்ரீ நாரதரை பார்த்து சில கேள்விகளை கேட்கிறார்!
"நாரதா! நீ அந்த பூலோகத்தில் இதுவரை பார்த்ததிலேயே உனக்கு மிகவும் வியப்புக்குரிய செயலாக எது தோன்றுகிறது?" என்பதே அவரின் முதல் கேள்வி!
அதற்கு நாரதர் கொஞ்சமும் தயங்காமல்
"வணக்கம் பிரம்ம தேவரே!! ஓ அதுவா! மனிதரின் தெளிவற்ற நிலையை நான் என்ன சொல்வது! உங்களுக்கு தெரியாததா! இறந்து கொண்டிருப்பவர்கள் இறந்து போனவர்களின் அருகே அமர்ந்து "இறந்துவிட்டார்களே!" என்று அழுவது தான் மிகவும் வியப்பாக இருக்கிறது! இவர்களின் அத்தகைய அழுகையானது ஏதோ இறந்தவர்களின் சாவையோ அல்லது இறக்கப் போகிற இவர்களின் சாவையோ தடுத்துவிடும் என்றபடியாக கதறிக் கதறி அழுகிறார்கள்! இது தான் மிகவும் விசித்திரம் பிரம்ம தேவரே!"
"ஓஹோ... வேறேதும் வியப்பு??" பிரம்மா தனது கேள்வியை அதிருத்ர மகா வேள்வியாக முன் வைக்கிறார்!
"இந்த மனித இனமே மிகவும் விசித்திர இனமாக இருக்கிறது பிரம்ம தேவரே! எல்லோரும் பாவங்களினால் ஏற்படும் விளைவுகளை எண்ணி பயப்படுகிறார்கள் என்பது உண்மை தான்! ஆனால் இவர்கள் ஒருவர் கூட ஒருநாள் கூட பாவம் செய்யாமல் இருப்பதில்லை! ஹாஹாஹா! அதே போல் புண்ணியங்களின் பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று இவர்கள் ஏராளமாக கனவு காண்கிறார்கள்! ஆனால் இவர்கள் ஒருவரில் கூட சிறு துளி அளவுக்குக் கூட புண்ணியமே செய்வதில்லை! அந்தோ பரிதாபம்!
பண்பான பேச்சே இனிமையான பேச்சு என்று இவர்களே சொல்கிறார்கள்! ஆனால் அந்த இனிமையான பேச்சை எதில் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? ஹா ஹா ஹா! பொய் பேசுவதிலும், பழி போடுவதிலும் , பிறரை இகழ்வதிலும் பயன்படுத்துகிறார்கள்! ஹூம் (தலையில் அடித்துக் கொள்கிறார் நாரதர்)
இதில் ஒரு கேள்வி வேறு அவர்களுக்குள்ளேயே கேட்கிறார்கள் பிரம்ம தேவரே! அது தான் மிகவும் சிரிக்க வைக்கிறது! "இந்தச் சமுதாயத்தில் பொய்மையைச் சந்திக்காது, எப்படி நம்மால் வாழ முடியும்!" என்று வேறு அளக்கிறார்கள்! பாவம் செய்வதையே நியாயமாக்குகிறார்கள்! " என்கிறார் நாரதர்!
பொய் பேசாமல் வாழ முடியாது என்பது தவறான அணுகுமுறை ஆகும்! இயல்பாக இருந்தாலே இயற்கையாகவே உண்மையைத் தான் பேச முடியும்! பொய் பேசுவதற்குத் தான் செயற்கைத் தனமாக இருக்க வேண்டும்!
நீங்கள் எப்போதும் இயல்பாக நீங்களாகவே இருங்கள்! அப்படி இருந்தால் பொய்யாக வாழ மாட்டீர்கள்! சிறு சிறு தவறான செய்கைகளையும் தவிருங்கள்! அதை திரும்பத் திரும்ப செய்வதால் உங்கள் ஒழுக்கமான ஒரே சீராக இயங்கி வரும் அன்றாட வாழ்க்கையே கெட்டுவிடுகிறது!
உதாரணம்: ஒரு பொருள் வாங்குவதற்கு மனைவியிடம் கணவன் 10 ரூபாயை கொடுத்தால்.. அதில் 9 ரூபாய் செலவாகிறது என்றால்... மனைவி என்ன செய்கிறாள்? அந்த 1 ரூபாயை தான் எடுத்து வைத்துக் கொள்கிறாள்! 1ரூபாய் தானே என்று நினைக்கிறாள்! அது முற்றிலும் தவறு! அது கூட பிழையான செயலே!
ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் உங்கள் எண்ணம் - சொல்- செயல்களை உண்மை எனும் உரைகல்லில் வைத்து சோதனை செய்தே ஆக வேண்டும்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
விஷம் ஒரு துளி என்றாலும் விஷமே! ஒரு குடம் என்றாலும் விஷமே! பொய்யும் அப்படியே! உண்மையை பேசுவதால் சுடுகாடு வரை சென்றார் ஹரிச்சந்திர மகாராஜா! அத்தனை சோதனைகளையும் தாங்கிக் கொண்டார்! ஏன் தெரியுமா? முதலில் அவர் தைரியமானவர்! தைரியமானவர்களால் மட்டுமே உண்மையைப் பேச முடியும்! கோழைகளால் அல்ல! அதே கோழைகளுக்கு ஆன்மீகமும் லாயக்கில்லை! பேரிறைவன் பாபாவின் திருப்பெயர் கூட ஸ்ரீ சத்ய சாயி தான்! பொய் பேசுபவர்கள் எப்படி ஸ்ரீ சத்ய சாயி பக்தராகத் திகழ முடியும்?
📝 50. கடவுளைக் காண முடியுமா?
இந்தக் காலகட்டம் எப்படி இருக்கிறது? உங்களின் வாரிசுகள் எப்படி இருக்கிறார்கள்?
கடவுள் , மதம் பற்றி எந்தக் குறிப்புகள் வந்தாலும் , அதன் மேல் எள் மூக்கு முனை அளவும் நம்பிக்கை அற்று நையாண்டியாக (கேலி - கிண்டலாக) ஏளனமாகவே பேசி அதனை வரவேற்கும் பக்குவமற்ற பண்பையே நீங்கள் இளைய தலைமுறையினருக்கு கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள்!
இது உங்கள் முன்னேற்றத்தையே பாதிக்கும்!
"கடவுளா? யார் அந்தக் கடவுள்? அவர் எங்கே இருக்கிறார்? எங்கே? என்ன செய்கிறார்?" என இளைய தலைமுறையினர் இகழ்வாக சிரித்துக் கொண்டே கேட்கிறார்கள்!
ஒரு கிராமத்தில் கும்பல் ஒன்று ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த துறவி ஒருவரை அழைத்து... இதே போல் "கடவுள் யார்? நீங்கள் கடவுளை பார்த்திருக்கிறீர்களா? என்ன இந்தக் கோலம்.. இந்த துறவுக் கோலம் பூண்டால் மட்டும் கடவுள் உங்கள் முன் காட்சிக் கொடுத்துவிடுவாரா? துறவி துறவி என்று இன்னும் எத்தனைப் பேர் உலகை ஏமாற்றப் போகிறீர்கள்! அந்தக் கடவுளை எங்களுக்குக்காவது காட்டக் கூடாதா? நேரில் வந்தால் அவரை நறுக்கென்று நாலு வார்த்தைகள் கேட்க வேண்டும்!" என்று சொல்லி.. அவர்களுக்குள்ளாகவே சிரித்துக் கொள்கிறார்கள்!
பொறுமை இழக்காத துறவி , ஒரு பாத்திரத்தில் பால் கொண்டு வாருங்கள் என்று கேட்கிறார்!
"பாலுக்கும் படைத்தவனுக்கும் என்ன சம்பந்தம்? இதுவோ பால் - கடவுளோ அப்பால்!" என்று கவிதை வேறு சொல்லி சமாளிக்கப் போகிறாரா?" ஒன்றுமே புரியாமல் அந்தக் கும்பல் பால் கொண்டு வருகிறது! அதைக் கையில் ஏந்தியவாறு தனது விரலை அதில் விட்டு எதையோ தேடுகிறார்!
என்ன தேடுகிறீர்கள் சுவாமிஜி என்றது கும்பலில் நக்கலாக ஒரு குரல்!
"பாலில் வெண்ணெய் இருக்கிறது என்று சொல்கிறார்களே ! அதைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன்!" என்கிறார் துறவி!
கொல் என்று சிரிக்கிறார்கள்!
பாலுக்குள் தயிர் இருப்பது உண்மைதான்! அது பாலில் எப்படித் தெரியும்? பாலில் ஒவ்வொரு துளியின் உள்ளே தயிர் தான் இருக்கிறது! ஆனால் அது தயிராகி, அந்தத் தயிரைக் கடையும் போது தான் வெண்ணெயே வரும்! இது தெரியாதா சுவாமிஜி!" என்று சிரித்தபடியே கேட்கிறார்கள்!
அது போல் தான் நீங்கள் காட்டும்படி கேட்ட கடவுளும்!
கடவுள் சகல ஜீவராசிகள் இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் இந்தப் பாலின் உள்ளே ஊடுறுவி இருக்கும் வெண்ணையைப் போல் ... எப்படி இந்தப் பால் தயிராக வேண்டும் என்று சொன்னீர்களோ, அது போல் பிரபஞ்சம் முதல் நமக்குள் வரை உறைந்திருக்கும் கடவுளை நாமும் தயிராக மாறும் நிலையில் , அதையும் கடைகிற போது கடவுள் வெளிப்படுவார்!
ஏற்கனவே தயிரானதை பாலில் விட்டாலும் சரி அல்லது ஒரு எலுமிச்சைப் பழத்தை பிழிந்து விட்டால் கூட பால் தயிராகிவிடும் அல்லவா! அது போல் அந்த எலுமிச்சைப் பழச் சாறு போல் தான் நாம் வைராக்கியமாக செய்து வர வேண்டிய ஆன்ம சாதனை.. அப்படிச் செய்து வருகிற உள்முக ஆன்மீகப் பயிற்சியினால் நமக்குள் உறைந்திருக்கும் கடவுள் , எப்படி பால் தயிராகி தயிர் வெண்ணெயாகி வெளிப்படுமோ, அப்படி கடவுளும் வெளிப்படுவார்!
விட்டில் பூச்சிகள் எல்லாம் பட்டாம்பூச்சிகளாக மாறுவது போல் வியந்தே போனது அந்தக் கும்பல்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
கட'ந்து உள் செல்வதால் உணரப்படுவதே கடவுள்! இதுவே கடவுள் என்ற சொல்லுக்குப் பொருள்! தயிரே பாலை தயிராக்குகிறது! பெரும்பாலும் அப்படியே நாம் பாலை தயிராக்குகிறோம்! அது போலவே கடவுளே அவதாரம் எடுத்து இறங்கி மனிதனை கடவுள் நிலைக்கு உயர்த்துகிறார்! ஆக நாம் முதலில் பாலாக வெள்ளை உள்ளத்தோடு இருக்க வேண்டும்! தண்ணீரில் எப்படி வெண்ணெய் எடுப்பது? பாலாக இருந்தால் மட்டுமே பேரிறைவன் பாபா நமக்குள் உறைந்திருக்கும் அவரை நமது ஆன்ம சாதனையின் வழியாக வெளிப்படுத்திக் கொள்கிறார்!
📝 51. காசிக்கு யாசகர் வேடத்தில் வந்த சிவனும் பார்வதியும்...!
வரிசையாக உணவு உண்ண அமர்ந்திருப்பவரின் இலையில் ஒரு லட்டு கூட வைக்காமல் "லட்டு லட்டு ... யாருக்கு வேண்டும்?" என்று கத்திக் கொண்டு திரிவதில் யாருக்கு என்ன பலன் சொல்லுங்கள்!?
உணவு உண்ண இடம் கிடைத்ததைத் தவிற உணவு கிடைத்ததா? என்பதே மிகவும் முக்கியம்!
இந்தக் காலத்தில் தொண்டு என்பது வெறும் பேச்சளவில் மட்டுமே இருக்கிறது!
இறைவன் சதா விழிப்பானவர்! அவர் எல்லாம் அறிந்தவர் என்பதை மனிதன் மறந்துவிடுகிறான்!
ஒரு சமயம் - காசியில் சிவராத்திரி கோலாகலம்! ஒரே பக்தர் வெள்ளம்! காசி ஷேத்திரமே பரபரப்பாக இருக்கிறது! ஓம் நமசிவாய எனும் கோஷம் வானம் வரை அதிர்கிறது! இதை வானத்தில் உலவிக் கொண்டிருந்த பார்வதி தேவி பார்த்து பூரித்துப் போகிறார்! இத்தனை பக்தர்களா? இத்தனை பேருக்கும் வானுலகில் இடம் இருக்கிறதா? இவர்கள் அனைவரும் வானுலகம் செல்ல தகுதி ஆனவர்கள் அல்லவா!! என்ன ஒரு பக்தி! என்று வியக்கிறார்!
அனைத்தும் அறிந்த ஈஸ்வரன் ஒரு உள் அர்த்தப் புன்னகையை சிந்தியவாறு "நீ மேலோட்டமாக மேலிருந்தவாறு பார்க்கிறாய் தேவி! இவர்கள் எல்லாம் மிகவும் சுயநலவாதிகள்! அடுத்தவர்கள் மீது அக்கறையே இல்லாதவர்கள்! கடவுள் அருளால் தாங்கள் ஆசைப்பட்டதை எல்லாம் சாதித்து விடலாம் என்று கற்பனை செய்கிற பேராசைக்காரர்கள்! நீ என் வார்த்தையை நம்பவில்லை என்றால் வா! நாம் ஒரு யாசகர் வேடத்தில் அங்கே செல்வோம் - என்ன நடக்கிறது என்று நீயே பார்!" என்கிறார் ஈஸ்வரன்!
இருவரும் ஒரு வயது முதிர்ந்த யாசகர் வடிவில் காசிக்கு வந்து ஒரு தெரு வீதியில் அமர்ந்து கொள்கிறார்கள்! வயதான யாசக வடிவில் பார்வதி தேவி மடியில் அமர்ந்திருக்கும் ஈஸ்வரன் நாக்கு வறண்டு போய் தண்ணீர் தண்ணீர் என்று ஏங்குகிறார்! யாசக வடிவில் ஈஸ்வரனை சுமந்திருக்கும் பார்வதி தேவியோ போவோர் வருவோரிடம் "யாராவது தண்ணீர் தாருங்களேன்! என் கணவர் துளித் தண்ணீர் இன்றி செத்து விடுவார் போல இருக்கிறதே!" என்று தொண்டை கிழிய கூக்குரல் இடுகிறார்!
அந்த காசி மாநகரில் ஒருவர் கூட திரும்பிப் பார்க்கவே இல்லை! பலர் அவ்வளவு மும்முரமாக கோவிலுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்! சிலர் "ஏம்மா இப்படி கூவி உயிர வாங்குற... வேறு எங்காவது போய் பிச்சை எடு!" என்று திட்டுகிறார்கள்! சிலர் நல்லவர்கள் போல "கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்து விட்டு தண்ணீர் தருகிறேன்!" என்று அந்த திசை பக்கம் கூட பார்க்காமல் ஓம் நம சிவாய மந்திரத்தை ஆடு புல்லை அசை போடுவது போல் அசைப் போட்டுச் செல்கிறார்கள்!
"ஏப்பா.. இங்க போலீஸே இல்லையா.. இவங்கள சீக்கிரம் புடிச்சுட்டு போப்பா... தண்ணி தண்ணின்னு சும்மா கூவி நடிக்கறாங்க!" என்று வேறு சொல்கிறார் ஒருவர் தனது ஈரம் தோய்ந்த நாக்காலும்... ஈரமற்ற இதயத்தாலும்...!
அங்கே அந்த காசி நகரில் திருடுவதற்காகவே வந்த ஒரு திருடன் அந்த பரிதாபமான காட்சியை பார்த்து அவர்கள் அருகே வருகிறார்! அவன் ஒரு பலே ஜேபடி திருடன் (பிக் பாக்கெட்)
"இந்தாங்க அய்யா! தண்ணீர்!" என்று குடிப்பதற்கு தண்ணீர் தருகிற போது..அதைத் தடுத்து
"ஏப்பா! இவரோ வயசானவரு... இப்பவோ எப்பவோன்னு ஊசல் ஆடறார்! நீ இந்த தண்ணிய கொடுக்கறதோட , வேற ஒரு உதவியும் பண்ணனும்!" என்கிறார் யாசகக் கிழவி வடிவில் அமர்ந்திருந்த பார்வதி தேவி
"என்னம்மா!"
"ஒண்ணுமில்ல... நீ இது வரைக்கும் ஏதாவது வாழ்க்கையில் நல்ல காரியம் பண்ணி இருந்தா.. அதையும் சேர்த்து , ஆமா! அந்தப் புண்ணியத்தையும் சேர்த்து கொடுத்தீன்னா... அவரும் அக்கடான்னு அந்த சிவனோட காலடியிலேயே ஐக்கியமாயிடுவார்'பா!" என்கிறார்!
"அம்மா! என்ன மன்னிக்கணும்! என்ன பத்தி உங்களுக்கு சுத்தமா தெரியாதுன்னு நெனைக்கிறேன்! நான் ஒரு திருடன்! இது வரைக்கும் என் வாழ்க்கைல எந்த ஒரு நல்ல காரியமும் நான் பண்ணதே இல்ல! இப்போத் தான் இன்னிக்குத் தான் இவருக்கு தண்ணி தர்றது மூலமா ஒரு சின்ன நல்ல காரியமே பண்றேன்!" என்று வெளிப்படையாக உண்மை பேசுகிறான் அந்தத் திருடன்!
உடனே பார்வதி பரமேஸ்வரராக இருவரும் தனது சுய வடிவில் அவனுக்குக் காட்சி கொடுத்து..
*"உன் இரக்கத்திற்கும் உண்மைக்கும் நாங்கள் இருவருமே மிகவும் மெச்சுகிறோம்! இந்த போலியான பக்தர் கூட்டத்திலேயே நீ மட்டும் தான் வானுலகத்திற்குச் செல்ல வாய்ப்புள்ளவன்!"* என்று கூறி அவனை ஆசீர்வதித்து மறைந்து போகிறார்கள்!
ஆக அன்பும் உண்மையுமே அந்த திருடனுக்கு கடவுள் தரிசனமும் - கடவுள் வரமும் கிடைக்கக் காரணமாக அமைகிறது!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
ஆன்மீகம் என்பது சடங்கை நிறைவேற்றுவது அல்ல அன்பை நிறைவேற்றுவதே! வழிபாடு என்பது சுயநலத்தில் இருந்து கொப்பளிப்பது அல்ல "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!" என்று இதயத்தை சமுதாயத்திற்காக லாப நோக்கமின்றி பகிர்வதே! பேரிறைவன் பாபா என்பவர் வர்த்தகம் அல்ல நம் நாடி நரம்புக்குள் பேரன்பாய் பிளிறுகிற ஆன்மீக மத்தகம்!
📝 52. கரகம் ஆடுவது போல் தான் வாழ்க்கை!
கடவுள் உங்களிடம் இருந்து வெகு தூரத்தில் இல்லை! கடவுள் வேறெங்கோ தொலைவான தூரத்தில் தான் இருக்கிறார் என்று நீங்கள் கருத வேண்டாம்! கடவுள் உங்களுக்கு உள்ளே இருக்கிறார்! உங்களின் இதய மேடையிலேயே அவர் வீற்றிருக்கிறார்! மனிதனோ இதயத்தை தவிர வேறு எல்லா இடங்களிலும் கடவுளை தேடுகிறான்! உள்ளே கண்டுணர முடியாத காரணத்தினால் தான் அவன் அல்லல் படுகிறான்!
ஒருமுறை துணி துவைப்பவர் ஒருவர் முழங்கால் அளவுக்கு தண்ணீர் ஓடுகிற ஆற்றில் துணிகளைத் துவைக்கிற போது , திடீரென அவருக்கு தாள முடியா தாகம் ஏற்படுகிறது! அப்படியே தாகம் தாளாது இறந்தே போய்விடுகிறார்! எத்தனை பரிதாபம்! அவர் ஓடுகிற தண்ணீரில் நின்ற படிதான் துணிகளையே துவைக்கிறார் ஆயினும் குனிந்து அவரால் அந்தத் தண்ணீரை எடுத்துப் பருக முடியவில்லை! தண்ணீர் ஏதோ ஒரு இடத்தில் ஒரு பானையில் இருக்கிறது என்ற கற்பனையில் , கால் அடியில் இருக்கும் தண்ணீரை அவர் கவனிக்கவே இல்லை! இதைப் போல் தான் கடவுளை தேடும் கதையும்... வெளியே எங்கே எல்லாமோ தேடித் தேடி.. உள்ளே இருக்கிற கடவுளை உணர்வதற்கு மனிதனால் இயலவில்லை! அவன் வெளியேவே தேடித் தேடிச் சோர்ந்து போகிறான் - சலிப்பாகிறான்! பெருத்த ஏமாற்றத்துடனும் , குழப்பத்துடனும் அவன் மீண்டும் பிறப்பதற்காகவே இறக்கிறான்!
கட்டாயம் நீங்கள் "உலகில்" இருந்து தான் ஆக வேண்டும்! ஆனால் "உலகத்திற்காக" இருக்க வேண்டிய அவசியம் இல்லை! அதாவது படகு தண்ணீரில் இருக்க வேண்டும்! ஆனால் படகுக்குள் தண்ணீர் இருக்கக் கூடாது என்பது போல்தான் இதுவும்! உலகில் நீங்கள் எந்த வேலை செய்தாலும்.. உங்கள் கவனத்தை உள்ளுக்குள் இருக்கிற கடவுளின் மேல் சதா நிலை நிறுத்த வேண்டும்!
கரகம் ஆடுபவர்களை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா!! கரகாட்டம் என்பது அலங்கரிக்கப்பட்ட குடத்தை தலையில் வைத்துக் கொண்டு கலைஞர்கள் ஆடுவது! அவர்கள் மிகச் சரியான நடன அசைவுகளோடு , தாளத்திற்கு ஏற்றார் போல் அசைந்து அசைந்து ஆடுவார்கள்! ஆட்டத்தின் இடையே மலர் மாலைகள் கூட அவர்களுக்கு சிலர் அணிவிப்பார்கள்! ஆயினும் எத்தனை கவனச் சிதறல்கள் நடந்தாலும், அதில் எல்லாம் கலைந்து போகாமல் எப்போதும் அவர்களது கவனம் கரகத்தின் மேலேயே இருக்கும்! அது கீழேயே விழாதவாறு மிக லாவகமாக ஆடுவார்கள்! அது போல் தான் நீங்கள் கடவுளின் மேல் உள்ள கவனத்தை மறக்காதவாறு உங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும்!
சிலர் பணக்கார வாழ்வை நினைத்து ஏங்குகிறார்கள்! அயல் நாட்டு சுக போக வாழ்க்கையைக் காட்டிலும் இந்தியாவில் உள்ள எளிய வாழ்க்கை மிகவும் உயர்ந்தது! காரணம் நிம்மதியே உலகில் உயர்வானது!
எவ்வளவு தான் நீங்கள் செல்வத்தை அடைந்தாலும்.. அகப் பக்குவமாகிய பற்றின்மையை நீங்கள் உங்களுக்குள்ளே பெறாவிட்டால் , நீங்கள் எதற்காக செல்வம் சேர்க்கிறீர்களோ அதன் நோக்கத்தையே நீங்கள் அடையப் போவதில்லை! அனைத்தும் பாழாகிவிடும்!
புலன் இன்பங்களை துறந்து மெய்யான ஆன்மீக குறிக்கோளை தொடர்ந்து நடை போடுங்கள்! கடவுள் மற்றும் கடவுள் தொடர்பானதில் மட்டும் அன்பான பிடமானத்தை வளர்த்திடுங்கள்!
(ஆதாரம் : Oka Chinna Katha | Author: Sri Sathya Sai Baba)
அப்பேர்ப்பட்ட கடவுளே பேரிறைவன் பாபா! எந்தக் கடவுள் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறாரோ , எல்லார் உள்ளிலும் நிறைந்திருக்கிறாரோ... அந்தக் கடவுளே பாபா என்பதை கோடான கோடி பேர் அனுபவித்து வருகிறார்கள்! பாபாவே சத்யம்! சத்யமே சாயி! அந்த சத்யத்தை கடைபிடிப்பதே நமக்கான ஆன்ம ஞானம்! நமது பிடிமானம் பாபாவின் பாதங்கள் என்பதாக மட்டுமே அமையட்டும்! மற்ற பிடிமானம் அனைத்தும் பொடி'மானமே!
📝 53. அறை கொடுத்த அனுமன் - வீங்கிப் போன ஸ்ரீராமர் கன்னம்!