தலைப்பு

வெள்ளி, 19 ஜூன், 2026

கலீல் ஜிப்ரானின் கண்கள் வழியே ஸ்ரீ சத்யசாயி பாபா!

  தெய்வீகப் பாதையின் சோதனைகளைக் கையாள

ஒரு கவிதையின் துணைகொண்டு ஆன்மீகப் பகுத்தாய்வு!

தெய்வீகத் தேனிலவு


பொதுவாக, பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவைக் குறித்து சரியான முறையில் கேள்விப்படுபவர்கள், அவரது மகிமையை, மேன்மையை மெல்ல அனுபவித்து படிப்படியாக அவரின் பேராற்றலை உணர்வது வழக்கம். தாங்கள் காலகாலமாக வழிபடும் தெய்வீக வடிவங்களின் ஆதாரசக்தியே இந்தக் கலியுக தர்மத்திற்கு தகுந்தாற்போல மனித வடிவம் தாங்கி வந்துள்ளது என்று பெரும்பாலனோர் கண்டுகொள்வதும் உண்டு. 


    ஒவ்வொரு பக்தரும், ஆரம்ப காலத்தில்…  பக்தியின் வெளிப்பாடான பூஜைகள், பஜனைகள், பிரார்த்தனைகள் செய்யும்போதும், சேவைப் பணிகள் செய்யும்போதும், பலவிதமான மகிமைகளை, தெய்வீக அதிசயங்களை அனுபவிக்கின்றனர். உதாரணங்களாக, மனதில் இருக்கும் கேள்விக்கு... சரியான நேரத்தில் பாபா, யார் மூலமாகவோ அல்லது எதன் மூலமாகவோ மிகக் கச்சிதமாக விடை தருவது! எதிர்பாராத/எதிர்பார்த்த நன்மைகள் அதிசயிக்கும் முறையில் நடந்தேறுவது! படங்களில் இருந்து விபூதி உற்பத்தியாவது, பூக்கள் விழுவது! கனவிலே வந்து பாபா  பேசுவது, வழிகாட்டுவது  என எண்ணற்ற அதிசயங்களை அனுபவித்து, படிப்படியாக ஸ்திரமான பக்தி மேலோங்குகிறது. ஏறத்தாழ எல்லா சாயி பக்தர்களுக்கும் நிதர்சனமாக நிகழ்கின்ற அனுபவக்கிரமம் தான் இது!


சோதனைகள் 


    காலப்போக்கில்… இந்த தெய்வீகத் தேனிலவுக்  காலம்  நிறைவடைந்து, பாபாவின் இறைத்தன்மை ஒரு பக்தரின் பக்தியை சோதிக்கத் தொடங்கும்போது, சிலர் தடுமாறி விலகி விடுவதுண்டு! அத்தகைய தடுமாற்றங்கள் பொதுவாக அறியாமையினால் ஏற்படுபவை.  ஒரு மனிதனின் தீய கர்மவினைப் பயனால் ஏற்படும் கஷ்டகாலத்தில், அந்த மனிதர் எவ்வாறு நடந்து கொள்கிறார் பார்க்கலாம்! என்ற ரீதியில் இறைவனின் கவனம் ஒருவரின் மேற்படுவதே “சோதனை!” எனப்படுகிறது. உண்மையை சொல்வதானால், இறைவன் நேரடியாக சோதிக்கும் அளவு உயர்வதே ஒருவரின் ஆன்மீகப் பயணத்தில் மிகப் பெரும் மைல்கல்! சில மேம்பட்ட ஆத்மாக்களின் உயர்வை, உறுதியை உலகிற்குப் பிரகடனம் செய்யும் வண்ணம், சில நேரங்களில் இறைவன் செய்யும் லீலைகளும் "சோதனை" எனப்படலாம்.



பக்திப் பாதையில்… ஆர்த்த, அர்த்தார்த்த, ஜிக்ஞாசு மற்றும் ஞானி எனப்படும் நான்கு நிலைகளும் கடக்கப்பட
எல்லா பக்தர்களுக்கும் சந்தர்ப்பம் அமைகிறது. பக்தரின் படித்தரங்கள் மாறும் போதும் கூட , தனது மகிமைகளையும், பாதுகாப்பினையும், கருணையையும் எந்த விதத்திலும் சாயிதெய்வம் குறைப்பதே இல்லை!


    எனினும், அதே விதமான அதிசயங்களை, ஆரம்பப் படித்தரத்திலான மகிமைகளை எதிர்பார்க்கும் போது தான் ஒரு பக்தருக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது. தன்னை நோக்கி வரும் ஒவ்வொரு பக்தரையும் பாபா, பக்குவப்படுத்தி இறை நிலைக்கு உயர்த்துகின்ற மாபெரும் அற்புதத்தை மேற்கொள்கிறார். இறை நிலைக்கு உயர வேண்டிய ஒருவர், கொஞ்ச கொஞ்சமாக தனக்குள் உறைந்துள்ள தெய்வீகத்தை உணர முட்பட வேண்டும்! என்று தன்னுடைய தெய்வீகப் பேருரைகளில் பல முறை பாபா வலியுறுத்துவது உண்டு!



அன்பே எனது வடிவம் 


ஸ்ரீ சத்யசாயி பாபா என்கிற பரிபூரண அவதாரத்தை, அவரின்  நோக்கத்தை,  அவர் நம் மேல் நிகழ்த்தும் ஆன்மீக ரசவாதத்தை உணர முட்படுவது… மேற்கூறிய சோதனைக் காலங்களைச் சரியாகக் கையாள்வதற்கு சக்தியளிக்கும்.



பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா, தனது நிஜ ரூபம் குறித்து குறிப்பிடும் போது “Love is my Form” என்றே பிரகடனம் செய்கிறார். தூய அன்பு மனித உடலெடுத்து வந்ததாகவே அவரை  நெருங்கி அனுபவிக்கும்  பக்தர்களும் கட்டியம் கூறுகின்றனர். பிரபல ‘ஆரா’ விஞ்ஞானி டாக்டர் பிராங்க் பார்னோவ்ஸ்கி வியந்து,  "தூய அன்பு இரண்டு கால்கள் கொண்டு நடமாடுகிறது!" என்று கூறிய வார்த்தைகளும் சாட்சி.


இறைவனை யாராலும் புரிந்து கொள்ள இயலாது! ஆனால் உணர இயலும் என்றே ஞானிகள் மொழிகின்றனர். இறைவனின் நிஜத்தை அறிந்துகொள்ளும் ஆற்றல் வேண்டுமானால் மனிதனுக்கு இல்லாமல் போகலாம். ஆனால், அன்பின் ஆற்றலை எல்லா ஜீவ ராசிகளும் உணர முடியும் அல்லவா! 


பங்காரு!


அந்த விதத்தில், அன்பைப் பற்றிய கலீல் ஜிப்ரானின் இந்தக் கீழ்காணும் கவிதை… ஆன்மீகப் பாதையில் ஒருவர் உணரும் சோதனைகளின் சூட்சமத்தை நன்கு விவரிப்பதாக உள்ளது! கலீல் ஜிப்ரான் 1883ம் ஆண்டு லெபனானில் பிறந்து பின்பு அமெரிக்காவிற்கு குடியேறிய கவிஞர். 1931ல் மறைந்த இவருக்கும் சாயி அவதாரத்துக்கும் ஸ்தூலமாக எந்தத் தொடர்பும் இல்லை எனினும், இவர் “On Love” (தமிழ்: அன்பு குறித்து) என்ற தலைப்பில் எழுதியவை… அச்சுப் பிசகாமல் ஆன்மீகப் பாதையின் உயர்ந்த நிலைக்கான நகர்வுகளைப் பிரதிபலிக்கிறது! இந்தக் கவிதையின் சாரத்தை உணர்ந்து அனுபவிக்கும் பாக்கியம் அமைந்தோர்... கலீல் ஜிப்ரான், பாபாவின் செயல்முறைகளைப் படம்பிடித்துக் காட்டுவதை உணரலாம்! மேம்பட்ட பக்தர்களுக்கு பாபா தரும் சோதனைகள் யாவுமே அவர்களை புடம்போட்ட பொன்நகையாய் மாற்றி தாம் பெருமையுடன் சூடிக்கொள்ளத் தான். அதனால் தானே... நெருக்கமான பக்தர்களை அவர் 'பங்காரு!' ( தமிழ்: தங்கமே) என்றழைத்தார்.


அன்பு நம்மை அணுகும்போது அதனை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும்! அன்பின் கட்டளைகளுக்கு எவ்வாறு செவிசாய்க்க வேண்டும்! எத்தகைய பூரணத்தை நோக்கி அன்பு நம்மை இட்டுச் செல்லும்! என்றெல்லாம் தீர்க்கமாக, செயல்முறை விளக்கமாக ஒரு காவியத்தைப் படைத்திருக்கிறார் கவிஞர், இதோ...!



### - - - அன்பு குறித்து - - - ###


அன்பு உங்களை அழைக்கும் போது, அவரைப் பின்தொடருங்கள்,

அவர்  வழிகள் கடினமானதாகவும் செங்குத்தானதாகவும் இருந்தாலும் கூட.


அவருடைய  இறக்கைகள் உங்களைச் சூழ்ந்து தழுவும்போது,

அவருக்கு உங்களை ஒப்படையுங்கள், அவருடைய சிறகுகளுக்குள்

மறைந்திருக்கும் வாள் உங்களைக் காயப்படுத்தினாலும் கூட.


அவர்  உங்களிடம் பேசும்போது அவரை  நம்புங்கள்;

வாடைக் காற்று தோட்டத்தைப் பாழாக்குவது போல்,

அவரது குரல் உங்கள் கனவுகளைச் சிதறடித்தாலும் கூட.


ஏனெனில், அன்பு உங்களுக்கு மகுடம் சூட்டுவது போலவே,

உங்களைச் சிலுவையிலும் அறையும். 

அவர் உங்கள் வளர்ச்சிக்கு உதவுவது போலவே,

உங்களைக் கத்தரித்துச் சீரமைக்கவும் செய்வார்.


சூரிய ஒளியில் நடுங்கும் மென் கிளைகளை வருடி

உயரத்திற்கு இட்டுச் செல்வது போலவே,

மண்ணைப் பற்றிக்கொண்டிருக்கும்

உங்கள் வேர்களை உலுக்கி அதிரவும் செய்வார்.


சோளக் கதிர்களைப் போல் அவர் 

உங்களைத் தன்பால் சேர்த்துக் கொள்கிறார்.

உங்கள் நிர்வாண நிலைக்கென  அந்தக் கதிர்களைப் போரடிக்கிறார்.

உங்கள் உமிகளிலிருந்து உங்களை விடுவிக்க அவர்  உங்களைத் தூற்றுகிறார்.

உங்களை வெண்மையாக்க அவர் உங்களை அரைக்கிறார்.

நீங்கள் இணங்கும் வரை அவன் உங்களைப் பிசைகிறார். 


அதற்குப் பின், அவர் உங்களைத் தன் புனித நெருப்பிற்கு அர்ப்பணிக்கிறார்,

நீங்கள் இறைவனின் புனித விருந்துக்கான புனித ரொட்டியாக மாறும் பொருட்டு!


இவை அனைத்தையும் அன்பு உங்களுக்குச் செய்யும் — நீங்கள் உங்கள் இதயத்தின் ரகசியங்களை அறிந்து கொள்ளும் பொருட்டும், அந்த ஞானத்தின் மூலம் சச்சிதானந்தத்தின் ஒரு துளியாக நீங்கள் மாறும் பொருட்டும்!


ஆனால், உங்கள் இதயத்தில் நீங்கள் அன்பின் அமைதியையும் அன்பின்  இன்பத்தையும் மட்டுமே தேட விரும்பினால், நீங்கள் உங்கள் ஆத்மானுபவ பாதை தவறி, அன்பின் களம் விட்டு வெளியேறி, பருவங்களற்ற உலகத்திற்குள் நுழைவதே உங்களுக்கு நல்லது; அங்கே நீங்கள் சிரிப்பீர்கள், ஆனால் முழு மனதார அல்ல; நீங்கள் அழுவீர்கள், ஆனால்  முழுக்கண்ணீரையும் சிந்தி அல்ல!


அன்பு  தன்னைத் தவிர எதையும் தருவதில்லை, தன்னிலிருந்து தவிர்த்து எதையும் எடுப்பதுமில்லை.அன்பு எதையும் உடைமையாக்குவதில்லை, அது யாருக்கும் உடைமையாவதுமில்லை; ஏனெனில், அன்புக்கு அன்பே போதுமானது.



நீங்கள் அன்புருவென ஆகின்றபோது, "இறைவன் என் இதயத்தில் இருக்கிறார்" என்று சொல்லாதீர்கள், மாறாக, "நான் இறைவனின் இதயத்தில் இருக்கிறேன்" என்று சொல்லுங்கள்.


மேலும், அன்பின் பாதையை உங்களால் வழிநடத்த முடியும் என்று நினைக்காதீர்கள், ஏனெனில், நீங்கள் தகுதியானவர் என்று அன்பு கண்டறிந்தால், அன்பே உங்கள் பாதையை வழிநடத்தும்.


அன்புக்குத் தன்னைத் தானே நிறைவேற்றிக் கொள்வதைத் தவிர வேறு எந்த விருப்பமும் இல்லை. ஆனால் நீங்கள் அன்பினுள் அகப்பட்டும், உங்களுக்கென விருப்பங்கள் இருக்க வேண்டும் என்பது அவசியமானால், இவை உங்கள் விருப்பங்களாக இருக்கட்டும்:


உருகி ஓடி, இரவுக்குத் தன் மெல்லிசையைப் பாடும்

ஒரு சிற்றோடையைப் போல் ஆவது;

மிகுந்த மென்மையின் வலியை அறிந்துகொள்வது!


அன்பைப் பற்றிய உங்கள் சொந்தப் புரிதலாலேயே

நீங்கள் காயப்படுவது;

மேலும், விருப்பத்தோடும் மகிழ்ச்சியோடும் இரத்தம் சிந்துவது!


விடியலில் இறக்கையுள்ள இதயத்தோடு விழித்தெழுந்து,

அன்பில் அமிழ்வதற்கான மற்றொரு நாளுக்காக நன்றி கூறுவது!


நண்பகல் வேளையில் ஓய்வெடுத்து,

அன்பின்  பேரானந்தத்தைத் தியானிப்பது;

மாலை வேளையில் நன்றியுணர்வோடு இல்லம் திரும்புவது!


பின்னர், உங்கள் இதயத்தில்

அன்புக்குரியவருக்கான பிரார்த்தனையோடும்,

உங்கள் உதடுகளில் ஒரு துதிப் பாடலோடும் உறங்கச் செல்வது!


### - - - கவிதை Gemini உதவியுடன் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது ! - - - ###


மேற்காணும் இந்தக் கவிதையில்… அன்பு என்கிற வார்த்தைக்குப் பதில் சாயி என்ற வார்த்தையை இட்டால், சாயி பக்தர்கள் எந்தவித மறுப்பும் இன்றி அப்படியே ஏற்றுக் கொள்ளும்படியாக அமைந்திருப்பதைக் காண்பர். அன்பும் சாயியும் வேறல்ல! என்பதற்கு இன்னுமொரு உதாரணம் இந்த இதிகாசப் பெருங்கவிதை! கவிஞர் கலீல் ஜிப்ரானுக்கு பெருமையும் நன்றியும் உரித்தாகுக!


அன்பே ஸ்ரீ சத்யசாயி பாபாவின் நிஜமான திருவடிவம். ஜெய் சாய்ராம்! 


குறிப்பு: பாபாவின் மாணவர்களில்  அரிதாக சிலருக்கு  அவரை ஸ்தூலமாக நெருங்கி இருந்து அவரது அறைக்கு அருகாமையில் தங்கி சேவை செய்யும் பாக்கியம் அமைந்துள்ளது. அந்த வகையில், திரு. சுந்தர் ஐயர் என்ற மாணவர் , இரண்டு முழு வருடங்களுக்கும் மேலாக பாபாவின் அந்தரங்க உதவியாளராக இருந்தவர். இவர் பாபாவைப் பற்றி விவரிக்கும் பொழுது இந்த  குறிப்பிட்ட கவிதையை மேற்கோள் காட்டுகிறார். அந்த மேற்கோளைப் பின்பற்றியே இந்தக் கட்டுரை இயற்றப்பட்டது!


தொகுத்தவர்: கவிஞர் சாய்புஷ்கர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக