தலைப்பு

வெள்ளி, 5 மார்ச், 2021

சமீபத்திய விபத்தில் சிக்கிய பக்தரை ரத்த வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய சாயி!


பக்தரை எப்போதும் கண்காணிக்கிறார்.. அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் சுவாமி கவனிக்கிறார்.. பக்தர்களுக்கு ஏதேனும் தீங்கு என்றால் அதே நொடி ஓடோடி வந்து காப்பாற்றுகிறார். எப்பேர்ப்பட்ட விபத்து ஏற்பட்டாலும் சுவாமி அதை தடுத்து காப்பாற்றுகிறார் எனும் சத்தியத்தை அணு அணுவாய் சமீபத்தில் அனுபவித்த ஒரு பக்தரின் அனுபவ வாக்குமூலம் இதோ.. 

சாய்ராம் என்னுடைய பெயர் M.S ஜெய்கிருஷ்ணன், வயது 46. கடந்த இரண்டு வருடங்களாக சத்ய சாயி யுகம் குரூப்பில் நானும் ஒரு அட்மினாக சேவையாற்றி வருகின்றேன். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வரை பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தேன். பின்னர் பகவானின் அருளால் பணி உயர்வு பெற்று விசாகப்பட்டினத்தில் உள்ள அதே கம்பெனியின் ஹெட் ஆபீஸில் மேனேஜராக பதவி ஏற்றேன். என்னுடைய குழந்தைகளின் கல்விக்காக என்னுடைய குடும்பம் திருப்பூரிலேயே தொடர்கிறது. நான் மட்டும் தனியாக விசாகப்பட்டினத்தில் வீடு எடுத்து தங்கி இருந்தேன். மகள் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறாள். மகன் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் ஆண்டு படிக்கிறான். என்னுடைய மகனின் கல்விக்காக என்னுடைய மனைவியும் திருப்பூரில் தான் இருக்கிறார்கள். 

ப்ரண்டிx இந்தியா அப்பரேல், விசாகப்பட்டினம் 

இப்படி இருக்கும் இந்த சூழ்நிலையில் நான் என்னுடைய கம்பெனியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் நான் தங்கி இருக்கும் வீட்டில் இருந்து தினமும் காரில் ஆபீசுக்கு சென்று வந்தேன். ஜனவரி 10/ 2021 அன்று கார் சர்வீசுக்கு கொடுத்த காரணத்தினால் கீழ்வீட்டில் வசிக்கும் ஹவுஸ் ஓனர் திரு. நடராஜன் அவர்களின் இரு சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு ஆபீசுக்கு சென்றேன். சரியாக மதியம் 2 மணிக்கு ஆபீசிலிருந்து வீட்டிற்கு புறப்பட்டேன். நான் புறப்படுவதற்கு முன்பே பெரும் மழை பெய்து ஓய்ந்திருந்தது. ஆபீஸிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் வந்து கொண்டிருந்த சமயத்தில் எனக்கு பின்னால் ஒரு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்துக்கு வழி கொடுப்பதற்காக கொஞ்சம் சைடு கொடுத்தேன். நான் வந்து கொண்டிருந்த பாதையில் ஆயில் கொட்டி இருந்ததை அந்த மழை ஈரத்தில் என்னால் கவனிக்க முடியவில்லை. நான் வந்த வண்டி அந்த இடத்தை அடைந்தவுடன் அப்படியே சறுக்கிக் கொண்டு கற்கள் நிறைந்து இருந்த 5 அடி பள்ளத்தில் விழுந்தது. நான் வந்த வண்டியோ என்னுடைய வலது காலின் மேல் விழுந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. அப்படியே வலியில் மயங்கி விட்டேன். பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியாது. கண் விழிக்கிறேன் விசாகப்பட்டினத்தில் உள்ள ராம்நகர் அப்பல்லோ மருத்துவமனையின் ஐ.சி.யு'வில் இருந்தேன். தலையில் தையல் போடப்பட்டிருந்தது. வலது காலில் கடுமையான வலி இருந்தது. நான் கண் விழித்த நேரம் இரவு 7.30 மணி. விபத்து நடந்ததோ மதியம் 2மணி. நான் கண் விழித்த உடனே அங்கிருந்த நர்ஸ் டாக்டரை அழைத்து வந்தார்கள். டாக்டர் என்னிடம் வந்தவுடன் ஜெயகிருஷ்ணன் நீங்க மிகவும் அதிர்ஷ்டசாலி. நடந்த விபத்தில் உங்களுக்கு அதிக ரத்த இழப்பு ஏற்பட்டு இருந்ததால் ஒரு பத்து நிமிடம் தாமதித்து இருந்தாலும் உங்களை காப்பாற்றியிருக்க வாய்ப்பே இல்லை என்றார். மேலும் உங்களுக்கு கட்டாயம் வலது கால் முட்டிக்கு கீழ் இரண்டு பிளேட் பொருத்த வேண்டும் என்றார். நானும் சரி என்று கண்களை மூடி என் மனதிற்குள் நம் அன்பு தெய்வம் சத்ய சாயி பாபாவிற்கு நன்றி தெரிவித்தேன். பின்னர் என்னை இங்கு யார் அட்மிட் செய்தார்கள் என்று டாக்டரிடம் கேட்டேன். அதற்கு டாக்டர் சஞ்சய் கிருஷ்ணா என்ற நபர் உங்களை அட்மிட் செய்து, உங்களின் இன்ஷூரன்ஸ் கார்டையும் கொடுத்து உடனே ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்க சொன்னதாக டாக்டர் தெரிவித்தார். எங்கே அவர் ? என்று கேட்டேன் அதற்கு உங்களை அட்மிட் செய்து உடனே அவரை காணவில்லை.. அனேகமாக அவர் சென்று விட்டார் என்று நினைக்கிறோம் என்றார். அடுத்து அவர் எப்படி இருந்தார்? என்று நான் கேட்டேன். அதற்கு அவர் ஒயிட் & ஒயிட் அணிந்து இருந்தார் என்று டாக்டர் தெரிவித்தார். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. பின்னர் அடுத்தநாள் சுவாமியின் ஆசியால் எனக்கு 2 பிளேட்'டும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. நடந்த விபத்தில் என்னுடைய போன் டிஸ்ப்ளே நொருங்கிவிட்டது. அதனால் யாரையும் தொடர்பு கொண்டு நடந்த விபத்தை பற்றி தெரிவிக்க முடியவில்லை. 

அப்பல்லோ மருத்துவமனை, விசாகப்பட்டினம் 

பின்னர் ஐ.சி.யூ.வில் இருந்து ரூமுக்கு மாற்றம் செய்த பின்னர் என்னுடைய ஆபீஸ்க்கு தகவல் தெரிவித்தேன். பிறகு என்னுடைய ஆபீஸ் நண்பர்களும் வந்து பார்த்தார்கள் அப்போதுதான் என்னுடைய சிம் கார்டு நண்பரின் மொபைலில் போட்டு மற்ற நண்பர்களுக்கு தகவல் சொல்ல நினைத்தேன். சிம்கார்டு போட்டவுடனே சாயி அன்பர் கவிஞர் வைரபாரதி அவர்களிடம் இருந்து கால் வந்தது. அவரின் தொலைபேசி அழைப்பை எடுத்தேன். பத்து நிமிடங்களாக உங்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன் என்றார். இப்போது தான் சிம் பொருத்தினேன், சரியாக நீங்கள் அழைக்கிறீர்கள் என்றேன். சற்று முன்னர் தியானத்தில் சுவாமி உங்களுடைய விபத்தை பற்றி சொல்லி "ரத்தவெள்ளத்தில் மயங்கிக் கிடந்த அவனை நான் தான் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தேன் .. அவனுடைய கர்மாவின் விளைவுகளை குறைத்து அதிக ஆபத்திலிருந்தும், பாதிப்பிலிருந்தும் தடுத்தேன்" என்று சுவாமியின் வார்த்தைகளை அவர் சொல்லச் சொல்ல எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.. யாருக்குமே தெரியாத இந்த விபத்து அவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது சுவாமி அவரிடம் தியானத்தில் சொல்லியதால் தான் என்பது எனக்கு புரிந்தது. சுவாமியின் கருணையை நினைத்து எனக்கு அழுகை தான் வந்தது. சுவாமியை நினைத்து படி தொலைபேசியின் மறுமுனையில் எனக்கு பேச்சே எழவில்லை. பக்தரை ஆபத்தில் காப்பாற்றும் சுவாமி ஆபத்பாந்தவர் என்பதை நிறைய படித்திருக்கிறேன். ஆனால் அதை நேருக்கு நேராக அனுபவிக்கும் போது அவை எல்லாம் எவ்வளவு சத்தியம் என்பது தெளிவாய் எனக்கு புரிந்தது. 

சுவாமியை நம்பினால் அவர் கைவிடுவதே இல்லை. அவரே எப்போதும் நம்மை கண்காணித்து பாதுகாக்கிறார் என்பது சத்தியமே.. எனக்கு நிகழ்ந்த விபத்தும் அதிலிருந்து சுவாமியே காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததில் இருந்து ஒன்று மிகத் தெளிவாய்ப் புரிந்தது.. மருத்துவரிடம் தன் பெயரை சஞ்சய் கிருஷ்ணா என்று சொன்னது சத்ய சாயி கிருஷ்ணாவே!!!


2 கருத்துகள்: