தலைப்பு

புதன், 19 அக்டோபர், 2022

திருமாங்கல்யம் திருட வந்தவனை திடீரென ஓட்டம் எடுக்க வைத்த காவல் பாபா!

நீசர்கள் நிறைந்த சபையில், தனது மானம் காக்க ஆடையை இறுகப் பற்றியபடி, கிருஷ்ணா, மதுசூதனா, ஜனார்த்தனா எனக் கதறி அழுதாள் துரோபதி. உதவிக்கு வரவில்லை அந்த மாயக்கண்ணன். நிலைமை முற்றிவிட, தனது இரு கரத்தையும் மேலே கூப்பி இதயவாசி என அழைக்க, அந்த விநாடியே இளகிய கோவிந்தன்,  அவள் மானம் காத்து வஸ்த்திரத்தை வளரச் செய்தான். இறை வழிபாடு என்பது, நாமாவளியோ, தோத்திர உச்சரிப்போ அல்ல. அது பரிபூரண சரணாகதியின் வெளிப்பாடு.இதயத்திலிருந்து  தாங்க இயலாமல்  வெடித்துவரும் ஓலக்குரல்.

துவாபர யுகக் கதை , கலியுகத்தில் மறு நிகழ்வு. திருமாங்கல்யத்தை திருடன் பறிக்க முயல, அதை எதிர்த்து போராடாமல், பக்தை பாபாவிடம் உரிமை கலந்த கோபத்துடன், "பாபா நீ என்னுடன் இருக்க, ஒரு திருடன் எப்படி இங்கு வரலாம்" எனக் கேட்கிறாள். பக்த பராதீன பாபா எவ்வாறு அவளைக் காக்கிறார். காண்போம் பாபாவின் அந்த அற்புதத் திருவிளையாடலை.


🌷ஒரு தரிசனத்திலே உள்ளம் புகுந்த பாபா:

பார்வதி மகாதேவன் அவர்கள் பெங்களூரில், ஒயிட்பீல்டில் வசித்து வந்தார். அருகே த்ரயீ பிருந்தாவனத்தில் சாட்சாத் கோகுலவாசி கிருஷ்ணன் பாபாவாக உலவிக்கொண்டிருப்பதை அறிய இயலாமல் மாயை தடுத்தது. காலம் கனிந்தது, பாபாவின் கருணை ஒளி அவர்கள்மீது படரும் நேரமும் வந்தது. அந்த மாதரசியின் மகன் ஒரு போர் விமான பைலட். அது 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடனான யுத்தத்தில் பங்கேற்ற அவர் பற்றிய தகவல்கள் நீண்ட நாட்களாக கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சல் அடைந்த பார்வதி அம்மாவுக்கு , தெரிந்தவர் ஒருவர் பாபா பற்றியும், அருகிலேயே த்ரையீ பிருந்தாவனத்தில் அவர் இருப்பது பற்றியும் கூறினார்.தன் மன   உளைச்சலுக்கு ஏதாவது ஆறுதல் கிடைக்காதா என்று ஏங்கிய அவர் உடனே பாபா தரிசனம் காண த்ரையீ பிருந்தாவன் சென்று, தரிசன வரிசையிலும் அமர்ந்தார். 

நிசப்தமான சூழ்நிலை. பக்தர்கள் தலை சூரிய காந்தி புஷ்பம்போல் பாபா வரும் திசையை நோக்கி திரும்ப, நேராக இவர் எதிரில் வந்த பாபா "உன் மகனைப் பற்றி கவலைப்படாதே. அவன் நலமாக உள்ளான். விரைவில் அவன் உன்னிடம் பேசுவான்" என்றார். வியப்பூட்டும் விதமாக அன்றிரவே அவரது மகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தான் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் சந்திக்கலாம் எனவும் கூறினார்.


🌷பக்தரின் பக்கத்தில்... எப்போதும் துணை நிற்பான்:

சொல்லொணா மகிழ்வுடனும்,  நன்றியுடன, பகவானின் மகிமையை நினைந்து, அந்தக்கணமே அத்யந்த பக்தையாக அவர் மாறினார். கர்நாடக சங்கீதத்தில் புலமை வாய்ந்த அவர், பிருந்தாவனத்தின் பஜன் பாடகர்களில் ஒருவராகவும் பரிமளித்தார் . அதுமட்டுமா அதுவரை எந்த பக்தி/ பஜன் பாடல்களையும்  இயற்றாத அவர், இதன்பின் நுற்றுக்கணக்கான பஜன் பாடல்களை இயற்றிப் பாடினார். அவரது அமுதப் பாடல்களில் ஒன்றான, "ஆவோ கோபாலா கிரிதாரி" கேட்டு நெகிழாதவர் யார். 

 ஸ்வாமி அந்த அம்மையாருக்கு ஒரு லிங்கத்தை அளித்திருந்தார். தினமும் அந்த லிங்கேஸ்வரனுக்கு மிகவும் சிரத்தையாகவும், நீண்டநேரமும் வழிபாடுகள் நடத்துவது அவரது வழக்கம். இதனால் பிருந்தான தரிசனம் மற்றும் பஜன் நேரத்திற்கும் கடைசி விநாடியில் அவசரமாக விரைந்து வருவார். ஒரு நாள் பின்மாலை நேரம். அவர் தனது வீட்டில், பகவான் அளித்திருந்த  சிவலிங்க ஆராதனையில் மெய்மறந்து ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

திடீரென மின் தடை ஏற்பட,  மின் விளக்குகள் அணைந்து, வீடே இருளில் மூழ்கியது. இதை சாதகமாக்கி ஒரு திருடன் வீட்டுக்குள் புகுந்து நோட்டம் விட,  அருகிலிருந்த குத்து விளக்கு வெளிச்சத்தில் பார்வதி அம்மாள் கண் மூடி பூஜை செய்வதைக் கண்டான். அவரது கழுத்தில் மங்கல சூத்திரமான தாலி பளபளப்பாகமின்னவே, அதைப் பறிக்கமுயன்றான். அவரது பூஜை தடைபெறவே, திடுக்கிட்டு கண் திறந்த பார்வதி அம்மாளுக்கு கோபம் வந்தது. திருடன் மீது அல்ல. ஸ்வாமி மீது. "ஸ்வாமி நான் உங்களுடன்  இருக்கும் போது இடையில் இந்தக் கள்வனை  நீங்கள் எப்படி அனுமதிக்கலாம்" என  அந்தக் கணமே "கருணா சிந்து சிவ சம்போ" என்ற ஒரு பாடலை பாடுகிறார்.

பாடல் முடிந்தது. பார்வதி அம்மா அந்தக் கள்வனை நோக்கி, நான் இங்கே தனியாக இருக்கிறேன் என்று எண்ணாதே. அவர் என்னுடன் உள்ளார். இதைக் கேட்ட  அந்த திருடன், தனது பிடியை நழுவவிட்டு, வீட்டைவிட்டே ஓட்டம் பிடித்தான். பகவான் ருத்ர ரூபம்  எடுத்து அவனை விரட்டிவிட்டார்!


ஆதாரம்: Smt. Parvathi mahadevan Personal Narration - Souljorns interview 

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்


🌻சாய்ராம்... பகவானின் அருட்காப்பு எங்கும், எப்போதும், தங்கு தடையின்றி பொழிந்து கொண்டிருக்கிறது! நாம் அதனை அடைய, அதற்கான வழிமுறைகளில் சதா ஈடுபட்டு, பகவானின் பாதகமலங்களில் பரிபூர்ண சரணாகதியைச் சமர்ப்பிப்போம். பாவன கங்கையான பகவானின் பேரருள் பேதம் பார்ப்பதில்லை. தீனர்களின் துன்பம் என்கிற பள்ளத்தில் அது பாய்ந்து துயரங்களைத் துடைத்தெறிகிறது.   நம்புங்கள்.நம்பிக்கையே நல்வழிகாட்டி.

1 கருத்து: